கனடா பிரதமர் விவாகரத்து: ஜஸ்டின் ட்ரூடோ - சோஃபி 18 ஆண்டு மண வாழ்க்கை முறிந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் திருமணம் 18 ஆண்டுகளுக்கு பிறகு முறிவு
    • எழுதியவர், ஜெஸ்ஸிக்கா மர்ஃபி
    • பதவி, பிபிசி நியூஸ், டொரோண்டோ

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபியும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துள்ளனர். கடினமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் "ஆழ்ந்த அன்பும் மரியாதையும் கொண்ட நெருக்கமான குடும்பமாக" இருப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

2005-ஆம் ஆண்டு மாண்ட்ரீல் நகரில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஜஸ்டின் ட்ரூடோ விவாகரத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருமண முறிவு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டிருந்தாலும், இருவரும் இணைந்து பொதுவெளியில் தோன்றுவார்கள்

திருமண முறிவு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டிருந்தாலும், இருவரும் இணைந்து பொதுவெளியில் தோன்றுவார்கள் என்று ஜஸ்டின் ட்ரூடோவின் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"அவர்கள் திருமண முறிவு தொடர்பான அனைத்து சட்ட மற்றும் நெறிமுறை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய அவர்கள் முயன்றிருக்கிறார்கள். தொடர்ந்து அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அவர்கள் குடும்பமாக விடுமுறையைக் கழிப்பார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஜஸ்டின் ட்ரூடோ விவாகரத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமீப ஆண்டுகளில் சோஃபியும் ஜஸ்டின் ட்ரூடோவும் பொதுவெளியில் அதிகமாக சேர்ந்து காணப்படவில்லை.

15 வயதான சேவியர், 14 வயதான எல்லா-கிரேஸ், 9 வயதான ஹாட்ரியன் ஆகிய தங்களது 3 குழந்தைகளையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ட்ரூடோ தம்பதி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

"நாங்கள் இதுவரை கட்டியெழுப்பி குடும்பத்துக்காக ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பும் மரியாதையும் கொண்ட ஒரு நெருக்கமான குடும்பமாகவே இருக்கிறோம்.” என்று சோஃபியும், ஜஸ்டின் ட்ரூடோவும் கூறியுள்ளனர்.

சமீப ஆண்டுகளில் சோஃபியும் ஜஸ்டின் ட்ரூடோவும் பொதுவெளியில் அதிகமாக சேர்ந்து காணப்படவில்லை. இருப்பினும் அவர்கள் மே மாதம் அரசர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் ஒன்றாக கலந்து கொண்டனர். மார்ச் மாதம் கனடாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இருவரும் இணைந்து விருந்தளித்தனர்.

ட்ரூடோ தம்பதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தங்களது 3 குழந்தைகளையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ட்ரூடோ தம்பதி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ட்ரூடோ 2015 இல் முதன்முதலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, வோக் இதழுக்கு இருவரும் பேட்டியளித்தனர். அப்போது பேசிய சோஃபி "எனக்கு 31 வயதாகிறது, உங்களுக்காக 31 வருடங்களாக காத்திருக்கிறேன்" என்று தனது முதல் டேட்டின் போது கூறியதாகத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு திருமண நாளுக்காக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சோஃபி ட்ரூடோ, நீண்ட கால உறவுகளின் இருந்த சவால்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். "கொதிக்கும் நாள்கள், புயல் வீசிய நாள்கள் என அனைத்தையும் நாங்கள் கடந்து வந்துள்ளோம்" என்று அதில் பதிவிட்டிருந்தார்.

ஜஸ்டின் ட்ரூடோ விவாகரத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இருவரும் 2003 இல் டேட்டிங் செய்யத் தொடங்கினர், சோஃபி ஒரு தொலைக்காட்சி நட்சத்திரமாக இருந்தார்.

ஜஸ்டின் ட்ரூடோவும் திருமணத்தில் உள்ள சவால்கள் குறித்து தனது 2014 ஆம் ஆண்டு சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

"எங்கள் திருமணம் கச்சிதமானது அல்ல. ஏற்ற தாழ்வுகள் இருந்தன. இருப்பினும் சோஃபி எனது சிறந்த தோழியாக, என் துணையாக, என் அன்பாக இருக்கிறார். புண்படுத்தினாலும்கூட நாங்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்கிறோம்" என்று அவர் கூறியிருந்தார்.

இருவரும் 2003 இல் டேட்டிங் செய்யத் தொடங்கினர், சோஃபி ஒரு தொலைக்காட்சி நட்சத்திரமாக இருந்தார். மனநலம்,உணவுக் கோளாறுகள் தொடர்பான தன்னார்வாப் பணிகளுக்காகவும் அவர் அறியப்படுகிறார்.

திருமண முறிவை பதவியில் இருக்கும்போது அறிவித்த இரண்டாவது கனடா பிரதமர் ட்ரோடோ. அவரது தந்தை மறைந்த பிரதமர் பியர் எலியட் ட்ரூடோ, தாயார் மார்கரெட் ட்ரூடோ ஆகியோர் 1977 இல் தங்களது திருமண முறிவை அறிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: