சசிகலா தலைமை: அதிமுகவில் வலுக்கும் திடீர் ஆதரவு - என்ன காரணம்?

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
அ.தி.மு.கவில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பது தொடர்பான பேச்சுக்கள் எழத் தொடங்கியுள்ளன. `தேனி மாவட்ட கழகம் நிறைவேற்றியுள்ள இந்தத் தீர்மானம் என்பது கட்சிக்குள் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். ஓ.பி.எஸ்ஸின் சசிகலா ஆதரவு அரசியல் எடுபடுமா?
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்றது. இதில், மாநகராட்சிகளில் தி.மு.க பெற்ற வாக்கு சதவீதம் என்பது 43 ஆக உள்ளது. அதேநேரம், அ.தி.மு.க 26 சதவீத வாக்குகளைப் பெற்றது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றிலும் தி.மு.க கூட்டணியே முன்னிலை வகித்தது. இந்தத் தோல்வி அ.தி.மு.கவினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக, அ.தி.மு.கவுக்கு செல்வாக்காக பார்க்கப்படும் மேற்கு மண்டலத்திலே அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எனத் தொடர்ந்து அ.தி.மு.கவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, `அ.தி.மு.கவும் அ.ம.மு.கவும் இணைந்து செயல்பட்டால் வலிமையாக இருக்கலாம்' என்ற கருத்து தென்மாவட்ட அ.தி.மு.கவினரால் முன்வைக்கப்படுகிறது.
இந்தநிலையில், தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் கடந்த 2 ஆம் தேதியன்று அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ` சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை கட்சியில் இணைத்தால் மட்டுமே வலுவாக இருக்க முடியும்' என்ற கருத்தை சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சையதுகான், `ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பிளவுபட்டதால்தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறோம். அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்பதே கட்சியினரின் விருப்பமாக உள்ளது. இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்ஸிடம் வழங்கியுள்ளோம்' என்றார்.
மேலும், `இதேபோன்ற தீர்மானம் அனைத்துப் பகுதிகளிலும் நிறைவேற்றப்படும்' என்ற கருத்தையும் சையதுகான் முன்வைத்திருந்தார்.
கொங்கு மண்டலத்தில் ஆதரவுக் குரல்

பட மூலாதாரம், VK SASIKALA TWITTER
இதன் தொடர்ச்சியாக, கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ வி.சி.ஆறுக்குட்டியும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், `` நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெருவாரியாக வென்றுள்ளது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று இரட்டை தலைமை இருப்பதே காரணம். இது சரியில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருந்தால் பெருவெற்றி பெற்றிருப்போம். ஆனால், அந்த வாய்பை விட்டுவிட்டோம்'' என்றார்.
தொடர்ந்து பேசுகையில், `` தலைமை சரியில்லாததால்தான் அ.தி.மு.க தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. `நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும்' என தேனி மாவட்ட செயலாளர் சையதுகானின் குரலுக்கு ஓ.பி.எஸ் செவிசாய்ப்பதாக கூறியுள்ளது வரவேற்கத்தக்கது'' என்றார்.
மேலும், `` அ.தி.மு.கவுக்கு சசிகலா தலைமையேற்று, டி.டி.வி தினகரன் வழியேற்று நடத்தினால்தான் சரியாக இருக்கும். ஒற்றைத் தலைமைதான் கட்சியை காப்பாற்றவும் அடுத்தடுத்த வெற்றிகளுக்கும் வழிவகுக்கும்'' என்றார்.
சசிகலாவின் பயணம் எப்போது?

பட மூலாதாரம், AIADMK
இந்த விவகாரத்தில் கொங்கு மண்டலத்தில் இருந்தே சசிகலாவுக்கு ஆதரவாக குரல் எழுந்துள்ளதை எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பி.எஸ் தரப்பில் குரல் எழுவதும் எடப்பாடி பழனிசாமி அதனை சரிசெய்வதும் தொடர்ந்து கொண்டே இருப்பதையும் அக்கட்சியினர் சுட்டிக் காட்டுகின்றனர். ``இந்தமுறையும் வழக்கமான பாணியை ஓ.பி.எஸ் கடைப்பிடிக்கிறாரா?'' என்ற கருத்து அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.
அதேநேரம், சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொண்டர்களைச் சந்திக்க சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக அறிவித்த வி.கே.சசிகலா, கொரோனா காரணமாக முடிவை மாற்றிக் கொண்டார். `தற்போது அ.தி.மு.க தொடர் தோல்விகளால் சோர்வில் உள்ளதால், சுற்றுப்பயணத்தை சசிகலா தொடங்கும் முடிவில் இருக்கிறார்' என்றொரு பேச்சும் அ.ம.மு.க வட்டாரத்தில் வலம் வருகிறது. அதன் ஓர் அங்கமாகவே தேனி மாவட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தோல்வி நிரந்தரமானது அல்ல
தேனி மாவட்ட அ.தி.மு.கவினர் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்குரைஞருமான பாபுமுருகவேலிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. அதனைத் தீர்மானிப்பது பெரும்பான்மையான வாக்காளர்கள்தான். அதேபோல், ஒரு கட்சிக்குத் தோல்வி என்பது நிரந்தரமானது அல்ல. `இவர்களால்தான் கட்சிக்குத் தோல்வி' எனக் கூறுவது அபத்தமானது. மேலும், `சசிகலா வந்தால்தான் சரிசெய்யப்படும்' எனக் கூறுவதும் தவறானது'' என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` தி.மு.கவுக்கு 1991, 2001, 2011 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் 1998, 2014 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தோல்வி கிடைத்தது. தி.மு.கவில் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அக்கட்சி டெபாசிட் இழந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலும் 1996, 2006 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்தோம். 2004 நாடாளுமன்றத் தேர்தலிலும் படுதோல்வியடைந்தோம். அப்போதெல்லாம் தலைமையை மாற்ற வேண்டும் என்ற குரல் எழவில்லை'' என்கிறார்.
அ.தி.மு.கவுக்கு பாதகமா?

பட மூலாதாரம், AIADMK
`` தேனி மாவட்டக் கழக செயலாளர் விருப்பப்பட்டு, இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். `சிதறிக் கிடக்கும் வாக்குகளை ஒன்று சேர்க்க இணைவது அவசியம்' என அவர் கூறியுள்ளார். `எதனால் வாக்குகள் சிதறுண்டது?' என தோல்விக்குக் காரணமானவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ஒரு மாவட்ட செயலாளர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் என்பது ஏற்புடையதல்ல. அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து, `சசிகலாவுக்கும் இந்தக் கட்சிக்கும் தொடர்பில்லை' எனத் தலைமைக் கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். பின்னர், இதுதொடர்பாக மாவட்டக் கழகங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது'' என்கிறார் பாபு முருகவேல்.
``ஆனால், அப்போதும் தேனி மாவட்டத்தில் சசிகலா எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லையே?'' என்றோம். `` தேனி மாவட்டத்தில் நிறைவேற்றப்படாததற்குக் காரணம், `தலைமைக் கழகத்தில் தீர்மானம் போட்ட பிறகு பிற மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை' என்றார் ஓ.பி.எஸ். அது சரியானதாகவும் இருந்தது. அதேநேரம், தற்போது தேனி மாவட்டக் கழகம் நிறைவேற்றியுள்ள இந்தத் தீர்மானம் என்பது கட்சிக்குள் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது'' என்றார்.
வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை இணைப்பது தொடர்பாக தேனி மாவட்ட அ.தி.மு.கவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து, அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். ``இதுதொடர்பாக ஊடகங்களிடம் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பேசுவார். நான் கூறுவதற்கு எதுவும் இல்லை'' என்று மட்டும் பதில் அளித்தார்.
சசிகலா - ஓ.பி.எஸ் அரசியல் எடுபடுமா?

பட மூலாதாரம், AIADMK
``சசிகலா தொடர்பான பேச்சுக்கள் எழுவது அ.தி.மு.கவுக்கு வலு சேர்க்குமா?'' என மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணியிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். `` சசிகலாவுக்கு இந்தமுறையும் அ.தி.மு.கவில் வாய்ப்பு கிடைக்காது என்றே நினைக்கிறேன். அவருக்குத் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எந்தவித செல்வாக்கும் இல்லை. தினகரனின் அ.ம.மு.கவுக்கு இந்தத் தேர்தலில் என்ன செல்வாக்கு கிடைத்தது? தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக சசிகலா என்ற கார்டை ஓ.பி.எஸ் பயன்படுத்திக் கொள்கிறார். ஓ.பி.எஸ்ஸும் ஒரு வலிமையான தலைவர் என்ற பெயரை வாங்கவில்லை'' என்கிறார்.
மேலும், `` அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டு ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன் என மாறினாலும் அது எடுபடப் போவதில்லை. அது ஒரு வட்டாரக் கட்சியாகத்தான் இருக்க முடியும். அதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அ.தி.மு.கவுக்கு சசிகலா, ஓ.பி.எஸ் ஆகியோர் வலிமையான தலைவர்களாக இருக்கப் போவதில்லை'' என்கிறார்.
`` இன்றைய சூழலில் தமிழ்நாடு அரசியலின் போக்கு என்பது பா.ஜ.க எதிர்ப்பு அரசியலாகத்தான் உள்ளது. இந்த அரசியலை அ.தி.மு.க இதுவரையில் மேற்கொள்ளவில்லை. அதனால்தான் அக்கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. சசிகலா வந்தாலும் பா.ஜ.க எதிர்ப்பு அரசியலை மேற்கொள்ளப் போவதில்லை. இங்கு தி.மு.க எதிர்ப்பு அரசியல் மட்டுமே எடுபடப் போவதில்லை. மத்திய, மாநில அரசுக்கு இடையே அதிகாரப் பங்கீடு, நிதிப் பங்கீடு ஆகியவற்றில் மோதல் வலுத்து வருகிறது. இந்த எதிர்ப்பு அரசியலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், சசிகலா ஆகியோர் எங்கே உள்ளனர்?'' எனக் கேள்வியெழுப்புகிறார் சிகாமணி.
`சசிகலாவை சேர்க்க வேண்டும்' என ஓ.பி.எஸ் தரப்பினர் வலியுறுத்துவதும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதும் நீடித்தபடியே உள்ளது. `எப்போது இந்த ஆட்டம் முடிவுக்கு வரும்?' என அ.தி.மு.க தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












