கோவையில் அதிமுக, திமுக அரசியல் நிலையை மாற்றிய தேர்தல் முடிவுகள்

DMK
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வென்றுள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 96 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதில் திமுக மட்டும் 73 இடங்களில் வென்றுள்ளது.

அதிமுக வெறும் 3 வார்டுகளை மட்டுமே பெற்று எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறவில்லை. 9 இடங்களில் வென்ற காங்கிரஸ் எதிர்கட்சியாக அமர உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. நகராட்சிகளின் கீழ் உள்ள 198 வார்டுகளில் திமுக 159 வார்டுகளையும் அதிமுக 22 வார்டுகளையும் வென்றுள்ளது.

தொண்டாமுத்தூரை தகர்த்த திமுக

கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக 1 பேரூராட்சியையும் சுயேச்சைகள் ஒரு பேரூராட்சியில் சுயேச்சைகள் பெரும்பான்மையாகவும் வென்றுள்ளனர்.

தேர்தல் நடைபெற்ற 504 பேரூராட்சி இடங்களில் திமுக 386 வார்டுகளில் வென்றுள்ள நிலையில் அதிமுக 71 வார்டுகளில் வென்றுள்ளது.

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொண்டாமுத்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

கணக்கை துவக்காத மக்கள் நீதி மய்யம்

கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கோவையில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கிணத்துக்கடவில் 1,100 வாக்குகள் வித்தியாசத்திலும் சிங்காநல்லூரில் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தோற்றது.

சிங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் 35,000 வாக்குகளைப் பெற்றிருந்தது.

இது போன்ற திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கடுமையான போட்டி நிலவிய இடங்களில் மக்கள் நீதி மய்யம் தான் தங்களுடைய வெற்றி வாய்ப்பை பறித்ததாக திமுகவினர் பலரும் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.

ஆனால் இம்முறை கோவையில் மக்கள் நீதி மய்யம் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் கோவையில் மும்முனை போட்டி என்கிற நிலை மாறி மீண்டும் இருமுனை போட்டி நிலவுகிறது.

டெபாசிட் இழந்த பாஜகவினர்

உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்தித்த பாஜகவினர் கோவை மாநகராட்சியில் 97 வார்டுகளில் போட்டியிட்டனர். இதில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.

86 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 198 நகராட்சி வார்டுகளில் 1 இடத்திலும், 504 பேரூராட்சி வார்டுகளில் 5 இடங்களிலும் பாஜக வென்றுள்ளது.

BJP

ஆனால் பாஜக தனித்து போட்டியிட்டது துணிச்சலான முடிவு என்கிறார் அரசியல் விமர்சகர் பேராசிரியர் பிச்சாண்டி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பாஜக தற்போது தான் தமிழகத்தில் தடம் பதிக்க முயன்று வருகிறது. இந்த நிலையில் தனித்து போட்டியிட்டது தேர்தல் ரீதியாக சாதகமான முடிவு இல்லையென்றாலும் அடிமட்டத்தில் கட்சியை வளர்ப்பதற்கு உள்ளாட்சித் தேர்தல் என்பது நல்ல வாய்ப்பு. பாஜகவுக்கு செல்வாக்கான பகுதிகளில் ஒரு சில இடங்களை வென்றுள்ளனர்," என்றார்.

மூன்றாவது பெரிய கட்சி யார்?

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ள நிலையில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து தாங்கள் தான் மூன்றாவது பெரிய கட்சி என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இது விவாதத்திற்குள்ளானது என்கிறார் பேராசிரியர் பிச்சாண்டி.

"தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த மூன்றாவது இடம் பெறுவதற்கு பல கட்சிகளும் முயற்சித்துள்ளன. ஆனால் பின்னர் திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்துள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு மூன்றாவது இடம் பெற்றார்கள். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்கு பெற்றார்கள்.

வாக்கு சதவிகிதத்தை வைத்தா இல்லை வெற்றி பெற்ற இடங்களை வைத்தா என்பதை பொறுத்து தான் அதை தீர்மானிக்க முடியும். அதன்படி பாஜக தலைவர்கள் கூறினாலும் அக்கட்சி மூன்றாவது இடம் பிடிக்கவில்லை. அனைத்து கட்சிகளுமே மாறி மாறி வெவ்வேறு கூட்டணியில் இருந்துள்ளதால் மூன்றாவது இடம் என்பது வரையறுக்க முடியாதது," என்றார்.

திமுகவின் எதிர்பாராத வெற்றி

சென்னை போன்ற மற்ற மாநகராட்சிகளில் திமுக வெற்றி பெறும் என்பது எதிர்பார்த்த ஒன்று. ஆனால் கோவையில் திமுக கூட்டணி இந்த அளவுக்கு பெருவாரியான வெற்றி பெற்றது எதிர்பாராத ஒன்று தான் என்கிறார் எழுத்தாளர் இரா.முருகவேள். பல திமுக நிர்வாகிகளுமே 70 இடங்கள் வரை வெல்வோம் என்று தான் நினைத்தோம், 96 இடங்கள் தலைமையே எதிர்பாராத வெற்றி என்கின்றனர்

பிபிசி தமிழிடம் பேசிய இரா.முருகவேள், 'எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கோவை அதிமுகவுக்கு சாதகமான இடம் என்பது உண்மை தான். ஆனால் இந்த அளவுக்கு படுதோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை," என்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் எப்போதும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்து வந்தாலும் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட திமுக அதிக இடங்களில் வென்றிருந்தது.

கோவையில் திமுக களத்தில் தீவிரமாக வேலை பார்த்தார்கள். ஆளுங்கட்சியாக இருந்தது அவர்களுக்கு கூடுதல் சாதகமாக அமைந்தது. திமுக தலைமை கோவையை ஒரு கௌரவ பிரச்சனையாகவே பார்த்தது. ஆனால் அதிமுக தலைமை அவ்வளவு தீவிரமாக செயல்படவில்லை. அதிமுக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் போன்றே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அமையும் என எண்ணியே களத்தில் கோட்டைவிட்டனர்.'

அதிமுகவின் தலைமை சிக்கல்

அதிமுகவின் தலைமை சிக்கலே அதன் பின்னடைவுக்கு காரணம் என்கிறார் எழுத்தாளர் முருகவேள், '2011 சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து தொடங்கி உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என திமுக தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வந்தது. தற்போது அதிமுக அது போன்ற நிலையில் உள்ளது.

ADMK

ஆனால் திமுகவுக்கு இருந்த வலுவான தலைமை, அடுத்த கட்ட தலைமை அந்தக் கட்சி மீண்டு வர உதவியாக இருந்தது. தற்போது அதிமுகவில் தலைமை சிக்கல் உள்ளது. இரட்டை தலைமையால் அந்தக் கட்சிக்கு பலன் ஏதுமில்லை. இதை உணர்ந்து அதிமுக தன்னுடைய தலைமை சிக்கலுக்கு தீர்வு காணவில்லையென்றால் தொடர் பின்னடைவுகளைச் சந்தித்துக் கொண்டே தான் வரும்" என்றார்.

அதிமுக ஒற்றைத் தலைமை நோக்கி நகர வேண்டும் என்கிறார் பேராசிரியர் பிச்சாண்டி, "உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சரிவை சந்தித்திருந்தாலும் அதன் செல்வாக்கு முழுமையாக குறைந்துவிடவில்லை. ஆனால் இரட்டை தலைமை என்பது அக்கட்சிக்கு சுமை தான். திராவிட கட்சிகள் ஒற்றைத் தலைமையின் கீழ் வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ளன. அடுத்த தேர்தலுக்குள் அதிமுக மீண்டு வர வேண்டுமென்றால் ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சி வர வேண்டும்" என்றார்.

ISOWTY

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: