ரயில் பெட்டியில் மலத்தை கைகளால் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு: தமிழக ரயில் நிலையங்களின் நிலை என்ன?

ரயில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கழிப்பறைகளில் கைகளால் மலம் அள்ளும் நிலை உள்ளதாக ஒப்பந்த தூய்மை பணியாளர் மகேஸ்வரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மதுரை ரயில்வே நிலையத்தில் ரயில்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மனித மலத்தை கைகளால் அள்ளுவதாக தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவரிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை கோட்ட ரயில்வேயில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுடனான ஆய்வு கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் மதுரை ரயில்வே மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆணைய தலைவர் வெங்கடேசன் தூய்மை பணியாளர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

வீடியோ ஆதாரத்தை காண்பித்த பெண்

அப்போது பேசிய சில தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு ஒப்பந்த படியான ஊதியம் வழங்கப்படவில்லை, உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.

மேலும் தங்களுக்கான தேவைகள் குறித்து ஒப்பந்த நிறுவனங்களிடம் கேட்டால் தங்களை வேலையில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டுவதாகவும், தங்களுக்கு 3 ஆண்டுகளாக போனஸ் வழங்கப்படவில்லை, ஆனால் போனஸ் பெற்றதாக ஒப்பந்த நிறுவனம் கையெழுத்திடும் படி மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினர்.

ஆணைய தலைவர் வெங்கடேஷிடம் பேசிய தூய்மை பணியாளர் ஒருவர் தங்களுக்கு ஒப்பந்த நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களான கையுறை உள்ளிட்டவைகளை மாதத்திற்கு ஒரு முறை மட்டும் வழங்குவதாகவும், இதன் காரணமாக ரயிலில் உள்ள கழிப்பறைகளில் கைகளால் மலம் அள்ளும் நிலை உள்ளதாகவும் கூறி அதனை வீடியோ ஆதாரத்துடன் காட்டி புகார் அளித்தார்.

இதனைப் பார்த்த ஆணைய தலைவர் உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார். தூய்மை பணியாளரின் இந்த குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

ரயில் பெட்டிகள்

பட மூலாதாரம், Getty Images

சாப்பிடும் கையில் மலத்தை சுத்தம் செய்கிறோம்

கழிப்பறைகளில் கைகளால் மலம் அள்ளும் நிலை உள்ளதாக ஒப்பந்த தூய்மை பணியாளர் மகேஸ்வரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மகேஸ்வரி, “ரயில் பெட்டிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு கையுறைகள் வழங்கப்படுவதில்லை.

ரயில் பெட்டியில் உள்ள கழிப்பறைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்கு கையுறை கேட்டால் மேற்பார்வையாளர் கையுறை வழங்குவதில்லை. கேட்கும் போதெல்லாம் வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே கையுறைகள் வழங்குவார்கள்.

கையுறை இல்லாததால் கழிப்பறைகளில் கைகளால் மலத்தை அள்ளுகிறோம். பெண்கள் மாதவிடாய் நேரங்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் மற்றும் மது பாட்டில்களை குப்பை தொட்டியில் போடாமல் கழிப்பறைக்குள் போடுவதால் அடைப்பு ஏற்படும் அதனையும் சாப்பிடும் கைகளால் தான் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது.

இதனால் சுகாதார பாதிப்பு எங்களுக்கு மட்டும் அல்ல வீட்டில் உள்ள எங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. எனவே உடனடியாக தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்” என மகேஸ்வரி கோரிக்கை வைத்தார்.

ரயில் பெட்டிகள்
படக்குறிப்பு, மனித மலத்தை கைகளால் அள்ளுவதாக தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவரிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கையால் மலம் அள்ளுவோர் மறுவாழ்வு சட்டம் பின்பற்றப்படுகிறதா ?

இது குறித்து ஆதி தமிழர் கட்சி தூய்மை பணியாளர் நல அணியின் மாநில தலைவர் குருசாமி பிபிசி தமிழிடம் பேசினார்.

“ரயில்வேயில் தூய்மை பணியாளராக ஆண்கள் மட்டும் அதிக அளவில் வேலை பார்த்து வந்தனர்.ஆள் பற்றாக்குறை காரணமாக பெண்கள் அதிக அளவு தூய்மை பணியாளர் பணியை செய்து வருகின்றனர். அவர்கள் ரயில் பெட்டிகளை கழுவுவது, பெட்டிகளுக்குள் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்."

"ரயில்வே மதுரை கோட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில் கழிப்பறைகள் மிகவும் மோசமாகவும், அதே நேரத்தில் பயணிகள் புகையிலை பயன்படுத்தி விட்டு ரயில் பெட்டி மற்றும் கழிப்பறைகளில் ஆங்காங்கே துப்புவதால் அந்த கரை அதிகமாக இருக்கும், அதை சுத்தம் செய்ய பெண்கள் ஆசிட் பயன்படுத்துகின்றனர்."

"ஆசிட் பயன்படுத்தும் பெண் தூய்மை பணியாளருக்கு முக கவசம், கையுறை வழங்கப்படாததால் ஆசிட் புகையை சுவாசிப்பதால் பெண்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது."

"மேலும் கையுறை இல்லாததால் கைகளால் மலம் அள்ளும் போது கை கால்களில் தோல் நோய் ஏற்படுவதுடன், சொல்ல முடியாத பல நோய் தொற்றுக்கு தூய்மை பணியாளர்கள் ஆளாகி வருகின்றனர்."

"இன்னும் சில ரயில் நிலையங்களில் ரயில் 10 நிமிடம் மட்டுமே நின்று செல்லும் அந்த நேரத்திற்குள் பெட்டியில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும் நேரம் குறைவாக இருப்பதால் கையுறை, முக கவசம் அணிவதற்கு நேரம் இல்லாமல் கையால் சுத்தம் செய்ய வேண்டி உள்ளது." என்று கூறுகிறார் குருசாமி.

ரயில் பெட்டிகள்
படக்குறிப்பு, நேரம் குறைவாக இருப்பதால் கையுறை, முக கவசம் அணிவதற்கு நேரம் இல்லாமல் கையால் சுத்தம் செய்ய வேண்டி உள்ளது.

மேலும் பேசிய குருசாமி, "பல நேரங்களில் அதிகாரிகள் வற்புறுத்தல்களால் தூய்மை பணியாளர்கள் கைகளால் மலம் அள்ள தள்ளப்படுகிறார்கள். இது மிகப்பெரிய தீண்டாமை குற்றமாகும். மதுரை ரயில் நிலையத்தில் மட்டும் அல்ல தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கும் இதே நிலை தான்."

"ஒரு சில ஒப்பந்த நிறுவனங்கள் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொடுக்கின்றனர். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் அதை செய்து கொடுக்க மறுக்கின்றனர். கையால் மலம் அள்ளுவோர் மறுவாழ்வு சட்டத்தை தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுவது இல்லை. தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் செய்து கொடுக்காத நிறுவனங்கள் மீது இச்சட்டத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கலாம்.” என்றார்.

இவ்வாறு கடுமையான வேலைகளை வாங்கிக்கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்கள் சம்பளத்தையும் சரியாக கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.

“பெண்கள் குடும்ப வறுமை காரணமாக பல கஷ்டங்களை தாங்கி கொண்டு தொடர்ந்து தூய்மை பணி செய்து வருகின்றனர். அப்படி கஷ்டப்படும் பெண்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. தூய்மை பணியாளர்களுக்கு தினசரி கூலியாக 886 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் பல நிறுவனங்கள் அவர்களுக்கு அந்த ஊதியத்தை வழங்குவதில்லை, பெரும்பாலான ஒப்பந்த நிறுவனங்கள் மாத சம்பளத்தை ஒரு மாதம் விட்டு அடுத்த மாதம் வழங்கி வருகின்றனர்.

எனவே தூய்மை பணியாளர்களுக்கு தடையில்லாமல் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பணியின் போது பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசுக்கு தொடர்ந்து வைத்து வருகிறோம் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குருசாமி கேட்டு கொண்டார்.

ரயில் பெட்டிகள்
படக்குறிப்பு, "பல நேரங்களில் அதிகாரிகள் வற்புறுத்தல்களால் தூய்மை பணியாளர்கள் கைகளால் மலம் அள்ள தள்ளப்படுகிறார்கள்." என்கிறார் குருசாமி

ரயில் பயணிகளுக்கு தொற்று பரவும் அபாயம்

அதிகாரிகள் தூய்மை பணியாளர்களிடையே நடத்தப்படும் கூட்டத்தை மாதம் ஒருமுறை நடத்தினால் இதுபோன்ற பல குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வரும் என்று கூறுகிறார் தெற்கு ரயில்வே மண்டல மற்றும் மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜன்.

“ரயில்வேயில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்காவிட்டால் அவர்களுக்கு உடல் சுகாதார பாதிப்பு ஏற்படுவதால் சுத்தம் செய்யும் பணி முழுமை அடையாமல் போகிறது. இதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பாதிப்பு அதிகமாக ஏற்படுவதுடன் அரசு சொத்தான ரயில் முறையாக பராமரிக்கப்படாமல் குறைந்த காலத்தில் சேதமடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது."

ரயில்வே துறை அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களின் பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டால் பல இடங்களில் நிலவும் சுகாதார சீர்கேடும், பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்வது தெரிய வரும். அப்போது சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

விசாரணை நடத்த உத்தரவு

தூய்மை பணியாளர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் தராத ஒப்பந்த நிறுவனத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோட்ட மேலாளரிடம் கூறியுள்ளேன்." என்றார்.

"தூய்மை பணியாளர்களுக்கு போனஸ் இதுவரை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. ஆனால் சில பணியாளர்களிடம் போனஸ் வாங்கியது போல ஒப்பந்த நிறுவனங்கள் கையெழுத்து கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். போனஸ் பெற்றால் மட்டுமே கையெழுத்து இட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது."

"ரயில்வேயில் பணிபுரியும் பெண் தூய்மை பணியாளர்கள் மற்றும் பட்டியலின தூய்மை பணியாளர்களுக்கு எதிராக நிகழும் துன்புறுத்தல் குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே அலுவலகங்களில் தொலைபேசி எண் மற்றும் அதிகாரிகள் பெயரை அச்சிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்."

"தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதாக கூறி ரயில்வேயில் பணம் பெற்று விட்டு அந்த பணம் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி கொடுக்கவில்லை என்றால் அந்த ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து பணத்தை ரயில்வே துறைக்கு மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்."

"ரயில்வேயில் கையால் மலம் அள்ளும் நிலை ஒழிக்கப்பட்டதாக தெரிவித்த நிலையில் தற்போது கையால் மலம் அள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி பணியாளர்களை ஈடுபடுத்திய ஒப்பந்த நிறுவன அனுமதி தடை செய்யப்படும். கையால் மலம் அள்ளும் புகார் குறித்து உறுதியானால் ஒப்பந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்படும் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்."

"கையால் மலம் அள்ளும் வீடியோ புகார் குறித்து இரு தரப்பிலும் விசாரணை நடத்தப்படும். கையால் மலம் அள்ளும் புகார் குறித்து விளக்கம் கேட்டு ஒப்பந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்படும்” என தெரிவித்தார்.

ரயில் பெட்டிகள்

பட மூலாதாரம், Getty Images

ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவு

தூய்மை பணியாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்தும் அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத்திடம் பிபிசி சார்பாக பேசினோம். அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட ஒப்பந்த நிறுவனம் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கோபிநாத், “தூய்மை பணியாளர் புகார் தொடர்பாக மதுரை கோட்ட சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை பராமரிப்பு மேலாளர் தலைமையில் நேற்றிலிருந்து விசாரணை தொடங்கி நடந்து வருகிறது.

புகார் அளித்த தூய்மை பணியாளர்களிடம் இருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சம்பந்தப்பட்ட இடங்களில் நேரடியாக சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் அத்துடன் தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் என்ன நிலை?

தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் நிலை குறித்து சென்னை மக்கள் தொடர்பு தலைமை அலுவலர் குகனேசனிடம் பிபிசி சார்பில் தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர், “அனைத்து ரயில் பெட்டிகளில் பயோ டாய்லெட் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்கள் மனித கழிவை கையாளுவதை ஒழிப்பதற்காகவே ரயில்வே துறை பயோ டாய்லெட்டை செயல்படுத்தியுள்ளது."

"மதுரையில் நடந்தது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் உடனடியாக அந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது."

"பொதுமக்கள் ரயில்வே துறையுடன் இணைந்து ரயிலில் பயணிக்கும் போது பயோ டாய்லெட் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து பயன்படுத்தினால் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம்.

பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தூய்மை பணியாளர்கள் பணி செய்ய வேண்டும் என்றுதான் ஒப்பந்த விதிமுறைகள் உள்ளது. அதை மீற கூடாது அப்படி மீறி செயல்படுபவர்கள் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: