யுக்ரேனில் இருந்து செல்லப் பூனையுடன் இந்தியா வந்த தருமபுரி மாணவர் - வைரலாகும் புகைப்படம்

இந்திய மாணவரின் யுக்ரேன் பூனை

பட மூலாதாரம், Gowtham

படக்குறிப்பு, யுக்ரேனில் இருந்து இந்தியா வந்துள்ள ஸ்காட்டிஸ் போல்ட் ரக பூனை
    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தீவிரமாகி வரும் நிலையில், அங்கு தான் வளர்த்த செல்லப்பிராணியுடன் இந்தியாவிற்கு வந்துள்ளார் தமிழ்நாட்டின் தருமபுரியைச் சேர்ந்த மாணவர் கவுதம்.

அந்த நாட்டின் அருகே உள்ள போலாந்து, ஹங்கேரி போன்ற நாடுகளுக்கு தப்பி வந்த இந்தியர்கள் பலரும் இந்தியா அனுப்பி வைத்துள்ள சிறப்பு விமானங்கள் மூலம் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். ரஷ்ய படையெடுப்பு தொடங்கியது முதல் இப்போதுவரை 6,200 இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தனி விமானம் மூலம் டெல்லியை அடுத்த காஜியாபாதில் உள்ள ஹிண்டான் விமானப்படை தளத்துக்கு வந்தனர். அவர்களில் தருமபுரியைச் சேர்ந்த கவுதம் பலரது கவனத்தையும் ஈர்த்தார். காரணம், அவர் தமது உடைமைகளுடன் மட்டுமின்றி யுக்ரேன் நாட்டில் தான் வளர்த்த அழகான பூனைக்குட்டியுடன் வந்திருக்கிறார். அவரது மனித நேயத்தை அங்கீகரிக்கும் வகையில் யுக்ரேனில் உள்ள அதிகாரிகளும் சரி, இந்திய அதிகாரிகளும் சரி பூனைக்குட்டியை கொண்டு செல்ல ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

ஹிண்டான் விமான நிலையத்தில் கவுதமின் ஜாக்கெட்டுக்குள் இருந்தபடி பூனைக்குட்டி தனது தலையை மட்டும் எட்டிப்பார்த்தபடி இருந்தது. இதைப்பார்த்த பலரும் கவுதமின் செயலை நெகிழ்ந்து பாராட்டினர். அவரை சில ஊடகங்களும் பேட்டி எடுத்தன. இந்த காட்சி சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

அந்த விமான நிலையத்தில் தமிழக மாணவர்களை வரவேற்ற தமிழக அரசு அதிகாரிகள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர்களின் பெயர் மற்றும் முகவரிகள் பதிவு செய்யப்பட்டு, டெல்லி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

line

உங்களது கதையை சொல்ல விரும்புகிறோம்: நீங்களோ அல்லது நண்பரோ, உறவினரோ யுக்ரேனில் இருக்கிறீர்களா?

தற்போது யுக்ரேனில் இருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். அங்கு நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? அல்லது யுக்ரேனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் இருக்கிறீர்களா? உங்களது அனுபவங்களை கீழே உள்ள படிவத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். பிபிசி தமிழில் இருந்து விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்கள் அனுபவங்களை பிபிசி தமிழ் இணையதளத்தில் பிரசுரிக்கலாம்.

உங்கள் கேள்விகளுக்கு பதில்: யுக்ரேன் மோதலில் இந்தியாவின் மீதான தாக்கம்

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்த மோதலின் தாக்கம் உலக அளவிலோ அல்லது உங்களது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியோ நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். அதன் அடிப்படையில் அடுத்துவரும் செய்திகளை உங்களுக்கு வழங்குகிறோம்.

முன்னதாக, சென்னை, மதுரை, திருச்சி, கோவை என மாணவர்களின் சொந்த ஊர்களுக்கு அருகே இருக்கும் விமான நிலையங்களுக்கு பயணச்சீட்டை மாநில அரசு செலவிலேயே முன்பதிவு செய்து அவர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியிலும் தருமபுரியைச் சேர்ந்த கவுதம் பலரின் கவனத்தை ஈர்த்தார். அவர் பொத்திப்பாதுகாத்தபடி அழைத்து வந்த பூனைக்குட்டியை ஏன் இந்தியாவுக்கு எடுத்து வந்தார்? யுக்ரேனில் இருந்து இந்த பூனைக்குட்டியை அழைத்து வரும் போது சந்தித்த அனுபவங்கள் என்ன என அவரிடம் பிபிசி தமிழ் பேசியது.

மாணவரின் மனிதநேயம்

யுக்ரேன் மருத்துவ மாணவர் கவுதம்

பட மூலாதாரம், Gowtham

படக்குறிப்பு, செல்ல பூனையுடன் கவுதம்

தமிழ்நாட்டின் தருமபுரி நத்தஹள்ளி அருகே இண்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயவேல் மகன் கவுதம். இவரது தாய் ராணி ஈரோட்டில் அரசு மருத்துவமனை செவிலியராக உள்ளார்.

யுக்ரேன் நாட்டின் கீயவ் நகரில் உள்ள போகோமோலேட்ஸ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவ மாணவராக உள்ளார். கவுதம் தன்னோடு ஸ்காட்டிஸ் போல்ட் ரக பூனையையும் வளர்த்து வருகிறார். தனது செல்ல பிராணிக்கு 'க்ரே' என்றும் பெயர் சூட்டியுள்ளார்.

யுக்ரேனில் இருந்து இந்தியர்கள் வெளியேறத் தொடங்கியபோது, தான் மட்டும் வெளியேறினால் போதும் என்று நினைக்காமல், வளர்த்த பூனை குட்டியையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறியிருக்கிறார் கவுதம்.

பல நகரங்களில் தொடர் சோதனைகளைக் கடந்து யுக்ரேனிய எல்லை நாடான போலாந்து வரை பூனைக்குட்டியை இவர் சுமந்து வந்தார். இந்திய பூனை ரகங்களுக்கு மத்தியில் இந்த ஸ்காட்டிஷ் ரக பூனை கவர்ச்சியாக இருந்தது.

இரவு முழுவதும்வெடிகுண்டு சத்தம்

பிற இந்திய மாணவர்களுடன் தமிழ்நாடு இல்லத்தில் சில மணி நேரம் ஓய்வெடுத்த கவுதம், பிறகு மேலும் 36 தமிழக மாணவர்களுடன் டெல்லி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போதும், தமது செல்லப்பிராணி க்ரேவை தோளில் சுமந்தபடி சென்றார் கவுதம். இந்த அனுபவத்தை பிபிசியிடம் அவர் விவரித்தார்.

''நாங்கள் தங்கியிருந்த பகுதியில் இரவு நேரத்தில் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடைபெறும். அப்போது பதுங்குக் குழிக்குள், மெட்ரோ சுரங்கப்பாதை என கிடைத்த பாதுகாப்பான இடங்களில் எல்லாம் பதுங்கிக் கொள்வோம். பகலிலும் அதிகம் வெளியில் நடமாட முடியாது. தேவையான பொருட்களை மட்டும் வாங்கிக் கொண்டு, மீண்டும் பதுங்கு இடத்திற்கு விரைந்து விடுவோம். இரவில் தொடர் குண்டு சத்தத்தை கேட்டுக் கொண்டே பீதியோடுதான் இருப்போம்.

இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், எங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 400 பேர் கீயவில் இருந்து போவல் என்கிற இடத்திற்கு நடந்தே சென்றோம். அங்கு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டோம். போலாந்து எல்லையில் உள்ள மேற்கு நோக்கி செல்லும் அனைத்து ரயில்களிலும் மாணவர்கள் ஏறிச் சென்றனர்.

நானும் ஒரு ரயிலில் ஏறி, போலாந்து எல்லைக்கு சென்றேன். அங்கு இந்தியர்கள் உள்ள பகுதிக்கு சென்றேன். அங்கு ஏற்கெனவே வந்திருந்த இந்தியர்களுடன் சேர்ந்து நானும் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளேன் என்றார் கவுதம்.

செல்லப்பூனை மீதான நேசம்

யுக்ரேன் மருத்துவ மாணவர் கவுதம் - பூனை

பட மூலாதாரம், Suchi

படக்குறிப்பு, யுக்ரேன் மாணவரின் செல்லப்பூனை

ரஷ்ய படைகள் குறி வைத்து தாக்குதல் நடத்தும் பகுதியில் இருந்து செல்லப் பூனை க்ரேவை எப்படி அழைத்து வந்தீர்கள் என்று கேட்டதற்கு, "என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு, யுக்ரேனில் உள்ள நண்பர்கள் எனக்கு பரிசாக அளித்த செல்லம் இது. ஒரு மாத குட்டியாக என்னிடம் வந்தது, கடந்த 4 மாதங்களுக்கு மேல் என்னோடுதான் வளர்கிறது. என் மீது ரொம்ப பிரியமாக இருக்கும். ரொம்ப அமைதியாக இருக்கும்," என்கிறார் கவுதம்.

ஆகையால், இதை பிரிய முடியாது என்பதால், கீயவ் நகரில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்த போது, க்ரேவை எப்படியாவது என்னுடனேயே அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். க்ரேவுக்கு தேவையான உணவை முன்பே வாங்கி வைத்துக் கொண்டேன். சுமார் 4 கி.மீ நடந்து சென்றபோது, ரயிலில் பயணித்த போதும் க்ரேவை பாதுகாப்பது சிரமமாகத்தான் இருந்தது.

யுக்ரேன் மருத்துவ மாணவர் கவுதம் - பூனை

பட மூலாதாரம், GAUTHAM

படக்குறிப்பு, கவுதமுடன் பூனை க்ரே

எல்லையைக் கடந்தது, இந்திய தூதரக அதிகாரிகளிடம் முறைப்படி தகவல் தெரிவித்தேன். அவர்கள் அனுமதி கொடுத்தனர். அதுவரை சற்று பயமாகத்தான் இருந்தது. அனுமதி கிடைத்ததும் நிம்மதியாக இருந்தது. அதற்கு பின்னர் எந்தத் தடையும் இல்லாமல் அழைத்து வந்து விட்டேன்.

தொடர் தாக்குதல் நடைபெறும் பகுதியில் இருந்து, பத்திரமாக க்ரேவை அழைத்து வந்ததே பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அதிகாரிகளுக்கு ரொம்ப நன்றி. தொடர்ந்து பத்திரமாக பராமரித்து, பாதுகாப்பேன்,'' என்கிறார் கவுதம்.

யுக்ரேன் மருத்துவ மாணவர் கவுதம் - பூனை

பட மூலாதாரம், Gowtham

படக்குறிப்பு, பூனை க்ரே

பாசமும் நேரமும் சேர்த்து ஊட்டி வளர்த்த பூனைக் குட்டி க்ரேவை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பல ஆயிரம் மைல்கள் கடந்து சுமந்து வந்த கவுதம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை ஆசையாக கொஞ்சி மகிழ்கிறார்.

யுக்ரேன் நாட்டின் ரஷ்ய படைகளின் தாக்குதல் 8வது நாளாக இன்று நடைபெற்றது. இதையடுத்து அந்நாட்டினர் 10 லட்சம் பேர் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்று ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுமார் 1.20 கோடி பேர் உள்நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: