கோகுல் ராஜ் கொலை வழக்கு: "சாதி என்கிற பேயின் பிடியில் நடந்த கொலை” - உயர்நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்

கோகுல் ராஜ் கொலை வழக்கு
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டை உலுக்கிய சாதி ஆணவக் கொலை வழக்குகளில் கோகுல் ராஜ் கொலை வழக்கும் ஒன்று. 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தக் கொடூர கொலை வழக்கில் 7 ஆண்டுகள் கழித்து 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

கோகுல் ராஜ் வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட யுவராஜ் உட்பட 10 பேருக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருந்தது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

என்ன நடந்தது?

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல் ராஜ், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர். அவரும் சுவாதி என்கிற இடைநிலை சாதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோயிலுக்கு வந்துள்ளார்.

அங்கிருந்து கோகுல் ராஜ் இடைநிலை சாதியைச் சேர்ந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டார். அதற்கு அடுத்த தினம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல் ராஜின் உடல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரயில் பாதையில் மீட்கப்பட்டது.

இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவராஜ், அவரது ஓட்டுநர் அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், சங்கர், அருள் செந்தில், செல்வக்குமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 15 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி விஷ்ணு ப்ரியா 2015ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நாமக்கலில் இருந்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது முதல் நபராக குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார். விசாரணை நீதிமன்ற விசாரணையில் இந்த நேர்காணலும் முக்கிய சாட்சியமாக அமைந்திருந்தது.

கோகுல் ராஜ் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் கழித்து 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது.

அதில் யுவராஜ், அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய பத்து பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்திருந்தது. சங்கர், அருள் செந்தில், செல்வக்குமார், தங்கதுரை, சுரோன் ஆகிய ஐந்து பேரை விடுதலை செய்திருந்தது.

சாதி, தமிழ்நாடு

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின் தாயார் சித்ராவும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு நடந்த மேல்முறையீட்டு மனு விசாரணை பின்னர் சென்னை உயர்நீதிமன்ற பிரதான அமர்வில் நடைபெற்றது.

இந்த வழக்கில் நேரில் கண்ணால் பார்த்த சாட்சியங்கள் இல்லை, மின்னனு ஆதாரங்களைச் சேகரித்ததில் குறைபாடு உள்ளது என தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தரப்பினர் வாதிட்டனர்.

கோகுல் ராஜ் தாயார் சித்ரா தரப்பில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனைக்குப் பதிலாக மரண தண்டனை விதிக்கவேண்டும் என்றும் விடுவிக்கப்பட்ட ஐந்து பேருக்கு எதிராகவும் போதிய ஆதாரம் இருப்பதாக மேல்முறையீட்டு மனுவில் வாதிட்டனர்.

சாதி, தமிழ்நாடு

பிறழ் சாட்சியமாக மாறிய சுவாதி

விசாரணை நீதிமன்றத்தில் சுவாதி முக்கிய சாட்சியமாக இருந்தார். ஆனால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணையின் போது சாட்சியமாக அழைக்கப்பட்ட சுவாதி தவறான வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிறழ் சாட்சியமாக மாறிய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இத்தகைய நடவடிக்கை நீதிமன்றத்தின்மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அசைத்துப் பார்த்துவிடும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

நீதிபதிகள் நேரடி விசாரணை

வழக்கின் ஆதாரங்கள் மீது எழுப்பப்பட்ட சந்தேகங்கங்களைக் களைய நீதிபதிகள் ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

கோகுல் ராஜ் கடத்திச் செல்லப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மற்றும் அவரின் உடல் மீட்கப்பட்ட பள்ளிபாளையம் ரயில் பாதை ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மேல்முறையீட்டு மனுக்கள் மீது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சாதி, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

அதில் யுவராஜ், அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன் உள்ளிட்ட எட்டு பேருக்கு வழங்கிய ஆயுள் தண்டை உறுதி செய்யப்பட்டது. பிரபு, கிரிதார் ஆகிய இருவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. கோகுல் ராஜ் தாயார் சித்ராவின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மேலும் இந்த வழக்கின் தீர்ப்பில், “குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சாதி என்கிற பேயின் பிடியில் இருந்துள்ளனர். முக்கிய குற்றவாளியான யுவராஜ் ஊடகத்தைப் பயன்படுத்தி தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்க முயன்றார். குற்றவாளிகள் மீதான குற்றத்தை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளது.

இந்த வழக்கு மனித நடத்தையின் கருப்புப் பக்கத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. சாதிய அமைப்பு, மதவெறி, விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த மக்களை மனிதத்தன்மை அற்ற முறையில் நடத்துவது போன்ற நம் சமூகத்தின் அசிங்கமான அம்சங்களின் மீது நம் கவனத்தை ஈர்க்கிறது.

வழக்கை சீர்குலைகக் சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறுவது, ஊடகம் மற்றும் சமூக ஊடகத்திலிருந்து வரும் அழுத்தம், அதிக அளவிலான மின்னனு ஆதாரங்களை ஆராயும்போது வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில்தான் இந்த வழக்கு நடத்தப்பட்டுள்ளது,” உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கோகுல் ராஜ் தாயார் சித்ரா, “என் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. ஒரு கணவனை இழந்து இரண்டு பிள்ளைகளை நான் வளர்த்தேன். கல்லூரி வரை படிக்க வைத்தேன்.

அவனை தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்கள். இதில் தண்டனை வழங்கி தீர்ப்பு தந்த நீதிபதிகள் மற்றும் இந்த வழக்கிற்கு உதவியவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் - வழக்கறிஞர் ப.பா.மோகன்

இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான ப.பா.மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அரசு வழக்கறிஞர் என்கிற முறையில் இந்த வழக்கில் வாதாட எனக்கு எந்த உதவியும் செய்து தரப்படவில்லை. என் சொந்த செலவில்தான் மதுரைக்குச் சென்று வழக்கை நடத்தினேன்.

இந்த சட்டத்தின்படி சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை. சுவாதி புலன் விசாரணையில் பெரிதும் உதவியாக இருந்தார். அவருக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தால் பிறழ் சாட்சியாக மாறியிருக்கமாட்டார்.

சாதி, தமிழ்நாடு

வன்கொடுமை சட்டம் போன்ற சிறப்பு சட்டங்களின் கீழ் உள்ள வழக்குகளை எடுத்து நடத்தும் வழக்கறிஞர்களுக்கு சட்டத்தில் கூறப்பட்டுள்ளதைப் போன்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படியும் உரிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஆணவக் கொலைகள் நாடு முழுவதும் அதிகம் நடந்து வருகின்றன. ஆணவக் கொலைகளுக்கு எதிராக மாநில அரசே சட்டம் இயற்றலாம். ராஜஸ்தானில் ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் உள்ளது.

திராவிட மாடலாக இயங்கும் அரசு உடனடியாக ஆணவக் கொலைக்கு எதிராக கண்டிப்பாக சட்டம் இயற்ற வேண்டும். இரண்டு ஆண்டுகள் தாமதமானதே தவறு என நாங்கள் எண்ணுகிறோம்,” என்றார்.

இந்த வழக்கு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய எவிடென்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர், “சாதிய ஆதிக்கம்தான் இந்தக் கொலை வழக்கின் முக்கியக் காரணியாக உள்ளது. கோகுல் ராஜின் சாதி என்ன என்பதை அறிந்த பிறகுதான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் காட்டிய ஈடுபாடுதான் பாராட்டத்தக்கது. சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியது, சாட்சியத்தை மாற்றிக் கூறிய சுவாதி மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது போன்றவை முன்னுதாரணமான நடவடிக்கைகள்.

யுவராஜ் தரப்பில் நிச்சயம் மேல்முறையீடு செல்வார்கள். அவ்வாறு மேல்முறையீடு சென்றால் அரசுத் தரப்பு உச்சநீதிமன்றத்தில் சரியாக வாதாட வேண்டும். ஆணவக் கொலைக்கு என மாநில அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும்,” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: