தமிழ்நாட்டின் கடன் சுமை ஆபத்தான அளவை எட்டியுள்ளதா? நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

தமிழ்நாடு கடன் சுமை
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

நாட்டிலேயே தமிழ்நாடுதான் அதிக கடன் சுமை கொண்ட மாநிலம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்த போது இதனை தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு?

தமிழ்நாட்டுக்கு கடந்த மார்ச் மாதம் வரை 7 லட்சத்து 53 ஆயிரத்து 860 கோடி ரூபாய் கடன் உள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் 7.1 லட்சம் கோடி ரூபாய் கடனுடன் இரண்டாம் இடத்திலும் மகாராஷ்ட்ரா 6.8 லட்சம் கோடி ரூபாய் கடனுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

மாநிலங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஏற்கெனவே உள்ள கடனை அடைப்பதற்காகவும், புதிய திட்டங்கள் அறிவிப்பதற்காகவும் கடன் வாங்கும். மாநில அரசு மத்திய அரசிடமிருந்தும் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளிடமிருந்தும் கடன் வாங்கும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டிற்கு அதிக கடன் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஆரோக்கியமான பொருளாதாரத்துக்கான குறியீடுகள் என்ன?

வாங்கும் கடனுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் இடையில் தேவையான சமநிலை நீடிக்கிறதா என்பதை கடன் – வளர்ச்சி சதவீதம் (Debt-GDP ratio) குறிக்கும். இது ஒரு குறிப்பிட்ட சதவீதத்துக்கு மிகாமல் இருப்பது பொருளாதாரத்துக்கு அவசியம்.

தமிழ்நாட்டில் கடன் – வளர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் 32% ஆக இருந்த கடன் – வளர்ச்சி சதவீதம், இந்த நிதியாண்டில் 25.63% ஆக குறைந்துள்ளது. கடன் – வளர்ச்சி சதவீதம் 29.19% க்குள் இருக்க வேண்டும் என 16வது நிதி ஆணையம் கூறுகிறது.

நிதி பற்றாக்குறை சதவீதம் என்பது மாநிலத்தின் ஒட்டு மொத்த வருமானத்துக்கும் ஒட்டு மொத்த செலவுகளுக்கும் இடையிலான வித்தியாசம் ஆகும். உதாரணமாக ஒரு குடும்பத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் வருமானம், 35 ஆயிரம் செலவு என்றால் அந்த குடும்பத்துக்கான நிதி பற்றாக்குறை ரூ.5 ஆயிரம். தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை கடந்த ஆண்டு 3.8 % ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இது 3.25% ஆக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டின் அதிக கடன் சுமை - கவலை தரக் கூடியதா?

சுரேஷ் பாபு, பொருளாதார பேராசிரியர், சென்னை ஐஐடி
படக்குறிப்பு, தமிழகத்தின் பொருளாதார சூழல் ஆபத்தானதாக இல்லை என சென்னை ஐஐடி-யின் பொருளாதார பேராசிரியர் சுரேஷ் பாபு தெரிவிக்கிறார்.

இந்தியாவிலேயே அதிக கடன் பெற்றிருப்பதால் தமிழ்நாடு கவலைக் கொள்ள வேண்டியுள்ளதா? தமிழ்நாட்டில் எந்த அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்? என்று சென்னை ஐ ஐ டி-யின் பொருளாதார பேராசிரியர் சுரேஷ் பாபு பிபிசி தமிழிடம் விளக்கி பேசினார்.

நாட்டிலேயே அதிக கடன் வாங்கியிருக்கும் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளதா?

தமிழ்நாட்டின் பொருளாதாரம் மோசமாக இல்லை, மாநிலத்தின் சொந்த வருவாய்கள் மோசமாக இல்லை. வாங்கப்படும் கடன், சலுகைகளுக்கு மட்டுமே செலவிடப்படுவது இல்லை. எனவே தற்போது தமிழ்நாட்டில் அபாயகரமான சூழல் இல்லை. மாநிலத்தின் கடன் அதிகமாக இருந்தாலும் முதலீடுகள் வந்தால் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கும். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளும் வந்து கொண்டிருக்கின்றன.

 கடன் – வளர்ச்சி சதவீத குறியீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிதி பற்றாக்குறை சதவீதம் என்பது மாநிலத்தின் ஒட்டு மொத்த வருமானத்துக்கும் ஒட்டு மொத்த செலவுகளுக்கும் இடையிலான வித்தியாசம் ஆகும்.

தொடர்ந்து அதிக கடன் வாங்கினால் என்னவாகும்?

தற்போது தமிழ்நாடு ஆபத்தான நிலையில் இல்லை என்றாலும், கடன் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றால் மாநிலம் கடன் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் இப்போதே எடுக்க வேண்டும்.

அப்படி என்றால், கடன் வாங்குவது மாநிலத்துக்கு கேடா?

வாங்கும் கடனை மாநிலத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பயன்படுத்தி, மாநிலத்துக்கான சொந்த வருமானத்தை கூடுதலாக ஈட்டி, கடனை திரும்ப செலுத்துவதற்கான சக்தியையும் கொண்டிருந்தால் , கடன் வாங்குவது மாநிலத்துக்கு பாதகமில்லை. கடனுக்கும் வளர்ச்சிக்கும் சதவீதத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

ஒடிசா மாநிலம் கடந்த மூன்று ஆண்டுகளாக தனது கடனை குறைத்துக் கொண்டு வருகிறது. இதன் அர்த்தம் ஒடிசாவின் பொருளாதாரம் திறம்பட நிர்வகிக்கப்படுகிறது என்பதா?

தமிழ்நாட்டையும் ஒடிசாவையும் அப்படி ஒப்பிட முடியாது. ஒரு மாநிலத்துக்கான செலவு செய்யும் திறன் எவ்வளவு என்பதையும் பார்க்க வேண்டும். ஒடிசாவின் செலவு செய்யும் திறன் குறைவு. தமிழ்நாட்டில் அதிக அரசு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. கடன் வாங்காமலே இருந்தால் செலவும் செய்யாமல் இருக்கலாம். செலவு செய்யாமலே இருந்தால் எந்த புதிய திட்டங்களும் அமலாகாது.

தமிழ்நாட்டின் 2023-24ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு 1.43 லட்சம் கோடி கடன் வாங்கப் போவதாகவும் அதில் 51ஆயிரம் கோடியை வாங்கிய கடனை திரும்ப செலுத்த பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இது சரியான பொருளாதார நடைமுறையா?

தமிழ்நாடு வரும் 2024, 2025ம் ஆண்டுகளில் அடைக்க வேண்டிய கடன்கள் நிறைய உள்ளன. அவற்றை அடைக்காவிட்டால் தீவிர பொருளாதார சிக்கல்கள் ஏற்படும். எனவே அவற்றை அடைப்பது அவசியம். ஆனால், கடன் வாங்கி ஏற்கெனவே உள்ள கடனை அடைப்பது ஆரோக்கியமான நடைமுறை இல்லை. இதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும். அதற்கு மாநிலத்தின் சொந்த வருவாயை அதிகரிக்க வேண்டும்.

நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் 2023-24ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு 1,43 லட்சம் கோடி கடன் வாங்கப் போவதாக தெரிவித்திருந்தார்

தமிழ்நாடு எந்த அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்?

ஜி எஸ் டி அறிமுகப்படுத்திய பிறகு, மாநிலங்களுக்கான சொந்த வருவாய் ஈட்டக் கூடிய வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது. மதுபானங்கள், பெட்ரோல், தங்கம் ஆகியவை மட்டுமே மாநிலக் கட்டுப்பாட்டில் உள்ளன. எனினும் மாநிலத்துக்கான வருவாயை அதிகரிக்க வழிகள் கண்டறிய வேண்டும்.

உதாரணமாக தமிழ்நாடு மின்சாரத்துறையில் சில சீர்திருத்தங்கள் கொண்டு வந்து வருவாயை அதிகரிக்க முடியும். தங்கத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டில், அதன் மூலம் வருவாய் எப்படி அதிகரிப்பது என அரசு ஆலோசிக்க வேண்டும்.

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ஜி எஸ் டி வரி பாக்கியால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என 2023-24 நிதிநிலை அறிக்கை கூறுகிறது. இது தமிழ்நாட்டின் கடன் சுமையை அதிகரிக்காதா?

மத்திய அரசு தர வேண்டிய தொகை நிலுவையில் இருப்பது உண்மை தான். ஆனால் அந்த தொகை உடனே மாநிலத்துக்கு கிடைக்கப் போவது இல்லை. எனவே அதை நம்பி இருக்காமல் சொந்த வருவாயை அதிகரிக்க வழிகள் தேட வேண்டும்.

கடன் சுமையை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

நாம் இப்போது சரி செய்யவில்லை என்றால், எதிர்கால தலைமுறையினர் இந்த பாதிப்பை தீவிரமாக எதிர்கொள்ள நேரிடும். எனவே இப்போதே சில சீர்திருத்தங்களை அமல்படுத்தினால் நிலைமை சீராக இருக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: