ட்விட்டர்: உண்மைச் செய்திகளைத் தோற்கடித்த போலிச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோ கிளைமன்
- பதவி, பிபிசி
ட்விட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் மாசசூட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியில், போலிச் செய்திகளை பாட்டுக்கள் (bots) எனப்படும் மென்பொருள்களைவிட மனிதர்களே அதிக எண்ணிக்கையில் ரீ-ட்வீட் செய்தது தெரியவந்துள்ளது.
போலிச் செய்திகள் படிப்பதற்கு ஒருவித நூதனமான உணர்வை அளிப்பதால் அவை படிப்பதற்கும், பகிர்வதற்கும் தூண்டுவதற்கு வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதில் அரசியல் சார்ந்த போலிச் செய்திகளே முதன்மையான இடத்தை பெற்றிருக்கின்றன.
அடுத்ததாக புனையபட்ட கதைகள், தொழில், தீவிரவாதம், அறிவியல், பொழுதுபோக்கு மற்றும் இயற்கை பேரிடர்கள் பற்றிய போலிச் செய்திகள் பரவலாக வலம் வருகின்றன. இந்த ஆய்விற்குரிய தரவுகளை ட்விட்டர் நிறுவனம் அளித்திருந்தது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அந்நிறுவனம், தாங்கள் பொது உரையாடலுக்கு அளிக்கும் பங்களிப்பை "பரிசோதனை செய்யும்" முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டுவருவதாக தெரிவித்தது.
"போலிச் செய்திகள் பெரும்பாலும் புதுமையானதாக இருப்பதால், அவற்றை பகிர்வதற்கு மக்கள் விரும்புகின்றனர்" என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான பேராசிரியர் சினன் அரல் கூறுகிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பாஸ்டன் நகர மாரத்தான் போட்டியின்போது ஏற்பட்ட குண்டுவெடிப்புக்கு பிறகு இந்த ஆராய்ச்சியை பேராசிரியர்கள் அரல், சோரோஸ் வாசோகி மற்றும் இணை பேராசிரியரான டெப் ராய் ஆகியோர் தொடங்கினர்.

பட மூலாதாரம், Getty Images
"ட்விட்டரை எங்களது முதன்மையான தகவல் ஆதாரமாக கொண்டு இந்த ஆராய்ச்சியை தொடங்கினோம்" என்று பேராசிரியர் வாசோகி கூறுகிறார்.
"நான் சமூக வலைதளங்களில் படித்து வரும் பெரும்பாலான விடயங்கள் புரளிகள் மற்றும் போலிச் செய்திகள் என்பதை அறிந்தேன்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஸ்நோப்ஸ் மற்றும் அர்பன்லெஜெண்ட் உள்ளிட்ட ஆறு உண்மை கண்டறியும் நிறுவனங்களின் உதவியோடு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
சயின்ஸ் என்னும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி தொடர்பான முடிவுகளில்கீழ்க்காணும் முடிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
- உண்மை செய்திகளைவிட போலிச் செய்திகள் 70 சதவீதம் அதிகளவில் ரீ-ட்வீட் செய்யப்படுகிறது.
- 1500 பேரை சென்றடைவதற்கு போலிச் செய்திகள் எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட ஆறு மடங்கு அதிக நேரத்தை உண்மையான செய்திகள் எடுத்துக்கொள்கின்றன.
- உண்மையான செய்திகள் ஆயிரத்திற்கும் அதிகமானோர்களால் பகிரப்படுவது அரிதாக இருக்கும் நிலையில், மிகவும் பிரபலமான போலிச் செய்திகள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரால் பகிரப்படுகிறது.
சிறந்த வதந்திகள்
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய, லான்கசைரிலுள்ள எட்ஜ் ஹில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உளவியல் துறை பேராசிரியரான ஜியோபிரே பீயட்டி, தான் பகிரும் செய்தி சரியானதோ அல்லது தவறானதோ என்று பார்க்காமல் மற்றவருக்கு தெரியாத செய்தியாக இருந்தால் அதை பகிர்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர் என்று கூறுகிறார்.
"பகிர்வதற்குரிய வகையிலான சிறந்த செய்தியாக இருக்கும்பட்சத்தில் அதன் உண்மைத்தன்மையை பற்றி பகிருபவர் அதிகம் கவலைப்படுவதில்லை" என்று அவர் கூறுகிறார்.
போலிச் செய்திகள் பரவுவதை வதந்திகள் பரவுவதுடன் அவர் ஒப்பிடுகிறார். "மக்கள் எந்த வதந்தி சிறந்ததாக உள்ளதென்று பார்க்கிறார்களே தவிர, அதன் உண்மைத்தன்மையை பற்றி கடைசியாகவே கவலைப்படுகிறார்கள்."
"அதாவது, பகிரும் செய்தியானது நம்பத்தகுந்ததா இல்லையா என்றுதான் பார்க்கிறார்கள்."
"நாம் செய்திகளால் நிரம்பியுள்ளோம். எனவே, ஒரு செய்தி பலரது கவனத்தை பெறவேண்டுமெனில் அது மிகவும் வியப்பளிக்கும் வகையிலோ அல்லது வெறுக்கத்தக்க வகையிலோ இருக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












