மணிப்பூரில் கல்லூரி விடுதிக்குள் 2 மாணவிகளுக்கு நடந்தது என்ன? வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்

பெண்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்
படக்குறிப்பு, குகி நர்சிங் மாணவி சீயின் சியான்ச்சிங் தனது அறைக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டபோது, அவர் இறந்துவிட்டதாகக் கருதி ஒரு கும்பல் விட்டுச் சென்றது
    • எழுதியவர், திவ்யா ஆர்யா
    • பதவி, பிபிசி நியூஸ்

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சிலருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தலாம்.

தனது 18 வயது மகளை வீட்டு வாசலிலேயே கடத்தி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த அந்தக் கும்பல், அதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதாக மேரி மனவேதனையுடன் கூறினார்.

வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான புதிய குற்றச்சாட்டுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இரண்டு பெண்களை ஒரு 'வெறிபிடித்த' கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்றதைக் காட்டும் வீடியோ ஒன்று அண்மையில் வைரலான நிலையில், இதுபோல் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது பேசத் தொடங்கியுள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக, குகி பெண்ணான மேரிக்கு (அவரது உண்மையான பெயர் அல்ல) காவல்துறையிடம் செல்லும் தைரியம் வரவில்லை.

அவரது 18 வயது மகள் அவர்களின் வீட்டு வாசலில் இருந்து கடத்தப்பட்டு, ஒரே இரவில் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, அடுத்த நாள் காலையில், படுகாயங்களுடன் வீட்டு வாசலிலேயே விடப்பட்டார்.

தன் மகளுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடப் போவதாக அவர்கள் மிரட்டியதாக மேரி மனவேதனையுடன் கூறுகிறார்.

மணிப்பூரில் மெய்தேய் மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே இன மோதல்கள் வெடித்ததில் இருந்து 130க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் மேரியும் அவரது அண்டை வீட்டாரும் வீடுகளைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்த நிவாரண முகாமுக்கு வெளியில் அவரைச் சந்தித்துப் பேசியபோது, இந்த விவரங்களை அவர் தெரிவித்தார்.

இரண்டு குகி பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் கடந்த வாரம் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்தச் சம்பவத்திற்கு எதிராக பொதுமக்கள் பெரும் சீற்றம்கொண்ட நிலையில், இந்த வீடியோ ஆறு பேர் கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்தது.

இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மேரியும் தனது மகளுக்கு நேர்ந்த அவலம் குறித்து போலீசில் புகார் செய்தார்.

"இப்போது இதைச் செய்யாவிட்டால், எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்தேன்," என்கிறார் மேரி.

"என் மகளை பாலியல்ரீதியாகத் தாக்கியவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர முயலவில்லையே என்ற கவலையில் இதுவரை இருந்தேன். இப்போதுதான் சற்று ஆறுதலாக உள்ளது."

கதவை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல்

இந்தச் சம்பவத்தால் மிகுந்த மனவேதனை அடைந்தாலும், தனது மகள் தற்கொலை முயற்சியில் இறங்கவில்லை எனக் கூறும் மேரி, இனிமேலும் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைச் செய்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு ஊட்டியிருப்பதாகவும் கூறுகிறார்.

பத்தொன்பது வயதான சீயின் சியான்ச்சிங், தானும் இதுபோன்ற கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சூழலில் சிக்கியதாக அச்சத்துடன் கூறுகிறார்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் செவிலியர் படிப்பு படித்து வந்த அவரும், அவரது தோழியும் குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாணவியர் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவர் தங்கியிருந்த விடுதி தாக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

"உங்கள் ஆண்கள் எங்கள் பெண்களை பாலியல் வல்லுறவு செய்துவிட்டார்கள். இப்போது நாங்கள் உங்களை வல்லுறவு செய்யப் போகிறோம் எனக் கூச்சலிட்டு, விடுதியில் அவர் மறைந்திருந்த அறைக் கதவுகளை ஒரு கும்பல் தட்டிக்கொண்டே இருந்தது," என்கிறார் அவர்.

அப்போது தனது அம்மாவைத் தொடர்புகொண்டு பேசிய சீயின் சியான்ச்சிங், அதுதான் அவருனான கடைசி பேச்சு என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு சில நிமிடங்களில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், இரண்டு இளம் பெண்களையும் தரையில் இழுத்துச் சென்று வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் இருவரும் மயக்கமடைந்துவிட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாகக் கருதி அந்த கும்பல் தப்பியோடிவிட்டதாக சீயின் சியான்ச்சிங் கூறினார். பின்னர் அந்தப் பெண்களைக் கண்டுபிடித்த போலீசார், அவர்களுக்கு நாடித் துடிப்பு இருந்ததைக் கண்டு உயிர் இருந்ததை உணர்ந்தனர் என்றும் அச்சத்துடன் அவர் நினைவுகூர்கிறார்.

மெய்தேய் பெண்கள் குகி ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்ற உறுதிபடுத்தப்படாத தகவல்கள், இந்த மெய்தேய் ஆண்களின் கும்பலை சீயின் மற்றும் அவரது தோழிக்கு எதிராகத் தூண்டிவிட்டுள்ளன.

கடந்த மே மாதத் தொடக்கத்தில் மோதல் வெடித்த பிறகு தவறான தகவல்கள் வெகு ஆழமாகப் பரப்பப்பட்டன. இந்தத் தவறான தகவல்கள், ஏற்கெனவே ஒருவருக்கொருவர் இணைந்து வாழ்ந்த இரண்டு சமூகங்களை முழுமையாகப் பிரித்தன என்று கருதுமளவுக்கு மோசமானவையாக இருந்தன.

இப்போது இந்த இரண்டு சமூகங்களும் வாழும் கிராமங்களின் நுழைவாயிலில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரத்தில் மோதல்கள் தொடர்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இரண்டு குகி பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ, மெய்தேய் பெண்களையும் ஒன்று சேர்த்து, அவர்களிடமும் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

பெண்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்
படக்குறிப்பு, குக்கி பெண்கள் மீதான தாக்குதலை "கொடூரமான குற்றம்" என மெய்தேய் மகளிர் அமைப்பின் நிர்வாகி சைனம் சர்னலதா லீமா கண்டித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் ஒரு சக்தி வாய்ந்த, நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்ட மகளிர் அமைப்பான மெய்ரா பைபிஸ், அந்த மாநில சிவில் சமூகத்தில் பெண்களின் சக்திவாய்ந்த பங்கை உணர்த்துகிறது.

'தீப்பந்தம் ஏந்திய பெண்கள்', 'இமாஸ்' அல்லது 'மணிப்பூரின் மாதாக்கள்' எனப் பல பெயர்களில் மெய்ரா பைபிஸ் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் அழைக்கப்படுகிறார்கள். இந்த அமைப்பினர் அரசு மற்றும் ராணுவத்தின் அதிகார துஷ்பிரயோகம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

தற்போது வெளியான வீடியோவில் காட்டப்பட்ட இரண்டு குகி பெண்களை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிகளை அவர்களுடைய கிராம மக்களே போலீசாரிடம் பிடித்துக் கொடுத்ததாக அந்த கிராமத்தில் மெய்ரா பைபிஸ் குழுவை வழிநடத்தும் சைனம் சர்னலதா லீமா கூறுகிறார்.

பின்னர் மெய்ரா பைபிஸ் குழுவின் உள்ளூர் உறுப்பினர்கள் ஒன்றுகூடி குற்றம்சாட்டப்பட்ட நபரின் வீட்டை எரித்தனர்.

"அந்த வீட்டை எரித்தது, அந்த நபர் செய்த கொடூரமான குற்றத்திற்கு, அவருடைய சமூகமே அளித்த தண்டனை. மெய்தேய் சமூகத்தின் மீது இருக்கும் மரியாதையை அந்த குற்றவாளிகளின் செயல்கள் கெடுத்துவிடக்கூடாது என்பதால்தான் அந்த வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது," என்று லீமா கூறுகிறார்.

மேலும், குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆனால், பெண்களை உயர்வாகக் கருதும் சமூகத்தில் அந்தக் கும்பல் ஏன் அப்படி நடந்து கொண்டது?

"குகி ஆண்களால் தாக்கப்பட்ட மெய்தேய் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இதுபோல் அந்த கும்பல் செயல்பட்டுள்ளது," என்று லீமா கூறுகிறார்.

இதுபோன்ற தாக்குதல்கள் நடந்ததாக அவருக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது. மெய்தேய் பெண்கள் இதுபோன்ற அவமானகரமான விஷயங்கள் குறித்துப் பொதுவாக விவாதிப்பதில்லை.

தற்போதைய மோதலின் தொடக்கத்தில், மெய்தேய் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்று மாநில காவல்துறை கூறியுள்ளது. ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் பல இடங்களில் நடந்ததாகவும், அவை குறித்து புகார் செய்ய யாரும் முன்வரவில்லை என்றும் மெய்தேய் சமூகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் என்னிடம் கூறினார்.

"எங்கள் பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற கொடூரங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதன் மூலமோ அல்லது காவல்துறையில் புகார் செய்வதன் மூலமோ தங்கள் கண்ணியத்தை இழக்க விரும்புவதில்லை," என்கிறார் கோகோமி என்ற மெய்தேய் அமைப்பைச் சேர்ந்த குரைஜாம் அத்தூபா.

அவரது பார்வையில் பாலியல் வன்முறைகளில் கவனம் செலுத்துவதை விட, கொலைகளைத் தடுப்பதிலும், இடம்பெயர்ந்த மக்கள் பிரச்னையிலும் கவனம் செலுத்துவதுதான் சரி என்கிறார்.

கடும் வேதனையில் தவிக்கும் சகோதரர்

வன்முறை கும்பலால் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட குகி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவரின் சகோதரர், அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகளை நினைத்து கடும் வேதனையில் தவித்து வருகிறார்.

அவரது சகோதரியைத் தாக்கி பாலியல் வல்லுறவு செய்த கும்பல், அவர்களின் தந்தையையும், தம்பியையும் கொன்றுவிட்டது. அவரும் அவரது தாயும் மற்றொரு கிராமத்தில் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்ததால் அவர்களின் உயிர் தப்பியது.

தனது உறவினர் வீட்டில் உள்ள சிறிய அறை ஒன்றில் முடங்கிக் கிடந்த 23 வயதான அந்த இளைஞரை நான் நேரில் சந்தித்தேன்.

நான் அவரிடம் பேசியபோது, அரசும், காவல்துறையும் என்ன செய்ய வேண்டும் என அவர் விரும்புகிறார் எனக் கேட்டேன்.

அதற்குப் பதிலளித்த அவர், "அந்த கொடூரக் கும்பலில் உள்ள ஒவ்வொருவரையும் கைது செய்யவேண்டும். குறிப்பாக என் தந்தையையும் சகோதரனையும் கொன்றவர்களைக் கைது செய்யவேண்டும்," என்று கூறினார்.

மேலும், "இரு சமூகங்களையும் நேர்மையுடன் நடத்துங்கள்," என கோரிக்கை வைக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

பெண்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்
படக்குறிப்பு, "இந்த வீடியோ மட்டும் வெளியாகாமல் இருந்திருந்தால், நாங்கள் இவ்வளவு கவனம் பெற்றிருக்க மாட்டோம்," என்று கிரேசி ஹாக்கிப் கூறுகிறார்.

மத்திய, மாநில அரசுகள் மீது இரு சமூகத்தினரிடமும் நம்பிக்கை இல்லை என்று கள நிலவரங்கள் காட்டுகின்றன.

மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங், "குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை உட்பட மிகக் கடுமையான தண்டனை விதிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என்று உறுதியளித்தார்.

ஆனால் மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக அவர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை குறித்துக் கேட்டபோது, ​​"இதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதும், குற்றவாளிகளைத் தண்டிப்பதும்தான் எனது கடமை," என்று கூறினார்.

இரண்டு பெண்களின் வீடியோ தேசிய அளவில் சீற்றத்தைத் தூண்டிய பின்னரே, பிரதமர் நரேந்திர மோதி இந்த வன்முறைகள் குறித்து முதன்முதலில் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

"மணிப்பூர் மகள்களுக்கு ஏற்படுத்தப்பட்ட கொடுமைகளையும் கொடூரங்களையும் மன்னிக்க முடியாது. இரு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பமுடியாது," என்று அவர் கூறினார்.

ஆனால் லீமாவை பொறுத்தவரை, 60,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறுவதற்குக் காரணமாக மே மாதத்திலிருந்து தொடர்ந்து வரும் வன்முறைகளைப் புறக்கணித்துவிட்டு தற்போது பிரதமர் இப்படிப் பேசியிருப்பது தங்கள் சமூகத்தை அவர் கைவிட்டுவிட்டதைக் காட்டுகிறது என்று தெரிவித்தார்.

"குகி பெண்கள் தாக்கப்பட்டபோது பிரதமர் பேசத் தொடங்கியுள்ளார். நாங்கள் எதிர்கொண்ட பிரச்னைகளைப் பற்றி அவர் பேசவில்லை. மெய்தேய் பெண்களான நாங்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா?" என அவர் கேட்கிறார்.

தொடரும் மணிப்பூர் வன்முறைகளை மீண்டும் அனைவரது கவனத்திற்கும் இந்த வீடியோ கொண்டு சென்றுள்ளது.

"இந்த வீடியோ மட்டும் வெளிவராமல் இருந்திருந்தால், அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் கவனத்தை நாங்கள் பெற்றிருக்க மாட்டோம்," என்கிறார் நர்சிங் மாணவி சீயின் சியான்ச்சிங். இதே கருத்தை, வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்கும் ஆராய்ச்சியாளர் கிரேசி ஹாக்கிப்பும் ஆதரிக்கிறார்.

வன்முறைகளைக் கடந்து, தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப பொதுமக்கள் முயலும்போது தங்களுடைய அனுபவங்களை தைரியமாகப் பகிர்ந்துகொண்ட உயிர் பிழைத்தவர்களுக்கு இது உதவும் என்று அவர் கூறுகிறார்.

சீயின் சியான்ச்சிங், தான் வாழும் பகுதியில் உள்ள மற்றொரு நர்சிங் கல்வி நிலையத்தில் சேர்ந்துவிட்டதாகத் தெரிவித்தபோது, ​​அவர் தனது சமூகத்தில் உள்ள பெண்களிடம் பேசியதைப் பற்றி என்னிடம் கூறினார்.

"ஏதோவொரு காரணத்திற்காக கடவுள் என்னை வாழ வைத்திருக்கிறார் என்று என் அம்மா என்னிடம் கூறினார். அதனால் நான் என் கனவுகளை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று முடிவு செய்தேன்."

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: