டெஸ்ட் தொடரை வென்றும் இந்தியாவுக்கு ஏன் இந்தச் சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றபோதிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2-ஆவது இடத்துக்குச் சரிந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பாகிஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் 100 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், இந்திய 16 புள்ளிகள் பெற்றபோதிலும் வெற்றி சதவீதம் 66.67 ஆக இருப்பதால் 2ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதலிடம்
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வென்று முழுமையாக 12 புள்ளிகளைப் பெற்று 100 சதவீதத்துடன் இந்திய அணி முதலிடத்தில் பாகிஸ்தானுக்கு இணையாக இருந்தது. ஆனால், போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நேற்று மழையால் கைவிடப்பட்டது.
இதனால் இந்தியா-மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் டிராவில் முடிந்ததால், இரு அணிகளுக்கும் ஐசிசி விதிப்படி தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டன. இதனால் இந்திய அணியின் புள்ளிக்கணக்கு 12-லிருந்து 16 ஆக மட்டுமே உயர்ந்தது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றாலும் முழுமையாக 12 புள்ளிகளைப் பெற முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
மழையால் ஆட்டம் தடை
2ஆவது டெஸ்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு 365 ரன்கள் இலக்கு நிர்ணயத்திருந்தது இந்திய அணி. 4ஆவது ஆட்டநேர முடிவில் 76 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த மேற்கிந்தியத்தீவுகள் அணி கடைசிநாளில் வெற்றி பெற 289 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தன.
கடைசி நாள் ஆட்டம் நடந்திருந்தால் அஸ்வின், ஜடேஜா சுழற்பந்துவீச்சில் இந்திய அணி நிச்சயம் வென்றிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று இடைவிடாது மழைபெய்தால் ஆட்டம் நடத்துவதற்கான சாத்தியம் இல்லை. இதனால் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.50 மணிக்கு ஆட்டம் கைவிடப்பட்டு, 2வது டெஸ்ட் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஏன் 2-ஆவது இடம்?
ஒருவேளை மழை நின்று ஆட்டம் நடந்து இந்திய அணி வென்றிருந்தால் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ‘ஒயிட்வாஷ்’ செய்திருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முழுமையாக 12 புள்ளிகள் பெற்று 24 புள்ளிகளுடனும், 100 சதவீத வெற்றியுடனும் முதலிடத்தைப் பிடித்திருக்கும். பாகிஸ்தான் அணியை 2-வது இடத்துக்கு தள்ளியிருக்கும்.
ஆனால், 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து, இந்திய அணிக்கு 4 புள்ளிகள் மட்டுமே கிடைத்ததால், 16 புள்ளிகளுடன் வெற்றி சதவீதமும் 66.67 சதவீதமாகக் குறைந்தது. அதாவது, 100 சதவீதம் வர வேண்டிய நிலையில் 33.33 சதவீதப் புள்ளிகள் மட்டுமே இந்திய அணிக்கு 2வது டெஸ்டில் கிடைத்தது.
மாறாக 12 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் 100 சதவீதத்தை கைவசம் வைத்திருப்பதால், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரலிய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி,ஒரு டிராவுடன் 26 புள்ளிகளுடன் 54.17 சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு டிராவுடன் 14 புள்ளிகளுடன், 29.17 சதவீதத்துடன் 4வது இடத்தில் இருக்கிறது.
இந்திய அணிக்கு எதிரான 2வதுடெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால் மே.இ.தீவுகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 4 புள்ளிகளுடன், 16.67 சதவீதத்துடன் கணக்கைத் தொடங்கி, 5-ஆவது இடத்தில் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
சவாலாகும் டெஸ்ட் தொடர்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றிருந்தால், இந்திய அணி 24 புள்ளிகள், 100 சதவீதத்துடன் ஓரளவு பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். ஆனால், தற்போது 16 புள்ளிகள் மட்டுமே கிடைத்திருப்பது 66.67 சதவீதமாகக் குறைந்திருப்பதால் அடுத்துவரும் டெஸ்ட் தொடர்களில் போட்டிகளில் தோற்காமல் தொடரை வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது.
ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை ஆகிய தொடர்களுக்குப்பின், 5 மாத இடைவெளியில்தான் அடுத்ததாக இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் விளையாட இருக்கிறது.
வரும் டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கடந்த 2021-22 ஆண்டில் டெஸ்ட் தொடரை இழந்தநிலையில் இந்த முறை டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய நிலையில் இந்திய அணி இருக்கிறது.
தென் ஆப்பிரிக்கத் தொடர் 2024 ஜனவரி முதல்வாரத்தில் முடிந்தபின், ஆஸ்திரேலியா செல்கிறது இந்திய அணி. அங்கு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது இந்திய அணி. ஏற்கெனவே தொடர்ச்சியாக 2 முறை இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றிருப்பதால் ஹாட்ரிக் வெற்றிக்காக முயற்சிக்கலாம்.
இந்த இரு தொடர்களும் இந்திய அணிக்கு சவால் நிறைந்த தொடராக இருக்கும். இந்த இரு டெஸ்ட் தொடர்களிலும் ரோஹித் சர்மா அணி பெறும் வெற்றிகள், தோல்விகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின் பயணத்தை முடிவு செய்யும்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணிக்குச் சாதகம்
இதைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டில் இந்தியாவுக்கு இங்கிலாந்து, வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளனர்.
2024 பிப்ரவரியில் இந்தியா வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 முறை இந்திய அணி வென்றிருப்பதால் ஹாட்ரிக் வெற்றிக்கு முயற்சிக்கும். மேலும் உள்நாட்டில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம் என்பதால், இந்த டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செய்யும்.
இங்கிலாந்து அணி கடைசியாக 2012-13ம் ஆண்டில் இந்திய அணியை உள்நாட்டில் டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது. அதன்பின் இந்திய அணியை உள்நாட்டில் வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து தொடர் முடிந்தபின் வங்கதேசம் அணி இந்தியாவுக்கு வருகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் வங்கதேசம் விளையாடுகிறது.
அதன்பின் அக்டோபர் இறுதியில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு பயணமாகிறது. இந்திய அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. இந்த டெஸ்ட் தொடர்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்திய அணி விளையாடும் கடைசி தொடராகும்.
ஆதலால், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்தான் இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். உள்நாட்டில் இந்திய அணியை வீழ்த்துவது எளிதானது அல்ல, என்பதால் இங்கிலாந்து, வங்கதேசம், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செய்து புள்ளிகளைப் பெறுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
டெஸ்ட் தொடரில் கவனம் ஈர்த்தவை
சில சாதகமான அம்சங்களுடன் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றியுடன் இந்திய அணி நிறைவு செய்திருக்கிறது.
• முதலாவதாக இந்திய டெஸ்ட் அணிக்கு தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் அடையாளம் காணப்பட்டுள்ளார். வலிமையான மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சை சமாளித்து ஆடக்கூடிய திறமை மிகுந்த பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
• 2வதாக விராட் கோலி டெஸ்ட் தொடரில் ரன் குவிக்க பல ஆண்டுகளாக தடுமாறிவந்தார். அதிலும் வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளாக சதம் அடிக்காமல் கோலி திணறினார். அந்த தடுமாற்றத்திலிருந்து மீண்ட கோலி சதம் கண்டு இழந்த ஃபார்மை மீட்டுள்ளார்.
• அதேநேரம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய துணைக் கேப்டன் ரஹானே இந்தத் தொடரில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்துள்ளார். ரஹானே மீது அணி நிர்வாகம் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தநிலையில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ரஹானேவுக்கு ஏமாற்றமாக மாறியது.
• ரிஷப் பந்துக்குப்பின் அதிரடியான பேட்ஸ்மேன், விக்கெட்கீப்பராக இஷான் கிஷன் இந்த டெஸ்ட் தொடரில் அடையாளம் காணப்பட்டுள்ளார். ரிஷப் பந்துக்குப்பின் கேஎஸ் பரத் மட்டுமே டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக அடையாளம் காணப்பட்டநிலையில் இப்போது இஷான் கிஷனும் உருவெடுத்துள்ளது வலிமையான அம்சமாகும்.
• அஸ்வினைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் அவரின் பந்துவீச்சை குறைசொல்லவே முடியாதவகையில் தனித்துவமாகவே இருக்கும். அதேபோலத்தான் இந்தத் தொடரிலும் அஸ்வினின் மாயஜாலப் பந்துவீச்சு இருந்தது. முதல் டெஸ்டில் அஸ்வின் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியது வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
• முகமது ஷமி, பும்ரா இல்லாத நிலையில் வேகப்பந்துவீச்சுப் பிரிவுக்கு முகமது சிராஜ் தலைமையை நம்பி இந்திய அணிவந்தது. தன் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் 2வது டெஸ்டில் 5 விக்கெட் வீழ்த்தி சிராஜ் திறமையை வெளிப்படுத்திவிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












