காலநிலை நெருக்கடியால் சென்னைக்கு வரப்போகும் ஆபத்து: ஐ.பி.சி.சி அறிக்கை தமிழக தலைநகரை எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
உலக மக்கள் தொகையில் பாதி பேர் காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்வதாக சர்வதேச காலநிலை மாற்றக் குழுவினுடைய சமீபத்திய அறிக்கை கூறுகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வருமானம் குறைதல், ஊட்டச்சத்துக் குறைபாடு, காலநிலை தொடர்பான காரணங்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு போன்ற பல்வேறு காரணிகள் நிலைமையை மோசமாக்கி வருவதாக எச்சரிக்கிறது.
மன்னார்குடி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரும் மாநில திட்டக்குழு உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா, "காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான பல முயற்சிகளை ஏற்கெனவே அரசு எடுத்து வருகிறது. மாநிலத்திலுள்ள தொழில்துறை தலைவர்களுடன் ஒருங்கிணைந்து, கரிம சுரப்பு, கரிம வெளியீட்டைக் குறைப்பது போன்றவற்றில் எவ்வாறு திறம்படச் செயல்படுவது என்பதை ஆராய்ந்து வருகிறோம்," என்று ஐ.பி.சி.சி அறிக்கை குறித்துக் கூறியுள்ளார்.
ஐ.பி.சி.சி அறிக்கை குறிப்பிட்டிருக்கும் காலநிலை நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடல் மட்ட உயர்வு, பருவமழையில் நிகழும் மாறுதல்கள் போன்றவை 1991 முதலே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம் இழப்பிற்கு வழிவகுத்துள்ளது என்று ஐ.நா அரசுகளுக்கு இடையிலான காலநிலை குழுவின் அறிக்கை கூறுகிறது.
காணாமல் போகும் மீன் வகைகள்
அந்த அறிக்கையின்படி, பருவமழையில் நிகழும் மாற்றங்களால், வேளாண்மை மற்றும் மீன் பிடித் தொழில் மோசமாகப் பாதிக்கப்படுவதன் விளைவாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும். வணிக முக்கியத்துவம் வாய்ந்த பல வகை மீன்கள் தற்போது கிடைப்பதைவிட மேன்மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இந்த மாற்றத்தால் அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கிறது.
சென்னையைச் சேர்ந்த மீனவர் பாளையம் பிபிசி தமிழிடம் பேசியபோது, "சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாங்கள் பிடித்துக் கொண்டிருந்த கூர கத்தலை, வெங்கண், சுதும்பு, சொறிப்பாறை போன்ற மீன்களெல்லாம் இப்போது கிடைப்பதே இல்லை. அதேபோல், வாளம்பாறை, மட்டப்பாறை போன்ற மீன்கள் கண்ணில் படுவதே அரிதாகிவிட்டது. வரிநண்டுகளை அரசாங்கமே பிடிக்க வேண்டாம், பிடிபட்டாலும் விட்டுவிடுங்கள் என்கிறார்கள். அந்தளவுக்கு அவை எண்ணிக்கையில் குறைந்துவிட்டன.
முன்னர் 50 கிலோ கொண்ட பூல காலாவை அடையாற்றில் பிடித்துள்ளோம். ஆனால், இப்போதெல்லாம் காணப்படுவதில்லை. கோடைக்காலங்களில் அதிகமாகக் கிடைக்க வேண்டிய ஊத காலா, மோவான் என்றழைக்கப்படும் வெள்ளை வௌவால் போன்றவையும் கிடைப்பதில்லை," என்கிறார்.
கடல் மட்ட உயர்வு காரணமாக, இந்தியாவின் முக்கிய கடலோர நகரங்களான மும்பை, சென்னை ஆகியவை மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்தப் புதிய அறிக்கை, "காலநிலை நெருக்கடியைத் தணிக்கவும் நிலைமையை மாற்றவும் அரசுகள் இப்போது செயல்படவில்லை என்றால், நாம் இனி 'எதிர்காலத்தைப் பாதுகாக்க' முடியாது," என்று எச்சரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தெற்கு ஆசியாவில் மாறி வரும் தீவிர காலநிலை, உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதன் காரணமாக, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் வேளாண்மை சார்ந்த பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்று ஐ.பி.சி.சி அறிக்கை கூறுகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை குறித்த தனிப்பட்ட எச்சரிக்கைகளையும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பேரழிவுப் பகுதி எனப் பெயரெடுத்த சென்னை
1.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையைத் தாண்டி வேகமாக உயரும் பூமியின் சராசரி வெப்பநிலை, நகரங்களின் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் மிகப்பெரும் பேரழிவுகளைக் கொண்டுவரும். அத்தகைய விளைவுகளை எதிர்கொள்ளப் போகும் நகரங்களில் சென்னையும் அடக்கம்.
ஐ.பி.சி.சி அறிக்கையின் 644-வது பக்கத்தில், 2015-ஆம் ஆண்டில் சென்னை நகரம் பேரழிவுப் பகுதியாக அறிவிக்கப்பட்டதோடு, அப்போது ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால் 3 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
உலகளவில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய நகரங்களில் 56 சதவீதம், சூறாவளி, வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு ஆகிய 6 பேரிடர்களில் ஏதேனும் ஒன்றிலாவது பாதிக்கப்படுகின்றன. சென்னை, நகோயா, டெஹ்ரான் ஆகிய பெருநகரங்கள் 80 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள்.
உலகளவில் 2050-ஆம் ஆண்டுக்குள் மிகப்பெரிய அளவில் வெள்ளச் சேதங்களை எதிர்கொள்ளும் 20 கடலோர நகரங்களில் 13 நகரங்கள் ஆசியாவில் உள்ளன. அதில் சென்னையும் ஒன்று.
காலநிலை நெருக்கடியின் பாதிப்புகளுக்கு ஆளாகும் வாய்ப்புகளைக் குறைப்பதில், இடப்பெயர்வு மற்றும் திட்டமிட்டு மக்களை வேறு பகுதிகளுக்கு மாற்றி குடியமர்த்துவது போன்ற நடவடிக்கைகள் திறன் மிக்கவையாக இருப்பதற்கான ஆதாரங்கள் மிகக் குறைவாக இருப்பதாக ஐ.பி.சி.சி அறிக்கை குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஒருபுறம் அத்தகைய இடப்பெயர்வுகள் நல்ல பலன்களைத் தருவதாகக் கூறப்பட்டாலும், பெரும்பாலும் அவை மற்றுமொரு பேரிடருக்கு வழிவகுப்பதாகவே இருப்பதாக எச்சரிக்கிறது. உதாரணமாக, பிலிப்பைன்ஸில் உள்ள மெட்ரோ மணிலாவிலும் சென்னையிலும், பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் இடப்பெயர்வுகள், பெரும்பாலும் கூடுதல் பேரிடர் அபாயங்களையே உருவாக்குவதாக ஐ.பி.சி.சி அறிக்கை கூறுகிறது.
அதோடு இந்த அறிக்கையின்படி, இத்தகைய இடப்பெயர்வுகளுக்கு உள்ளாகும் மக்கள், வெள்ளம், வாழ்வாதார பாதுகாப்பின்மை, சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுதல் போன்ற பிரச்னைகளையும் எதிர்கொள்கின்றனர்.
பேரிடர் அபாயம் குறைவதைவிட அதிகரிக்கிறது
பேரிடர் பாதுகாப்பு, காலநிலை மேலாண்மை போன்ற காரணங்களால் நிகழ்த்தப்படும் இத்தகைய இடப்பெயர்வுகளின் சங்கிலித் தொடர் விளைவுகளாக ஏற்படும் சமூக தாக்கங்களுக்கு ஓர் உதாரணமாக சென்னையின் கண்ணகி நகர் பகுதியைக் குறிப்பிடலாம்.
2004-ஆம் ஆண்டு சுனாமி பேரழிவுக்குப் பின்னர், அதைக் காரணம் காட்டியும் நதி மீட்டெடுப்பு திட்டங்களைக் காரணம் காட்டியும் மக்கள் கண்ணகி நகரில் குடியமர்த்தப்பட்டார்கள். அங்கு தற்போது சுமார் 15,000 குடியிருப்புகள் இருக்கின்றன.
வியன்னாவில், ஈ.ஐ.டி நிறுவனத்தில் (EIT) க்ளைமேட்-கே.ஐ.சி (Climate-KIC) பிரிவில் தூய நகரங்களுக்கான முன்னெடுப்பு திட்டத்தின் தலைவராக இருக்கும் சாரா ஹாஸ் மற்றும் அவருடைய குழுவினர், கண்ணகி நகர் குறித்து மேற்கொண்ட ஓர் ஆய்வில், அப்பகுதியில் வெள்ளம், தண்ணீர் பற்றாக்குறை என்று இரண்டு வகையான பிரச்னைகளையும் அங்குள்ள குடியிருப்புகள் எதிர்கொள்ள, வெள்ள அபாயம் இருக்கக்கூடிய ஈரநிலப்பகுதியில் கட்டமைக்கப்பட்டது தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, தங்கள் வாழ்விடத்திலிருந்து நீண்ட தூரத்திற்கு அப்பால் குடியமர்த்தப்பட்டதால், அங்கு இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு சமூக பாதிப்புகளையும் எதிர்கொண்டனர்.
சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமன் பிபிசி தமிழிடம் பேசியபோது, "நகரமயமாகக் கூடிய எந்தவொரு பகுதியிலும் முதலீட்டைக் கொண்டுவர வேண்டும், அந்த இடத்தை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்ற வேண்டும் என்கிற பெயர்களிலும் கடந்த சில ஆண்டுகளாக சுனாமியிலிருந்து பாதுகாக்க வேண்டும், வெள்ளத்தை தவிர்க்க வேண்டும் என்கிற பெயர்களிலும் மக்களை அவர்களுடைய நிலத்திலிருந்து வெளியேற்றி வேறு இடத்திற்குக் கொண்டு செல்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
சென்னையில், கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்வுகள் பேரிடர் அபாயத்தைக் குறைப்பதைவிட அதிகப்படுத்துகிறது. அப்படி இடம் மாற்றப்படும் மக்களை எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலப்பகுதிகளில் கொண்டுபோய் குடியமர்த்துவது, அவர்களை புதிய அபாயங்களுக்கு ஆளாக்குகிறது.
தெற்காசியாவில், கங்கை சமவெளி, டெல்லி-லாகூர் பகுதி, சென்னை, சிட்டகோங், டாக்கா, மும்பை ஆகிய பகுதிகளில், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் காரணமாக, கண்ணகி நகருக்கு மக்கள் இடம் பெயர்ந்ததைப் போலவே, ஆனால் அதைவிட மிகப்பெரிய அளவிலான இடப்பெயர்வுகள் நிகழும் என்று 1872-வது பக்கத்தில் ஐ.பி.சி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது," என்கிறார்.
2014-ஆம் ஆண்டு வீட்டு வசதி மற்றும் நில உரிமை அமைப்பு நடத்திய கணக்கெடுப்பு முடிவுகளின்படி, கண்ணகி நகருக்கு குடிபெயர்ந்த மக்களில் 80 சதவீதத்தினர் வேலையிழப்பு, பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டியது போன்ற சிக்கல்களுக்கு ஆளாகினர். பல ஆண்டுகளாக தங்கள் வாழ்வாதாரம் இருந்த இடத்திலிருந்து வேறு புதிய இடத்திற்குக் குடிபெயர்ந்த போது, அவர்கள் புதிய வேலை தேடுவதில் சிரமம், ஏற்கெனவே செய்துகொண்டிருந்த தொழிலைத் தொடர்ந்து செய்வதற்காக மேற்கொள்ள வேண்டிய பயணங்கள் அதிக செலவையும் நேரத்தையும் எடுத்தது, புதிய குடியிருப்பில் அடிப்படை வசதிக் குறைபாடு என்று பல சிக்கல்களை எதிர்கொண்டனர்.
வேகமாக அழிக்கப்படும் மேற்குத்தொடர்ச்சி மலை
இதுகுறித்துப் பேசிய சென்னை வளர்ச்சிக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன், "இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. சில நேரங்களில் முந்தைய அறிக்கைகளுக்கு மாறாக, வேகமாக மாறிவரும் நிலைமைகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக, ஐ.பி.சி.சி புதிய முடிவுகளுக்கு வருகிறது.
முதன்முறையாக, காலநிலை நெருக்கடியால் உலக மக்கள்தொகையில் குறைந்தபட்சம் பாதி பேர் கடுமையான சிக்கலை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.
ஒரு சில காரணங்களால் தமிழ்நாடு மிக மோசமாகப் பாதிக்கப்படும். நகரமயமாக்கல் விகிதம் இங்கு அதிகமாக உள்ளது. மாநிலத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள். இந்த நிலப்பரப்பு உயிரினத் தொகுதியிலிருந்து கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் தொகுதியாக மாறியுள்ளது. இது வெப்பநிலை உயர்வில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டின் மற்றுமொரு பிரச்னை, வேகமாக அழிக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையை நாம் அதிகம் நம்பியுள்ளோம். ஏற்கெனவே இந்த மலைகளிலுள்ள அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இந்த இழப்புகள் அதிகரிக்கும்போது, மாநிலத்தின் விவசாயம் மோசமாகப் பாதிக்கும். ஏற்கெனவே அந்தப் பாதிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது. சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் கடற்கரையை பாதிக்கும் பல்வேறு தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு உட்பட்டுள்ளன. கடல் மட்ட உயர்வு காரணமாக, அடுத்த இருபது முதல் முப்பது ஆண்டுகளில் பெரியளவிலான நிலப்பகுதி இழப்புகளை நாம் காணலாம்," என்கிறார்.
ஐ.பி.சி.சி அறிக்கை குறித்து, மன்னார்குடி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரும் மாநில திட்டக்குழு உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா, "காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான பல முயற்சிகளை ஏற்கெனவே அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில், பயிர் இழப்பு, அதிகளவு மழைப் பொழிவு, கடல் மட்ட உயர்வு போன்றவற்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாறி வரும் பருவநிலையைச் சமாளிக்க கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஏற்கெனவே திட்டங்களை வகுத்து, தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். மாநிலத்திலுள்ள தொழில்துறை தலைவர்களுடன் ஒருங்கிணைந்து, கரிம சுரப்பு, கரிம வெளியீட்டைக் குறைப்பது போன்றவற்றில் எவ்வாறு திறம்படச் செயல்படுவது என்பதை ஆராய்ந்து வருகிறோம். மின்சார வாகனங்கள் மற்றும் சூரிய மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கும் மாநிலம் வலுவாக ஊக்கமளிக்கிறது," என்று கூறியுள்ளார்.
அரசின் அணுகுமுறை மாறவில்லை
"இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் எதுவுமே புதியதல்ல. சென்னையில் இருக்கும் ஏழை, எளிய மக்களும் சூழலியலாளர்களும் நீண்டகாலமாகப் பேசியவற்றையே, அவற்றின் உண்மைத் தன்மையோடு வெளியே கொண்டு வந்துள்ளது. சென்னை பேரிடர் அபாயத்திற்கு உட்பட்டிருக்கும் ஆபத்தான பகுதி என்று அறிக்கை கூறுகிறது.
அரசு கொள்கைகளினால் ஏற்படும் காலநிலை தாக்கத்தை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் எளிய, விளிம்பு நிலை மக்களே, அதன் விளைவுகளுக்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அறிக்கை கூறுகிறது. அதோடு, முதலீடு, சமூக- சூழலியல் பாதுகாப்பு என்று அனைத்தையும் அவர்களுக்கு உருவாக்கித் தர வேண்டுமென்பதே இந்த அறிக்கையின் முதன்மையான கருத்து.
ஒரு பிரச்னைக்குத் தீர்வு காணப் போவதாகக் கூறி, இருக்கும் பிரச்னையைப் பெரிதாக்குவது, புதிய பிரச்னைகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளும் அதில் பேசப்பட்டுள்ளன. வடசென்னை கடற்கரையில் செய்திருப்பதைப் போல், கடல் அரிப்பைத் தடுப்பதாகக் கூறி கடலோரத்தில் பாறைகளைப் போட்டு கல் சுவர் அமைப்பது, மக்களை இடம் மாற்றி கண்ணகி நகரில் குடியேற்றியது போன்றவற்றை உதாரணமாகக் கூறியுள்ளார்கள்.

பட மூலாதாரம், Getty Images
அரசு இன்னமும் அதே அணுகுமுறையில் தான் உள்ளது என்பதற்கான சான்றுகளாக, எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம், திருவொற்றியூரிலுள்ள கார்கில் நகரில் அமைக்கப்பட்ட மற்றுமொரு அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
2015-ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது, கார்கில் நகரிலிருந்து வெள்ள நீர் வெளியேறாமல் சுமார் 5 மாதங்களுக்குத் தீவு போல் சூழ்ந்திருந்தது. அதே இடத்தில் மீண்டும் அடுக்குமாடிக் குடியிருப்பை அமைத்துள்ளார்கள். வெள்ள அபாயம் குறித்த எச்சரிக்கைகளை அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், இங்கு எண்ணூரில் நீர்நிலைக்குள்ளேயே பாலிமர்(நெகிழி) பூங்கா அமைக்கப்படுகிறது," என்று கூறினார் சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமன்.
ரீதிங்கிங் அர்பன் ரிஸ்க் அண்ட் ரீசெட்டில்மெண்ட் இன் தி குளோபல் சவுத் (Rethinking Urban Risk and Resettlement in the Global South) என்ற நூலில் அதன் ஆசிரியர்கள் கேஸ்ஸிடி ஜான்சன், கரிமா ஜெயின், ஆல்லன் லாவெல் ஆகியோர் இப்படிக் குறிப்பிடுகின்றனர்:
"சென்னை இரண்டு விதமான பேரிடர் மேலாண்மையை கைக்கொள்கிறது. கட்டடங்களின் தரைமட்டத்தை உயர்த்துவது, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது போன்ற தனிநபர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முதல் வகை. ஏற்கெனவே, இருக்கும் வெள்ள வடிகால்கள், இயற்கையான கால்வாய்களை அகலப்படுத்துதல், தூர்வாருதல் போன்ற அதிக செலவிலான திட்டங்கள், பாதிக்கப்பட்ட எளிய மக்களை இடம் மாற்றுதல் போன்ற அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இரண்டாவது வகை.
அரசின் இந்த நடவடிக்கைகளைக் கூர்ந்து ஆராயந்து பார்த்தால், பேரிடர் அபாயங்களைப் பற்றிய பரந்த புரிதல் மற்றும் அவையனைத்திற்கும் தொடர்புடைய, அனைத்தையும் தணிக்கக்கூடிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்குப் பதிலாக, பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு நதி என்று குறிப்பிட்ட நீர்நிலை மீது கவனம் செலுத்துவது அல்லது தூர்வாருவது, மக்களை இடம் மாற்றுவது, கழிவு நீர் வெளியேற்றத்தைக் குறைப்பது போன்ற நீர் மேலாண்மையின் சில குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
இவைபோக, இப்படியான நடவடிக்கைகள் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் வாயிலாகவே முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பிரச்னைகளால் அதிகமாகப் பாதிக்கப்படும் விளிம்புநிலை சமூகங்களின் பங்கு இத்தகைய திட்டங்களில் மிகவும் குறைவு."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












