போர் பூமியில் இந்தியாவின் மீட்பு முயற்சிகள் - கடந்த கால அனுபவங்கள் எப்படி?

யுக்ரேனிலிருந்து வந்த மாணவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேனிலிருந்து வந்த மாணவர்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

யுக்ரேனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பது சரியாக நடக்கிறதா போன்ற விவாதங்கள், தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாகியிருக்கின்றன. இதற்கு முந்தைய யுத்தங்களின்போது இந்தியா எப்படி இந்தியர்களை மீட்டது?

யுக்ரேனிய யுத்தத்திற்கு முன்பாக சமீப காலத்தில் மூன்று முறை மிகப் பெரிய அளவில் இந்தியா தனது குடிமக்களை வெளிநாடுகளிலிருந்து மீட்டிருக்கிறது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இராக், குவைத்தை ஆக்கிரமித்தபோது பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டார்கள்.

2006ஆம் ஆண்டில் லெபனானில் யுத்தம் வெடித்தபோது அங்கிருந்த இந்திய, இலங்கைக் குடிமக்களை மீட்பதில் இந்தியா இறங்கியது. இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சுகூன்' என பெயரிடப்பட்டது.

அதற்கு அடுத்தபடியாக 2011இல் லிபியாவில் நடந்த உள்நாட்டுப் போரின்போது 'Operation Safe Home' Coming என்ற பெயரில் அங்கிருந்த ஒரு லட்சத்திப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டது.

1990 குவைத் - ராக் யுத்த களத்திலிருந்து இந்தியர்கள் மீட்பு

1990ஆம் ஆண்டு ஆகஸட் 2ஆம் தேதி குவைத்தின் தென்கிழக்கு எல்லைப் பகுதியாக உள்ளே புகுந்து அதனை ஆக்கிரமித்தது இராக். அந்தத் தருணத்தில் குவைத்தில் சுமார் இரண்டு லட்சம் இந்தியர்கள் வசித்துவந்தனர். அந்தத் தருணத்தில் இராக்குடன் இந்தியாவுக்கு நல்ல உறவு இருந்தது என்பதால், இந்தியர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும்கூட, பணம், உணவு, மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்ததால் இந்தியர்கள் நாடு திரும்பவே விரும்பினார்கள்.

அந்தத் தருணத்தில் வி.பி. சிங் பிரதமராகவும் இந்தர் குமார் குஜரால் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தனர். ஆகஸ்ட் 21ஆம் தேதிவாக்கில் இராக் அதிபர் சதாம் ஹுசைனைச் சந்தித்த ஐ.கே. குஜரால், அங்கிருந்து வெளியேற விரும்பும் இந்தியர்களை அழைத்துச் செல்ல அனுமதியைப் பெற்றார்.

line

உங்களது கதையை சொல்ல விரும்புகிறோம்: நீங்களோ அல்லது நண்பரோ, உறவினரோ யுக்ரேனில் இருக்கிறீர்களா?

தற்போது யுக்ரேனில் இருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். அங்கு நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? அல்லது யுக்ரேனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் இருக்கிறீர்களா? உங்களது அனுபவங்களை கீழே உள்ள படிவத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். பிபிசி தமிழில் இருந்து விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்கள் அனுபவங்களை பிபிசி தமிழ் இணையதளத்தில் பிரசுரிக்கலாம்.

2) Q&A Ukraine

உங்கள் கேள்விகளுக்கு பதில்: யுக்ரேன் மோதலில் இந்தியாவின் மீதான தாக்கம்

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்த மோதலின் தாக்கம் உலக அளவிலோ அல்லது உங்களது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியோ நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். அதன் அடிப்படையில் அடுத்துவரும் செய்திகளை உங்களுக்கு வழங்குகிறோம்.

ஆனால், குவைத்தைச் சுற்றியிருந்த கடல் பகுதிகளில் செல்வதற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டுவரும் விமானங்களைத் தவிர பிற விமானங்கள் பாக்தாதிலோ குவைத்திலோ இறங்க இராக் தடை விதித்திருந்தால், கடல் வழியாகவே இந்தியர்களை மீட்கத் திட்டமிட்டிருந்த இந்தியாவுக்கு அமெரிக்காவின் தடை சிக்கலை ஏற்படுத்தியது.

இந்தியா போர் பூமி

பட மூலாதாரம், Getty Images

இதையடுத்து இந்திய அரசு ஒரு திட்டத்தைத் தீட்டியது. அதன்படி சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்தியர்கள் பேருந்துகளின் மூலம் கிட்டத்தட்ட 1,120 கி.மீ தூரம் கடந்து ஜோர்டனுக்கு அழைத்துவரப்பட்டனர். இதற்காக அவர்கள் கடும் வெப்பம் நிறைந்த பாலைவனத்தைக் கடக்க வேண்டியிருந்தது. ஜோர்டனின் எல்லைக்குள் வந்த பிறகு அவர்கள் அங்கிருந்த தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டனர். பிறகு அங்கிருந்து அம்மானுக்கும் அம்மானிலிருந்து மும்பைக்கும் அழைத்துவரப்பட்டனர்.

அப்போது ஏர் இந்தியாவிடம் சில 747 ரக விமானங்களே இருந்தன. அவை வர்த்தக சேவையில் ஈடுபட்டிருந்தன. இதனால், இந்தியன் ஏர்லைன்ஸ் அப்போதுதான் வாங்கியிருந்த ஏர்பஸ் ஏ 320 ரக விமானத்தைப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது. இந்தியன் ஏர்லைன்ஸ் வாங்கியிருந்த இரண்டு ஏர்பஸ்களில் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. மீதமிருந்த ஒரு விமானம் இந்த சேவையில் இறக்கப்பட்டது.

அந்த விமானம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தினமும் 16-18 மணி நேரம் பயணம் செய்தது. மொத்தம் 488 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அக்டோபர் மாத இறுதிவரை இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்றது. 1,11,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வளைகுடாப் பகுதியிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். அந்தத் தருணத்தில் உலகில் விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மீட்பு நடவடிக்கையாக இது அமைந்தது. இந்த நடவடிக்கையில் பல மில்லியன் டாலர்கள் வரை செலவானது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

பிரதமர் வி.பி. சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தர் குமார் குஜரால், உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆரிஃப் கான் ஆகியோர் இணைந்து இந்த இமாலயப் பணியை மேற்கொண்டு முடித்தனர். "இதற்கான முழுப் பெருமையும் இந்தர் குமார் குஜராலையே சாரும்" என்றார் பிரதமர் வி.பி. சிங்.

2006 லெபனான் யுத்த மீட்பு நடவடிக்கை: ஆபரேஷன் சுகூன்

2006ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ஹெஸ்புல்லா அமைப்பு ஜாரித் என்ற கிராமத்திற்கு அருகில் இருந்த இஸ்ரேலின் ராணுவ நிலைகளின் மீது தாக்குதலைத் துவங்கியது. இது ஜாரித் - ஷ்டுலா நிகழ்வு என அழைக்கப்பட்டது. மற்றொரு ஹெஸ்புல்லா குழு இஸ்ரோலுக்குள் புகுந்து இரண்டு இஸ்ரேலிய ராணுவ வாகனங்களைத் தாக்கியது. மூன்று இஸ்ரேலிய வீரர்கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க சமீர் குன்டர் என்பவரை விடுவிக்கக் கோரினர். இந்த நிகழ்வையடுத்து லெபான் யுத்தம் துவங்கியது.

யுத்தம் தொடர்ந்து நடந்த நிலையில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுவந்தன. இந்தத் தருணத்தில் பத்தாயிரம் இந்தியர்கள் லெபனானில் வசித்துவந்தனர். இதில் இரண்டாயிரம் பேரின் நிலை சிக்கலானதாக இருந்தது. தங்கள் நாட்டுக் குடிமக்களையும் மீட்டுத்தரும்படி நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளும் கோரிக்கைவிடுத்தன. அந்தத் தருணத்தில் இந்தியாவின் பிரதமராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார்.

வெளியேற காத்திருக்கும் மக்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய குடிமக்களை மீட்பது குறித்து ஜூலை 18ஆம் தேதி வெளியுறவுத் துறைச் செயலர், கடற்படையின் தலைமைத் தளபதி ஆகியோருடன் ஆலோசனை நடைபெற்றது.

அந்தத் தருணத்தில் இந்திய கடற்படையின் 54வது பிரிவு மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. இந்தப் பிரிவில் நாசகாரிக் கப்பலான ஐஎன்எஸ் மும்பை, ஃப்ரிகேட் ரக கப்பலான ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா, ஐஎன்எஸ் பேட்வா, ஃப்ளீட் டேங்கரான ஐஎன்எஸ் சக்தி ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்தப் பிரிவு சூயஸ் கால்வாயை நெருங்கிக் கொண்டிருந்தது. சூயஸ் கால்வாய்க்குள் கப்பல்கள் நுழைந்துவிட்டால், மீண்டும் லெபனான் பகுதிக்கு வருவதற்கு பல நாட்கள் ஆகும்.

ஆகவே உடனடியாக முடிவெடுக்கப்பட்டு அந்தக் கப்பல்கள் தொடர்புகொள்ளப்பட்டன. லெபனான் கடற்பரப்பிற்குச் சென்று, இந்தியர்களை மீட்கும்படி கப்பல்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அதாவது, அங்கிருந்து கப்பல்கள் மூலம் அவர்களை மீட்டு சைப்ரசிற்குக் கொண்டுவரவும், அங்கிருந்து ஏர் இந்தியா விமானங்களின் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரவும் திட்டமிடப்பட்டது.

அந்தத் தருணத்தில் சைப்ரசிலிருந்து ஏர் இந்தியாவின் விமான சேவைகள் ஏதும் கிடையாது என்பதால், ஏர் இந்தியா விமானங்களை நிறுத்த இடம் ஏதும் சைப்ரஸ் விமான நிலையத்தில் கிடையாது. இதையடுத்து சைப்ரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது இந்திய விமானங்களுக்கு பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டது.

இந்தியா போர் பூமி

பட மூலாதாரம், Getty Images

ஜூலை 20, 23, 26 ஆகிய மூன்று தடவைகளில் ஐஎன்எஸ் மும்பை 1,495 பேரை அங்கிருந்து மீட்டது. ஜூலை 23ஆம் தேதி பிரம்மபுத்திரா 188 பேரையும் பேட்வா 254 பேரையும் மீட்டன. ஐஎன்எஸ் சக்தி இந்தக் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கும் பணியில் ஈடுபட்டது.

ஒட்டுமொத்தமாக 1,794 இந்தியர்கள் உட்பட 2,280 பேர் அங்கிருந்து இந்தியக் கடற்படையால் மீட்கப்பட்டனர். இதில் 112 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். 64 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியர்களைத் திருமணம் செய்திருந்த சில லெபனான் குடிமக்களும் மீட்கப்பட்டனர். தங்கள் குடிமக்களை அங்கிருந்து மீட்டுத்தருமாறு சில நட்பு நாடுகள் முன்வைத்த வேண்டுகோள்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அந்த நாடுகளின் குடிமக்கள் சிலரும் மீட்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்தியக் கடற்படை மேற்கொண்ட மிகப் பெரிய மீட்பு நடவடிக்கையாக இது அமைந்தது.

மீட்பு நடவடிக்கை முடிந்த பிறகு, லெபனானில் எஞ்சியிருந்த பிற இந்தியர்களின் பாதுகாப்பிற்காக அந்தக் கடற்படைப் பிரிவு யுத்தத்தின் இறுதிக் கட்டம்வரை அந்தக் கடற்பரப்பிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தியா மிகச் சிறப்பாக தனது குடிமக்களை மீட்ட தருணங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

2011 லிபிய உள்நாட்டுப் போர்: Operation Safe Home Coming

வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அந்நாட்டு அதிபர் முவம்மார் கடாஃபிக்கு எதிரான ஒரு போராட்டமாகத் துவங்கிய பிரச்சனை, விரைவிலேயே ஒரு உள்நாட்டு யுத்தமாக உருவெடுத்தது.

அந்தத் தருணத்தில் சுமார் 18,000 இந்தியர்கள் அங்கு வசித்துவந்தனர். ட்ரிபோலி விமான நிலையத்தில் பெரும் குழப்பம் நிலவியது. மற்றொரு பெரிய விமான நிலையமான பெனினா சர்வதேச விமான நிலையத்தில் விமான ஓடுதளம் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தியர்களை மீட்க ஐஎன்எஸ் மைசூர், ஐஎன்எஸ் ஆதித்யா என்ற இரு நாசகாரிக் கப்பல்களும் ஐஎன்எஸ் ஜலஸ்வா என்ற மற்றொரு கப்பலும் பிப்ரவரி 26ஆம் தேதி அனுப்பப்பட்டன. வர்த்தக சொகுசு கப்பலான ஸ்காடியா பிரின்ஸ், 1,600 பேர் அமரக்கூடிய லா சூபர்பா என்ற கப்பலும் உடனடியாக வாடகைக்கு எடுக்கப்பட்டன. இரண்டு நாட்களில் ஸ்காடியா பிரின்ஸ் லிபியத் துறைமுகமான பென்காஸியை வந்தடைந்தது. கடற்படைக் கப்பல்கள், வர்த்தக கப்பல்கள் ஆகியவை சிக்கியிருந்த இந்தியர்களை பென்காஸி, ட்ரிபோலி ஆகிய இடங்களில் இருந்து மீட்டு, அலெக்ஸாண்ட்ரியாவுக்கு கொண்டுவந்தன. அவர்கள் அங்கிருந்து ஏர் இந்தியா விமானங்களின் மூலம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர்.

பெங்காசி விமான நிலையத்திற்கு வரும் இந்திய தொழிலாளிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெங்காசி விமான நிலையத்திற்கு வரும் இந்திய தொழிலாளிகள்

இந்த ஒட்டு மொத்த நடவடிக்கைக்கான செலவையும் இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. பயணிகளிடம் கட்டணம் பெறப்படவில்லை.

இதற்குப் பிறகு ட்ரிபோலி விமான நிலையத்தில் இரு விமானங்கள் இறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அங்கிருந்து 500 பயணிகள் மீட்கப்பட்டனர். சபா விமான நிலையத்திலிருந்து 1,000 பேரும் சிர்டி விமான நிலையத்திலிருந்து ஆயிரம் பேரும் மீட்கப்பட்டனர்.

யுக்ரேன் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

வேறு பல இந்தியர்கள் நடந்தே எகிப்திய எல்லையை அடைந்தனர். அங்கிருந்த இந்திய அதிகாரிகள் அவர்கள் விமானம் மூலம் மும்பையை அடைய உதவினர்.

கிட்டத்தட்ட 15,000 மீட்கப்பட்ட நிலையில், மார்ச் 11ஆம் தேதி இந்த மீட்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன.

2015 ஏமனிலிருந்து இந்தியர்கள் மீட்பு: ஆபரேஷன் ராஹத்

2015ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஹௌதி கிளர்ச்சிக்காரர்களைத் தாக்குவதற்காக அரபு நாடுகளின் கூட்டுப் படைகள் ஏமனுக்குள் நுழைந்தன. அதற்கு முன்பாகவே ஏமனின் பெரும் பகுதி கிளர்ச்சிக்காரர்களின் வசம் வந்திருந்தது.

ஜனவரி 21ஆம் தேதியிலிருந்தே ஏமனிலிருந்து வெளியேறிவிடும்படி இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்திவந்தாலும், அரபு நாடுகள் தாக்குதலைத் தொடங்கியபோது சுமார் 5,000 இந்தியர்கள் ஏமனில் வசித்துவந்தனர்.

விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் கப்பல்கள் மூலமே மீட்புப் பணிகலை மேற்கொள்ள வேண்டிய நிலை. இதையடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட கடற்படைக் கப்பல்கள் துவக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஏமனுக்கு அருகில் இருந்த ஜிபோத்தி என்ற இடத்திற்கு வந்தடைந்த இந்தியர்களை மீட்க இந்திய விமானப் படையின் சரக்கு விமானங்களும் அனுப்பப்பட்டன.

அடுத்த சில நாட்களில் 4,640 இந்தியர்களும் 960 வெளிநாட்டவரும் இந்தியத் தரப்பினால் மீட்கப்பட்டனர். ஏப்ரல் 11ஆம் தேதி இந்த மீட்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. 200 இந்தியர்கள் ஏமனைவிட்டு வர விரும்பவில்லை.

இந்த மீட்பு நடவடிக்கை குறித்து விரிவான ஒரு ஆவணப்படமும் தயாரிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: