கோகுல்ராஜ் கொலை: யுவராஜை சிக்கவைத்த சம்பவங்கள் எவை? - பட்டியலிடும் சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன்

பட மூலாதாரம், MOHAN ADVOCATE/FACEBOOK
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
சேலம் கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் உள்பட பத்து பேரை குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. `வழக்கின் புலன் விசாரணையில் தொய்வு இருந்தாலும் தானாக முன்வந்து யுவராஜ் கொடுத்த பேட்டியே, அவருக்கு எதிராக மாறிப்போனது' என்கிறார், சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் என்ற இளைஞர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பள்ளிபாளையம் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் இறந்துகிடந்தார். பட்டியலினத்தைச் சேர்ந்தவரான கோகுல்ராஜ், காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர். ஆனால், இந்த வழக்கில் கோகுல்ராஜுடன் சென்ற இளம்பெண் கொடுத்த புகாரின் காரணமாக சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ், தங்கதுரை, அருள் செந்தில், செல்வக்குமார், சிவக்குமார், அருண், சங்கர் உள்பட 17 பேரை நாமக்கல் போலீஸார் கைது செய்தனர். அதே காலகட்டத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் 2016 ஆம் ஆண்டு யுவராஜூவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பின்னர், இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் 2016 ஆம் ஆகஸ்ட் மாதம் யுவராஜ் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை 18 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் அதுவரையில் யுவராஜுவுக்கு பிணை வழங்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், 2018 ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியபோது 114 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.
நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் தனக்கு நியாயம் கிடைக்காது என கோகுல்ராஜின் தாய் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. தன் மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் பவானியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் விசாரிக்க வேண்டும் எனக் கோரினார். இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட ப.பா.மோகன், இறுதிவரையில் போராடினார். முடிவில், யுவராஜ் உள்பட பத்து பேர் குற்றவாளிகள் எனவும் இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் எட்டாம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

``கோகுல்ராஜ் வழக்கில் முக்கிய சாட்சிகள் பலரும் பிறழ் சாட்சியாக மாறிவிட்ட நிலையில் எவ்வாறு நிரூபிக்க முடிந்தது?'' என சிறப்பு வழக்கறிஞர்
ப.பா.மோகனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.
``வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளில், ஒவ்வோர் காலகட்டத்திலும் என்ன நடக்கிறது என்பது தொடர்பான விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். ஆனால், இந்த வழக்கை யார் விசாரிக்கிறார்கள், எப்படி விசாரிக்கிறார்கள் என்ற விவரம் சொல்லப்படுவது இல்லை. கோகுல்ராஜ் வழக்கை விசாரித்த டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். `என் மீது பொய் வழக்கு போட்டதால்தான் டி.எஸ்.பி தற்கொலை செய்து கொண்டார்' என கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட யுவராஜ் கூறினார்.
இந்த வழக்கின் விவரத்தைப் பார்த்தால், கோகுல்ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர், கல்லூரியில் தன்னுடன் படித்து வந்த வகுப்புத் தோழியுடன் நெருக்கமான நட்பில் இருந்துள்ளார். தனது செல்போன் பழுதடைந்ததாக அந்தப் பெண்ணிடம் அவர் கூறியுள்ளார். அதற்கு, `நான் பணம் கொடுக்கிறேன்' எனக் கூறி அந்தப் பெண் வரவழைத்துள்ளார். இதையடுத்து, சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து கோகுல்ராஜ் வந்தார். இந்தப் பெண்ணும் தனது சொந்த ஊரான பரமத்தி வேலூரில் இருந்து திருச்செங்கோடு பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது, 500 ரூபாய் தாள் இரண்டை அந்தப் பெண் கொடுத்துள்ளார். அங்கிருந்து திருச்செங்கோடு மலைக்கு சாமி கும்பிடுவதற்காக இருவரும் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, தீரன் சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவராஜ் தனது ஆட்களுடன் அங்கு வந்துள்ளார்'' என்கிறார்.
``பிறகு என்ன நடந்தது?''
``அன்றைக்கு எழுத்தாளர் பெருமாள் முருகனின் `மாதொரு பாகன்' புத்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற யுவராஜ், திருச்செங்கோடு மலைக்கு வந்துள்ளார். அவர் இவர்கள் இருவரிடமும் முகவரி கேட்டுள்ளார். அந்தப் பெண் கொடுத்த முகவரியை வைத்து, அவர் என்ன சாதி எனத் தெரிந்து கொண்டனர். கோகுல்ராஜை விசாரித்தபோது, அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவருகிறது. இதையடுத்து, இருவரின் செல்போனையும் பிடுங்கிக்கொண்டு அந்தப் பெண்ணை மட்டும் அனுப்பி வைத்துவிடுகின்றனர். பின்னர், கோகுல்ராஜை அடித்துக் காயப்படுத்தி சங்கிலியால் கழுத்தை இறுக்கி அவர் தற்கொலை செய்து கொள்வது போல பதிவு செய்துள்ளனர்.
பின்னர், அவரது தலையை சிதைத்து ரயில்வே தண்டவாளத்தில் உடலைப் போட்டுள்ளனர். இந்த வழக்கில் யாருடைய ஒத்துழைப்பும் கிடைக்காததால், `இது ஒரு தற்கொலையாக இருக்கலாம்' என டி.எஸ்.பி விஷ்ணுபிரியா எழுதுகிறார். ஆனால், `கோகுல்ராஜின் உடலை உடற்கூராய்வு செய்வதற்கு தனி மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும், அரசு மருத்துவர் செய்தால் அழுத்தம் கொடுத்துவிடுவார்கள்' எனக் கூறி பார்த்திபன் என்ற வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதையடுத்து, ராமச்சந்திரா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் சம்பத்குமாரை நியமித்து உடற்கூராய்வு நடத்தப்பட்டது. அவர்தான், `இது தற்கொலையல்ல, இது ஒரு கொடூரமான கொலை' எனக் குறிப்பிட்டார். அதன்பின்னர்தான் வழக்கே திசை மாறியது. இதன்பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஏ1 ஆக குற்றம் சுமத்தப்பட்ட யுவராஜ், தலைமறைவாக இருந்தபோதே ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். இந்த வழக்கை டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவால் சரிவர கையாள முடியவில்லை. பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு சென்றது.

பட மூலாதாரம், MOHAN ADVOCATE/FACEBOOK
இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கவில்லை. குற்றப் பத்திரிகையைப் பதிவு செய்யும் வரையில் கோகுல்ராஜுடன் சென்ற அந்தப் பெண், அனைத்து வகைகளிலும் வழக்குக்கு உதவி செய்தார். காவல்துறையில் அந்தப் பெண் கொடுத்த புகாரின்பேரில்தான் வழக்கே பதிவு செய்யப்பட்டது. ஆனால், நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த காலகட்டத்தில் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று சிலர் மிரட்டியுள்ளனர். அவரும், `கோகுல்ராஜ் யார் என்றே தெரியாது' எனக் கூறிவிட்டார். இதனால் வழக்கிலும் சிக்கல் ஏற்பட்டது'' என்கிறார்.
``இந்த வழக்கை நீங்கள் ஏற்று நடத்திய பின்னணி என்ன?'' என்றோம். `` கோகுல்ராஜின் தாயார், `நான்தான் இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும்' எனத் தொடக்கத்திலேயே கோரிக்கை வைத்தார். அது ஏற்கப்படவில்லை. பின்னர், ஓய்வுபெற்ற அரசு வழக்கறிஞர் ஒருவரை நியமித்து வழக்கை நீர்த்துப் போக வைக்கும் வேலைகளைச் செய்தனர். இந்தக் கொலை வழக்கில் 42 சாட்சிகளை விசாரித்த பிறகுதான் என்னை நியமித்தனர். நீதிமன்றத்திலும், என்னை அங்கீகரிக்காமல் எனது மனுக்களை தொடர்ந்து தள்ளுபடி செய்தனர். சொல்லப்போனால், காவல்துறையும் நீதித்துறையும் எதிராக இருந்தது. என்னுடன் பாதிக்கப்பட்ட குடும்பம் மட்டுமே இருந்தது.
கணவனும் இறந்து மகனும் இறந்து அந்தப் பெண்மணி மிகவும் துயரத்தில் இருந்தார். ஒருகட்டத்தில், நான் இல்லாமலே 72 சாட்சிகளை சட்டவிரோதமாக விசாரித்துவிட்டனர். கோகுல்ராஜ் அம்மாவும், `இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றாவிட்டால் எனக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை' என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதன்பின்னர், பல முக்கிய சாட்சிகள் பிறழ்ந்த பிறகு மதுரைக்கு வழக்கை மாற்றினர்'' என்கிறார்.
``இதன்பிறகு எதிர்கொண்ட சவால்கள் என்ன?'' என்றோம். `` பவானியில் இருந்து மதுரைக்கு 250 கி.மீ தூரம். நீதிமன்றம் சென்று வருவதற்கு தினமும் எட்டு மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். எனக்கு எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை. `இந்த வழக்கில் சரியான புலன்விசாரணை இல்லை' எனக் கூறினால் அதுவே நமக்கு எதிராகப் போய்விடும் என்பதால் சி.சி.டி.வி உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து, யுவராஜ் குழுவினர்தான் மலைக்கு மேலே வந்தார்கள் என்பதை நிரூபித்தோம். அதனால்தான் 10 பேருக்கு தண்டனை உறுதியானது. ஐந்து பேர் வேறு இடத்தில் இருந்ததால் சாட்சிகள் சரியாக இல்லை. அதனால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விஷ்ணுபிரியா தற்கொலைக்கான காரணம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் தானாகவே பங்கேற்ற யுவராஜ், `மலைக்கு மேலே சென்றது, செல்போனை தான் பிடுங்கவில்லை, அவர்களே கொடுத்தது' என அனைத்தையும் ஒப்புக் கொண்டார். இது புலனாய்வில் இல்லாத ஒன்று. இது விசாரணை அதிகாரிக்கே தெரியாதது. இதனை இணைத்து புதிதாக சாட்சிகளை உருவாக்கினோம். சி.சி.டி.வி உள்பட தொழில்நுட்பரீதியிலான தடயங்களையும் சேர்த்தோம். ஒரு செத்துப் போன வழக்குக்கு உயிர் கொடுத்தோம். இந்த வழக்கில், `நுனலும் தன்வாயால் கெடும்' என்பதுபோல யுவராஜே சிக்கிக் கொண்டார்'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
``அ.தி.மு.க, தி.மு.க என இரண்டு ஆட்சிக்காலத்திலும் விசாரணை நடைபெற்றது. இரண்டு அரசுகளிடம் இருந்தும் போதிய ஒத்துழைப்பு கிடைத்ததா?'' என்றோம். `` இரண்டு தரப்பிலும் பெரிதாக ஒத்துழைப்பு கொடுத்ததாகக் கூற முடியாது. இந்த வழக்கின் விசாரணைக்குச் செல்லும்போது, `சுங்கச்சாவடிக்கான கட்டண பாஸ் கொடுங்கள்' எனக் கேட்டேன். ஆனால், சுங்கச்சாவடிக்கான பாஸ் கொடுக்கவில்லை. பொதுவாக, நீதிபதிகளுக்கும் ஆளும்கட்சியால் நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞர்களுக்கும் சுங்க சாவடிக்கான பாஸ் கொடுப்பார்கள். அரசு வழக்கறிஞரைவிட சிறப்பு வழக்கறிஞருக்கு கூடுதல் வசதிகளை செய்து தர வேண்டும் என்ற விதியே உள்ளது. வழக்கை நடத்திய நாள்களில் நாளொன்றுக்கு எனக்கு ஆறாயிரம் செலவாகும். நான் எப்போதும் குழுவாகத்தான் இயங்குவேன். இந்த வழக்குக்காக ஒன்றரை லட்ச ரூபாய் வரையில் செலவானது. அதையும் தர மறுக்கிறார்கள். இந்தக் கொடுமையெல்லாம் இனி வரும் காலகட்டங்களில் யாருக்கும் நடக்கக்கூடாது'' என்கிறார்.
``நிர்பயா வழக்கில் நியமிக்கப்பட்ட கமிட்டியானது, சிறப்பான முறையில் செயல்பட்டு சட்டத்திருத்தத்தையே கொண்டு வந்தனர். அதுவே ஒரு கிராமத்தில் பழங்குடியோ, பட்டியலினத்தவரோ கொல்லப்பட்டாலோ வன்கொடுமை செய்யப்பட்டாலோ அந்தக் குரலைக் கேட்பதற்கு யாருமே இல்லை. நாங்கள் பல ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளை நடத்தியும் எங்களுக்கு இதுதான் நிலைமை என்றால், புதிதாக வருகிறவர்களின் நிலை என்னவாக இருக்கும். கோகுல்ராஜ் கொலையைப் பொறுத்தவரையில் இந்த வழக்கை நீதிமன்றத்தில்தான் நிரூபித்தாக வேண்டும். பல வழக்குகள் நீர்த்துப் போவதற்குக் காரணம், முறையான புலன் விசாரணை இல்லாததும் சாட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பும் இல்லாததும்தான்.
அதேநேரம், ஒரு வழக்கில் புலன் விசாரணை தவறாகவே இருந்தாலும் சரியான ஆவணங்கள் ஆங்காங்கே இருக்கும்போது அவற்றைத் தொகுத்து நீதிமன்றத்தில் வெற்றி பெற வைக்க முடியும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். இந்த வழக்கில் முக்கிய சாட்சியான அந்த மாணவியே, `கோகுல்ராஜ் யார் எனத் தெரியாது' எனக் கூறிவிட்டார். சி.சி.டி.வி காட்சிகளை எவ்வாறு அணுக வேண்டும், தொழில்நுட்பரீதியாக எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பதை பல்வேறு வழக்குகளின் உதாரணங்களுடன் வாதிட்டோம். `சாட்சியங்கள் பொய் சொல்லலாம், ஆனால் சாட்சியம் பொய் சொல்லாது' என்பது நீதியின் அடிப்படை. அது இந்த வழக்கில் நிரூபிக்கப்பட்டுவிட்டது'' என்கிறார்.
பிற செய்திகள்:
- இந்தியாவில் பெண் அரசியல் தலைவர்களுக்கான வலுவான கோரிக்கை எழுந்துள்ளதா?
- Ind Vs Pak பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை: 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியா
- ஹிட்லர் வீழ்த்தப்பட்டதில் ஸ்டாலின் பங்கு என்ன? அவரது சர்வாதிகார முகம் எத்தகையது?
- தாவூத் இப்ராஹிம் உடன் தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிர அமைச்சர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












