மேற்கு வங்கத்தில் 2 பெண்களின் ஆடைகளை களைந்து சரமாரி தாக்குதல் - சந்தையில் நடந்தது என்ன?

- எழுதியவர், அமிதாப் பட்டாசாலி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- இருந்து, கொல்கத்தா
மணிப்பூர் பெண்கள் பற்றிய வீடியோ வெளியான பிறகு, நாடே அதிர்ச்சியில் உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங்களில் மற்றொரு தர்மசங்கடமான வீடியோ வைரலாகியது. இந்த வீடியோ மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தின் பகுவாத் பகுதியிலிருந்து வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில், பகுவாத் பகுதியில் உள்ள வாரச்சந்தையில் இரண்டு பெண்கள் ஆடைகள் அகற்றப்பட்டு அடித்து துன்புறுத்தப்படுகின்றனர்.
உள்ளூர் காவல்துறையினர் இந்த சம்பவம் ஜூலை 18ம் தேதி நடைபெற்றதாக தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ வைரலான பிறகு ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரம், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு பெண்களும் சம்பவம் நடந்த தினத்தன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண்கள் இருவரும் பழைய வழக்குகள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி கே யாதவ், அந்த பெண்கள் கைது செய்யப்பட்டது குறித்து விசாரித்து வருவதாக கூறினார்.
வைரலான காணொளி
வைரலான அந்த வீடியோவில், இரண்டு பெண்களை பொதுமக்கள் கூட்டம் அடிப்பதை காண முடிகிறது. இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொள்கின்றனர். அதே நேரம் அவர்களின் ஆடை நீங்காமல் இருக்கவும் முயல்கின்றனர். அவர்கள் அங்கு கூடியிருப்பவர்களிடம் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சுகின்றனர்.
ஊர் காவல் படையை சேர்ந்த ஒரு பெண் அவர்களை காப்பாற்ற முயல்வதை வீடியோவில் காண முடிகிறது. மாநில காவல்துறைக்கு உதவியாக பணி புரிய மாத சம்பளத்துக்கு ஊர்காவல் படையினர் நியமிக்கப்படுகின்றனர்.
ஆனால் கூட்டத்தின் முன் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த பெண்களை கூட்டத்தினர் அடித்து துன்புறுத்தும் போது அவர்களின் ஆடைகளும் அகற்றப்பட்டன. அவர்கள் நிர்வாணமான பிறகும், அந்த கும்பல் அவர்களை தொடர்ந்து தாக்கியது. சிறிது நேரத்தில் இரண்டு பெண்களும் கையறு நிலையாக கூட்டத்தின் முன் நின்றனர்.
மஞ்சள் சுடிதார் அணிந்த பெண் கூட்டத்தை வழி நடத்தி செல்கிறார். ஒரு வயதான பெண்ணும் கூட அவர்களை தாக்குவதை காண முடிகிறது. பல பெண்கள் கையில் காலணிகள் கொண்டிருந்தனர். பலர் அவர்களை தாக்கினர்.

பட மூலாதாரம், Getty Images
பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டது ஏன்?
இந்த சம்பவத்தை நூற்றுக்கணக்கானோர் வேடிக்கைப் பார்க்கிறார்கள். பலர் தங்கள் கைப்பேசியில் வீடியோ எடுக்கிறார்கள்.
சில ஆண்கள், “அடி, கொல், கொல்” என்று கூச்சலிடுகின்றனர். பகுவாத் காவல் நிலையம் சம்பவ இடத்திலிருந்து வெகு தூரத்தில் இல்லை. எனினும் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் யாரும் வரவில்லை.
அப்பகுதியில் வசிக்கும் ஷோபா மண்டல் திருடிய குற்றத்துக்காக இந்தப் பெண்கள் தாக்கப்பட்டதாக கூறினார். “இரண்டு பெண்கள் ஒரு பர்ஸ் -ஐயும் , கைப்பேசியையும் திருடியதாக கூறினார்கள். ஒரு பெண் அந்த இருவரையும் பிடித்து விட்டாள். பின்பு அவர்களை அடிக்க ஆரம்பித்தனர். பின்னர் அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்” என்று அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் மகள் உள்ளூர் ஊடகங்களில் பேசும் போது, தனது அம்மாவும் அத்தையும் திருடியதாக அங்குள்ள கடைக்காரர் ஒருவர் புகார் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் என்ன திருடினார்கள் என கடைக்காரரால் சொல்ல முடியவில்லை என மகள் கூறுகிறார். “வாரச் சந்தையில் எலுமிச்சை விற்க எனது அம்மாவும் அத்தையும் செல்வார்கள். ஜூலை 18 ம் தேதி செவ்வாய்கிழமை, இனிப்புகள் விற்கும் கடைக்காரர் ஒருவர், அவர்கள் திருடியதாக கூறியுள்ளார். ஆனால் அவர்கள் என்ன திருடினார்கள் என அவரால் கூற முடியவில்லை. அதற்குள், அங்கிருந்த கூட்டத்தினர் அவர்களை அடிக்க துவங்கிவிட்டனர். அவர்கள் உடம்பில் ஒரு துணி கூட இல்லை” என்றார்.

தனது அம்மாவும் அத்தையும் எந்த குற்றமும் செய்யாமலே தண்டிக்கப்படுவதாக மகள் குற்றம் சாட்டுகிறார். “ஏதாவது தவறு செய்திருந்தால் தண்டிக்கலாம். ஆனால் அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. காவல் துறை அவர்களை கைது செய்துள்ளது” என்று மகள் தெரிவித்தார்.
மற்றொரு பகுதிவாசியான ஷேக் கர்ராமுல், “பாதிக்கப்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இது காவல்துறை செய்த தவறு” என்றார்.
இந்த விவகாரத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அணுகுமுறை நேர்மையாக இல்லை. செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசும் போது, “ இந்த இரு பெண்களும் பழைய வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என பமன்கோலா காவல் நிலைய அதிகாரி கண்டறிந்துள்ளார். அதனால் தான் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் இந்த விவகாரத்தை மேலும் விசாரித்து வருகிறோம்” என்றார்.
காவல்துறை என்ன கூறுகிறது?

காவல் அலுவலகம் ஒன்று தாக்கப்பட்ட பழைய வழக்கில் இந்த பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் தாக்கியவர்களை கைது செய்யாமல் பாதிக்கப்பட்டவர்களை கைது செய்ததற்காக காவல்துறையை பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை ஞாயிற்றுக்கிழமை காவல் துறை கைது செய்தது.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் காகென் முர்மு, “ அந்தப் பெண்களின் ஆடைகள் பொது வெளியில் அகற்றப்பட்டது மட்டுமல்லாமல், காவல் நிலையத்துக்கு கூட்டிச் சென்று அப்படியே இரண்டு மணி நேரங்கள் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதற்கு பதில் அளித்தே ஆக வேண்டும்” என்றார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீட்டின் முன், பாஜகவினர் அந்த இரவிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியலாக்கப்படுகிறதா இந்த சம்பவம்?

பட மூலாதாரம், Getty Images
இந்த சம்பவம் நடைபெற்று பல நாட்கள் கழித்து தான் பாஜகவின் ஐ டி பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்தார். அதன் பின்னரே இந்த வீடியோ வைரலாகி, அரசியல் பழி சொல்லும் விளையாட்டாக மாறியது.
அமித் மால்வியா தனது டிவிட்டர் பக்கத்தில், “ மம்தா பானர்ஜியின் இருதயத்தை உடைக்கும் எல்லாமே இந்த சம்பவத்தில் நிகழ்ந்துள்ளன. அவர் நினைத்திருந்தால், தனது கோவத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமில்லாமல், நடவடிக்கையும் எடுத்திருக்கலாம். ஏனெனில் ,மேற்கு வங்கத்தின் உள்துறை அமைச்சகம் அவரிடம் தான் உள்ளது. ஆனால் அவர் எதுவும் செய்யவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.
“அவர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கவும் இல்லை, வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. இது முதல்வரின் தோல்வியை அம்பலப்படுத்துகிறது” என்றார்.
பாஜக தலைவர்களும் அமைச்சர்களும் இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். பாஜக இந்த சம்பவத்தை அரசியலாக்கப் பார்க்கிறது என திரிணாமுல் காங்கிரஸ் கூறுகிறது.
மேற்கு வங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் டாக்டர் ஷஷி பாஞ்சா செய்தியாளர்களிடம் பேசும் போது, “ அமித் மால்வியா மணிப்பூர் சம்பவம் பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ளாரா? வங்கத்தைப் பற்றி பேச அவருக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது” என்றார்.
அமைச்சர் தனது அறிக்கையில் வங்கத்தில் நடைபெற்ற சம்பவம் அரசியல் நிகழ்வு அல்ல என தெரிவித்திருந்தார். “வாரச் சந்தையில் திருட்டு நடந்திருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. இந்தப் பெண்கள் அந்த திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஒரு பெண் தான், இவர்கள் இருவரையும் பிடித்துள்ளார். இந்த சூழலில் கைகலப்பு ஏற்பட்டு அவர்களின் ஆடைகளையும் அகற்றப்பட்டன. இது ஒரு அரசியல் நிகழ்வா? இதை ஏன் அமித் மால்வியா அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்?” என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








