மகாராஷ்டிராவில் 25,000 விவசாயிகள் பேரணி - 7 முக்கிய தகவல்கள்

    • எழுதியவர், சங்கேத் சப்னிஸ்
    • பதவி, பிபிசி மராத்தி

மஹாராஷ்டிரா மாநிலத்தில் 'பாரதிய கிசான் சபா' எனும் விவசாயிகள் அமைப்பு நாசிக் முதல் மும்பை வரை ஒரு நீண்ட பேரணியை நடத்துகிறது. பல்லாயிரம் விவசாயிகள் பங்கேற்கும் அப்பேரணி மாநிலத் தலைநகரை வரும் 12ஆம் தேதி சென்றடையும்.

Maharashtra Farmers

பட மூலாதாரம், Rahul Ransubhe

விவசாயிகள் மாநில சட்டமன்றத்தையும் முற்றுகையிட உத்தேசித்துள்ளனர். இந்தப் போராட்டத்துக்கான காரணங்கள் என்ன?

"இந்தப் பேரணியின் தொடக்கத்திலேயே 25,000 விவசாயிகள் இணைந்தனர். மும்பையை அடையும்போது அந்த எண்ணிக்கை 50,000ஆக இருக்கும். அவர்களின் பெண்கள், 96 வயதாகும் முதியவர் ஆகியோரும் அடக்கம்," என்கிறார் பத்திரிகையாளர் பார்த் மீனா நிகில். இந்த நீண்ட பேரணி முன்வைக்கும் பிரச்சினைகள் என்னென்ன?

1. முழுமையடையாத வேளாண் கடன் தள்ளுபடி

"கடன் தள்ளுபடி தொடர்பாக வழங்கப்பட்ட புள்ளி விவரங்கள் மிகைப்படுத்தப்பட்டன. மாவட்ட வங்கிகள் திவாலானதால் கடன் தள்ளுபடி முழுமை அடையவில்லை. வெறும் 10% விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடியானது," என்கிறார் வேளாண் பிரச்சனை அதிகமாக உள்ள மாராத்வாடா பகுதியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் சஞ்சீவ் உன்ஹலே.

கடன் தள்ளுபடி அறிவிக்கப்படும் முன் போதிய அளவு திட்ட முன் மதிப்பீடு செய்யப்படவில்லை.

2. போதிய விலையின்மை

சந்தையில் வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு எப்போதெல்லாம் விலை வீழ்ச்சி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அது விவசாயிகளையும் பாதிக்கிறது.

"உற்பத்தி செலவின் அடிப்படையில் வழங்கப்படும் சட்டபூர்வ குறைந்தபட்ச விலை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை அவர்களுக்கு போதுமானதாக இல்லை," என்கிறார் பத்திரிகையாளர் நிஷிகாந்த் பலேராவ்.

Maharashtra Farmers

பட மூலாதாரம், Rahul Ransubhe

3. குறைந்துவரும் வேளாண் வருவாய்

மஹாராஷ்டிர மாநிலத்தின் பொருளாதார ஆய்வின்படி வேளாண் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் தொடர்ந்து குறைந்து வருகிறது. வேளாண் வருவாய் 44% சரிந்துள்ளது என்று கூறும் வேளாண் செயல்பாட்டாளர் விஜய் ஜாவந்தியா, கிராமிய பொருளாதாரத்திலும் பணப்புழக்கம் குறைந்து வருகிறது என்கிறார்.

4. பூச்சி தாக்குதல்

"பருத்திப் பயிர்களை பூச்சிகள் தாக்குவது அதிகரித்து வருகிறது. வறட்சியைத் தாங்கும் திறன் மற்றும் பூச்சிகளின் தாக்குதலைச் சமாளிக்கும் திறனுடைய ஒட்டுரகப் பயிர்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், ஆர்.எஸ்.எஸ் பின்னணி உடையவர்கள் அதற்குத் தயாராக இல்லை, " என்கிறார் நிஷிகாந்த் பலேராவ்.

மத்திய அரசும் இந்தப் பிரச்சனையில் முனைப்புடன் செயல்படவில்லை என்கிறார் அவர்.

5. பழங்குடியினருக்கு நில உரிமை வேண்டும்

இந்தப் பேரணியில் கலந்து கொண்டுள்ள ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களே இந்தப் போராட்டத்தின் பெரும் குழுவாக உள்ளனர். நாசிக் பகுதியில் மலைவாழ் மக்கள் வேளாண்மை செய்தாலும், நிலத்தின் உரிமை வனத்துறையிடமே உள்ளது. வனத்துறையினர் தாங்கள் விரும்பும்போது பயிர்களை அழிக்கின்றனர்.

Maharashtra Farmers

பட மூலாதாரம், Rahul Ransubhe

6. மாநில அரசின் கடன் சுமை

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது மஹாராஷ்டிர மாநில அரசின் கடன் ரூ.2.5 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது அது 4.13 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அரசால் கடன் வாங்கி செலவிடப்பட்ட தொகை விவசாயிகளைச் சென்றடையவில்லை. இதனால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பொருளாதாரங்களிடையே ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது.

7. மோசமான கால்நடை பராமரிப்பு

கிராமப்புறங்களில் இருக்கும் கால்நடைப் பராமரிப்பு மையங்களின் நிலை மோசமாக உள்ளது. அதனால் நோய்த் தாக்குதலுக்கு தங்கள் கால்நடைகளை விவசாயிகள் இழக்கின்றனர். அந்த மையங்கள் சரியான நேரத்தில் உரிய சிகிச்சை வழங்குவதில்லை என்கிறார் பத்திரிகையாளர் பலேராவ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: