தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 2வது ஆண்டாக தனி பட்ஜெட் - விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்ன ?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தனி நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய திட்டங்கள், அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டில், ''டெல்டா மாவட்டங்களில் வேளாண்மை சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்குவிக்கும் வகையில் திருச்சி-நாகப்பட்டினம் இடைப்பட்ட பகுதிகளில் வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடம்(Agro Industrial Corridor) அமைக்கப்படும்.
அனைத்து கிராமங்களிலும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம். நடப்பாண்டில், ரூ. 250 கோடியில் 2, 500 கிராமங்களில் நீர் ஆதாரங்களை ஏற்படுத்தி, சாகுபடி பரப்பை அதிகரிப்பது. இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் வகையில், நம்மாழ்வார் - இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம். இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம்.
நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம். பனை மேம்பாட்டுத்திட்டம். வேளாண்மை மற்றும் வேளாண்சார் துறைகளுக்கு 34 ஆயிரத்து 220 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. கடலூர், கோவை, திருச்சி, தஞ்சாவூரில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள்'' போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், நடப்பாண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண்துறை தனி பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவசாயிகளின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது. விவசாயிகளும் தங்களது எதிர்பார்ப்புகளை, கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்துள்ளனர்.
துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு
ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா மாநிலங்களைப் போல வேளாண் சாகுபடியை ஊக்கப்படுத்த ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் முழு மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.
இது குறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பிபிசி தமிழிடம் கூறுகையில்,

பட மூலாதாரம், P R Pandian
''இந்தியாவில் முன்மாதிரியாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்து வருவதை முதலில் பாராட்டுகிறோம். கடந்த ஆண்டு தொடக்க நிலை என்பதால், அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதற்கான நடைமுறைப் பிரச்னைகள் உள்ளன.
ஆகையால், தனி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றும் வகையில், வேளாண் துறை, நீர்ப்பாசனத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் தலைமைச் செயலாளர் அந்தஸ்த்தில் உயர் அதிகாரி தலைமையில் துறை முதன்மை செயலாளர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும்," என்றார்.
மார்ச் மாதத்தில் தூர்வாரும் பணிகள்
மேலும், "காவிரி டெல்டா உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாசன வடிகால் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரும் பணிகளுக்கு நிரந்தர அரசாணை வழங்கி, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்திலேயே தூர்வாரும் பணிகளையும், பராமரிப்பு பணிகளையும் தொடங்க வேண்டும். இவை மட்டுமின்றி விவசாயிகளின் 30க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளோம். இவற்றை இந்த பட்ஜெட்டிலும் எதிர்பார்க்கிறோம்''என்கிறார் பி.ஆர்.பாண்டியன்.
விவசாய வேலைக்கு100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள்

பட மூலாதாரம், G S Thanapathi
இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.எஸ். தனபதி பிபிசி தமிழிடம் கூறுகையில்,
''கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பல திட்டங்கள் நிதிப் பற்றாக்குறை, கொரோனா நெருக்கடி போன்றவற்றால் நடைமுறைக்கு வரவில்லை. அவற்றிற்கு கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும். குறிப்பாக, சுமார் 70 ஆண்டு கால கனவுத் திட்டமான காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி, முனைப்பாக செயல்படுத்த வேண்டும்.
இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், இயற்கை வேளாண்மைக்கான இடு பொருட்கள், குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும். உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தவும், அனைத்து கிராமங்களிலும் வேளாண் உற்பத்தி பொருட்களை சேமிக்கவும் வசதி செய்து தரவேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தினால் (100 நாள் வேலை) விவசாய வேலைகளுக்கு உரிய காலத்தில் ஆட்கள் கிடைப்பதில்லை. இதைக் கவனத்தில் கொண்டு, கேரளாவில் உள்ளது போல், நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களை விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
வேளாண்மை பணிகளில் இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். விவசாயக் கருவிகளை இயக்க கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கருவிகளை மானியத்தில் அதிகம் வழங்க வேண்டும். சாகுபடி காலங்களில் தட்டுப்பாடின்றி கருவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்,'' என்கிறார் தனபதி.
தனி காப்பீட்டுத் திட்டம்
தமிழ்நாட்டிற்கென தனி வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். பகுதிவாரியான பாதிப்பை கணக்கில் கொள்ளாமல், தனி நபர் பாதிப்பை கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேளாண்மைக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி மார்ச் 2ம் தேதி வெளியிட்ட, 15வது நிழல் நிதிநிலை அறிக்கையில் வேளாண் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த மொத்தம் 82 தலைப்புகளில் 296 யோசனைகளை தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், PMK
''தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை 2,654இல் இருந்து 3,500ஆக உயர்த்த வேண்டும். நெல் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கையை 400ஆக உயர்த்த வேண்டும்.
ஒவ்வொரு நெல்கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 5,000 மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில் வசதி வேண்டும். தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள் பழங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தபட்ச ஆதரவு விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்யவேண்டும்," என்பவை அந்த நிழல் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சில அம்சங்கள்.
மணல் குவாரிகளுக்கு நிரந்தர தடை
"2023ஆம் ஆண்டை பன்னாட்டு சிறுதானிய ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளது. எனவே ஆண்டு முழுவதும் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளில் சிறுதானியங்களை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன், சிறுதானிய உணவுத் திருவிழாக்களை நடத்துவது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சிறுதானிய உணவகங்கள்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் பருவம் தவறி பெய்த மழையில் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு. மழை வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிரந்தர தீர்வுத் திட்டத்தின்படி, ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ.30,000, கரும்புக்கு ரூ.95,000, நிலக்கடலைக்கு ரூ.30,000, பிற பணப் பயிர்களுக்கு ரூ.1 இலட்சம் வரை இழப்பீடு.
மணல் குவாரிகளுக்கு நிரந்த தடை. மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மணல் இறக்குமதி. எம்.சாண்ட் ஆலைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் கட்டுமானத் தேவைகளுக்கு மணல் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்வது'' உள்ளிட்ட யோசனைகளும் பாமக திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்

பட மூலாதாரம், Nallasami
தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பிபிசி தமிழிடம் கூறுகையில்,
''விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும் வழக்கமாக ஒதுக்கப்படும் நிதிதான் ஒதுக்கப்படுகிறது. எனவே வேளாண்மைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். விவசாயிகள் விளைவிக்கவும் கஷ்டப்படுகிறார்கள். அதை விற்பதற்கும் கஷ்டப்படுகிறார்கள். இதைப் போக்கும் வகையில், லாபகரமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ''நீரா பானத்தை விற்பனை செய்ய கடந்த 2017ஆம் கொண்டு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் கடுமையான நிபந்தனைகளால், அனுமதி கொடுத்தும் பலன் இல்லை. விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் நடைமுறைக்கு ஒத்துவராதவை. இதனால், சத்தான நீரா பானத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் முடியவில்லை. நிபந்தனைகளை தளர்த்தி, நீரா பானத்தை அரசே சந்தைப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் 33 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்த தடையை நீக்க வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளோடு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும் என்கிற அறிவிப்பை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். பாமாயில் இறக்குமதியை நிறுத்தி விட்டு, நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஆகிய உள்நாட்டு உற்பத்தியை சந்தைப்படுத்த வேண்டும்.'' என்கிறார் நல்லசாமி.
இவை மட்டுமின்றி, கிராமங்களில் கூட்டுறவு அமைப்புகளை பலப்படுத்த வேண்டும். மாநில அளவில் கூட்டுறவு அமைப்புகளின் நிதி ஆதாரங்களை உறுதிப்படுத்த தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும். கூட்டுறவு அமைப்புகளை அரசியல் தலையீடின்றி விவசாயிகளின் நேரடி பங்களிப்பில் செயல்படுத்த உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












