இந்திய பெண்களுக்கு வாக்குரிமை வழங்க பிரிட்டிஷ் அரசு விரும்பாதது ஏன்?

சுதந்திரம் தரும்போது இந்திய பெண்களுக்கு வாக்குரிமை வழங்க பிரிட்டிஷ் அரசு விரும்பாதது ஏன்?

பெண்கள்

பட மூலாதாரம், EPA/STR

அமெரிக்கா, தனது நாட்டின் பெண் பிரஜைகளுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கு 144 ஆண்டுகளையும், பிரிட்டன் அதற்கு ஒரு நூற்றாண்டு காலத்தையும் எடுத்துக் கொண்டன.

சுவிட்சர்லாந்து நாட்டின் சில பகுதிகளில் 1974ஆம் ஆண்டில்தான் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. ஆனால் இந்தியா குடியரசாக மலர்ந்தபோதே, இந்தியப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்துவிட்டது.

1947ஆம் ஆண்டில் பிரிட்டனின் அதிகாரத்தில் இருந்து இந்தியா விடுதலை பெற்றபோது, இந்தியப் பெண்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை எப்படி பெற்றனர் என்பதை விரிவாக ஆய்வு செய்த எழுத்தாளர் முனைவர் ஆர்னிட் ஷானி ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

"கிட்டத்தட்ட10 லட்சம் மக்களின் உயிரை பலிகொண்டு, 80 மக்களை வீடற்றவர்களாக்கிய பிரிவினை என்ற பெரும் சிக்கலுக்கு இடையில் இந்தியா விடுதலை பெற்றது. அந்த குழப்பமானச் சூழலில் பெண்களுக்கு வாக்குரிமை கொடுப்பது என்ற முடிவு, எந்தவொரு காலனித்துவ நாட்டிற்கும் மாபெரும் சாதனை" என்று இந்தியாவை பாராட்டுகிறார் அர்னிட் ஷானி.

பெண்கள்

பட மூலாதாரம், Keystone/Getty Images

படக்குறிப்பு, சுதந்திர இந்தியாவில் வாக்களிக்கும் பெண்களின் எண்ணிக்கை 8 கோடியாக இருந்தது

பெண்களுக்கு அதிகாரம் வழங்க விரும்பவில்லை

சுதந்திர இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்து 17 கோடி 30 லட்சம் ஆகிவிட்டது. இவற்றில் சுமார் 8 கோடி பேர் பெண்கள் ஆவர். இவர்களில் 85 சதவிகித மக்கள் ஒருபோதும் வாக்களித்ததில்லை.

துரதிருஷ்டவசமாக, சுமார் 28 லட்சம் பெண்களின் பெயரை வாக்காளர்களின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டியிருந்தது, காரணம் என்ன தெரியுமா? அவர்கள் தங்கள் பெயர்களைக் கூற விரும்பவில்லை!

காலனித்துவ ஆட்சியின் சகாப்தத்தில் பெண்கள் வாக்குரிமைக்கு தெரிவித்த எதிர்ப்பைப் பற்றி, 'How India became Democratic: Citizenship at the Making of the Universal Franchise' என்ற புத்தகத்தில் முனைவர் ஷானி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

அனைவருக்கும் வாக்குரிமை கொடுப்பது "இந்தியாவிற்கு சரிவராது" என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் வாதிட்டனர். பிரிட்டனின் ஆட்சியில் இந்தியா இருந்தபோது, இங்கு நடைபெற்ற தேர்தல்கள் குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்பட்டே நடைபெற்றன.

மதம், சமூகம் மற்றும் வணிகத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்க குறிப்பிட்ட வாக்காளர்களுக்கே அனுமதியிருந்தது.

பெண்கள்

பட மூலாதாரம், Keystone/Getty Images

படக்குறிப்பு, சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக வாக்களிக்க சென்ற பெண்கள்

இந்திய பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கும் கருத்துக்கு தேசத் தந்தை மகாத்மா காந்தியும் முதலில் ஆதரவளிக்கவில்லை. "காலனித்துவ ஆட்சியாளர்களை எதிர்த்து போராடுவதற்கு ஆண்களுக்கு பெண்கள் உதவ வேண்டும்" என்றே அவர் கருதினார்.

பெண்கள் வாக்களிக்கும் உரிமையை பெறுவதற்கான கடினமான போராட்டத்தை முன்னெடுத்த இந்திய பெண்கள் அமைப்புகளின் பங்கு குறிப்பிடத்தக்கது என்கிறார் வரலாற்றாசிரியர் கெரால்டின் ஃபோர்ப்ஸ்.

1921ஆம் ஆண்டு பம்பாய் மற்றும் மதராஸ் மாகாணங்களில் குறிப்பிட்ட அளவிலான பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை முதன்முறையாக வழங்கப்பட்டது. பின்னர், 1923 -1930ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஏழு மாகாணங்களை சேர்ந்த பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டது.

பெண்கள்

பட மூலாதாரம், AFP

பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கோரிய பல இந்திய மற்றும் பிரிட்டிஷ் பெண்கள் அமைப்புக்களின் கோரிக்கைகளை பிரிட்டன் நாடாளுமன்ற பொதுச்சபையில் புறக்கணித்து விட்டதாக உமன் இன் இந்தியா( 'Women in Modern India') என்ற புத்தகத்தில் டாக்டர் ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளார். ,

பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் அவர்களை திரைக்கு பின்னே வைக்கும் முடிவிது என்பதே அரசின் முடிவைப் பற்றிய பரவலான விமர்சனங்களாக இருந்தன.

உரிமைகள் மறுக்க கூறப்பட்ட காரணங்கள்

"சிறுபான்மையினருக்கு உரிமை வழங்குவதாக உறுதியளித்திருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், அதை ஆண்களுக்கு மட்டுமே வழங்க ஒப்புக்கொண்டனர். சில பெண்கள் உரிமைகள் தேவையில்லை என்று சொல்வதை காரணம்காட்டி, ஒட்டுமொத்த இந்திய பெண்களுக்கும் உரிமை வழங்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மறுத்துவிட்டனர்." என டாக்டர் ஃபோர்ப்ஸ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள்

பட மூலாதாரம், AFP

காலனித்துவ ஆட்சியின் நிர்வாகிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்குரிமைக்கான அதிகாரத்தை பெண்களுக்கு விரிவுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குரிமையை எதிர்த்த பெண்களின் எண்ணிக்கை குறைவானது என்று கூறும் ஃபோர்ப்ஸ், "பெண்கள் பொது விவகாரங்களில் தலையிட திறமையற்றவர்கள் என்ற கருத்தும் அன்று பரவலாக இருந்தது" என்று சொல்கிறார்.

தங்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைப்பது, தங்கள் கணவருக்கும் பிள்ளைகளும் பிடிக்காது என்று கருதியதாக சில பெண்கள் கூறினார்கள் என்று அவர் எழுதுகிறார், "அரசியலில் ஈடுபடும் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை என்றுகூட ஒருவர் வாதிட்டார்."

பெண்களின் உரிமைகளுக்காக போராடிய மிருணாளினி சென், 1920களில் இவ்வாறு எழுதுகிறார், "பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து சட்டங்களுக்கும் பெண்களுக்கு பொருந்தும். அவர்கள் சொத்து வைத்திருந்தால் அவர்கள் அதற்கு வரி செலுத்த வேண்டும், ஆனால் வாக்களிக்கும் உரிமை மட்டும் அவர்களுக்கு மறுக்கப்பட்டது".

"இது இப்படியிருந்தது என்றுகூட சொல்லலாம். நீதி வேண்டுமென்றால் நீதிமன்றத்தை அணுகுவதற்கு பதிலாக தாங்களே பிரச்சனைகளை சமாளித்துக்கொள்ளவேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெண்களுக்கு சொன்னார்கள்" என்று மிருணாளினி கூறுகிறார்.

இந்தியாவின் இறுதி காலனித்துவ சட்டமான, 1935ஆம் ஆண்டின் இந்திய அரசின் சட்டத்தின் கீழ், நாட்டின் மூன்று கோடி மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கபட்டது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு என்பதும், இதில் பெண்களின் எண்ணிக்கை சொற்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண்கள்

பட மூலாதாரம், STR/AFP/Getty Images

தற்சார்புத் திறன் குறைவு

பீகார் மற்றும் ஒரிசா மாகாண அரசு (அப்போது பீகார், ஒரிசா மாநிலங்கள், ஒரே மாகாணமாக இருந்தன), வாக்காளர்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக, பெண்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்க முயன்றது.

"விவாகரத்து ஆன பெண், கைம்பெண், மற்றும் சொத்து இல்லாத பெண்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று அரசாங்கம் கருதியது". என டாக்டர் ஷான் கூறுகிறார்.

ஆனால் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் காசி மலைப்பகுதிகளில் உள்ள சமுதாயங்கள், தாய்வழி சமுதாயங்களாக இருந்தன. இந்த சமூகங்களில் பெண்களுக்கே சொத்துரிமை உண்டு. எனவே இந்தப் பிராந்திய பெண்கள் விதிவிலக்கு பெற்றனர்.

பெண்கள்

பட மூலாதாரம், Keystone/Getty Images

படக்குறிப்பு, 1948இல் பெண்களில் பலர் தங்கள் பெயரை கூற மறுத்துவிட்டனர் (அதனால் வாக்குரிமை இழந்தனர்)

வெவ்வேறு மாகாணங்களில் பரம்பரை சொத்துக்களில் பெண்களுக்கான உரிமை என்பது மாறுபட்டிருந்தது. மதராஸ் மாகாணத்தில், அரசு பணியில் இருந்த அதிகாரியாகவோ அல்லது சிப்பாயாகவோ இருந்து மரணித்தவரின் தாயாகவோ அல்லது மனைவியாகவோ ஓய்வூதியம் பெறும் பெண்ணுக்கு வாக்குரிமை உண்டு.

அதேபோல் கணவர் வரி செலுத்துபவராகவோ அல்லது சொத்துக்களையும் உடைமைகளையும் வைத்திருந்தால் அவரது மனைவிக்கும், தாய்க்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

அதாவது, ஒரு பெண்ணின் வாக்களிக்கும் தகுதியை தீர்மானிப்பது அவரது கணவரின் சொத்து, தகுதிகள் மற்றும் சமூக அந்தஸ்தை முற்றிலும் சார்ந்ததாக இருந்தது.

"பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவது ஒருபுறம் என்பதோடு, அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான உண்மையான தகவல்களை சேர்ப்பதும், அதை குறிப்பெடுப்பதும் காலனித்துவ ஆட்சியில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு மாபெரும் சுமையானதாகவே இருந்தது." என டாக்டர் ஷானி கூறுகிறார்.

"அதற்கு முக்கியமான காரணம், அதிக கல்வியறிவற்ற பெண்களின் தன்னம்பிக்கைக் குறைவு மற்றும் ஏழைகள், கிராமப்புறங்கள், கல்வியறிவு குறைந்தவர்களுக்கு அதிகாரம் வழங்குவதா என்ற எதிர்மறையான சிந்தனைகளின் ஒட்டுமொத்த விளைவு."

பெண்கள்

பட மூலாதாரம், AFP/Getty Images

சுதந்திர இந்தியாவில் மாறிய நிலைமை

ஆனால் இந்தியாவில் மக்களாட்சி மலர்ந்தபோது, இந்திய மக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கொடுக்கலாம், அதாவது நாட்டை ஆள்பவர்களை மக்களே தேர்ந்தெடுக்கலாம் என்று நிலைமைகள் தலைகீழாக மாறின.

"வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணி 1947 நவம்பர் மாதத்தில் தொடங்கியது. 1950ஆம் ஆண்டில், இந்தியா தனது சொந்த அரசியலமைப்பை உருவாக்கியபோது, அனைவருக்கும் வாக்குரிமை என்பதும், தேர்தல் ஜனநாயகத்தின் கருத்துக்களும் உறுதியாக நிறுவப்பட்டன."

ஆனால் 1948ஆம் ஆண்டுவாக்கில் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும்போது, அதில் பல சிக்கல்கள் எழுந்தன.

பெண்களின் பெயர்களை எழுதுவதில் ஏற்படும் பிரச்சனைகளை சில மாகாண அதிகாரிகள் எதிர்கொண்டனர். பல பெண்கள் தங்கள் பெயரை சொல்லவே தயங்கினார்கள்.

பல பெண்கள் தங்கள் பெயரை சொல்வதற்கு பதில், தனது கணவர், தந்தை, மகன், பிரபலமான உறவினரின் பெயரை சொல்லி அவர்களது உறவுமுறைகளை குறிப்பிடுவார்கள். பெண்களை முன்னிலைப்படுத்தும் கருத்து என்பது அந்த நாட்களில் கிடையாது என்பதன் அடிப்படையில்தான் இதை நாம் புரிந்துக் கொள்ளமுடியும்.

இதை அனுமதிக்கமுடியுமா? சமூகத்தில் இருக்கும் ஒரு பழக்கத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளமுடியுமா? முடியாது என்று இந்திய அரசு தெளிவுபடுத்தியது. கணவன் அல்லது தந்தையின் பெயரால் மட்டுமே பெண்கள் அடையாளம் காணப்படமுடியாது, அவர்கள் தங்கள் பெயரால் மட்டுமே பதிவு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த காலனித்துவ கொள்கைகளில் இருந்து மாறுபட்டு, பெண்கள் சுயாதீன வாக்காளராக பதிவு செய்யப்படுவார் என்று அரசு அறிவித்தது.

செய்தி ஊடகங்களின் மூலம் இந்த தகவலை மக்களிடையே கொண்டு செல்லும் பிரசாரத்தை அரசு தீவிரமாக முன்னெடுத்தது. பெண்கள் தங்கள் பெயர்களை எழுத ஊக்குவித்த அரசு, அதுதான் அவர்களின் சொந்த அடையாளத்தை உருவாக்கும் வழி என்று உணர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டது.

பெண்கள் தங்கள் நலன்களை பாதுகாக்க வேண்டுமென்றால், அவர்கள் வாக்காளர்களாக மாறுவது அவசியம் என்று மகளிர் அமைப்புகள் பரவலான முயற்சிகளை முன்னெடுத்தன.

பெண்கள்

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA/AFP/Getty Images

1951 அக்டோபர் முதல் 1952 பிப்ரவரி வரை நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில், மதராஸ் தொகுதியில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் இவ்வாறு சொன்னார், "வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிகளின் வெளியே கிராமப்புற பெண்களும், ஆண்களும் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். அங்கி அணிந்து வந்திருக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு பிரத்யேக வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்."

இதுதான் சுதந்திர இந்தியாவில், மதங்களுக்கு அப்பாற்பட்டு பெண்கள் வாக்களித்ததற்கு சான்றான மிகப் பெரிய வாக்கு உரிமைக் கதை.

போராட்டங்கள் தொடர்கதையே

பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம் இன்றும் தொடர்கிறது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு மசோதாவுக்கு எழும் வலுவான எதிர்ப்புகளின் காரணமாக 1966 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை அது முடங்கிப் போயிருக்கிறது.

பெண்கள்

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP/Getty Images

தற்போது தேர்தல்களில் வாக்களிக்க அதிகமான பெண்கள் முன்வருகின்றனர், நிலைமை மாறிவிட்டது. ஆனால் தேர்தலில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றின்படி, 190 நாடுகளில் நாடாளுமன்றங்களில் பட்டியலில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இந்தியா 148வது இடத்தில் இருக்கிறது.

542 உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் 64 பெண்கள் மட்டுமே உறுப்பினர்கள் என்பது பெண்களின் பங்களிப்பு அரசியலில் இன்னும் அதிகம் தேவை என்பதை எடுத்துக் காட்டுவதாகவே இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :