எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - பின்னணி என்ன?

வேலுமணி வீட்டில் சோதனை
படக்குறிப்பு, சோதனை நடைபெறும் வீடு

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 58 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரக அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இது வேலுமணி விவகாரத்தில் நடத்தப்படும் இரண்டாவது சோதனையாகும்.

கோயம்புத்தூரின் மைல்கல் பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு இயக்குநரக ஆய்வாளர் எழிலரசி பதிவு செய்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.

சோதனை ஏன் ?

வேலுமணி வீட்டில் சோதனை
படக்குறிப்பு, சோதனை நடைபெறும் வீட்டின் முன்பு திரண்டவர்கள்

இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக சொத்துகளை சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், ஹேமலதா அன்பரசன், உறவினர் சந்திரசேகரன் மற்றும் நண்பர்கள் 10 பேர் மற்றும் 3 தனியார் நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதனடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

வேலுமணி மற்றும் அவரது உறவினர்களின் பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மூலமும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளசொத்துக்கள், நகை உள்ளிட்டவற்றை சேர்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ வீடுகளில் சோதனை

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மட்டுமின்றி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஜெயராமன், வடவள்ளி சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமலை சண்முகம், ராஜேந்திரன் ஆகியோரின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட ஏ.டி.எஸ்.பி.யாக இருந்த அனிதா, டி.எஸ். பி சண்முகம், காவல ஆய்வாளர்கள் லோகநாதன், சந்திரகாந்தா ஆகியோரது வீட்டிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

காவல்துறையில் பணியாற்றி வரும் 2 ஆய்வாளர்கள், ஏ.டி.எஸ்.பி., டி எஸ்பி ஆகிய 4 அதிகாரிகள் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆதரவாளர்களுக்கு உணவு - காலாவதியான குடிநீர்?

வேலுமணி வீட்டில் சோதனை

சோதனை நடைபெறுவதையடுத்து வேலுமணி வீட்டிற்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை தேநீர், பொங்கல், கிச்சடி மற்றும் ரோஸ் மில்க் வழங்கப்பட்டது. மதியம் சாம்பார் சாதம் வழங்கப்படுகின்றன. அப்பகுதியில் வழங்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் காலாவதியான தேதி குறிப்பிடப்பட்டிருந்ததால், சிலர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சென்னை, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, அவரது உறவினர்கள், பங்குதாரர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் விவரம்:

1) எஸ்.பி. வேலுமணி, தொண்டாமுத்தூர் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்

2) பி. அன்பரசன், வேலுமணியின் சகோதரர் மற்றும் செந்தில் அண்ட் கோ கூட்டாளி

3) ஹேமலதா, செந்தில் அண்ட் கோ கூட்டாளி

4) ஆர். சந்திரசேகர், ஆலம் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் நிறுவனம்

5) சந்திரபிரகாஷ், பங்குதாரர்-கோன்ஸ்ட்ரோமால் கூட்ஸ் நிறுவனம்

6) ஆர். கிருஷ்ணவேணி, முன்னாள் பங்குதாரர் - கோன்ஸ்ட்ரோனிக்ஸ் இந்தியா நிறுவனம்

7) கே. சுந்தரி, முன்னாள் பங்குதாரர் - வரதன் இன்ஃப்ரா ஸ்ட்ரசர்

8) ஹெச். கார்த்திக், முன்னாள் பங்குதாரர் - கோன்ஸ்ட்ரோனிக்ஸ் இந்தியா நிறுவனம்

9) ஜே. விஷ்ணுவர்தன், முன்னாள் பங்குதாரர் - கோன்ஸ்ட்ரோனிக்ஸ் இந்தியா நிறுவனம்

10) எஸ். சரவணகுமார், முன்னாள் பங்குதாரர் - கோன்ஸ்ட்ரோனிக்ஸ் இந்தியா நிறுவனம்

11) மகா கணபதி ஜுவல்லர்ஸ்

12) கோன்ஸ்ட்ரோமால் கூட்ஸ் நிறுவனம்

13) ஆலம் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் நிறுவனம்

இது தொடர்பான விரிவான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: