தருமபுரி ஆதீன விவகாரம்: ஆதீனங்கள் என்றால் என்ன? அவை தோன்றிய வரலாறு என்ன?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், விஷ்ணுப்பிரியா ராஜசேகர்
- பதவி, பிபிசி தமிழ்
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழக செங்கோல் வைக்கப்படுவது குறித்த செய்தியைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக திருவாவடுதுறை ஆதீனம் குறித்து குறித்து நீங்கள் தொடர்ந்து கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஆதீனங்கள் என்றால் என்ன? அவற்றின் வரலாறு என்ன என்பதை எளிமையாக இந்த கட்டுரை விளக்குகிறது.
ஆதீனம் என்றால் என்ன?
சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும், அதை மக்களிடையே பரப்பவும் தோற்றுவிக்கப்பட்ட மடங்களே ஆதீனம் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த மடங்களின் தலைவர்கள் ஆதீனகர்த்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
ஆதீனங்கள் தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன?
"சைவ சித்தாந்தத்தில் இந்த மடங்களை தோற்றுவித்ததற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்த மடங்களின் முக்கிய நோக்கம் சைவ சித்தாந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவது." என்கிறார் சென்னை பல்கலைகழகத்தின் சைவசித்தாந்த துறையின் தலைவர் முனைவர் நல்லூர் சரவணன்.
தமிழ் வளர்ப்பதே ஆதீனங்களின் நோக்கம் என்கிறார் பேராசிரியர் அருணன்.
முதலில் தோன்றிய ஆதீனம் எது?
முதலில் தோன்றிய ஆதீனம் எது என்பது குறித்து வரலாற்று ரீதியாக பல்வேறு கருத்துகள் உள்ளன.
திருவாவடுதுறை ஆதீனம்தான் முதலில் வந்தது அதிலிருந்துதான் தருமபுரம் ஆதீனம் தோன்றியதாக பேராசிரியர், ஆய்வாளர் அருணன் தெரிவிக்கிறார்.
அதன்பின் அந்த தருமபுர ஆதீனத்திலிருந்து வேறு சில ஆதீனங்கள் தோன்றின என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Twitter
ஆனால் மதுரை ஆதீனம்தான் பழமையானது என்கிறார் நல்லூர் சரவணன்.
63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் இந்த மடத்தை தோற்றுவித்ததாக கூறுகிறார்கள் அதற்கு ஆதாரம் இல்லை என்கிறார் அருணன்.
இவர்களுக்கு உள்ள அதிகாரம் என்ன? ஆதீனங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது?
இவர்களுக்கென்று குறிப்பிட்டு எந்த சமூக அதிகாரமும் இல்லை. தமிழ் வளர்க்கும் பணிகளைத்தான் இவர்கள் தொடர்ந்து செய்துவந்தனர் என்கிறார் அருணன்.
இம்மாதிரியாக மடங்களை காப்பதற்காக நிலப்பிரபுக்கள் அல்லது செல்வந்தர்கள் நிலங்களை மடத்தின் பெயரில் எழுதி வைத்தனர்.

பட மூலாதாரம், Arunan/fb
அந்த நிலங்களை குத்தகைக்கு விட்டு அதிலிருந்து மடங்களுக்கு வருவாய் வருகிறது. இந்த வருவாயை சில சைவ கோயில்களை பராமரிக்கவும் தமிழ் வளர்ப்பு பணிகளிலும் இவர்கள் செலவிட்டு வந்தார்கள் என்கிறார் அருணன்.
தமிழ் வளர்ப்புக்கும் ஆதீனங்களுக்கு என்ன தொடர்பு?
திருவாவடுதுறை ஆதீனம் போன்ற ஆதீனங்கள் தமிழ் வளர்ப்பு பணியில் குறிப்பிடத்தக்க பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் தருமபுர ஆதீனம் வட மொழி சார்ந்தே இயங்கி வந்ததாக தெரிவிக்கிறார் நல்லூர் சரவணன்.
திருவாவடுதுறையின் பண்டிதராக இருந்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. பல புராணங்களை எழுதியவராக இருந்தாலும் இவரது சீடராக இருந்தவர்தான் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே. சாமிநாதையர்.
உவே.சா பழந்தமிழ் இலக்கியங்களை பதிப்பித்தார். சமய பாகுபாடின்றி பல நூல்களை இவர் பதிப்பித்தார். இதற்கு சமய வேறுபாடுன்றி தமிழ் இலக்கியங்கள் என்பதால், திருவாவடுதுறை ஆதீனமும் உதவியது என்கிறார் அருணன்.
"சைவம் என்பது தமிழ் மரபு சார்ந்து வர்ணாசிரமத்திற்கு உடன்படாமல் திருஞானசம்பந்தர், காரைக்கால் அம்மையார் தொடங்கி சாதி மறுப்பில் இயங்கிற்று. சாதி மறுப்புதான் சைவ சித்தாந்தக் கொள்கையாக உள்ளது. அதாவது தமிழை முன்னிலைப்படுத்தி சாதி மறுப்பாக தொடங்கப்பட்ட ஒரு சித்தாந்தமும் அதற்காக தொடங்கப்பட்ட மடங்களும் நாளடைவில் சாதிய கட்டமைப்புக்குள் சிக்கி கொண்டன," என்கிறார் நல்லூர் சரவணன்.
"காரைக்கால் அம்மையார், திருஞான சம்பந்தர் தொடங்கிய கோயில்களில் தமிழில் பாடும் வழக்கத்தை மடங்கள் ஆழமாக செயல்படுத்தவில்லை" என்கிறார் நல்லூர் சரவணன்.
பட்டினப் பிரவேசம் என்றால் என்ன?
ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து மடங்களை சுற்றியுள்ள வீதிகளில் வலம் வருவதுதான் பட்டினப் பிரவேசம்.

அந்த காலத்தில் போக்குவரத்து என்பது குதிரையில் செல்வதாக இருந்திருக்கும். ஆனால் எல்லாரோலும் குதிரையை ஓட்டிச் சென்றுவிட முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கான போக்குவரத்தாக பல்லக்கு இருந்திருக்க கூடும் என்கிறார் அருணன்.
திருவாவடுதுறை ஆதீனம் இப்போது பேசுபொருள் ஆவது ஏன்?
1947ஆம் ஆண்டு இந்தியா பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெற்றபோது, பிரிட்டிஷாரிடம் இருந்து ஆட்சி கைமாறியதைக் குறிக்கும் வகையில், சோழர் கால நடைமுறையான 'செங்கோல்' வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை மடாதிபதி அதில் பங்கு வகித்ததாகவும் செங்கோலை மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து பின் அவரே வாங்கிக் கொண்டார் என்றும் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் செங்கோல் குறித்து செய்தியாளர்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து செங்கோல் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் தொடர்பான விஷயங்கள் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகின.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












