ஓ.பி.எஸ், இ.பி.எஸ்ஸுக்கு எதிராக தனி அணி ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
அ.தி.மு.க தலைமைக்கு எதிராக தனி அணி ஒன்றைக் கட்டமைக்கும் முயற்சியில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்வர்ராஜா உள்ளிட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். `சசிகலாவுக்கு சாதகமாக நடப்பதைப் போலக் காட்டிக் கொண்டு, எடப்பாடி பழனிசாமியின் பக்கம் ஓ.பி.எஸ் நிற்கிறார். தேர்தல் தோல்வியை மறைக்கும் வகையில் சசிகலா என்ற நாடகத்தை இருவரும் அரங்கேற்றியுள்ளனர்' என்கிறார் அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி.
தம்பியை நீக்கிய ஓ.பி.எஸ்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, `அ.தி.மு.கவில் அ.ம.மு.கவை இணைத்து கட்சி ஒற்றுமையாக செயல்பட வேண்டும்' என்றொரு தீர்மானம் தேனி மாவட்ட அ.தி.மு.கவில் நிறைவேற்றப்பட்டது. அதுவும் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சையதுகான், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி ஓ.பி.எஸ் கையில் கொடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக திருச்செந்தூருக்கு வந்த வி.கே.சசிகலாவை ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா சந்தித்துப் பேசிய வீடியோ காட்சிகள் வைரலானது. இதையடுத்து கட்சியில் இருந்தே ஓ.ராஜா நீக்கப்பட்டார். சசிகலா செல்லும் இடங்களில் எல்லாம் வரவேற்பு கிடைத்தாலும், அ.தி.மு.க தரப்பில் இருந்து எந்த அசைவும் கிளம்பவில்லை. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில், ` எனது சுற்றுப்பயணத்தில் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. நம் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அனைவரும் முழக்கம் எழுப்புகிறீர்கள். என் மீது வைத்த இந்த அசைக்க முடியாத நம்பிக்கை வீண் போகாத வகையில் உங்கள் அனைவருக்காகவும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும் என்னுடைய எஞ்சிய வாழ்நாளை அர்ப்பணிப்பேன்' எனக் கூறியிருந்தார்.
ஓ.பி.எஸ் செய்த துரோகம்
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சசிகலாவுக்கு ஆதவராக கருத்து தெரிவித்த பலரும் அ.தி.மு.கவைவிட்டு நீக்கப்பட்டனர். அந்தவகையில், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, பெங்களுரு புகழேந்தி, ஓ.ராஜா, அஸ்பயர் சுவாமிநாதன் உள்ளிட்டோர், கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்தக் கூட்டத்தில், `சசிகலாவையும் இணைத்துக் கொண்டு அ.தி.மு.க ஒற்றுமையாக செயல்பட வேண்டும்' என்பதை வலியுறுத்திப் பேசியுள்ளனர். விரைவில், அ.தி.மு.க தலைமைக்கு எதிராக மாவட்டங்களில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
``எதற்காக இப்படியொரு கூட்டம்?'' என அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். `` எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக சட்டசபையில் வாக்களித்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம்தான். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதையும் மீறி பா.ஜ.கவின் முயற்சியால் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்தனர். ஆனாலும், ஆட்சிக்கு எதிராக ஓ.பி.எஸ் செய்த துரோகத்தை மறந்துவிடக் கூடாது'' என்கிறார்.
`` தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சையதுகான், பன்னீர்செல்வம் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்வார். அவர் மாவட்ட செயலாளராக தொடர்ந்து பதவியில் இருக்கிறார். அந்தவகையில் பன்னீர்செல்வத்தை கலந்து ஆலோசிக்காமல் இப்படியொரு தீர்மானத்தை சையதுகான் போடுவதற்கு வாய்ப்பில்லை. இப்படியொரு தீர்மானத்தை இயற்றுமாறு ஓ.பி.எஸ்தான் கூறியுள்ளார். அதனை நம்பி சசிகலாவை சந்திக்கச் சென்ற ஓ.ராஜாவை கட்சியில் இருந்தே நீக்கிவிட்டார். அப்படிப் பார்த்தால், தேனி தீர்மானத்துக்குக் காரணமானவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?'' எனக் கேள்வியெழுப்பும் புகழேந்தி.

திட்டமிட்டே நடத்தப்படும் நாடகம்
``தற்போது ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் வழக்கம்போல பேசிக் கொள்கின்றனர். இந்த விவகாரத்தில் திட்டமிட்டே நாடகம் நடத்தப்படுவதாகத்தான் பார்க்கிறோம். கட்சிக்குள் சசிகலா வராமல் இருப்பதற்கான அனைத்து வேலைகளையும் ஓ.பி.எஸ் செய்கிறார். அவர் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து நீடிக்க விரும்புகிறார். சசிகலாவுக்கு சாதகமாக பேசுவதுபோலக் காட்டிக் கொண்டு, எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்'' என்கிறார்.
`` கூட்டத்தில் என்ன பேசப்பட்டது?'' என்றோம். `` கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் அன்வர்ராஜா பேசும்போது, `அனைவரும் மனம்திருந்தி வந்துவிடுவார்கள்' என்றார். ஓ.ராஜா பேசும்போது, `அண்ணன் ஓ.பி.எஸ்ஸின் நடவடிக்கைகள் சரியில்லை. நீண்டகாலமாக இப்படித்தான் ஏமாற்றி வருகிறார். வரும் நாள்களில் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களோடு சசிகலாவையும் கொண்டு வந்து நிறுத்துவோம். இதற்கான வேலைகளில் விரைவில் இறங்க வேண்டும்' என்றார்.
இந்த விவகாரத்தில் சசிகலாவிடம் நாங்கள் வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான். அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக சிவில் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையில், கட்சியின் பொதுச் செயலாளராக மற்றவர்களுக்கு அவர் பொறுப்புகளை அறிவிக்க வேண்டும். `நீதிமன்றத் தீர்ப்பு வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' எனக் கூற இருக்கிறோம். அ.தி.மு.கவில் சசிகலாவையும் இணைத்த பிறகு ஒரு தலைமையை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை'' என்கிறார்.
மேற்கு மண்டலங்களில் ஆர்ப்பாட்டம்
``சசிகலாவை சந்திக்கும் எண்ணம் உள்ளதா?'' என்றோம். `` தற்போது செயல்பாடில்லாமல் அ.தி.மு.க தலைமை உள்ளது. அதைப் பற்றி தலைமையில் உள்ளவர்களுக்குக் கவலையில்லை. மிக விரைவில் சசிகலாவை சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஒரு நல்லெண்ண அடிப்படையில் அவரைச் சந்திக்க இருக்கிறோம். சசிகலாவை இணைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி இறங்கி வருவார் என்ற நம்பிக்கை இல்லை'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், `` அ.தி.மு.கவின் தோல்வியை திசைதிருப்புவதற்காக சசிகலா விவகாரத்தை ஓ.பி.எஸ் கையில் எடுத்துள்ளார். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகிய இருவரும் பேசி வைத்துக் கொண்டு செயல்படுவதாகப் பார்க்கிறோம். இவர்களின் செயல்பாட்டைக் கண்டித்து கோவை, சேலம், மதுரை உள்பட பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டமும் உள்ளது'' என்கிறார்.
தி.மு.கவில் சேரவே கூட்டம் நடத்துகிறார்கள்
அ.தி.மு.க தலைமைக்கு எதிராக நடத்தப்பட்ட கூட்டம் குறித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் வழக்குரைஞருமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` கூட்டம் நடத்தியவர்கள் அனைவரும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக கட்சியில் இருந்தே நீக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இவர்கள் சசிகலாவின் ஆதரவாளர்களும் இல்லை. இவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, `எனது ஆதரவாளர்கள்' என எங்கேயும் சசிகலாவும் குறிப்பிட்டதில்லை. தி.மு.கவுக்கு செல்வதற்காகத்தான் இவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டம் நடத்தியுள்ளனர்'' என்கிறார்.
``ஓ.பி.எஸ்ஸுக்கு தெரிந்துதான் தேனியில் தீர்மானம் போடப்பட்டது என்கிறார்களே?'' என்றோம். `` தனக்குத் தெரிந்துதான் தீர்மானம் போடப்பட்டதாக எந்த இடத்திலும் ஓ.பி.எஸ் சொல்லவில்லை. அவருக்குத் தெரிந்து தீர்மானம் போட்டிருந்தால் தனது தம்பியான ஓ.ராஜாவை கட்சியைவிட்டு நீக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? தன்னுடைய நிலைப்பாட்டில் ஓ.பி.எஸ் தெளிவாக இருக்கிறார் என்பதைத்தான் இது காட்டுகிறது. அவர் பதில் சொல்லாததால் அவருக்கு இதில் விருப்பம் உள்ளதாகப் பேசுவது என்பது தவறானது'' என்கிறார்.
மேலும், `` அவர்கள் எந்தவகைகளில் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தட்டும். 72 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அ.தி.மு.கவில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டன. எஸ்.டி.சோமசுந்தரம், நால்வர் அணி, ஜானகி-ஜெயலலிதா அணி, ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் என இந்த இயக்கம் சந்திக்காத பிளவுகளே இல்லை. ஆனாலும். தொடர்ந்து தொய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அண்மையில் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 26 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம். இவர்களைப் போன்ற சிலரின் சலசலப்புகளால் இந்த இயக்கத்துக்கு எந்தவித பாதிப்பும் வரப்போவதில்லை'' என்கிறார்.
பிற செய்திகள்:
- சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக மாற்றும் தி.மு.க - தமிழ்நாடு அரசின் மசோதாவால் என்ன பலன்?
- 'சாக எவருக்கும் விருப்பமில்லை' - யுக்ரேனிய பதின்ம வயது ராணுவ தன்னார்வலர்கள்
- யுக்ரேன்: ரசாயன ஆயுதங்கள் என்றால் என்ன? ரஷ்யாவால் அதை பயன்படுத்த முடியுமா?
- ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை விதித்த செளதி அரேபியா – காரணம் என்ன?
- ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வருமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












