கௌரவ படுகொலைகளை தடுக்க 'காதல் அரண்' செயலி

தமிழகத்தில் நடக்கும் சாதி கௌரவப்படுகொலைகளை தடுப்பதற்காக இளைஞர்கள் இணைந்து 'காதல் அரண்' என்ற ஆன்ட்ராய்டு செயலி ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

செயலியின் லட்சினை

செயலியில் உதவி கோருபவர்களுக்கு காதல் திருமணங்களை நடத்தி வைக்கவும், திருமணம் செய்த இணையர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் உதவியுடன் செயல்படவுள்ளதாக செயலியை அறிமுகம் செய்துள்ள 'அரண்' அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை பத்து சாதி மறுப்பு காதல் திருமணங்களை நடத்திவைத்துள்ள அரண் அமைப்பினர், புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள செயலியைக் கொண்டு மேலும் பல காதல் திருமணங்களை நடத்திவைக்கவுள்ளதாகவும் கூறுகின்றனர்.

தாக்குதலுக்கு ஆளாகும் காதலர்கள்

பிப்ரவரி மாதம் காதலர் தினம் கொண்டாடுவதோடு இல்லாமல், சாதி கடந்து திருமணம் செய்துகொள்பவர்களுக்கு வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க உதவுவதுதான் உண்மையான கொண்டாட்டமாக இருக்கமுடியும் என்று நம்பியதால், இந்த செயலியை தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார் அரண் அமைப்பைச் சேர்ந்த வே.பாரதி.

பொது இடங்களில் காதலர்கள் சந்திக்கும் போது, அவர்களை தாக்குவது, கடுமையான வார்த்தைகளால் காயப்படுத்துவது என பலவிதமான சம்பவங்களில் அடிப்படைவாத அமைப்புகள் ஈடுபடுகின்றனர் என்று கூறும் பாரதி, ''காதலர் தின கொண்டாட்டத்தை ஒருங்கிணைப்பது என்பதைத் தொடர்ந்து, காதலர்களைப் பாதுகாக்கவும் வேண்டும் என்று முடிவு செய்து 20 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து செயலியில் பதிவு செய்பவர்களுக்கு உதவ முடிவுசெய்துள்ளோம்'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''நண்பர்கள் ஒன்றாக இணைந்து பல காதல் திருமணங்களை நடத்திவைத்துள்ளோம். ஆனால் தமிழகத்தில் கெளரவப் படுகொலைக்கு இளவரசன், கோகுல்ராஜ் மற்றும் சங்கர் போன்றோர் பலியானது எங்கள் மனதில் வடுவாகவே இருந்து வந்தது. இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள சாதி, மத அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தடையாக இருக்கின்றன. திருமணத்திற்குப் பிறகு உறவினர்கள் மூலம் ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதால், நண்பர்கள் மட்டுமே உதவமுடியும்,'' என்றார் பாரதி.

காதலர்கள் பதிவு செய்து, உதவி கோரினால், முதலில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, பதிவு திருமணம் நடத்திவைப்பது, அவர்களின் குடும்பத்தினர் இணையர்கள் மீது புகார் செய்தால், வழக்கறிஞர்களை கொண்டு நீதிமன்றத்தை நாடுவது என சட்டரீதியாக செயல்படவுள்ளதாக செயலியை வடிவமைத்துள்ள தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

'சங்கரை இழந்திருக்கமாட்டேன்'

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கெளரவப் படுகொலைக்கு தனது கணவர் சங்கரை இழந்த கவுசல்யா 'காதல் அரண்' செயலியை அறிமுகம் செய்யும் விழாவின் சிறப்பு விருந்தினராக கௌரவிக்கப்பட்டார்.

வெளியீட்டு விழா
படக்குறிப்பு, 'காதல் அரண்' செயலி வெளியீட்டு விழா

''எங்களுடைய திருமணத்தின்போது, இதுபோன்ற ஓர் உதவி கிடைத்திருந்தால் நான் சங்கரை இழந்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். பெற்றோர்களே தங்களுடைய குழந்தைக்கு எதிரியாக இருப்பது மோசமான செயல். பலரும் பயன்படுத்தும் ஆன்டிராய்டு அலைபேசியில் செயலியை பதிவிறக்கம் செய்யலாம் என்பதால், உதவி கேட்பதற்கு காதலர்கள் தயங்க வேண்டியதில்லை. அவர்களின் தகவல்களும் பாதுகாப்பாக வைக்கப்படும்,'' என கௌரவ கொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா தெரிவித்தார்.

அவர் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதால், அவரது கணவர் சங்கர் பொது இடத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு டிசம்பர் 2017ல் மரண தண்டனை வழங்கப்பட்டது.

சங்கரின் மரணத்தை தொடர்ந்து, சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் அமைப்புகளுக்கு கவுசல்யா ஆதரவு தெரிவித்து வருகிறார்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 2014ல் 28 கெளரவக்கொலைகள் நடந்ததாகவும், அடுத்த ஆண்டு 251 கொலைகள் நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பல்வேறு மாநிலங்களிலும், கெளரவப் படுகொலைகளைத்தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :