தீண்டாமை: சாதி ரீதியான தனி கோயில்களில் அனைவரும் வழிபட உரிமை உண்டா? சட்டம் என்ன சொல்கிறது?

கோப்புப்படம்
படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் பட்டியல் பிரிவினர் நுழைவதற்குத் தடை இருப்பதாகப் புகார் எழுந்தது. அதில் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தை பலன் தரவில்லை என்பதால், அந்தக் கோவிலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சீல் வைக்கப்பட்டது. விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் சர்ச்சையில் இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், இதேபோல் கரூர் மாவட்டத்திலும் வீரணாம்பட்டி காளியம்மன் கோவிலில் பட்டியல் மக்கள் நுழைவதற்கு மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த செய்தி வெளியானது. அங்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வார காலத்தில், தமிழ்நாட்டில் இரண்டு கோவில்களுக்கு தீண்டாமை பிரச்னை தொடர்பாக சீல் வைக்கப்பட்டுள்ளது என்பதால், அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் தீண்டாமை தொடர்கிறதா என்ற கேள்வி கவனம் பெறுகிறது.

பட்டியல் பிரிவினருக்கு சமமான உரிமை தேவை என்று பல அமைப்புகள் இந்த விவகாரத்தை முன்னெடுக்கின்றன. அதேநேரம், மாற்று சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகளில் உள்ளவர்கள், தங்களது சமூகத்திற்கான கோவில் பொதுக் கோவிலாக மாறிவிட்டதால் தங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

கடந்த டிசம்பர் 2022இல் புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில், மூன்று தலைமுறையாக நுழையாத கோவிலில் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் பட்டியல் பிரிவினர் நுழைந்தனர். 2023ஆம் ஆண்டின் முதல் வாரத்தில், கள்ளக்குறிச்சியில் உள்ள 200 ஆண்டு கால வரதராஜ பெருமாள் கோவிலில் பட்டியல் பிரிவினர் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு முதல்முறையாக நுழைந்து, வழிபாடு நடத்தினர். 2008ஆம் ஆண்டிலேயே பட்டியல் மக்கள் அரசிடம் புகார் அளித்திருந்தாலும், 2023இல் தான் அவர்கள் நுழைய முடிந்தது என்று தெரிவித்தனர்.

தற்போது, விழுப்புரம் மாவட்டம் தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. இந்த கோவில், தீண்டாமை பிரச்னை குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கி வைத்த மையப்புள்ளியாக மாறியுள்ளது. அதனால், அதில் தொடர்புள்ள இரண்டு தரப்பு சமூகத்தினரிடம் பேசினோம்.

முதலில், திரெளபதி அம்மன் கோவில் விவகாரத்தில், அந்த கோவில் மீதான உரிமை தங்களது சமூகத்திற்கு உட்பட்டது எனக் கூறும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். அவர்களின் கருத்தை, பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாலா சக்தி எதிரொலித்தார்.

பாலா சக்தி, பிபிசி தமிழிடம் பேசுகையில், ''தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கான கோவில். இந்தக் கோவிலைக் கட்டுவதற்கு அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான் இடம் தந்துள்ளார் என்பதற்கான பட்டா எங்களிடம் உள்ளது," என்று தெரிவித்தார்.

மேலும், "நீதிமன்றத்தை நாங்கள் நாடியிருக்கிறோம். இந்தக் கோவிலுக்குள் பட்டியல் பிரிவினர் நுழைவதற்குத் தடை இல்லை. ஆனால் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது வலிமையைக் காட்டும் இடமாகக் கோவிலை பார்ப்பதைத்தான் நாங்கள் தவறு என்கிறோம்.

பேச்சுவார்த்தையில் இரண்டு சமூகத்தினரும் ஒன்றாக வழிபட வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம், அதேநேரம் கோவில் மீதான எங்கள் உரிமையைப் பறிக்கக்கூடாது,'' என்கிறார் அவர்.

தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில்

அதோடு, தங்களது முன்னோர்கள் தர்மராஜா திரெளபதி அம்மனை குலதெய்வமாக வழிபட்டதாகவும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர், பொதுக்கோவிலாக மாறிவிட்டதாகவும் கூறுகிறார் பாலா சக்தி.

''எங்கள் குலதெய்வத்தை எல்லோரும் வணங்குகிறார்கள் என்பது எங்களுக்குப் பெருமைதான். ஆனால் எங்கள் சமூகத்திற்கான கோவிலில் நாங்கள் முறைப்படி திருவிழா நடத்துவதற்குச் சிக்கல்கள் ஏற்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சாதி ரீதியாகப் பாகுபாடு இல்லாமல் வணங்கலாம். ஆனால் கோவிலுக்குச் சொந்தமான சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கருவறை வரை உள்ளே செல்ல அனுமதி உள்ளது. மற்றவர்களுக்கு அது கிடையாது.

இது பல காலமாகப் பின்பற்றப்படும் வழக்கம். இதை எப்படி தவறு என்று சொல்லமுடியும்?,'' என்று வாதிடுகிறார்.

மேற்கொண்டு பேசிய அவர், ''எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கூட கோவிலில் ஓர் எல்லை வரைக்கும்தான் வரமுடியும். இதைப் பல காலமாக எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பின்பற்றுகிறார்கள். இது எங்கள் நம்பிக்கை,'' என்கிறார் பாலா சக்தி.

ஆனால், பிபிசி தமிழிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், விழுப்புரம் மாவட்டம் 1978இல் இருந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அது தனியார் கோவிலாக இருப்பதாகக் கூறுவது தவறு என்றும் கூறுகிறார்கள்.

''கோவில் பொது இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் எப்போது கட்டப்பட்டது என்பதற்குத் தெளிவான ஆண்டுக் கணக்கு எதுவும் இல்லை. சுமார் 100ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட கோவில்தான். 1978இல் இருந்து அரசின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால், இந்த கோவிலைத் தனியொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. தீண்டாமையை அங்கு கடைப்பிடிக்கக் கூடாது,'' என்று பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

பட்டியல் பிரிவினர் மற்றும் பெண்களை அறங்காவலர் குழுவில் சேர்க்க ஏன் தயக்கம்?

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார், 2021இல் இதே மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்ட கோவில் குறித்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

விழுக்கம் கிராமத்திலிருந்த செல்லியம்மன் கோவில் தற்போது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

''விழுப்புரம் மாவட்டம் மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் உள்ள பல கிராம கோவில்களில், சாதிப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டு தீண்டாமை கொடுமை நடைபெறுகிறதா என தமிழ்நாடு அரசு ஆய்வை மேற்கொள்ளவேண்டும்.

அவ்வப்போது, வெளியில் தெரியும் விவகாரங்களில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதைவிட, கள ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள 43,283 கோவில்களில் வெறும் 780 கோவில்களில்தான் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பிற கோவில்களில் பல ஆண்டுகளாக நியமனம் நடைபெறவில்லை. இந்த நியமனத்தை உடனடியாக நிறைவேற்றி, அந்த குழுவில், சட்டப்படி, ஒரு தலித் மற்றும் ஒரு பெண் உறுப்பினரை நியமித்தால் இதுபோன்ற பிரச்னைகள் எழுவது முடிவுக்கு வரும்.

பட்டியல் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்க ஏன் அரசு தயங்குகிறது? இந்த விவகாரத்தில் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும், வேறு யார் முன்வருவார்கள்?,'' என்கிறார் ரவிக்குமார்.

ரவிக்குமார்
படக்குறிப்பு, ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்

சாதி ரீதியாக தனிக்கோவில் கட்டுவது தனிச்சொத்தா?

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரான ஈ.ஆர்.ஈஸ்வரன் ஒவ்வொரு சமூகத்தினரும் அவர்கள் குல தெய்வத்திற்குத் தனிக்கோவில் கட்டிக்கொண்டு தங்களது கட்டுப்பாட்டில் கோவிலை நடத்துவதில் மற்ற சமூகத்தினர் தலையிடுவது தேவையற்றது என்ற கருத்தை முன்வைக்கிறார்.

''ஒரு சமூகத்தினர், தங்களுக்காகக் கட்டிக்கொள்ளும் தனிக்கோவில் தனிச் சொத்தாக இருப்பதால், அங்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான உரிமையை எதிர்பார்க்க முடியாது.

ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரி வசூலித்து, தங்கள் சொந்தங்களுக்காகக் கோவில் விழா நடத்தினால், அதில் மற்ற சமூகத்தினர் பங்கேற்கலாம், ஆனால் தங்களுக்கும் அதே உரிமை வேண்டும் எனக் கேட்பதில் நியாயம் இல்லை. அது தனிக் கோவில், அது தனிச்சொத்தாகப் பார்க்கப்படவேண்டும்,'' என்கிறார்.

மேலும், குலதெய்வ கோவில்களில், வழிபாடு செய்வதற்கு மற்ற சமூகத்திற்குக் கட்டுப்பாடுகள் இல்லை என்றபோதும், ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கான குலதெய்வத்திற்குத் தனிக்கோவில் கட்டிக்கொள்ளும் முறையில் தவறில்லை என்கிறார்.

''ஒரு சாதியில் பல பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனி குலதெய்வம் இருக்கும். குலதெய்வத்திற்கு அந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் வருவார்கள். ஒரே குலதெய்வத்தை வணங்குபவர்கள் மத்தியில் திருமணம் நடத்தப்படாது.

அவர்கள் சகோதர, சகோதரி உறவில் இருப்பவர்கள் என்று கருதப்படுவார்கள். இதைத் தவிர, தீண்டாமையைக் கடைப்பிடிப்பதற்காக யாரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்வதில்லை.

குலதெய்வ கோவிலாக இருக்கும் கோவில்கள் ஒரு சில நேரம் மிகவும் பிரசித்தி பெற்று, பலரும் வணங்கும் கோவிலாக மாறிவிட்டால், அந்தக் கோவிலுக்குத் தொடர்புள்ள சமூகத்தினருக்கு உள்ள முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது என்பதால்தான் சிக்கல் ஏற்படுகிறது,'' என்கிறார்.

''எந்த வடிவத்தில் கடைபிடித்தாலும் தீண்டாமைதான்''

கோவில்களில் வழிபாடு செய்வது, பொது கோவில் மற்றும் தனிக் கோவில் என்ற வரைமுறைக்கு உட்பட்டதா, ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கென கோவில் கட்டிக்கொள்வதில் சிக்கல் உள்ளதா என்ற தெரிந்துகொள்ள சட்ட வல்லுனரை அணுகினோம்.

தீண்டாமை எந்த வடிவத்தில் கடைப்பிடிக்கப்பட்டாலும் தவறு என்பதால், கோவில் தனிப்பட்ட சொத்தாக இருந்தாலும்கூட, வழிபடும் உரிமைகளை யாரும் மறுக்கக்கூடாது என்கிறார் சமூக செயற்பாட்டாளர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சுதா ராமலிங்கம்.

சுதா ராமலிங்கம்
படக்குறிப்பு, சுதா ராமலிங்கம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அனுமதி மறுக்கப்படுவது மோசமான செயல் என்று விமர்சித்த அவர், ''கோவில் என்பது ஒரு மத ரீதியான நம்பிக்கை கொண்ட மக்கள் வழிபடும் இடம் என்றுதான் பார்க்கவேண்டும். ஒரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள், தங்களுக்கென ஓரிடத்தில் கோவில் கட்டிக்கொண்டாலும், அதில் வழிபடும் உரிமையைச் சாதி ரீதியான காரணங்களைச் சொல்லி மறுக்க முடியாது. குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்களை அனுமதிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தனிக்கோவில் கட்டப்பட்டிருந்தால் அது தீண்டாமைதான்.

அதனால், வழிபடும் உரிமையை மீறுவது என்ற கோணத்திலும், தீண்டாமை எந்த வடிவத்தில் கடைப்பிடிக்கப்பட்டாலும் குற்றம் என்றுதான் அரசமைப்பு சொல்வதையும் வைத்து தனிச் சொத்தாக இருந்தாலும் அங்கும் தீண்டாமை கடைபிடிக்கக்கூடாது என்று சொல்லமுடியும்,'' என்கிறார்.

அதோடு, கோவில் என்ற இடம், வழிபாடு செய்யும் இடம் என்ற அர்த்தத்தில் பார்க்கும்போது, தனிப்பட்ட சொத்தாக இருந்தாலும், சாதியின் பெயரில் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் ஒதுக்கி வைப்பது தீண்டாமைதான் என்று வலுவாகப் பேசுகிறார் சுதா ராமலிங்கம்.

''தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் எனக் குழந்தைகளின் பாடநூலில் முதல் பக்கத்தில் அச்சேற்றுவதைப் பெருமையாகப் பார்க்கிறோம். நம் மனங்களில் சாதி அழுக்கைச் சுமப்பதை மட்டும் ஏன் பெருமையாக நினைக்கிறோம்?'' என்கிறார் சுதா ராமலிங்கம்.

''எல்லோரும் சமம்தானே''

தமிழ்நாட்டில் நிலவிய பல சாதிக் கொடுமைகள் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக, செய்தியாக ஆவணப்படுத்திவரும் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரனிடம் பேசியபோது, கோவில்களில் தீண்டாமைக்குத் துளி அளவும் இடம் தரக்கூடாது ஏன் என்று விளக்குகிறார்.

தமிழ்நாட்டில் பல பிரசித்தி பெற்றுள்ள கோவில்கள் ஒரு காலத்தில் ஒரு சமூகத்திற்கான கோவிலாக இருந்தது என்றாலும், காலப்போக்கில் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன என்பதால், சாதி வேறுபாடுகள் உடைந்து போயின என்கிறார்.

''தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நுழைவதற்கு யாருக்கும் தடை இல்லை. ஒரு காலத்தில் பிராமணர் அல்லாதவர்கள் - தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்குத் தடை இருந்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களில் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்ததால்தான், இன்று எல்லோரும் அங்கு சென்று வருகிறார்கள்.

அதனால், மீண்டும் குறுகிய மனப்பான்மையை வைத்துக்கொண்டு, ஒரு சமூகம்தான் வரவேண்டும், மற்ற சமூகம் வரக்கூடாது என்ற விதத்தில் இயங்குவது ஏற்புடையது அல்ல. தீண்டாமையின் அடிப்படையாக வழிபாட்டுத் தலங்கள் இருந்தால், சாதிப் பிரிவினைகள் இருந்துகொண்டே இருக்கும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலைப்பாட்டிற்கு நம் மாநிலம் சென்றுள்ளது என்பதால், ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கான தனிக் கோவிலாக இருந்தாலும், எல்லோரும் சமம் என்ற நடைமுறை தேவை. அரசமைப்பு சட்டத்தின்படி, எல்லோரும் சமம்தானே,'' என்கிறார் இளங்கோவன் ராஜசேகரன்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிரச்னையை எப்படிக் கையாளுகிறார்?

தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பதிவாகியுள்ள தீண்டாமை பிரச்னை குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் பேசப் பலமுறை முயன்றோம்.

அவர் தீண்டாமை பிரச்னை கோவில்களில் இல்லை என்றும் ஒரு சில சம்பவங்களைக் கொண்டு எந்த முடிவும் செய்ய முடியாது எனவும் பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசும்போது தெரிவித்தார்.

சேகர் பாபு

பட மூலாதாரம், sekar babu

விழுப்புரம் மற்றும் கரூர் கோவில்களில் நடந்த சம்பவங்கள் குறித்தும், மாற்று சமூகத்தினர் சிலர் தங்களுக்கென தனிக் கோவில் கட்டிக்கொள்ளும் நடைமுறையைச் செயல்படுத்துவது குறித்தும் அவரிடம் கேட்டபோது, ''அறநிலையத்துறை கோவில்களில் தீண்டாமை கொடுமை இருந்தால், உடனடியாக உதவிஎண்: 044 – 28339999ல் புகார் தெரிவிக்கலாம்.

விழுப்புரம் மற்றும் கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவங்களில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி எடுத்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்களைப் பெரிய பிரச்னையாக மாற்றிவிடாதீர்கள். இதுகுறித்துக் கேள்வி கேட்காதீர்கள். பொது மக்கள் எங்களுக்குப் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று மட்டும் சொல்லுங்கள்,'' என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: