இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை உலகளாவிய உணவு நெருக்கடிக்கு வழி வகுத்துவிட்டதா?

பட மூலாதாரம், AFP
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
உலகமெங்கும் பல கோடி மக்களின் அன்றாடத் தேவையாக அரிசி விளங்குகிறது.
அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் அரிசியின் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடை, அது கோடிக்கணக்கான மக்களிடையே என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?
இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
உள்நாட்டில் உயர்ந்து வரும் அரிசியின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாஸ்மதி அல்லாத வெள்ளை ரக அரிசி ஏற்றுமதிக்கு கடந்த மாதம் இந்தியா தடை விதித்தது.
இந்தத் தடையால் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வாழும் பொது மக்கள் பீதியடைந்து, அங்குள்ள மளிகைக் கடைகளில் அரிசி வாங்கக் குவிந்தனர்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமீபத்தில் வைரலாக, வெளிநாடுகளில் அரிசியின் விலை அதிரடியாக ஏற்றம் கண்டு வருகிறது.
ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் இந்தியாவில் பயிரிடப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் பாஸ்மதி, இண்டிகா, ஜபோனிகா உள்ளிட்ட நான்கு ரகங்கள் தான் உலக அளவிலான அரிசி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றில் குறிப்பாக இண்டிகா ரக அரிசி உலக சந்தையில் பெரும் பங்கு வகிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
உலகளாவிய அரிசி சந்தையில் டான்
அரிசி ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம் பங்களிப்புடன் உலக சந்தையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இதன் ஏற்றுமதியில் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.
சீனா, பிலிப்பைன்ஸ் , நைஜீரியா ஆகியவை அரிசி இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளாகத் திகழ்கின்றன. இந்தோனீசியா, வங்கதேசம் போன்ற நாடுகள், உள்நாட்டு சந்தையில் பற்றாக்குறை ஏற்படும்போது மட்டும் அரிசியை இறக்குமதி செய்யும் நடைமுறையைக் கொண்டுள்ளன.
ஆப்பிரிக்காவில் அரிசி நுகர்வு அதிகரித்து வருகிறது. கியூபா, பனாமா போன்ற நாடுகளில் அரிசி முக்கிய உணவுப் பொருளாக இருந்து வருகிறது.
உலக அளவிலான அரிசி ஏற்றுமதி 56 மில்லியன் டன்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு இந்தியா மட்டும் 140 நாடுகளுக்கு 22 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்திருக்கிறது. இதில் ஆறு மில்லியன் டன் அரிசி, ஒப்பீட்டளவில் மலிவான இண்டிகா ரக அரிசியாகும்.
அதாவது, உலக அரிசி சந்தையில் சுமார் 70 சதவீதம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இண்டிகா ரக அரிசி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வகை அரிசி ரகங்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தற்போது தடை விதித்துள்ளது.
முன்னதாக, உடைக்கப்பட்ட அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு இந்தியா தடை விதித்தது மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளுக்கு 20 சதவீதம் வரியும் விதித்தது.
சர்வதேச நாணய நிதியம் அச்சம்

பட மூலாதாரம், Getty Images
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தற்போது விதித்துள்ள தடையின் விளைவாக, சர்வதேச சந்தையில் அதன் விலை அதிரடியாக உயரக் கூடும் என்ற அச்சம் பல்வேறு தரப்பினர் மத்தியில் ஏற்பட்டுள்ளதில் வியப்பேதும் இல்லை.
‘அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையால், உலக நாடுகளில் தானியங்களின் விலை இந்த ஆண்டு 15 சதவீதம் வரை உயரக்கூடும்’ என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணரான Pierre-Olivier Gourinchas அண்மையில் அச்சம் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்தியாவின் இந்தத் தடை குறிப்பாக சாதகமான நேரத்தில் வரவில்லை என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் சந்தை ஆய்வாளரான ஷெர்லி முஸ்தபா கூறியுள்ளார்.
அரிசி விலை ஏற்றம் கண்டதற்கான காரணங்கள்

பட மூலாதாரம், AFP
சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சீராக உயர்ந்து வந்த அரிசியின் விலை, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 14 சதவீதம் அளவுக்கு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் பெய்து வரும் சீரற்ற பருவமழை, பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, தெற்காசியாவில் நிலவி வரும் சமச்சீரற்ற பருவநிலை உள்ளிட்டவையால், சர்வதேச சந்தையில் அரிசி விநியோகம் பாதித்துள்ளது. அத்துடன், உரங்களின் விலை உயர்வு நெல் சாகுபடிக்கான செலவை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பல நாடுகளில் அரிசிக்கான இறக்குமதி செலவை அதிகரிக்க வழிவகுத்தது. அதேநேரம் பணவீக்கம் அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் அரிசி வர்த்தகத்தின் செலவை உயர்த்தி உள்ளது.
“அரிசி இறக்குமதியாளர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இதன் விளைவாக அரிசியின் விலை மேலும் அதிகரித்தால் அதை சர்வதேச நுகர்வோர் சமாளிப்பார்களா என்பதைப் பார்க்க வேண்டும்,” என்கிறார் சந்தை ஆய்வாளரான முஸ்தபா.
அரிசியில் உள்ள அரசியல்

பட மூலாதாரம், Getty Images
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தானிய சேமிப்புக் கிடங்குகளில், சுமார் 41 மில்லியன் டன் அரிசியை இந்தியா கையிருப்பில் வைத்துள்ளது. இது அதன் தேவையைவிட (Buffer Requirement) மூன்று மடங்கு அதிக அளவாகும்.
அத்துடன் பொது விநியோக திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் சுமார் 700 மில்லியன் ஏழை மக்களுக்கு அரிசியை மாதந்தோறும் இந்தியா விநியோகம் செய்து வருகிறது.
இருப்பினும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தியா உணவுப் பொருள் விலையேற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இதன் விளைவாக கடந்த ஆண்டு அக்டோபர் முதல், உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலை 30 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளன.
இந்நிலையில், பொதுமக்களின் முக்கிய அத்தியாவசியத் தேவையான அரிசியின் விலை ஏற்றம் இந்திய அரசின் மீது அரசியல்ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதுடன், அதைச் சமாளிப்பதும் அரசுக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தடைக்கான காரணங்கள்

பட மூலாதாரம், Getty Images
“பாஸ்மதி அல்லாத அரிசி ரகங்களின் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடை, அனேகமாக உள்நாட்டு சந்தையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கலாம்.
அத்துடன் இந்த நடவடிக்கை தற்காலிமானதாக இருக்கும் என்றே தெரிகிறது,” என்கிறார் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஜோசப் கிளாபர்.
எல் நினோ காலநிலை மாற்றம், நெல் அதிகம் பயிரிடப்படும் நாட்டின் தென் பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாக இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் அரிசி உற்பத்தி பற்றாக்குறையை சமாளிப்பதற்கான முயற்சிகளை அரசு முன்னெடுத்துள்ளது என்கிறார் இந்தியாவைச் சேர்ந்த விவசாயக் கொள்கை வல்லுநரான தேவிந்தர் ஷர்மா.
தடையை நீக்க வேண்டியதன் அவசியம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
உலக உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள அரிசி ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்பதே பல தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஏனெனில், சுமார் 42 நாடுகளின் மொத்த அரிசி இறக்குமதியில் 50 சதவீதத்துக்கு மேல் இந்தியாவின் பங்கு இருக்கிறது. மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் செய்யப்பட்டு வரும் அரிசி இறக்குமதியில் இந்தியாவின் சந்தைப் பங்கு 80 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாகக் கூறுகிறது சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்.
வங்கதேசம், பூட்டான், கம்போடியா, இந்தோனீசியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய ஆசிய நாடுகளில் அரிசி நுகர்வு அதிகமாக உள்ளது. இந்த நாடுகளில் பொதுமக்கள் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவு வகைகளில் இருந்து கிடைக்கும் மொத்த கலோரி மதிப்பில் அரிசியின் பங்கு மட்டும் 40 முதல் 67 சதவீதம் வரை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
“அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை சாமானிய மக்களை மிகவும் பாதிக்கிறது. ஏனென்றால் அவர்கள் தங்களின் வருமானத்தில் பெரும் பகுதியை உணவுப் பொருட்கள், தானியங்களை வாங்குவதற்காகச் செலவிடுகின்றனர்,” என்கிறார் முஸ்தபா.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைக்கவோ ஊட்டச்சத்து இல்லாத வேறு உணவு வகைகளுக்கு மாறவோ, உணவு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகளைக் குறைக்க வேண்டிய நிலைக்கோ பொதுமக்கள் தள்ளப்படலாம் என்றும் கூறுகிறார் அவர்.
தடை புதிதல்ல
அதேநேரம், உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல என்கிறது சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்.
கடந்த ஆண்டு யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்குப் பிறகு, உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளின் எண்ணிக்கை மூன்றில் இருந்து 16 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனீசியா பாமாயில் ஏற்றுமதிக்கும், அர்ஜென்டினா மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் தடை விதித்துள்ளன. இதேபோன்று துருக்கி மற்றும் கிர்கிஸ்தான் பல தானியங்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்திருந்தன.
கொரோனா தொற்று காலத்தில், முதல் நான்கு வாரங்களில், 21 நாடுகள் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதிக்க்ஹக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தன என்று இந்தத் தடைக்கான சமீபத்திய சான்றுகளை கோடிட்டுக் காட்டுகிறது சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்.
இந்தியாவை எச்சரிக்கும் நிபுணர்கள்
ஆனால், அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடை அதிக ஆபத்துகளை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, “இந்தத் தடையின் விளைவாக, சர்வதேச சந்தையில் வெள்ளை அரிசியின் விலை நிச்சயம் உயரும். அத்துடன், இந்தியாவின் இந்தத் தடை நடவடிக்கை, பல ஆப்பிரிக்க நாடுகளின் உணவுப் பாதுகாப்பை மோசமாக பாதிக்கும்,” என்று எச்சரிக்கின்றனர் டெல்லியை சேர்ந்த சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் அசோக் குலாட்டி மற்றும் ராயா தாஸ்.
“ஜி20 நாடுகளின் மாநாட்டை நடத்தும் பொறுப்பை இந்தியா பெற்றுள்ள நிலையில், அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது போன்ற திடீர் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
இல்லையெனில், அரிசி ஏற்றுமதியில் நம்பகத்தன்மையற்ற நாடாக இந்தியா கருதப்படும் நிலை ஏற்படலாம்,” என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












