கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை உண்மையில் இருந்ததா? மோதி கடலுக்கு அடியில் மூழ்கி பிரார்த்தனை செய்தது ஏன்?

பட மூலாதாரம், Narendramodi/X
குஜராத் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஆன்மிக நகரமான துவாரகை அருகே கடலில் மூழ்கி வழிபாடு செய்தார்.
சமூக வலைத்தளங்களில் அதன் படங்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோதி, “நீரில் மூழ்கிய துவாரகை நகரில் பிரார்த்தனை செய்தது ஒரு புனிதமான அனுபவம்” என்று எழுதியிருக்கிறார்.
நீரில் மூழ்கிய துவாரகை நகரத்தை இதற்கு முன் அகழ்வாராய்ச்சியாளர்கள் தேடிச் சென்றபோது என்ன கிடைத்தது, மகாபாரதம் சொல்லும் நகரம் உண்மையில் இருந்ததா என்பது பற்றிய கட்டுரை இது.
“துவாரகை நகரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள் நடந்ததாகச் சொல்லப்படும் காலகட்டத்தைச் சேர்ந்த ஒரே இடமாக அது உள்ளது,” என்கிறார் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கூடுதல் தலைமை இயக்குநரான முனைவர்.அலோக் திரிபாதி.
“நான் ஒரு நீரடி தொல்லியல் ஆராய்ச்சியாளர். இந்திய நீர்நிலைகளில் மூழ்கிப்போன தொன்மையான இடங்களின் தேடலில் நான் ஈடுபட்டுள்ளேன்,” என்று கூறும் டாக்டர் அலோக் திரிபாதி, “நீருக்கு அடியில் ஆய்வு மேற்கொள்ளும் தொல்லியல் ஆய்வுப் பிரிவால் ஒரு மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி துவாரகையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த இடம் வரலாறு மற்றும் சமய முக்கியத்துவத்திற்காகப் புகழ்பெற்றது. இது அகழ்வாராய்ச்சியிலும் முக்கியத்துவம் பெற்ற ஓர் இடம்,” என்று துவாரகை ஆராய்ச்சி குறித்துக் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Narendramodi / X
மகாபாரதம் சொல்லும் துவாரகை நகரம்
இந்தியாவின் 7 புனித யாத்திரை தலங்களில் துவாரகையும் ஒன்று. புராண காவியமான மகாபாரதத்தில் கிருஷ்ணரின் சாம்ராஜ்யமாக இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணர் இந்த உலகத்தைவிட்டு மறைந்த பிறகு இந்த சாம்ராஜ்யம் கடலில் மூழ்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
“மகாபாரதத்தின் மூன்றாவது அத்தியாயத்தில் 23 மற்றும் 24வது பத்தியில், ‘சமுத்திர தேவதை பகவான் கிருஷ்ணரின் அரண்மனையைத் தவிர மீதி நிலத்தைத் திரும்ப எடுத்துக்கொண்டார்’ என்று எழுதப்பட்டுள்ளது.

மகாபாரத காவியம், 3,000 ஆண்டுகளுக்கு முன்பாக துவாபர யுகத்தில் வியாச முனிவரால் எழுதப்பட்டது,” என்று கூறுகிறார் துவாரகாதீஷ் கோவிலின் மேற்பார்வையாளரான நாராயணத் பிரம்மசாரி.
“இந்த வரலாற்று நகரம் உண்மையில் இருந்ததா என்பதை சந்தேகத்திற்கு இடமின்றித் தெரிந்துகொள்ளும் பொருட்டு, கடந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் முக்கிய ஆதாரங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்,” என்று கூறுகிறார் அலோக் திரிபாதி.

பட மூலாதாரம், Getty Images
நீருக்கு அடியில் கட்டடங்கள்
மேற்கொண்டு அதுகுறித்த ஆய்வுகள் பற்றி விவரித்த அலோக் திரிபாதி, “அதற்கான முதல் அகழாய்வு 1960களில் புனேவின் டெக்கன் கல்லூரியால் செய்யப்பட்டது. 1979இல் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை மற்றோர் அகழாய்வை மேற்கொண்டது.
ஆராய்ச்சியாளர்கள் அங்கு மண்பாண்டங்களைக் கண்டுபிடித்தார்கள். அவை கிறிஸ்து பிறப்புக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்தைச் சேர்ந்தது என்று அவர்கள் கருதினார்கள்.
துவாரகைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம், பல வகையான தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அழகாக வண்ணம் பூசப்பட்ட மண்பாண்டங்கள் கிடைத்தன. அதில் பல வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிவப்புப் பரப்பில் கறுப்பு வண்ணம் பூசப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த மாதிரிகள் அனைத்தும் ஏறக்குறைய 2,000 ஆண்டுகளின் கலாசார வரிசைமுறை இருப்பதை நிரூபிக்கிறது.
நீருக்கு அடியில் கற்களால் கட்டடங்களின் எச்சங்கள், பெரிய கல் கட்டட அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் மேற்பரப்பு திறந்திருப்பதாலும், நீரோட்டம் அங்கு மிகவும் வலுவாக இருப்பதாலும், பிற பொருட்கள் அங்கு காணப்படவில்லை,” என்று கூறுகிறார் அலோக் திரிபாதி.

‘கடலில் மூழ்கிய துவாரகை நகரம்’
“நீரில் மூழ்கிய துவாரகையின் தொல்லியல் ஆய்வுப் பணிகள் தற்போதுள்ள துவாரகாதீஷ் கோவிலுக்கு அருகில் நடத்தப்பட்ட அகழாய்வுடன் தொடங்கியது,” என்று கூறுகிறார் சிஎஸ்ஐஆர் அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் ராஜீவ் நிகம்.
மேற்கொண்டு பேசியவர், “பல கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதாவது கடல்மட்டம் உயர உயர நிலத்தை நோக்கிக் கோவில்கள் இடம் மாற்றப்பட்டுள்ளன,” என்று கூறினார்.
கடலுக்குள்ளே ஆய்வு மேற்கொண்டு மூழ்கிய நகரத்தின் சான்றுகள் அங்கு உள்ளனவா என்று ஏன் பார்க்கக்கூடாது என்ற எண்ணம் பிரபல இந்திய தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் எஸ்.ஆர்.ராவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
“2007ஆம் ஆண்டில் விரிவான அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. அந்த முழு திட்டத்திற்கும் நான் இயக்குநராக இருந்தேன்,” என்று கூறுகிறார் டாக்டர் அலோக் திரிபாதி.
“துவாரகை மேற்கு முனையில் அமைந்துள்ளது. அது இருக்கும் இடம் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்துடன் ஒத்துப்போகிறது.
அங்கிருந்து ஒரு சிறு நீரோடை கடலுடன் வந்து கலக்கிறது. அது கோமதி என்று அழைக்கப்படுகிறது. அதுதான் துவாரகை நகரம். எனவே நாங்கள் அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த தேர்ந்தெடுத்தோம்.
அறிவியல்ரீதியாக அந்த இடம் முழுவதையும் ஆய்வு செய்தோம். அதில் நாங்கள் 50 மீட்டர் பகுதியில் அதிக எச்சங்கள் இருப்பதையும் அவை நன்கு பாதுகாக்கப்பட்டிருப்பதையும் பார்த்தோம்,” என்கிறார் அலோக் திரிபாதி.

கண்டுபிடிக்கப்பட்ட புராதன துறைமுகம்
“அங்கு 10 மீட்டர் அளவுக்குக் கனமான படிவம் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். குடியிருப்புப் பகுதிகள் கடல் நீரால் அழிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு கடல் மைல்களுக்கு ஒரு கடல் மைல் சுற்றளவில் உள்ள பகுதியில் நீர்நிலைப்பரப்பு ஆய்வை(Hydrographic) ஆய்வை மேற்கொண்டதாகக் கூறுகிறார் அலோக் திரிபாதி.
மேலும், “இந்தப் பகுதியின் விரிவான ஆய்வில், நீரோடையின் பாதை மாறியிருப்பதைக் காண முடிந்தது. நாங்கள் அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்தோம். நீருக்கு அடியில் போகும்போது அங்கு செடிகொடிகள் வளர்ந்து கிடப்பதைப் பார்க்க முடியும்.
அதைச் சுத்தம் செய்தால் மெதுவாக அங்கு இருக்கும் கட்டமைப்புகளின் வடிவங்கள் தென்படத் தொடங்கும். அப்படியாக சில கட்டட அமைப்புகளில் பல அடுக்குகள் உள்ளன.
இந்தப் பகுதியிலிருந்து பெரும் எண்ணிக்கையில் கல் நங்கூரங்கள் கிடைத்துள்ளன. எனவே இதுவொரு புராதன துறைமுகம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிறது,” என்று கூறினார் டாக்டர் அலோக் திரிபாதி.

கடல் மட்டம் உயரத் தொடங்கியது
“தேசிய கடலியல் ஆய்வு அமைப்பில் நாங்கள், கடந்த 15,000 ஆண்டுகளில் ஏற்பட்ட கடல் மட்ட ஏற்ற இறக்கத்தின் பதிவுகளை ஆராய்ந்தபோது, கடல் மட்டம் இப்போது இருப்பதைவிட 15,000 ஆண்டுகளுக்கு முன்பு 100 மீட்டர் கீழே இருந்தது,” என்று கூறுகிறார் டாக்டர் ராஜீவ் நிகம்.
“பிறகு கடல் மட்டம் உயரத் தொடங்கியது. சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது இருப்பதைக் காட்டிலும் குறைவாக இருந்தது.
சுமார் 3,5000 ஆண்டுகளுக்கு முன்புதான் துவாரகை நகரம் கட்டப்பட்டிருக்க வேண்டும். பிறகு கடல் மட்டம் அதிகரித்தபோது, அந்த நகரம் நீரில் மூழ்கியிருக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

நீருக்கு அடியில் தொன்மையான துவாரகை நகரத்தின் பல கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கல் அமைப்புகள், தூண்கள், நீர்ப்பாசன வழிகள் ஆகியவை காணப்படுகின்றன.
இவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பது பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன.
தொன்மையான நகரத்தின் சுவர்களுடைய அஸ்திவாரத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தில், ஒரு நீரடி அகழாய்வை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
“நகரத்தின் பழைமையான குடியிருப்பின் இடத்தை நாம் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தால், அது இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய முக்கியத்துவதைக் கொண்டிருக்கும்,” என்று கூறுகிறார் டாக்டர் அலோக் திரிபாதி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












