நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் தவிர பிற படங்களை வைக்கத் தடை - சாதிய உள்நோக்கம் கொண்ட அறிவிப்பா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் ஆகியோரின் உருவப் படங்களை மட்டுமே வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னையின் பின்னணி என்ன?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் உருப்படங்களை மட்டுமே வைக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது.
ஆனால், இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, தற்போது அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டதாக அரசாங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றைக் கடந்த ஜூலை 7ஆம் தேதி நீதிமன்றப் பதிவாளர் (பொறுப்பு) ஜோதிராமன் அனைத்து நீதிமன்றங்களுக்கும் அனுப்பியிருக்கிறார்.
இதுதொடர்பாக பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நீதிமன்ற வளாகங்களில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் படத்தையும் சில மூத்த வழக்கறிஞர்களின் படத்தையும் வைக்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரி பல மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் முழு அமர்வு (உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் அமர்ந்து) பல்வேறு தருணங்களில் விவாதித்துள்ளனர்.
குறிப்பாக, 2008ஆம் ஆண்டுவாக்கில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிமன்ற அறைகளில் தேசியத் தலைவர்களின் படங்களை வைக்க வேண்டுமென தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
இதுதொடர்பாக 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு இதை விவாதித்து, அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.
இதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் பல அரசியல் தலைவர்களின் சிலைகளை வைக்க கோரிக்கைகள் எழுந்த நிலையில், 2010ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தின் முழு அமர்வும்கூடி, உயர்நீதிமன்ற வளாகங்கள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள எந்த நீதிமன்ற வளாகத்திலும் யாருடைய சிலையையும் வைக்க அனுமதிப்பதில்லை என்றும் முடிவெடுத்தது.
அரசியல் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவதால், பல்வேறு இடங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதன் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறியது. 2011 ஏபர்ல் 20ஆம் தேதியும் இதேபோன்ற அறிவிப்பை நீதிமன்றம் வெளியிட்டது.
இந்நிலையில், சென்னை ஆலந்தூரில் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ளே நுழையும்போது உள்ள அரங்கில் ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் படம் பொருத்தப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரம் குறித்துத் தெரிய வந்ததும், 2008ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் படங்கள், சிலைகள் தொடர்பாக வெளியிட்ட உத்தரவை செயல்படுத்தும்படி, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு உத்தரவிட்டது. கடலூரில் புதிதாகக் கட்டப்பட்ட நீதிமன்றத்திலும் அம்பேத்கரின் படத்தை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதேபோல், 2013 டிசம்பர், 2019 டிசம்பர், 2023 ஏப்ரல் ஆகிய தருணங்களிலும் இதே உத்தரவு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இதில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 தேதி கூடிய முழு அமர்வில், காந்தி, திருவள்ளுவர் படங்களைத் தவிர வேறு படங்களை மாட்டக்கூடாது என உத்தரவிடப்பட்டது.
இதை மாவட்ட முதன்மை நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் கண்காணிக்கும்படியும் உத்தரவிட்டது. இதை மீறுவோர் மீது அந்தந்த பார் கவுன்சில்களில் புகார் அளிக்குமாறும் கூறியது.
இந்நிலையில்தான் மீண்டும் ஜூலை 7ஆம் தேதி இதேபோன்ற சுற்றறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் அனுப்பியிருக்கிறார்.
இம்முறை இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பல வழக்கறிஞர் அமைப்புகள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பிற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதை எதிர்த்து, தமிழ்நாடு தழுவிய அளவில் தோழமை கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆகியவையும் இந்த அறிவிப்பை எதிர்த்துள்ளன. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுவும் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளது.
"டாக்டர் அம்பேத்கரின் படம் நீண்ட நாட்களாகவே பல நீதிமன்றங்களில் இருக்கிறது. சில நீதிமன்றங்களில் நீதிமன்ற அறைகளிலேயே இருக்கிறது. சில இடங்களில் வளாகத்திற்குள் இருக்கிறது. இப்போது அவற்றை அகற்ற வேண்டும் என்று சொல்வதால்தான் பிரச்னை வருகிறது.
காந்தியை இந்த நாட்டின் தந்தை என்று சொல்கிறோம். அதுபோலத்தான் அம்பேத்கரும். அவர் சாதிக்கு அப்பாற்பட்டவர். அரசியலமைப்பு அவையின் தலைவராக இருந்தவர். அவருடைய படத்தை நீதிமன்றத்தில் வைப்பதில் என்ன தவறு?
இப்போது வெளியிடப்பட்டிருக்கும் சுற்றறிக்கையே, அம்பேத்கரின் படத்திற்காகத்தான் வெளியிடப்பட்டிருக்கிறது. வேறு யாருடைய படத்தை நீதிமன்றத்தில் வைக்கப்போகிறார்கள்?
அம்பேத்கரை ஒரு அரசியல் தலைவராகப் பார்க்க வேண்டியதில்லை. இந்தச் சுற்றறிக்கையை நீதிமன்றம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்," என்கிறார் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயல் தலைவர் ஏ. கோதண்டம்.
ஆனால், நீதிமன்றத்தில் சரியான நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தலாமே தவிர, வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியதில்லை என்கிறார் முன்னாள் நீதிபதியான வள்ளிநாயகம்.
"நீதிமன்றமும் நீதிபதிகளும் தீர்ப்பும் சொல்வதை மதிக்காமல் படங்களுக்காக பிரச்னை எழுப்புவது சரியல்லை. அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் என்பதற்காக அம்பேத்கர் படத்தை வைக்க வேண்டுமென்றால், அந்த அரசமைப்பு சட்ட அவையில் இருந்த எல்லோரது படத்தையும் வைக்க வேண்டும் என்று சொல்லலாமா? அப்படிச் செய்தால் நீதிபதி உட்கார இடம் கிடைக்குமா?

பட மூலாதாரம், Getty Images
நீதிமன்றத்தைப் பொறுத்தவரை முன்னாள் நீதிபதிகள் படத்தை மட்டுமே வைக்கலாம். அரசியல் தலைவர்கள் படத்தை வைக்க ஆரம்பித்தால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைவர் படத்தை வைக்க வேண்டுமென கோரிக்கை எழுப்புவார்கள்.
ஆகவேதான், யார் படமும் வேண்டாம் என முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதை எல்லோரும் மதிக்க வேண்டும். சரியான நீதியைப் பெறுவதில்தான் கவனம் செலுத்தவேண்டும்," என்கிறார் வள்ளிநாயகம்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான அரி பரந்தாமன் இது மேல் சாதி ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு என்கிறார்.
"மகாத்மா காந்தியை தேசத் தலைவராகப் பார்க்கிறார்கள். ஆனால், அம்பேத்கர் என்று வரும்போது, அவரை தலித் தலைவராகப் பார்க்கிறார்கள். அவர் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தபோது தலித் பிரச்னைக்காக செய்யவில்லை. எல்லா பெண்களின் உரிமையை வலியுறுத்தித்தான் ராஜினாமா செய்தார்.
திருவள்ளுவரின் படத்தை வைக்கலாம்; மகாத்மா காந்தியின் படத்தை வைக்கலாம்; ஆனால், அம்பேத்கரின் படத்தை வைக்கக்கூடாது, ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்தால் எடுக்கவேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் சரி?
காந்தி பிறந்த நாளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதைப் போல அம்பேத்கரின் பிறந்த நாளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மெட்ராஸ் சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கரின் பெயர் வைக்கப்பட்டபோதும் இதேபோலத்தான் பிரச்னை செய்தார்கள். இது சாதிய மனோபாவம். இந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும்" என்கிறார் அரி பரந்தாமன்.
அம்பேத்கர் படத்தை வைக்க அனுமதி கோரி திங்கட்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்கறிஞர் அமைப்புகள், தலைநகர் சென்னையிலும் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தவிடப்படவில்லை: தலைமை நீதிபதி

இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, தற்போது அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா ஏற்றுக்கொண்டதாக தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி, தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆலோசனையின்போது, தலைமை நீதிபதியிடம் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறிய அமைச்சர் ரகுபதி, அதுதொடர்பாக கடிதத்தையும் வழங்கியுள்ளார்.
அதைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்தத் தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என்றும் தற்போது நடைமுறையில் உள்ள நிலையே தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












