பலமுறை தற்கொலைக்குக் கூட யோசித்துள்ளேன்: 5 ஆண்டுகளுக்குப் பின் மௌனம் கலைத்த பாவனா

பட மூலாதாரம், Bhavana Menon
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ்
தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையான பாவனா மேனன், தன் மீதான பாலியல் தாக்குதல் விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு மௌனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் "இதிலிருந்து மீண்டு வரும் பயணம் மிகவும் கடினமாக இருந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்திய திரையுலகில் சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய பாவனா, கடந்த 2017ஆம் ஆண்டு திருச்சூரிலிருந்து கொச்சிக்கு பயணித்துக்கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார்.
அந்தச் சமயத்தில் , இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, பாவனாவுடன் 12க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்த திலீப்பின் பெயரும் இதில் இடம் பெற்றிருந்ததது. ஆனால், திலீப் இந்த குற்றச்சாட்டை மறுத்த போதிலும், அவர் கைது செய்யப்பட்டு ஜாமின் கிடைக்கும் வரை 3 மாதங்கள் சிறையிலிருந்தார்.
நான் ஒரு மகிழ்ச்சியான சுபாவம் கொண்டவள். ஆனால் அந்த சம்பவத்துக்குப் பின், என் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. சமூக வலைதளங்களில் நான் வெளியிடும் சிரித்த முகமான படங்களைத்தான் பெரும்பாலான மக்கள் பார்க்கின்றனர். ஆனால், நான் நரக வேதனையில் இருந்தேன்" என்று என்னுடன் தொலைபேசியில் தெரிவித்தார் பாவனா.
நான் பாதிக்கப்பட்டேன். ஆனால், இந்த தாக்கப்பட்ட நடிகையான நான் மீண்டு மீண்டும் கேட்டுக்கொண்டிருந்த கேள்வி "ஏன் நான்?" என்பது மட்டும்தான். என்னை நானே குறைசொல்லிக்கொண்டு இதிலிருந்து வெளியில்வர நான் வழிதேடிக் கொண்டிருந்தேன் .
ஆனால், 2020இல் நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்ற போது, அங்கு ஆதாரங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக நான் 15 நாட்களை செலவிட்டேன். அங்குதான் எல்லாம் மாறின. இப்போது, நான் எல்லாவற்றையும் கடந்துவிட்டு முன்செல்ல நினைக்கிறேன். ஆனால், மறக்க நினைக்கும் போதுதான் எல்லாமும் நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் கூட.
2017 இல் அந்தச் சம்பவம் நடந்த தினத்தன்று, தன் சொந்த ஊரான திருச்சூரிலிருந்து ஒரு டப்பிங் பதிவுக்காக கொச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை டப்பிங்க் ஸ்டூடியோவில் இருந்திருக்க வேண்டிய பாவனா அந்த இரவில் கடத்தப்பட்டார். அத்துடன் பாலியல் தாக்குதல் நடத்தியவர்கள் அதனை வீடியோவும் எடுத்தார்கள், "என்னை மிரட்டுவதற்கான திட்டமாக இருந்திருக்கலாம்" என்றும் பேசினார்.

பட மூலாதாரம், Arun Chandra Bose
சினிமா நட்சத்திரங்கள் என்பதால் இந்த விவகாரத்தின் மீது ஊடக வெளிச்சம் பெருமளவில் விழுந்தது. பல ஊடகங்களில் இதுகுறித்து விவாதங்களும் நடத்தப்பட்டன.
இதில் பலர், சமூக ஊடகங்களில் பாதிக்கப்பட்டவரை அவமானத்தும் வேலையில் ஈடுபட்டனர். பாவனா ஏன் இரவு 7 மணிக்குப் பயணம் செய்கிறாள் என்றும் கேள்வி எழுப்பினர். சிலர், அவரது ஒழுக்கத்தை கேள்வி எழுப்பினர், சிலர் அவளை துஷ்பிரயோகம் செய்தனர், மேலும் சிலர் இந்த வழக்கு முழுவதுமாக ஜோடிக்கப்பட்டது என்றும் கூறினர்.
"நான் உடைந்தே போனேன். இவை என்னை வெகுவாகக் காயப்படுத்தின. சில நேரங்களில், என் நுரையீரல் வலிக்கும் அளவுக்கு கத்த வேண்டும் என்று கூட தோன்றும் என்று மோஜோ ஸ்டோரி இணையத்துக்கு பேட்டி கொடுத்திருந்தார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே, பாதிக்கப்பட்டது இவர்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது.
"நான் ஒரு பிரபலமான நடிகை. முதலில் நான் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியான போது, சில தொலைக்காட்சிகள் எனது பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்தின. பின்னட், பாலியல் வன்கொடுமை பற்றிய விவரம் தெரிந்தவுடன், அவர்கள் எனது பெயரையும் புகைப்படங்களையும் அகற்றினர், ஆனால் அதற்குள், விஷயம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது."
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு
இந்த நிலையில், பாலியல் தாக்குதலுக்குள்ளாகி மீண்ட தன் பயணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவு வெளியிட்டிருந்தார் பாவனா.
அதில், "பாதிக்கப்பட்டவர் என்ற நிலையிலிருந்து மீண்டவர் என்ற நிலைக்கு வரும் இந்தப் பயணம் மிகவும் கடினமானது" என்று தெரிவித்திருந்தார். மேலும், "இது ஒன்றும் எளிதான பயணம் அல்ல. பாதிக்கப்பட்டவர் என்பதிலிருந்து மீண்டவர் என்பதற்கான பயணம். 5 ஆண்டுகளாக, என் பெயரும் எனது அடையாளமும் என் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலின் காரணமாக அடங்கியிருந்தது"
"நான் குற்றம் செய்தவள் இல்லை என்றாலும், என்னை அவமானப்படுத்தவும், அமைதியாக்கவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்தன. ஆனால் அதுபோன்ற சமயங்களில் என் தரப்பை உயிர்ப்பிக்க முன்வந்த சிலரையும் நான் பெற்றிருக்கிறேன். இப்போது பல குரல்களைக் கேட்கிறேன். இவர்கள், எனக்காக பேசுவதைப் பார்க்கும்போது, இந்த நீதிக்கான போராட்டத்தில் நான் தனியாக இல்லை என்பதை நான் அறிவேன்" என்றும் அவர் அந்தப் பதிவில் எழுதியிருந்தார்.
இவரது இந்தப் பதிவு மோகன்லால் மம்மூட்டி உள்ளிட்ட மலையாள திரையுலகின் பெரும் நட்சத்திரங்கள் பலராலும் பகிரப்பட்டிருந்தது. மேலும், பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த பதிவைப் பகிர்ந்து ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.
வழக்கு நடந்துகொண்டிருக்கும் போது பொதுவெளியில் மிகுந்த எச்சரிக்கையுடன், இந்த விவகாரத்தில் வெளியில் வந்து பேசுவது என்ற முடிவைத் தேர்வு செய்த பாவனா துணிச்சல் மிக்கவராக இருக்கிறார் என்கிறார் தி நியூஸ் மினிட் செய்தித் தளத்தின் ஆசிரியரான தன்யா ராஜேந்திரன்.
உடல் ரீதியான தாக்குதல் ஒருபுறம் என்றபோதும், ஒரு நடிகையாக பொதுமக்களிடமிருந்தும் சினிமாத்துறையிடமிருந்தும் வரும் பேச்சுகளையும் இவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீதிமன்றத்தில் வழக்கும் நடந்துகொண்டிருக்கிறது. அதுபோக, தாக்குதலின்போது எடுக்கப்பட்ட வீடியோ எப்போது வேண்டுமானாலும் பொதுவெளிக்குப் பரவலாம் என்ற அச்சமும் எப்போதும் உள்ளது.
ஒரு நடிகையாக இந்த வழக்கை நடத்த போதுமான அளவுக்கு நிதி வசதி உள்ளது. அத்துடன் எனது கணவரும் குடும்பமும் எனக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருக்கிறார்கள். ஆனால், கடந்த 5 வருடங்கள் அவ்வளவு எளிதாக இல்லை.
குறைந்த 100 முறையாவது நான் தோல்வியை ஒப்புக்கொண்டு, இதை விட்டுவிடலாம் என்று நினைத்திருக்கிறேன். என் நண்பர்கள், குடும்பத்தினர் ஏன் எனது வழக்கறிஞர்களிடம் கூட கேட்டிருக்கிறேன். இதையெல்லாம் மாற்றிவிட்டு பழைய நிலை திரும்பும்படி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று. இந்த நட்டை விட்டுவிட்டு வேறேங்காவது போய் முதலிலிருந்து தொடங்கலாம் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். பலமுறை தற்கொலைக்குக் கூட யோசித்திருக்கிறேன்.

பட மூலாதாரம், Bhavana Menon
எனில் உங்களைத் தொடர வைத்தது எது? என்று கேட்டோம்.
"ஒவ்வொரு முறையும் இதுபோன்ற யோசனைகளுக்குப் பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் என் மனதை மாற்றிக்கொள்வேன். ஏனெனில், இதில் என் சுயமரியாதையும் இருக்கிறது. என் தரப்பின் தவறின்மையையை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் எனக்கு உண்டு. எனவே எதுவும் தவறான முடிவெடுத்துவிடக் கூடாது" என்று பதிலளித்தார் பாவனா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













