கள்ளக்குறிச்சி அருகே 10 ஆண்டுகள் நீடித்த 144 தடை - சாதி மோதலால் முடங்கியிருந்த கிராமத்திற்கு விடிவு காலம்

பாண்டியன்குப்பம்
    • எழுதியவர், மாயகிருஷ்ணன். க
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தொடர்ந்து பத்து ஆண்டுகளாக அரசு, அரசியல் கூட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள் என எந்த விதமான நிகழ்ச்சிகளும் நடைபெறாத இறுக்கமான சூழலில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாண்டியன்குப்பம் கிராமம் தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த கிராமத்தில் 36 முறை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கான காரணம் என்ன? மீண்டும் இந்த கிராமம் சகஜ நிலைக்கு திரும்பியது எப்படி?

52 வயதான செல்லமுத்து, பாண்டியன்குப்பம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வேப்ப மரத்தடியில் நண்பர்களுடன் வழக்கத்தை விட மிக சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார். இவரைப் போல அருகில் இருந்த ராமசாமி, கலியன், தங்கராசு என அனைவரும் மகிழ்ச்சியாக தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். இதற்கு காரணம் மே தினத்தன்று நடைபெற்ற தொழிலாளர் தின சிறப்பு கிராம சபை கூட்டமாகும். "ஒன்று கூடி பல கதைகள் பேசி எவ்வளவு நாட்கள் ஆகிறது" என்று தங்களுக்குள் கருத்துக்களை சந்தோஷமாக பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

நண்பர்களுடான உரையாடலுக்கு இடையில் நம்மிடம் பேசிய செல்லமுத்து, "எனக்கு நன்றாக நினைவிருக்கிறது 2012-ஆம் வருடம் ஜூலை மாதம் 30 ஆம் தேதி அய்யனார், சோலையம்மன் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்றைய தினத்தை நான் மட்டுமல்ல எங்கள் கிராமத்தில் யாருமே மறக்க முடியாது. முதல் நாள் திருவிழா அய்யனாருக்கு நடைபெற்றது. அப்போது நடைபெற்ற தேரோட்டத்தின் போது, ஒரு சமூகத்தினர், தேரை வடம் பிடித்து இழுக்க அவர்களுக்கும் உரிமை உள்ளது என்று தெரிவித்து, அதனால் அவர்களும் தேரை இழுக்கப் போவதாக அறிவித்தனர். ஆனால் அதை மற்றொரு தரப்பினர் ஏற்கவில்லை. இருப்பினும், ஒரு வழியாக அன்றைய விழா அமைதியாக முடிவடைந்தது. அன்று இரவு பாட்டுகச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது பாடிய ஒரு சில பாடல்கள் குறிப்பிட்ட சமூகத்தினரை பாதிப்பதாக ஒரு சிலர் உணர்ந்தனர். இதையடுத்து, அந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த அவர்கள் செருப்பு உள்ளிட்ட பொருட்களை தூக்கி வீசி பிரச்சினை செய்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து பாட்டு கச்சேரியும் நிறுத்தப்பட்டது," என்று அப்போதைய சம்பவத்தை நினைவுக்கூர்ந்தார்.

"10 ஆண்டுகள் தடை நீடித்தது"

தொடர்ந்து பேசிய செல்லமுத்து, "அதற்கு பின்னர், காவல்துறையினர் எங்கள் ஊரில் குவிந்தனர். இரண்டு தரப்பிற்கும் பிரச்னை உருவாகும் சூழல் ஏற்பட்டதால் தடை உத்தரவு போடப்பட்டது. தொடர்ந்து எங்களுக்குள் பகை உணர்வு அதிகரித்துக் கொண்டே வந்தது. இது குறித்து எங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வக்கீல் வைத்தும் வாதாடினோம். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் எங்கள் ஊருக்குள் இரண்டு சமூகத்தவர் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் எதுவும் செய்ய இயலவில்லை. எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு இல்லை. அவர்களும் விடுவதாக இல்லை. தொடர்ந்து அரசு அதிகாரிகள் இரு சமூகத்தினர் இடையேயும் சமாதானத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்கள். பல சமாதான கூட்டங்களும் நடந்தன. நானும் கலந்து கொண்டேன். ஆனாலும் பிரச்னை முடியவில்லை" என்றார்.

இதன் காரணமாக அவர்கள் ஊரில் அரசு, அரசியல் கட்சிகள் சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் என எதுவுமே நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என்று செல்ல முத்து தெரிவித்தார். 2015ல் மீண்டும் பேச்சு வார்த்தை தொடர்ந்தது என்றாலும் அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை என குறிப்பிட்ட அவர், ` வேறு வழியின்றி அரசு அதிகாரிகளும் 144 தடை உத்தரவை தொடர்ந்து நீட்டித்து வந்தனர். இதனால் பத்தாண்டு காலம் தொடர்ச்சியாக எங்கள் ஊரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது," என்றார்.

பாண்டியன்குப்பம்
படக்குறிப்பு, செல்லமுத்து

பின்னர், கிராமம் சகஜ நிலைக்கு எப்படி திரும்பியது என்று செல்லமுத்துவிடம் கேட்டபோது, "உள்ளாட்சி தேர்தலில் எங்கள் ஊரின் ஊராட்சி மன்ற தலைவரை நாங்கள் ஒருமனதாக தேர்வு செய்தோம். அவர் இரண்டு தரப்பினரும் ஒன்றாக இணைந்து ஊர் வளர்ச்சிக்கு உதவிடுமாறு கேட்டுக் கொண்டார். அவரும் சமாதான கூட்டத்திற்கு வந்து பேசினார்.

அன்று பேசிய போது, 'இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர் திருவிழாக்களில் நீங்களும் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்கலாம் என அந்த சமூகத்தினருக்கு தெரிவித்த நிலையில், அதற்கு இன்னொரு தரப்பு சில நிபந்தனைகளை வைத்தது. அதை அவர்களும் ஏற்றுக்கொண்டனர்." என்று சொல்லி முடித்தார்.

பாண்டியன்குப்பம்
படக்குறிப்பு, பொன்னம்மாள்

கூடிப் பேச முடியாது, விழாக்கள் கிடையாது

144 தடை உத்தரவு அமலில் இருந்த காலத்தில் எவ்வித விழாக்கள், கூட்டங்கள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது. தடை உத்தரவு காலாவதியாகி இருந்தாலும், அறிவிக்கப்படாத தடை நீடித்தது என்றே சொல்லலாம். எந்த ஒரு திருவிழாவோ, பொது இடத்தில் கூடிப் பேசுவதோ அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சிகளோ நடைபெறவில்லை.

2015 ஆம் ஆண்டு வரை இருதரப்புக்கும் இடையே சுமூக உறவு ஏற்படாத நிலையில், 144 தடை உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து 30. 11.2022 வரையில் 36 முறை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 முறை சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டும் தீர்வு காணப்படாத நிலையில், இறுதியாக 22. 2.2023 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் கோட்டாட்சியர் பவித்ரா முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் இருதரப்பினரும் ஒருங்கிணைந்து சுமூக உடன்படிக்கைக்கு வந்தனர் . அதை தொடர்ந்து 144 தடை உத்தரவு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டு தொடர்ந்து மே ஒன்றாம் தேதி மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.

பாண்டியன்குப்பம்

அம்மா வீட்டிற்கு சென்றால்தான் திருவிழா பார்க்க முடியும்

செல்லமுத்துவின் அருகில் இருந்த தங்கராசு நம்மிடம் பேசுகையில், "எனது 48 வயதில் நின்ற விழா மீண்டும் நடக்கக்கூடிய சூழல் 10 ஆண்டுகள் கழித்து தற்பொழுது உருவாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது," என்றார். அங்கிருந்து சற்று தூரம் நடக்க தொடங்கினோம். அந்த கிராமத்தைச் சேர்ந்த எழிலரசியும், பரமேஸ்வரியும் தோளில் கை போட்டபடி பேசிக் கொண்டே வந்தனர்.

நம்மிடம் பேசத்தொடங்கிய எழிலரசி, "நான் வரதப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவள். எனது பெற்றோர்கள் இந்த ஊரில் உள்ளவருக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர். எனக்கு திருமணம் ஆனதில் இருந்து 8 ஆண்டுகளாக இந்த ஊரில்தான் வசிக்கிறேன். எந்த விசேஷமும் நடந்ததே இல்லை. என் அம்மாவீட்டிற்கு செல்லும் பொழுது அங்கு நடக்கும் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகளை கண்டு மகிழ்ந்து கொள்வேன்." என்று கூறினார்.

தொடர்ந்து ஊரின் எல்லையில் உள்ள அய்யனார் சோலையம்மன் கோவிலுக்கு சென்றோம். அடர்ந்த மரங்கள் சூழ ஆள் நடமாட்டம் இன்றி அமைதியாக இருந்தது அக்கோவில். ஆடு, மாடுகளை சில பெண்கள் மேய்த்துக் கொண்டிருந்தனர். கையில் நீண்ட தடி வைத்துக் கொண்டிருந்த 72 வயதான பொன்னம்மா கடுமையான வெயிலிலும் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு, அவற்றிற்கு இலை, தழைகளையும் கையில் வைத்திருந்த நீண்ட கொக்கி மூலம் பறித்துப் போட்டுக் கொண்டிருந்தார்.

பாண்டியன்குப்பம்

அவரது வேலையைத் தொடர்ந்து கொண்டே நம்மிடம் பேசிய அவர், "எனக்கு வயதாகிவிட்டது. நான் ஆடு, மாடுகளை மேய்த்து பிழைப்பு நடத்திவருகிறேன். இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானதால் தேரோட்டம் நின்றுவிட்டது. இதனால் எங்களுக்கெல்லாம் வருத்தம் ஏற்பட்டது. தேரோட்ட விழாவை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் ஊரில் தான் தடை உத்தரவு இருந்ததே. அதனால் தேரோட்டத்துக்கான வாய்ப்பு ஏற்படவில்லை. எனவே அருகில் உள்ள திம்மாபுரம், நாககுப்பம் போன்ற கிராமங்களுக்கு சென்று அது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். அப்போதெல்லாம் அந்த ஊர்களில் இருப்பவர்கள் மற்றும் எனது உறவினர்கள் என்னை கேலி செய்வார்கள். உங்கள் ஊரில் ஒற்றுமையாக இருந்து இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவேண்டியது தானே என கேட்பார்கள். அது, எனது கன்னத்தில் அறைந்தது போல் இருக்கும். என்ன செய்வது? நான் எதுவும் பேசமாட்டேன்," என்று வேதனையை வெளிப்படுத்தினார்.

தற்போது, பாண்டியன்குப்பத்தில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை தருவதாக கூறிய அவர், "நான் சாவதற்குள் எங்கள் ஊரில் திருவிழாவை நடத்திட வேண்டும், அதை நான் பார்க்க வேண்டும்," என்று கண்ணீருடன் தமது நியாயமான ஆசையை வெளிப்படுத்தினார்.

மீண்டும் ஊருக்குள் சென்றபோது, குமரேசன் என்பவரை சந்தித்தோம். அவர் நம்மிடம் பேசுகையில், "எங்கள் ஊரில் 5 ஆயிரம் பேர் வசிக்கிறோம். இதில், ஆதிதிராவிடர், அருந்ததியர், வன்னியர் என பலதரப்பட்ட சமூகத்தினரும் உண்டு. நாங்கள் சகோதர உணர்வுடன் தான் பழகி வருகின்றோம், என்ற போதிலும் விரும்பத் தகாத நிகழ்ச்சியாக 2012 தேர் திருவிழா அமைந்துவிட்டது," என்று வேதனையுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், "கோவில் விசேஷங்கள் என்றாலே எங்கள் ஊரில் பிரம்மாண்டமாக இருக்கும். அதை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் எங்கள் ஊருக்கு வருவார்கள். இவ்வளவு சிறப்பான எங்கள் ஊரில் எந்த விழாக்களும் கடந்த பத்தாண்டுகளாக நடக்காதது தான் வருத்தமாக இருந்தது. என்ற போதிலும் எல்லா பிரச்னைக்கும் ஒரு முடிவு உண்டு. அது எங்களுக்கும் நல்ல முடிவாக கிடைத்துள்ளது. நாங்கள் ஒற்றுமையாக சமாதான கூட்டத்தில் பேசி முடித்ததன் விளைவாக தற்பொழுது தடை உத்தரவை நீக்கி உள்ளார்கள். நாங்கள் ஒரு புதிய உலகில் காலடி எடுத்து வைத்த சந்தோஷம் ஏற்பட்டுள்ளது," என்றார்.

பாண்டியன்குப்பம்

இரண்டாவது பஞ்சு மிட்டாய் கிடைக்கவே இல்லை

பாண்டியன்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் கல்லூரி மாணவி வினோதினி கவலையுடன் நம்மிடம் பேசத் தொடங்கினார். "எனக்கு 11 வயதாக இருந்த பொழுது திருவிழா நடந்தது. அன்று எனது அப்பாவுடன் சென்று நான் ராட்டினம் சுத்தினேன். பஞ்சுமிட்டாய் வாங்கி சாப்பிட்டது நன்றாக நினைவில் உள்ளது. அவரிடம் கூடுதலாக ஒன்று கேட்டேன். அவர் அடுத்த திருவிழாவில் வாங்கித் தருவதாக கூறினார். அடுத்த வருடம் வந்தது- ஆனால் திருவிழாதான் நடக்கவே இல்லை. 10 வருடங்கள் எங்கள் ஊரில் விளையாட்டுப் போட்டியோ, வேறு எந்த விதமான கூட்டமோ எதுவும் நடத்தப்படவில்லை. பள்ளி பருவத்தில் இருந்து தற்போது நான் கல்லூரி படிப்பையும் முடித்து விட்டேன். எனக்கு திருமண வயது வந்து விட்டது. இப்பொழுது திருவிழா வந்தால், குழந்தைகளைப் போல் கொண்டாடி மகிழ வேண்டும் என்ற எண்ணமே எனக்கு வரவில்லை. அதே நேரத்தில் வரும் தலைமுறையாவது சந்தோஷத்துடன் இருக்கட்டும்," என்றார்.

வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளால் மறக்க முடியாத சம்பவம்

2012-ல் பாண்டியன்குப்பம் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தவர் ராஜவேலு. இவர் தற்பொழுது தனது சொந்த ஊரான சின்னசேலத்தில் வசித்து வருகின்றார். ராஜவேலு நம்மிடம் பேசியபோது, தான் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் பாண்டியன்குப்பம் கிராம நிகழ்ச்சியை தன்னால் மறக்க முடியாது என்று கூறி அந்த சம்பவத்தை விவரித்தார்.

" 2012 ஆம் ஆண்டு பாண்டியன்குப்பம் கிராம மக்கள் தேர்விழா நடத்த முடிவு செய்து அந்த விழாவை நடத்திய போது தான் இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதை தடுப்பதற்காக தடை உத்தரவும் போடப்பட்டது. உடனடியாக இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களும் நீதிமன்றம் சென்றதால் பாண்டியன் குப்பம் கிராமம் பல மாதங்கள் காவல்துறையின் பார்வையிலேயே இருந்தது. பாண்டியங்குப்பம் கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தபோது தொடங்கிய பிரச்சினை கள்ளக்குறிச்சி மாவட்டமாக மாறியபின் முடிவுக்கு வந்துள்ளது," என்றார்.

இதை தொடர்ந்து பாண்டியன்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றோம். ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சண்முகம், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் அனைவருடனும் இணக்கமாக இருப்பதால் இரண்டு தரப்பினரும் சேர்ந்து இவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

நம்மிடம் பேசிய சண்முகம், "மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென்றால், ஊராட்சி மன்ற கூட்டங்களை நடத்தவேண்டும். அப்போது தான் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களை நிறைவேற்ற முடியும். அவற்றை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி திட்டங்களை செயல்படுத்த முடியும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து இருதரப்பு மக்களையும் வரவழைத்து பேசினோம். இதனால் தற்பொழுது பிரச்னை சுமூகமாக முடிவடைந்து விட்டது. 11 ஆண்டுகளுக்கு பிறகு மே தின கிராம சபை கூட்டத்தையும் மிகச் சிறப்பாக நடத்தினோம்," என்று கூறினார்.

பாண்டியன்குப்பம்

பிரச்சனை சுமூகமாக முடிவடைந்தது மகிழ்ச்சியை தருவதாக வீட்டு வரி செலுத்துவதற்காக ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்திருந்த சங்கீதா நம்மிடம் கூறினார். "இனி எங்கள் ஊரில் விழாக்கள் நடைபெற்றால் பிற ஊர்களில் உள்ள உறவினர்கள் உட்பட அனைவரும் வந்து செல்வார்கள்." என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

10 வயதாக இருந்த போது திருவிழாவில் உறவினர்களுடன் விளையாடியது தற்போது நினைவில் இருப்பதாக கூறுகிறார் கவியரசு. தற்போது ஐ.டி.ஐ. படிப்பு முடித்துவிட்டு வீட்டிலிருந்து வேலை செய்துவருகிறார் அவர். நம்மிடம் பேசிய கவியரசு, " இனிமேலாவது மாணவர்கள் சந்தோஷமாக விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பது எனது ஆசை," என்றார்.

சக்திவேல் என்பவரிடம் பேசிய போது, "திருவிழா நின்றபோது எனக்கு வயது 28. எங்களுக்குள் எப்பொழுதுமே அடிதடி சண்டை வந்ததில்லை. நாங்கள் ஊருக்குள் மாமன், மச்சான் அண்ணன், தம்பி என்று உறவு வைத்துக் கொண்டுதான் அழைத்துக் கொள்கிறோம். ஆனாலும் இரண்டு சமூகத்திற்கு இடையே உள்ள ஈகோ 144 தடை உத்தரவு நீட்டிக்க காரணமாக அமைந்துவிட்டது." என்றார்.

பாண்டியன்குப்பம்
படக்குறிப்பு, மோகன்ராஜ்- கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி

கடந்த மே 1ஆம் தேதி நடைபெற்ற மே தின கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற சின்னசேலம் ஒன்றிய குழு துணை தலைவர் அன்பு மணிமாறன் நம்மிடம் இது தொடர்பாக பேசியபோது, "இரண்டு தரப்பு மக்களிடமும் நானும் பலமுறை பேசி இருக்கின்றேன். ஒற்றுமையாக இருக்கின்றோம் என்று கூறினார்கள். இறுதியாக சமாதான கூட்டத்திற்கு சென்று வந்த பொழுதும் மக்கள் என்னை சந்தித்தனர். அனைவர் முகத்திலும் அளவு கடந்த சந்தோஷம். எனக்கும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது," என்று உற்சாகத்துடன் கூறினார்.

8-முறை சமாதான கூட்டம், 36 முறை 144 தடை உத்தரவு நீட்டிப்பு

பாண்டியன்குப்பம் கிராம பிரச்சனை குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "144 தடை உத்தரவின் கீழ் இருந்த பகுதிகளில் கூட்டமாக செல்வது, கூட்டம் கூடி பேசுவது, அரசியல் சார்ந்த கூட்டங்களை நடத்துவது, வேறு ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துவது என பெரும்பாலான செயல்களுக்கு தடைகள் இருந்தன. இந்நிலையில் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணைப்படி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை முன்னிலையில் முக்கிய பிரமுகர்களை அழைத்து மீண்டும் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. அதில் இரண்டு தரப்பினரும் ஒற்றுமையாக இருந்து ஊர் வளர்ச்சியை மேம்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது" என்று கூறினார்.

பாண்டியன்குப்பம்
படக்குறிப்பு, ஸ்ரவன்குமார் - கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்

ஒற்றுமையாக இருந்தால் கிராமம் வளர்ச்சி பெறும்

பாண்டியன்குப்பம் கிராமத்தின் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தது எப்படி என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன்குமாரிடம் நாம் கேட்டோம். அப்போது அவர், "அனைத்து கிராமங்களிலும் மே தின கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பது தமிழக அரசின் ஆணை. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எந்தெந்த கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்று வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டிருந்தோம். அவர்கள் பாண்டியன்குப்பம் கிராமத்தைப் பற்றி கூறினார்கள். உடனடியாக அங்கு என்ன பிரச்சனை என்பதை அதிகாரிகளிடம் கேட்டு அந்த ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து உடனடியாக மீண்டும் சமாதான கூட்டம் நடத்திட உத்திரவிடப்பட்டது.

அதன்படி அப்பகுதி முக்கியஸ்தர்கள், ஊராட்சி மன்ற தலைவர் அனைவரும் சமாதான கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்பொழுது கிராம வளர்ச்சியில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. கிராமங்கள் முன்னேற வேண்டுமானால் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும் என்று கூறினேன் அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இருதரப்பினரும், அவர்களுக்குள் சந்தோஷத்துடன் கைகுலுக்கி கொண்டனர். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் 'நாங்கள் விழாக்களையும் நடத்திக் கொள்வோம்' என்றனர். இதையடுத்து 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. கிராமசபை கூட்டமும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது," என்றார்.

தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி கிடந்த பாண்டியன்குப்பத்தில் தற்பொழுது தடைகள் நீங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: