பெரியார் வாழும்போது எதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார்?

வாழும்போது எதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார் பெரியார்?

பட மூலாதாரம், Dhileepan ramakrishnan

கோவை மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவங்கள் சமீபத்தில் நிகழ்ந்துள்ளன.

இதனால் இப்போது மீண்டும் பெரியார் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம், திரிபுராவில் 25 ஆண்டுகாலம் பதவியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை இழந்தபின்னர், அங்கு நிறுவப்பட்டிருந்த லெனின் சிலை ஒன்று தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படுபவர்களால் இடித்துத்தள்ளப்பட்டது.

அப்போது, தமிழகத்தில் உள்ள பெரியார் சிலையும் அவ்வாறு உடைக்கப்படும் என்று பாஜகவின் தேசிய செயலர் எச்.ராஜா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். எதிர்ப்புகள் கிளம்பவே அந்தப் பதிவு நீக்கப்பட்டது. பின்னர் அது தனது அனுமதியின்றி 'அட்மின்' பதிவிட்டது என்று கூறினார் எச்.ராஜா.

பெரியார்

பட மூலாதாரம், FACEBOOK/DRAVIDARKAZHAGAM

அந்த சமயத்தில் திருப்பத்தூரில் இருந்த பெரியார் சிலை இரவு நேரத்தில் சேதப்படுத்தப்பட்டு, அது தொடர்பாக பாஜக பிரமுகர் ஒருவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது போல பெரியார் வாழும்போது அவருக்கு எதிராக நடத்தப்பட்ட அவமதிப்பு நிகழ்வுகள், சிலை தொடர்பாக பெரியார் வெளியிட்ட கருத்துகள்:

  • சேலத்தில் 23.1.1971 அன்று மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டின்போது பெரியார் நடத்திய ஊர்வலத்தில் இந்து கடவுள்களை அவமதித்ததாக அவரது எதிர்ப்பாளர்கள் பெரியார் படத்தை எரித்து, செருப்பால் அடித்தனர். அப்போது தானே பாதி விலையில் தனது படத்தையும் செருப்பையும் அனுப்பி வைப்பதாக பெரியார் அறிக்கை விடுத்தார்.
  • அதே ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிடர் கழகம் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தபோது, ராமரை செருப்பால் அடித்தவர்கள் ஆதரிக்கும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் பெரும் அளவில் பிரசாரம் செய்தன. ஆனால், 1967 தேர்தலில் 137 இடங்களில் வெற்றிபெற்ற திமுக, 1971 தேர்தலில் 184 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது.
  • "இந்தச் சிலை வைப்பது, படம் திறப்பது, ஞாபகச்சின்னம் வைப்பது போன்ற இவை எல்லாம் பிரசார காரியமே தவிர இது பெருமையல்ல; ஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான். பெரியார் என்றால் யார் என்று கேட்பான்? உடனே அவன் பெரியாரைத் தெரியாதா? அவர் தான் கடவுள் இல்லை என்று சொன்னவராவார் என்று சொல்லுவான். இப்படி நம் கருத்தானது பரவிக்கொண்டிருக்கும். அதற்கு ஒரு வாய்ப்புத்தான் இந்தச் சிலையாகும்," என்று 24. 5. 1969 அன்று தர்மபுரியில் தமது சிலை திறப்பு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.
  • "இந்த ஊரில் எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால், இந்தச் சிலை எனக்கு மணியடிக்கிற சிலை இல்லை, பூசை செய்கிற சிலை இல்லை, கடவுள் இல்லை என்று சொல்கின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழுகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்பவனுடைய சிலையாகும்," என்று 09.06.1969 தேதியிட்ட 'விடுதலை' இதழில் பெரியார் எழுதியுள்ளார்.
  • "ஏதோ பலமாய் நாங்கள் சொல்கிறோம். சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் நம்புங்கள் என்று நாங்கள் கேட்பதில்லை. ஏதோ ஆராய்ந்து பாருங்கள். உங்கள் அறிவைக் கொண்டு நன்றாகச் சிந்தியுங்கள். சரி என்று பட்டால் நம்புங்கள். இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள் என்றுதான் சொல்கிறோமே தவிர எங்கள் பேச்சை நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை," என்று தஞ்சையில் நடந்த தனது 89வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: