தமிழக அரசியல்: ரஜினிகாந்துடன் கரம் கோர்க்கின்றனரா அதிமுக அமைச்சர்கள்? - இன்றைய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை: "ரஜினியுடன் கரம் கோர்கின்றனரா ஆளுங்கட்சி அமைச்சர்கள்?"
நடிகர் ரஜினியுடன் எந்த அமைச்சரும் பேசவில்லை; யாரும் துரோகம் செய்ய மாட்டார்கள் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள தியாகிகள் சங்கரலிங்கனார், சூர்யா என்ற பாஷ்யம், செண்பகராமன் சிலைகளுக்கு, அமைச்சர் டி.ஜெயக்குமார், பா.பெஞ்சமின், க.பாண்டியராஜன் மற்றும் முன்னாள் எம்.பி ஜெ.ஜெயவர்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு டி.ஜெயக்குமார் அளித்த பதில்:
தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தப்படுமா?
'நீட்' தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை. அதே நிலைப்பாட்டில் தொடர்ந்து நாங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
மத்திய அரசு இதற்கு ஏதேனும் பதில் தெரிவித்துள்ளதா?
தொடர்ந்து நாங்கள் அழுத்தம் தந்து வருகிறோம். தமிழக மாணவர்கள் நலன்தான் எங்களுக்கு முக்கியம்.
நடிகர் ரஜினி கட்சி தொடங்க உள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் சிலர் அவரிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறதே?
எந்த அமைச்சரும் அவரிடம் பேசமாட்டார்கள். இங்கிருந்து கொண்டு துரோகம் செய்யும் கும்பல் இல்லை. எல்லோரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது விசுவாசம் கொண்டவர்கள்தான்.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.


தினத்தந்தி: "தனியார் பள்ளி, கல்லூரிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்கலாம்"
கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் மாணவர்களிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20-ந்தேதி உத்தரவிட்டது.
அதே நேரம், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு கல்வி நிறுவனங்கள் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையின்போது, 3 தவணையாகக் கல்வி கட்டணத்தை வசூலிக்க தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப் பரிசீலிப்பதாகத் தமிழக அரசு கூறியது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பிலும், மனுதாரர்கள் தரப்பிலும் வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தற்போது தனியார் கல்வி நிறுவனங்கள் மொத்த கல்விக் கட்டணத்தில் 75 சதவீதத்தை 3 தவணைகளாக வசூலிக்கவும், மீதமுள்ள 25 சதவீதத் தொகையை கல்வி நிறுவனங்கள் திறந்த பின்னர் வசூலித்துக் கொள்ளவும் அனுமதி வழங்க உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

ஆனால், தற்போது நிலவும் சூழ்நிலையில் கல்வி நிறுவனங்கள் உடனடியாக திறக்க வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எனவே, கடந்த கல்வியாண்டில் வசூலித்த கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை பெற்றோரிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம். இந்த 40 சதவீத முன்பணத்தை மாணவர்கள் வருகிற ஆகஸ்டு 31-க்குள் செலுத்த வேண்டும்.
கடந்த கல்வியாண்டில் நிலுவை வைக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஒருவேளை சில மாணவர்கள், கடந்த கல்வியாண்டில் வைத்த நிலுவைக் கட்டணத்தையும், நடப்புக் கல்வியாண்டுக்கான கல்விக்கட்டணத்தையும் ஏற்கனவே முழுவதுமாக செலுத்தியிருந்தால், இந்த உத்தரவைக் காட்டி பணத்தைத் திருப்பி கேட்க முடியாது. மேலும், 2-ம் தவணையாக 35 சதவீத கட்டணத்தை இயல்புநிலை திரும்பி, கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டு 2 மாதங்கள் கழித்து மாணவர்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்.
அதேபோல கல்வி கட்டண நிர்ணய குழு வருகிற ஆகஸ்டு மாதத்திலிருந்து 8 மாதங்களுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற வகை ஊழியர்கள், இயல்பு நிலை திரும்பும் வரை ஊதிய உயர்வு உள்ளிட்ட பண பலன்களை கேட்கக்கூடாது.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

தினமணி: மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு - மத்திய அரசு வாதம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், சுகாதாரத் துறையும் தொடர்ந்துள்ள வழக்கில் வரும் வரும் 27- ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
அந்நாளிதழ் பின்வருமாறு விவரிக்கிறது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த கோரிக்கை தொடா்பாக உயா் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு, மத்திய தொகுப்பிலிருந்து 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, அதிமுக, திமுக, பாமக, மதிமுக, திக மற்றும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ படிப்புகளில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம். அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூா்த்தி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தவறானது. மேலும் தமிழகத்தில்தான் அதிகமான பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் உள்ளனா். உச்ச நீதிமன்றம், சாதி வாரியான மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் எஸ்சி., எஸ்.டி. பிரிவினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கி விட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பது சட்ட விரோதமானது. மேலும் வரலாற்றில் முதல் முறையாக ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக ஒன்று சோ்ந்திருப்பது பெருமைக்குரியது என வாதிட்டாா்.
அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், உச்ச நீதிமன்ற தீா்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவு எடுக்க முடியும். இட ஒதுக்கீடு தொடா்பாக முடிவு எடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது. மேலும் கடந்த 4 ஆண்டுகளில் 3,580 இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு வழங்காததால் 2,700-க்கும் அதிகமான இதர பிற்படுத்தப்பட்ட தமிழக மாணவா்களின் இடம் பறிபோனது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு அபகரித்துக் கொண்டிருப்பதாக வாதிட்டாா்.
அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஆா்.சங்கரநாராயணன், இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் பி.ஆா்.ராமன் ஆகியோா் ஆஜராகி, இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளில் மருத்துவ மேற்படிப்புகளில் இடஒதுக்கீடு முறை பின்பற்ற கூடாது என உள்ளன. தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாணவா் சோ்க்கை நடைபெற வேண்டும். அதே நேரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பது தொடா்பாக உச்ச நீதிமன்றம், பல்வேறு உயா்நீதிமன்றங்களின் தீா்ப்புகள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் நிரம்பாமல் இருந்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்படும் என வாதிட்டனா்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












