காடுகள் பரப்பளவு அதிகரித்துள்ளதாக இந்திய அரசு சொல்வது உண்மைதானா? - “பழத்தோட்டம் கூடக் காடுதான்”

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
2021ஆம் ஆண்டுக்கான காடுகள் பரப்பளவு கணக்கெடுப்பு முடிவுகளை இந்திய கானக அளவை நிறுவனம் (India's State Forest Survey Report 2021), கடந்த 13-ம் தேதியன்று வெளியிட்டது.
இந்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றத்தின் அமைச்சர், புபேந்தர் யாதவ், '2021-ஆம் ஆண்டுக்கான இந்திய கானக அளவை நிறுவன அறிக்கையை,' வெளியிட்டார்.
அதை வெளியிட்டுப் பேசியவர், காடுகள் மற்றும் மரப் போர்வைகளின் (காடுகளுக்கு வெளியேயுள்ள மரங்கள்) மொத்தப் பரப்பு 80.9 மில்லியன் ஹெக்டேர் என்று கூறினார். மேலும், 2019-ஆம் ஆண்டில் இருந்ததைவிட 2,261 சதுர கி.மீ மொத்த பரப்பளவில் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த அறிக்கையின்படி, 17 மாநிலங்களில், அவற்றின் மொத்த நிலப்பரப்பில் 33% காடுகளும் மரப் போர்வைகளும் இருப்பதாகவும் அது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். அதோடு, "பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையிலான அரசுக்கு காட்டின் அளவை அதிகரிப்பதில் மட்டுமல்ல, அவற்றின் தரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது," என்று குறிப்பிட்டார்.
1988-ஆம் ஆண்டு தேசிய காடுகள் கொள்கை வடிவமைக்கப்பட்டபோது, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 33% காடுகள் இருக்கவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 75-வது சுதந்திர தினத்திற்கு என புதிய இந்தியாவுக்கான வியூகம் (Strategy of New India@75) என்ற டிசம்பர் 2018-ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையிலும் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியாகும் இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் தற்போதுள்ள மொத்த காடுகளின் பரப்பளவு 21.71%. 2019-ஆம் ஆண்டில் 712,249 சதுர கி.மீட்டராக இருந்த கானகப் பரப்பில், 2021-ஆம் ஆண்டு அறிக்கைப்படி கூடுதலாக 1,540 சதுர கி.மீ அதிகரித்துள்ளது. ஆக, தற்போது இந்தியா முழுக்க 713,789 சதுர கி.மீ காடுகள் உள்ளன. இதற்கு முன்பு, 2019-ஆம் ஆண்டில், 21.67% மற்றும் 2017-ஆம் ஆண்டில் 21.54% என்ற கணக்கில் காடுகள் பரப்பளவு பதிவாகியிருந்தது.
காடுகள் அதிகமானது 0.04% பரப்பளவுக்கு மட்டுமே
2017-ஆம் ஆண்டு வெளியான தரவுகளைப் பொறுத்தவரை, அதற்கு முந்தைய கணக்கெடுப்பின்போது இருந்த பரப்பளவைவிட 1% இந்தியாவின் கானகப் பரப்பு அதிகரித்துள்ளதாகக் கூறியது. 2019-ஆம் ஆண்டு வெளியான அறிக்கையின்படி, 2017-ஆம் ஆண்டின் கணக்கைவிட 0.13% கானகப் பரப்பு அதிகமாகியிருந்தது. 2019-ஆம் ஆண்டு 21.67% ஆக இருந்த காடுகள், தற்போது 21.71% உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா அதிகரித்துள்ள கானகப் பரப்பின் விகிதம் 0.04% மட்டும்தான்.
காடுகளை நான்கு பிரிவுகளாக கானக அளவை நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. அவை,
- அடர்த்தியான காடுகள், ஒரு ஹெக்டேரில் 70 சதவிகிதத்திற்கும் மேலான மரங்களைக் கொண்டவை.
- அடர்த்தி குறைவான காடுகள், ஒரு ஹெக்டேரில் 40 சதவிகிதத்திற்கும் மேலாக 70 சதவிகிதத்திற்கும் குறைவாக மரங்களைக் கொண்டது.
- திறந்தவெளிக் காடுகள், ஒரு ஹெக்டேரில் 10% மரங்களைக் கொண்டவை.
- 2019-ஆம் ஆண்டு முதல் புதர்க்காடுகள், புதர்கள் மற்றும் புல்வெளிகளோடு 10 சதவிகிதத்திற்கும் குறைவான மரங்களைக் கொண்ட பகுதிகளோடு சேர்த்து, பொதுவாக ஒரு நிலத்தில் (அது காடு என்ற வரையறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியதில்லை) 10% மரங்கள் இருந்தாலும்கூட இதில் வகைப்படுத்தப்படுகின்றன.

இதில் அடர்த்தியான காடுகளின் பரப்பளவு இந்த 21.71 சதவிகிதத்தில் 3.04% பங்கு வகிக்கின்றன. 2019-ஆம் ஆண்டில் அவற்றுடைய பரப்பு, 99,278 சதுர கி.மீ (3.02%). தற்போதைய கணக்கின்படி, முன்பைவிட 501 சதுர கி.மீ அதிகமாகியுள்ளது. நாட்டின் மொத்தப் பரப்பளவில் வெறும் 3.04% தான் அடர்த்தியான காடு.
திறந்தவெளிக் காடுகள் என்ற வகைப்பாட்டில் இந்த ஆண்டு, 307,120 சதுர கி.மீ. உள்ளது. முந்தைய கணக்கெடுப்பைவிட தற்போது, 2,621 சதுர கி.மீ அதிகரித்துள்ளது.
40 சதவிகிதத்திற்கும் மேலான மரங்களைக் கொண்ட அடர்த்தி குறைவான காடுகள் என்ற வகைப்பாட்டில், 307,890 சதுர கி.மீ உள்ளது. 2019-ஆம் ஆண்டில் இருந்ததைவிட 1,582 சதுர கி.மீ குறைந்துள்ளது.
புதிதாக முன்னேற்றம் எதுவும் இல்லை
17 மாநிலங்களில் 33% மற்றும் அதைவிட அதிகமான கானகப் பரப்பு இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் அறிக்கை வெளியீட்டில் குறிப்பிட்டதாக பி.ஐ.பி செய்தி அறிக்கை கூறுகிறது.
ஆனால், அவை முந்தைய அறிக்கைகளின் போதும் அதே அளவில் தான் இருந்துள்ளன. அவற்றுடைய கானகப் பரப்பில் எவ்வித முன்னேற்றமும் இப்போது புதிதாக ஏற்படவில்லை. அவற்றில் குறிப்பாக, அருணாச்சலப் பிரதேசம் (79.33%), அசாம் (36.09%), மிசோரம் (84.53), நாகாலாது (73.9%) போன்ற மாநிலங்களில் முன்பு இருந்ததைவிடக் குறைந்துள்ளன. நாகாலாந்து மட்டும் முன்பு இருந்த பரப்பில் 1.88% காட்டுப் பகுதிகளை இழந்துள்ளது.
அதுமட்டுமின்றி, தாத்ரா & நாகர்ஹவேலி, டாமன் & டையூ ஆகியவை 2019-ஆம் ஆண்டு அறிக்கையில் தனித்தனி பிரதேசங்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. அப்போதைய அறிக்கை, இந்தப் பகுதிகளில் முறையே 42.16% மற்றும் 18.46% கானகப் பரப்பு இருந்ததாகக் கூறுகிறது.
2020-ஆம் ஆண்டு இரண்டையும் ஒன்றாக இணைக்கப்பட்டுவிட்டதால், 2021-ஆம் ஆண்டு அறிக்கையில், அவை இரண்டும் ஒரே பிரதேசமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போதைய அறிக்கையின்படி, இரண்டிலும் சேர்த்தே 37.83% கானகப் பரப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 22.79% காட்டை இவை இழந்துவிட்டன.

பட மூலாதாரம், Subagunam Kannan
தமிழ்நாட்டில் முன்பு 3,650 சதுர கி.மீ இருந்த அடர்த்தியான காடுகள், தற்போது 3,593 சதுர கி.மீட்டராகக் குறைந்துள்ளன. அதுவே அடர்த்தி குறைவான காடுகளின் பரப்பளவு நான்கே சதுர கி.மீ தான் அதிகமாகியுள்ளது. திறந்தவெளிக் காடுகளில், 63 சதுர கி.மீ பரப்பளவு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரிய முன்னேற்றம் இல்லை என்பதையே இந்த அறிக்கை காட்டுகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, கர்நாடகா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற எந்த மாநிலத்திலுமே பெரியளவு முன்னேற்றம் இல்லை. இந்த ஐந்து மாநிலங்கள் தான் தற்போது மொத்த காடுகள் பரப்பளவில் அதிகரித்துள்ள 1,540 சதுர கி.மீட்டரில் பெரும் பங்கு வகித்துள்ளன.
2017-ஆம் ஆண்டு இருந்ததோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு தற்போது 79 ஹெக்டேர் கானகப் பரப்பை இழந்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் காடுகளாகப் பதிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு வெளியேயுள்ள மரப் போர்வையின் கணக்குப்படி, முன்பிருந்ததைவிட இந்த ஆண்டில் 406 சதுர கி.மீ அளவிலான மரங்களை இழந்துள்ளது.
அறிக்கையிலுள்ள தரவுகளின்படி, ஏழு மாநிலங்கள் அடர்த்தியான காடுகளில் குறிப்பிட்ட அளவை இழந்திருக்கின்றன. 24 மாநிலங்கள் அடர்த்தி குறைவான காடுகளின் பரப்பை இழந்திருக்கின்றன.
"பழத்தோட்டம் கூடக் காடு தான்"
பல்லுயிரிய வளம் மிக்கவையாக, அரிய உயிரினங்களின் வாழ்விடமாக, சூழலியல் சேவைகள் பலவற்றின் பிறப்பிடமாகச் செயல்படுவது, பெரும்பான்மையாக அடர்த்தியான காடுகளிலும் 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மரங்களைக் கொண்ட அடர்த்தி குறைவான காடுகளிலும் தான்.
ஆனால், திறந்தவெளிக் காடுகள் என்ற வகைப்பாட்டின் கீழ், ஒரு ஹெக்டேருக்கு 10% மரங்கள் இருக்கும் அனைத்து நிலங்களுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதனால் அவையே மொத்த காடுகள் பரப்பளவின் அளவீட்டை அதிகப்படுத்திக் காட்டுகின்றன.
இப்படியான அளவீடுகளின் மூலம் திறந்தவெளிக் காடுகளின் பரப்பு அதிகமாகப் பதிவாகலாம், ஆனால் அதனால் பயன் விளையப் போவதில்லை என்று சூழலியலாளர்கள் விமர்சிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, 2019-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பிலிருந்து புதிதாக அனைத்து வகையான நிலங்களுமே, அதாவது காடுகளாக வரையறுக்கப்பட்ட நிலங்களுக்கு வெளியே உள்ளவையும் இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படுகின்றன.
அவற்றின்கீழ், பழத்தோட்டங்கள், பண மரப் பயிரிடுதல்கள் (cash crop plantations) போன்ற அனைத்துமே உள்ளடக்கப்படுகின்றன. அவற்றையும் சேர்த்து எண்களைப் பெரிதாக்கிக் காட்டுவதால் எவ்விதப் பயனும் விளைந்துவிடாது என்கிறார், சூழலியல் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான காஞ்சி கோலி.

பட மூலாதாரம், Getty Images
அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "முதலில், இதுபோன்ற அறிக்கை, காடுகளின் நிலை குறித்த அறிக்கையாக இருக்கவேண்டும். காடுகளை அளக்கும் அறிக்கையாக இருக்கக்கூடாது. அது, எந்தவகையான காடுகளை இழந்துள்ளோம், எதனால் இழந்துள்ளோம் என்பதைக் கண்டறிய வேண்டும்.
அப்போதுதான் நாட்டிலுள்ள காடுகளின் நிலை குறித்த ஒரு தெளிவு கிடைக்கும். இப்போதுள்ள கானக அளவை நிறுவனத்தின் அறிக்கையைப் பொறுத்தவரை, ஒரு முக்கியமான செயல்முறை கேள்விக்குரியதாக உள்ளது.
குறிப்பாக, 2019-ஆம் ஆண்டிலிருந்து காட்டுப் பகுதிகளுக்கு வெளியேயுள்ள மரங்களும் கானகப் பரப்பு என்ற வரையறைக்குள் கொண்டுவரப்பட்டன. இந்தச் செயல்முறையில் குறிப்பிட்டுள்ள அடர்த்தியைக் கொடுக்கக்கூடிய எந்த மரப் போர்வையை வேண்டுமானாலும் செயற்கைக்கோள் ஒளிப்படங்கள் காட்டலாம்.
அவை பொருளாதார ரீதியிலான தனியார் பயிரிடுதல்களாகவோ, பொதுப்பணித்துறையின் நிலமாகவோ, பழத் தோட்டங்களாகவோ, 'ஒரு ஹெக்டேருக்கு 10% மரங்கள்' என்ற வரையறையை பூர்த்தி செய்யக்கூடிய எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவை கானகப் பரப்பாகப் பதிவு செய்யப்படும்.
அரசு தன்னுடைய இலக்கை அடைவதில் முன்னேறிக் கொண்டிருப்பதாகக் காட்டுவதற்குரிய எண்களைக் கொடுத்து அது உதவும். ஆனால், நடைமுறையில் இந்தியக் காடுகளின் சமூக-சூழலியல் நிலை என்ன என்பதை அது காட்டாது.
இதன்மூலம், பல்லுயிரிய வளம், சூழலியல் சமூக சேவைகள் எதையுமே தெரிந்துகொள்ள முடியாது," என்று கூறினார்.
பிற செய்திகள்:
- உ.பி தேர்தலில் களமிறங்கும் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட உன்னாவ் பெண்ணின் தாய்
- இந்திய ராணுவத்தினருக்கு டிஜிட்டல் பிரின்டிங் சீருடை அறிமுகம் - 10 முக்கிய தகவல்கள்
- நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தை: நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பிரசவம்
- ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் சம்பவத்துக்கு எது காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












