'கடனை அடைக்கும்வரை இதுதான் என் தொழில்' - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை

பாலியல் தொழில்
    • எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி நங்கா
    • பதவி, பிபிசிக்காக

திருப்பதி தபால் நிலையம் அருகே உள்ள குறுகலான தெருவிலுள்ள ஒரு வீட்டில் சல்மா வசித்து வருகிறார். அவர் ஒரு பாலியல் தொழிலாளி. எல்லா பாலியல் தொழிலாளர்களையும் போலவே, சல்மாவின் வாழ்க்கையும் கடினமானது.

சல்மா என்பது அவருடைய உண்மையான பெயர் அல்ல.

கணவர் இறந்த பிறகு, தனது நான்கு குழந்தைகளை வளர்க்கவும், லட்சங்களில் இருந்த கடனை அடைக்கவும் தன் சொந்த சகோதரியே தன்னை இந்த தொழிலுக்கு அழைத்து வந்ததாக சல்மா கூறுகிறார்.

“எனது பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு எனக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு குழந்தைகளை வளர்க்க சிரமம் ஏற்பட்ட போது, இந்த தொழிலிலுக்கு என் சகோதரி அழைத்து வந்தார். என்னை இந்த வேலைக்கு அழைத்து வந்தவர்கள் என்னை வைத்து நன்றாக வாழ்ந்தனர். ஆனால் வெளியிலும் வேலை செய்துகொண்டு, இந்த தொழிலையும் தொடர்ந்தேன். எனக்கு மொத்தம் 4 குழந்தைகள், அதில் 3 பேர் பெண் குழந்தைகள். எனக்கு உதவ எந்த சொந்தமும் இல்லை.“

தனது கணவர் உயிரோடு இருந்தவரையில், வீட்டிற்கு எப்போதாவது மட்டுமே வருவார் என்றும், வேலைக்கு சென்றால் மூன்று மாதங்களுக்கு பிறகு மட்டுமே திரும்பிவருவார் என்று சல்மா கூறுகிறார். இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் கூட தனியாக மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக சல்மா தெரிவித்தார்.

"எனக்கு மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. 11 வயதில் நான் வயதுக்கு வந்தேன். 12 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. 14 வயதில் நான் 2 குழந்தைகளுக்கு தாயானேன். 18 வயதில் ஒரு குழந்தையும், 25 வயதில் ,மற்றொரு குழந்தையும் எனக்கு பிறந்தது. ஆனால் என் கணவர் வீட்டிற்கு செய்யவேண்டிய கடமைகளை செய்யமாட்டார். வாரத்திற்கு 300 ரூபாய் மட்டுமே கொடுப்பார். இதனால் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தும் சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். கடன் கொடுத்தவர்கள் என்னை நெருக்கிய போது வேறு வழியின்றி இந்த தொழிலுக்கு வந்தேன்."

'கஷ்டப்படும் பெண்கள் இந்தத் தொழிலுக்குக் கொண்டு வரப்படுகிறார்கள்'

பாலியல் தொழில்

பிரச்னையில் இருக்கும் பெண்கள் எப்படி இந்தத் தொழிலுக்கு இழுக்கப்படுகிறார்கள் என்று சல்மா விளக்கினார்.

ஏமாற்றப்பட்ட பிறகு, தங்களுக்கு நேர்ந்ததை யாரிடமும் சொல்ல முடியாமல் பலர் சிக்கித் தவிப்பதாக அவர் கூறினார்.

"ரயில் நிலையம், பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பெண்களிடம் வலை விரிக்கிறார்கள். அங்கு கஷ்டப்படும் பெண்கள் யாரேனும் அமர்ந்திருந்தால், அவர்களின் கஷ்டங்களை கேட்டு ஆறுதல் சொல்வது போல் பேச தொடங்குவார்கள். நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறி அழைத்துச் சென்று தங்கள் வலையில் விழ வைக்கின்றனர். அப்படி மாட்டிக்கொள்ளும் பலரும் அவர்களுக்கு நடந்ததை வெளியே சொல்லமுடியாமல் திணறுகிறார்கள், என்கிறார் சல்மா."

'சில போலீசார் ஒத்துழைக்கிறார்கள்'

பாலியல் தொழில்

டெல்லி, மும்பை போன்ற சிவப்பு விளக்குப் பகுதிகளில் பாலியல் தொழிலாளியாகப் பணிபுரிந்திருக்கிறீர்களா? தற்போது திருப்பதியில் தங்கி இதே தொழிலை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். ஒருமுறை பாலியல் தொழிலில் சிக்கினால் அங்கிருந்து தப்பிப்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறதே என்று கேட்டோம்.

"டெல்லியில், சிவப்பு விளக்கு பகுதியில் சில போலீசார் அவர்களுக்கு உதவுகிறார்கள். அதுபோல ஆந்திர போலீசார் ரெய்டுக்கு வருவதற்கு முன்பே, விபச்சார விடுதிகளுக்கு தகவல் அளிக்கப்படுகிறது. இதனால் அங்குள்ள பெண்கள் மறைத்து வைக்கப்படுகின்றனர்," என்றார் சல்மா.

"அந்த விடுதிகளில் தங்கியிருக்கும் ஒரு பெண் தொலைந்து போனால் ஏராளமான பணம் நஷ்டமாகிறது என அதை நடத்துபவர்கள் கருதுகின்றனர். இதனால் அந்த பெண்களை வெளியே அனுப்புவது வாடிக்கையாக நடக்காது. நம்பிக்கைக்குரிய பெண்களை மட்டுமே வெளியே அனுப்புவார்கள். அதுபோன்ற தருணங்களில் அந்த பெண்களுடன் பாதுகாவலர்களையும் சேர்த்து அனுப்புவார்கள். அவர்களை மீறி கண்ணிமைக்கும் நேரத்தில் மட்டுமே தப்பித்துச் செல்லமுடியும்."

பாலியல் தொழில் நடக்கும் இடங்களுக்கு பல்வேறு நபர்கள் வந்து செல்வதாக சல்மா கூறினார்.

"டெல்லியில் உள்ள பாலியல் விடுதிகளில் நாளொன்றுக்கு 20 முதல் 30 பேர் வரை ஒரு பெண்ணிடம் வருவார்கள். வாடிக்கையாளர்கள் அனைவரும் பணத்தை அந்தப் பெண்களின் கைகளில் தருவதில்லை. அதுமட்டுமின்றி அவர்கள் சொல்வது அனைத்தையும் அந்த பெண்கள் கேட்டு நடந்துகொள்ள வேண்டும். அப்படி செய்ய மறுக்கும் பெண்களுக்கு நரகத்தை காட்டுகிறார்கள். சிலர் உடலெங்கும் அவர்களை அடிப்பார்கள், கையில் பிளேடால் கீறுவார்கள். வெளியே சொல்லமுடியாத இடங்களில் தாக்குவார்கள். பல நேரங்களில் இதன் வடு இந்த பெண்களின் உடலில் நிரந்தரமாக தங்கிவிடும். அவர்கள் சொல்வதை நீங்கள் செய்யாவிட்டால், உங்கள் முடியை பிடித்து மாடிபடிகளில் இழுத்துச் செல்வார்கள். அப்படி என்னை அடித்து துன்புறுத்திய போது என் கண்களுக்கு பக்கத்தில் ஒரு வெட்டுக்காயம் ஏற்பட்டது,” என்று சல்மா தனது மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நன்றாகப் படிக்கும் பெண்கள் கூட இந்தத் தொழிலுக்கு வருவதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது என்றும், டெல்லியிலும் மும்பையிலும் இந்தத் தொழிலில் ஏமாற்றப்பட்ட பலரைப் பார்த்திருக்கிறேன் என்றார்.

"ஒரு பெண் தன் கணவன் மீதான கோபத்தினால் வீட்டை விட்டு வெளியேறினாள். இதுபோல நூற்றுக்கணக்கான பெண்கள் டெல்லி போன்ற நகரங்களில் பாலியல் தொழிலுக்குள் அழைத்து வரப்படுகிறார்கள்."

'என் குழந்தைகளுக்கு எனது தொழில் பற்றி தெரியாது'

பாலியல் தொழில்

முன்பெல்லாம் ஒரே நாளில் ஆயிரம் ரூபாய் கிடைத்தாலே குடும்பச் செலவுகளை கவனித்துக்கொள்ள முடிந்தது. ஆனால் இந்த தொழிலில் போட்டி அதிகமானதால், எல்லா நாட்களிலும் வேலை கிடைப்பதில்லை என்று சல்மா தெரிவித்தார்.

"இந்தத் தொழிலில் போட்டி அதிகமாகிவிட்டது. வேறு ஏதாவது செய்யவேண்டும், இப்போது நிலைமை சரியில்லை. கடனை அடைப்பதற்கும், நான்கு பேரை பார்த்துக் கொள்வதற்கும் எனக்கு இந்த தொழிலை விட்டால் வேறு வழியில்லை."

"இந்த தொழில் மூலமாக தற்போது மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். ஆனால் வேறு வேலைக்கு சென்றால் 10 ஆயிரத்திற்கும் மேல் கிடைக்காது. அதைவைத்து வீட்டையும், கடனையும் சமாளிக்க முடியாது," என்று சல்மா கூறினார்.

சல்மாவுக்கு மாதம் 2 ஆயிரத்து 750 ரூபாய் விதவை பென்சன் வழங்கப்படுகிறது. தான் இந்த தொழிலில் இருப்பது தனது குழந்தைகளுக்கு கூட தெரியாது என்று கூறும் சல்மா தற்போது தனது இளைய மகளுடன் திருப்பதியில் தங்கியுள்ளார்.

“நான் இந்த வேலை செய்வது என் மூன்று பிள்ளைகளுக்கும் தெரியாது. என் கடைசி குழந்தை என்னுடன் இருக்கிறது. அவளுக்கு விவரம் ஏதும் தெரியாது. என் மூத்த மகள்கள் இருவரையும் பத்தாவது வரை படிக்கவைத்து திருமணம் செய்து கொடுத்து விட்டேன். என் மகனை அம்மா வீட்டில் தங்க வைத்துள்ளேன். எதிர்காலத்தில் என் கடனை அடைத்தால் மட்டும் போதும்," என்று சல்மா தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: