அமெரிக்காவில் வீட்டுப்பாடம் முடிக்காததால் கைது செய்யப்பட்ட மாணவி மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Reuters
வீட்டுப்பாடம் முடிக்காததால் கைது செய்யப்பட்ட மாணவி - என்ன நடந்தது?
அமெரிக்கா மிச்சிகன் மாகாணத்தில் வீட்டுப்பாடம் செய்யாததால் 15 வயது மாணவி ஒருவர் குற்றத்தில் ஈடுபடும் குழந்தைகளுக்கான தடுப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது போராட்டங்களைத் தூண்டியுள்ளது.
என்ன நடந்தது?
இந்த மாணவி மீது தாக்குதல் மற்றும் திருட்டு வழக்கு ஒன்று கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
அவருக்கான நன்னடத்தை கால விதிகளில் ஒன்றாக வீட்டுப் பாடங்களை சரியாக முடிக்க வேண்டும் என்று ஏப்ரல் மாதம் சிறார் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அந்த விதிகளை அவர் மீறியதால் அவருக்கு மே மாதம் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாகச் செய்தி வெளியிட்ட ப்ரோபப்ளிகா இணையதளம், அந்த மாணவிக்கு 'ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர்' எனும் உளவியல் குறைபாடு இருப்பதாகவும், அதன் காரணமாக அவர் நடத்தைகளில் பிரச்சனை உள்ளது என்றும் தெரிவிக்கிறது.
அருகில் ஆசிரியர்கள் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல் அந்த மாணவி சிரமப்பட்டிருக்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் இணையம் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க - ஆப்ரிக்க இனத்தை சேர்ந்த அந்த பதின்ம வயது சிறுமி வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என கூறி கடந்த மே மாதம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறார் ஒரு நீதிபதி.
இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் 'கிரேஸ்' என அறியப்படும் அந்த சிறுமிக்கு ஆதரவாக பள்ளி மற்றும் நீதிமன்ற வாசலில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த மாணவியின் வழக்கை விசாரித்த ஓக்லாந்து குடும்ப நீதிமன்றம், அந்த மாணவி வீட்டுப்பாடத்தை முடிக்காமல் நன்னடத்தை விதிகளை மீறி இருக்கிறார் என்றும், அவர் மீதுள்ள முந்தைய குற்றச்சாட்டுகளை வைத்து அவர் இந்த சமூகத்திற்கான அச்சுறுத்தல் என்றும் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு குறித்து வெளிப்படையாக எந்த கருத்தையும் நீதிபதி மேரி எல்லன் ப்ரெமென் தெரிவிக்கவில்லை.
மாணவிக்கு ஆதரவாகப்போராட்டம்
இந்த நிலையில் அந்த மாணவிக்கு ஆதரவாகப் பள்ளி முன்பும், நீதிமன்றம் முன்பும் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய சமூக அறிவியல் ஆசிரியர் கியோஃப், "இது அநீதி. அந்த நீதிபதிக்குக் கல்வி குறித்து எதுவும் தெரியவில்லை," என்றார்.
இந்த போராட்டத்தில் Black Lives Matter என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர்.
மிச்சிகன் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு மறு ஆய்வு செய்யப்படும் என்று வியாழனன்று தெரிவித்துள்ளது.

தென் சீன கடல் சர்ச்சை: அமெரிக்கா - சீனா இடையே மேலும் மோதலை உருவாக்குகிறதா?

பட மூலாதாரம், Getty Images
தென் சீன கடலோரப் பகுதியில் உள்ள வளங்களைக் கைப்பற்றுவதற்கு சீனா நாட்டம் காட்டுவது ``முழுக்க சட்ட விரோதமானது'' என்று அண்மையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.எரிசக்தி வளம் மிகுந்திருக்கும் வாய்ப்புள்ள சர்ச்சைக்குரிய நீர் எல்லைப் பகுதியை ``கட்டுப்படுத்துவதற்கு அடாவடித்தனமான செயல்களில் ஈடுபடும்'' சீனாவின் செயல்பாடுகளுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வரவர ராவ்: தனியார் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு

பட மூலாதாரம், FACEBOOK / BHASKER KOORAPATI
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர் வரவர ராவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றும்படி தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான செலவையும் அரசே ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக ஆணையத்தின் சிறப்பு கண்காணிப்பாளரான மஜா தருவாலா புகார் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் வரவர ராவ் சிறையில்பட்ட துன்பங்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.

விகாஸ் துபே விவகாரம்: 'தற்காப்புக்காக போலீசார் சுட்டனர்' - உத்தரப்பிரதேச அரசு

பட மூலாதாரம், SAMIRATMAJ MISHRA / BBC
விகாஸ் துபேவை தற்காப்புக்காகவே போலீஸார் சுட்டுக் கொன்றதாக உத்தரப்பிரதேச மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கான்பூரில் எட்டு காவல்துறையினர் என்கவுண்டர் ஒன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் ஜூலை 10ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல்

தமிழகத்தில் கோவை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது நள்ளிரவில் மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்டது என்ற புகாரை அடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விரிவாகப் படிக்க:தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் பெரியார் சிலைக்கு அவமதிப்பு

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












