ரூபா தத்தா: மம்தா பானர்ஜியை கேலி செய்த இரண்டு நாட்களில் திருட்டு வழக்கில் நடிகை கைது - என்ன பிரச்னை?

பட மூலாதாரம், SANJAY DAS/BBC
- எழுதியவர், பிரபாகர் மணி திவாரி
- பதவி, பிபிசி நியூஸ்
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் தோல்விக்காக, மமதா பானர்ஜியை கேலி செய்திருந்தார் வங்காள மொழி திரைப்பட நடிகை ரூபா தத்தா.
தனது ட்விட்டர் பக்கத்தில் ரூபா வெளியிட்ட வீடியோவில், மமதாவின் அறிக்கையை அவரைப் போலவே பேசுவது போல கேலி செய்திருந்தார்.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, கொல்கத்தாவில் நடந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பெண்களின் பணப்பையைத் திருடியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஒரு டைரியை மீட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அத்துடன், அவர் எங்கிருந்து எப்போது எவ்வளவு பணத்தை திருடினார் என்ற எல்லா விவரங்களும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
ஆனால், நீதிமன்றத்தில் தன்னை நிரபராதி என்று ரூபா கூறியுள்ளார். இதையடுத்து "கிளெப்டோமேனியா" நோயால் பாதிக்கப்பட்டவரா இவர் என்ற கேள்வியையும் இந்த விவகாரம் எழுப்பியுள்ளது.
கிளெப்டோமேனியா என்பது ஒருவிதமான திருட்டு நோய். தனக்கு தேவைப்படாதபோதும் ஒரு பொருளின் மீது ஆசை வந்தால் அதைத் திருடியே தீர வேண்டும் என்ற உளவியல் உந்துதல்தான் கிளப்டோமேனியா.
ஆனால் இந்த வழக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'சிம்ரன்' என்ற படத்தில் கங்கனா ரனாவத்தின் கதாபாத்திரத்தை மக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
பசங்க 2 திரைப்படத்தில் முனீஸ்காந்தின் கதாப்பாத்திரத்தை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதில், வங்கி மேலாளராக இருந்தபோதும், தேவையில்லாமல் திருடும் க்ளெப்டோமேனியா பிரச்னையால் அவதிப்படும் தந்தை என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

பட மூலாதாரம், ANI
இது உளவியல் பிரச்சனையா?
ரூபாவும் இந்த நோயின் பிடியில் இருக்கிறாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இருப்பினும், ரூபாவோ அல்லது அவரது வழக்கறிஞரோ நீதிமன்றத்தில் அப்படி எதையும் தெரிவிக்கவில்லை.
முதலில் க்ளெப்டோமேனியா நோய் என்றால் என்ன? இது உணர்சிகளின் கட்டுப்பாடு தொடர்பான தீவிர உளவியல் பிரச்சனை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர் தனது உணர்ச்சிகளையும் நடத்தையையும் கட்டுப்படுத்தவே முடியாது.
இந்தப் பிரச்னையால் அவதிப்படுபவர் எந்தத் தேவைக்காகவும் திட்டமிட்டுத் திருடுவதில்லை. இந்த வேலையில் மற்றவர்களின் உதவியைப் பெறுவதும் இல்லை. அவர்கள் மக்களுக்கு உடல் ரீதியான எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. இப்படி திருடுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
"கண்காட்சிகள் அல்லது பிற நெரிசலான இடங்களில் சுற்றித் திரிந்து மக்களின் பணப்பையையோ பணத்தையோ திருடுவது ரூபா போன்ற நடிகையின் பிம்பத்துடன் ஒத்துப்போவதாக இல்லை. அவருக்கு க்ளெப்டோமேனியா பிரச்சனையும் இருக்கலாம். ஆனால் இது தீவிரமாக விசாரிக்கப்படவேண்டிய விஷயம்," என்று மனோதத்துவ நிபுணரான டாக்டர் சுமந்த் ஹஸ்ரா கூறுகிறார்.
ரூபா தத்தா யார்?
வங்காள திரையுலகில் ஒரு பிரபலமான நடிகை ரூபா தத்தா. அவர் பல தொலைகாட்சித் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார். ஜெய் மா வைஷ்ணோ தேவி என்ற ஹிந்தி சீரியலில் முக்கிய வேடத்தில் அவர் நடித்துள்ளார்.
மும்பையில் அவரது நடிப்புப் பயிற்சிப் பள்ளியை பாஜக தலைவர் சையத் ஷாநவாஸ் ஹூசேன் திறந்து வைத்தார். ரூபாவின் சமூக ஊடக கணக்குகளில்,மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் மற்றும் பிற தலைவர்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் காணப்படுகின்றன. கராத்தேயில் தான் கருப்பு பெல்ட் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் தனக்கு ஆபாச செய்திகளை அனுப்பியதாக 2020 ஆம் ஆண்டில் ரூபா தத்தா குற்றம் சாட்டியபோது, அவர் பிரபலமானார்.
அனுராக் கஷ்யப் தனக்கு தவறான செய்திகளை அனுப்புவதாகவும், அத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குற்றம் சாட்டினார், ஆனால் பின்னர் அவர் குற்றம்சாட்டிய அனுராக் வேறு யாரோ ஒருவர், இயக்குனர் அனுராக் கஷ்யப் அல்ல என்று தெரியவந்தது.
இப்படியிருக்க, கோவா சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது தொடர்பாக கடந்த வாரம் மமதா பானர்ஜியை விமர்சித்து ரூபா கிண்டல் செய்திருந்தார்.

பட மூலாதாரம், SANJAY DAS/BBC
விவகாரம் என்ன?
கொல்கத்தா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ஒரு பர்ஸை குப்பைத் தொட்டியில் வீசிய போது ரூபாவை சந்தேகத்தின் பேரில் போலீஸார் காவலில் எடுத்து சோதனை செய்தனர்.
இதன்போது, அவரிடமிருந்து சில பர்ஸுகளும், 70 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் மீட்கப்பட்டது. இதற்கு ரூபாவால் திருப்திகரமான பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. இதையடுத்து அவரை கைது செய்து விதான் நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
"பல திருட்டு மற்றும் பிக்பாக்கெட் சம்பவங்களை ரூபா ஒப்புக்கொண்டுள்ளார். திருடும் நோக்கத்திற்காக தான் அடிக்கடி கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கும், பார்ட்டிகளுக்கும் செல்வதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், எல்லா சம்பவங்கள் மற்றும் கிடைத்த தொகையின் விவரங்களை ஒரு நாட்குறிப்பிலும் அவர் எழுதி வைத்துள்ளார்," என்று தனது பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












