அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்சின் சகோதரர் ஓ. ராஜா கட்சியைவிட்டு நீக்கம்

பட மூலாதாரம், Getty Images
ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவை நேரில் சென்று பார்த்த ஓ.பி.எஸ்சின் சகோதரர் ஓ. ராஜா அ.தி.மு.கவைவிட்டு நீக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்றவர்களும் நீக்கப்பட்டுள்ளனர். சசிகலா மீண்டும் கட்சிக்குத் திரும்பலாம் என்ற பேச்சுகள் அடிபடும் நிலையில், இந்த நடவடிக்கையை அ.தி.மு.க. எடுத்துள்ளது.
சனிக்கிழமை காலையில் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஓ. ராஜா நீக்கப்படுவதாக அறிவித்திருக்கின்றனர்.
அவரோடு சேர்ந்து, தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எஸ். முருகேசன், மீனவர் பிரிவுச் செயலாளர் வைகை கருப்புஜி, கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் எஸ். சேதுபதி ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா நேற்று திருச்செந்தூர் வந்திருந்தார். அப்போது அங்கு அவரை ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பியான ஓ. ராஜாவும் முருகேசன், கருப்புஜி, எஸ் சேதுபதி ஆகியோரும் சந்தித்துப் பேசினர். இது தொடர்பான புகைப்படங்களை சசிகலா தரப்பு வெளியிட்டது.
இந்த நிலையில்தான் இவர்கள் நான்கு பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலருந்தே நீக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி , "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பேரும் வழிநடத்தியும் கட்சி வளரவில்லை. சசிகலா அல்லது தினகரன் தலைமையில் அதிமுக செயல்படவேண்டும்" என்று கூறினார்.
ஆறுகுட்டி அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகக் கருதப்படுபவர் என்பதால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வி.கே. சசிகலாவை மீண்டும் அ.தி.மு.கவில் இணைக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவு இருக்கிறதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியது.
இந்த நிலையில்தான் வி.கே. சசிகலாவைச் சந்தித்த ஓ. ராஜாவும் அவருடனிருந்தவர்களும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நீக்கம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிவரும் ஓ. ராஜா, தன்னை நீக்க ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆகியோருக்கு அதிகாரம் கிடையாது என்றும் சசிகலாவின் வருகையே கட்சியைப் பலப்படுத்தும் என்றும் கூறிவருகிறார்.
ஓ. ராஜா இதற்கு முன்பாக இருமுறை கட்சியைவிட்டு நீக்கப்பட்டு, பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பல இடங்களில் தோல்வியைச் சந்தித்தது. இதனையடுத்து தேனி மாவட்டத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சசிகலா இரண்டு நாட்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுப்பயணமாக நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து அதிமுக கட்சி கொடி கட்டிய கார் மூலம் திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதியில் உள்ள விசுவாமித்திரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கார் மூலம் திருச்செந்தூர் வந்தார். திருச்செந்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.
இந்த நிலையில் நேற்று மாலை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜா தனது மனைவி மற்றும் ஆதரவாளர்கள் சிலருடன் சென்று சசிகலா தங்கியிருந்த விடுதி அறையில் சசிகலாவை சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்து ஓ.ராஜாவுடன் இருந்த ஆதரவாளர் ஒருவர் நேற்று பிபிசி தமிழிடம் பேசுகையில், "பொதுவாகவே சின்னம்மா மீது அண்ணனுக்கு (ஓ.ராஜா) தனி மரியாதை உண்டு. என்றாலும் சின்னம்மா தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கடந்த வாரம் தகவல் தெரிந்த உடனே சின்னமாவை சந்திப்பதற்கு அனுமதி கேட்டிருந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சின்னம்மா தங்கியிருந்த அறையில் சந்தித்து தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.
பின்னர் சின்னம்மா நடந்து முடிந்த தேர்தல் குறித்தும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றி தோல்வி குறித்தும் அண்ணனிடம் பேசினார். பின்னர் சின்னம்மா தான் தற்போது ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதால் அரசியல் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை விரைவில் சந்திப்பதாக கூறியதாக. அந்த நபர் நம்மிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












