`பெரியார் சிலை மீதான தாக்குதலை சாதகமாகப் பார்க்கும் தி.க.'
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம், திருப்பத்தூர் பகுதி மக்களை வருத்தப்பட வைத்துள்ளதாக சிலை உடைப்பை தடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (மார்ச் 6) திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலையை, பாஜகவை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது உறவினர் பிரான்சிஸ் சேதப்படுத்தியபோது, அங்கிருந்த பொது மக்கள் அந்த நபர்களை தடுத்துநிறுத்தி, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர், பாஜகவின் உறுப்பினரான முத்துராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்த குமார் (32) தங்களது ஊரில் நடந்த தவறான உதாரணம், தேசிய அளவில் பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது என்றும் சிலை உடைப்பு சம்பவம் தன்னை போல பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
''எங்கள் ஊரில் பெரியார் வந்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல், பகுத்தறிவுடன் வாழவேண்டும் என்று பேசியுள்ளார். அவரது கருத்துகளை பற்றி இன்றும் பலர் விவாதிக்கிறார்கள். எங்கள் ஊரில் நடந்த சம்பவம் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது என்பது எங்களுக்கு வருத்தம். சிலையை உடைத்தவர்கள் மாறுவார்கள் என்று நம்புகிறோம். அரசியல் தலைவர்கள் இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிக்கக்கூடாது,'' என்று கூறினார்.

பெரியாரின் கொள்கை தன்னைப் போன்ற பலருக்கு வாழ்வில் முன்னேற உதவியதாக கூறுகிறார் திருப்பத்தூர்வாசி அரவிந்தன்(31).
''சாதி ஒழியவேண்டும் என்றும், மூட நம்பிக்கை ஒழிய வேண்டும் என்றும் பெரியார் கூறினார். நான் கடவுள் நம்பிக்கை கொண்டவனாக இருந்தாலும், அவரது பிற கொள்கைகள் என்னால் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக உள்ளன. அனைவரும் சமம் என்று அவர் கூறியதால்தான் சாதியால் உயர்வு தாழ்வு பார்க்கும் பழக்கம் குறைந்துள்ளது. எங்கள் ஊரில் அவரது சிலை உடைப்பு நடந்தது வருத்தமாக உள்ளது,'' என்று கூறினார் அரவிந்தன்.
இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிபிசி தமிழிடம் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
''சிலை உடைத்தவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்கியதும் எங்கள் கட்சியினர் பலரும் வருத்தம் தெரிவித்தனர். ஆனால் இதுபோன்ற வன்முறை செயல்களை கட்சி ஆதரிக்காது என்பதை உறுதியாக தெரிவித்தேன். பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என ஹெச்.ராஜாவின் முகநூலில் வெளியான கருத்தையும் கண்டித்துள்ளோம். கட்சித் தலைமையும் கண்டித்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என்று நம்புகிறோம்,'' என தமிழிசை தெரிவித்தார்.

பட மூலாதாரம், Twitter
பெரியார் சிலை உடைப்பு சம்பவம் வருத்தப்பட வைத்த நிகழ்வாக இருந்தாலும், அதே சம்பவம், பெரியார் மீதான பற்றுதலை பொது மக்கள் வெளிபடுத்தும் நிகழ்வாகவும் அமைந்துவிட்டது என்று திராவிட கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பெரியார் சிலை உடைப்பு தொடர்பான புகாரை காவல்துறையிடம் அளித்துள்ள தி.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினர் எழிலரசன்,''பெரியார் கொள்கையை பின்பற்றுபவர், பின்பற்றாதவர் என்ற வேறுபாடு இல்லாமல், பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து, ஒரு தேசத் தலைவரின் சிலை உடைக்கப்படுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர். காவல்நிலையத்திற்கும் பொதுமக்கள் வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.'' என்கிறார் எழிலரசன்.

“பெரியாரின் பெருமை தெரியாத பலரும் அவரின் சிறப்புகளை தெரிந்துகொண்டு அவர் மீது பற்றுகொள்ள பாஜகவினர் இந்தத் தாக்குதல் சம்பவத்தின் மூலம் உதவியுள்ளதாக எண்ணுகிறோம்” என்று கூறினார் எழிலரசன்.
“சேதமான சிலை, 1990ல் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திறந்து வைத்த சிலை என்று கூறிய எழிலரசன்,''பாஜகவைச் சேர்ந்த பலரும் எங்களிடம் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டனர். சிலையை உடைத்தவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்கள். இளைய தலைமுறையிடம் பெரியாரின் கருத்துகளை தொடர்ந்து எடுத்துச் சென்று, அவர் மீது திணிக்கப்பட்டுள்ள கற்பிதங்களை போக்கி விழிப்புணர்வை நாங்கள் ஏற்படுத்துவோம். முதல்கட்டமாக உடைந்த சிலையை விரைவில் சீரமைப்போம்,'' என்று கூறினார்.
பிற செய்திகள்
- கஷ்டப்பட்ட நடிகையால் கவரப்பட்ட ஹாஜி மஸ்தான்
- வட கொரியாவுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிகள் நடப்பதாக டிரம்ப் தகவல்
- பாஜக உறவு முறிவு: சந்திரபாபு நாயுடுவின் அரசியல் கணக்கு என்ன?
- காதலின் பெயரால் நடக்கும் கொலைக்குப் பின் உள்ள உளவியல் என்ன?
- இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: முன்னாள் நீதிபதிகள் குழு விசாரிக்கும்
- டிரம்ப் - வட கொரியா பேச்சுவார்த்தை: 21ஆம் நூற்றாண்டின் அரசியல் சூதாட்டம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












