சென்னை புறநகரில் 7 ஆண்டுகளாக நீடிக்கும் மேம்பாலப் பணிகள் எப்போது முடியும்? தாமதம் ஏன்?

- எழுதியவர், லிங்கேஷ்குமார்.வே
- பதவி, பிபிசி தமிழுக்காக
சென்னை புறநகர் பகுதியை இணைக்கும் வகையில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் ஆவடி அடுத்த பட்டாபிராம் அருகே 13 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு, 7 ஆண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்ட மேம்பால பணிகள், இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.
சென்னையில் இருந்து பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயில், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர் வழியாக திருப்பதி சென்றடையும் நெடுஞ்சாலை சி.டி.எச் சாலை அதவாது Chennai - Thirupathy Highway என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் இருந்து புறநகரை இணைக்கும் இந்த சாலையில் ராணுவ தொழிற்சாலைகளும், பள்ளிகள், கல்லூரிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களும் உள்ளன. அது மட்டுமல்லாமல் சென்னையில் இருந்து, புறநகர் பகுதிகள் மட்டுமின்றி, திருத்தணி, திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இதனால் இந்த சி.டி.எச் சாலை எப்போதும் பரப்பரப்பாக காணப்படும்.
இந்த சாலையில், பட்டாபிராம் அருகே ஆவடியில் இருந்து மிலிட்டரி சைடிங் பகுதிக்கு ரெயில்வே பாதை செல்கிறது. இதனால் பட்டாபிராமில் சி.டி.எச் சாலையில் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டு உள்ளது. ஆவடி ரெயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் மில்ட்டரி சைடிங், முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு தினமும் அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் சென்று வரும். இந்த ரயில் சென்று வரும் போது சுமார் 10 நிமிடங்களுக்கு கேட் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்படும். இந்த நேரத்தில் ரயில்வே கேட்டின் இருபுறமும், அரசு பேருந்துகள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை பல வருடங்களாக நீடித்தது.

பாலத்திற்கு 2010-ல் திட்டம், 2016-ல் பணிகள் தொடக்கம்...
2010-11ம் நிதியாண்டில் நான்கு வழிச்சாலையாக, ரயில்வே மேம்பாலம் அமைக்க, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பட்டாபிராம், சி.டி.எச் சாலை, ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்ட மண் பரிசோதனையை நெடுஞ்சாலை துறை மேற்கொண்டது. அதன் பிறகு முதற்கட்டமாக மேம்பாலம் கட்ட அரசு சார்பில் 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேம்பால பணிகளை முடிக்க 52 கோடி ரூபாய் நிதி தேவை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்து பல மாதங்கள் ஆகியும் பணிகள் துவக்கப்படாமல் இருந்தது. இந்த மேம்பாலம், இரு முனைகளிலும், துவக்கத்தில் இணைந்தும், நடுப்பகுதியில் இரு வேறு திசையில் பிரிந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு 2018 ஆண்டு முதல் பணிகள் தொடங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த மேம்பால பணிகள் முடிக்கப்பட வேண்டும். ஆனால் தொடங்கியதே தாமதம் என்ற நிலையில் பணிகளும் வேகமாக நடைபெறவில்லை. இதற்கு இடையில் கொரோனா காலகட்டத்தில் பணிகள் கிடப்பில் போடப்படதால் திட்டமிட்டபடி 2020 ஆம் ஆண்டு பாலம் கட்டும் பணி முடிவடையவில்லை.

போக்குவரத்து மாற்றம்
மேம்பால பணிகளை விரைந்து முடிப்பதற்காக கடந்த 2021ஆண்டு பட்டாபிராம் காவல் நிலையம் அருகில் இருந்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இரண்டு ஆண்களாக பேருந்து உள்ளிட்ட வாகனங்கள், சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலையே உள்ளது. பட்டாபிராமில் இருந்து திருநின்றவூர் செல்ல 5 நிமிடங்களே போதும். ஆனால் தற்போது, 30 நிமிடங்கள் வரை ஆகிறது.
இந்த மேம்பால பணி காரணமாக பட்டாபிராம் பேருந்து நிலையம் முழுவதுமாக சேதம் அடைந்து பாழடைந்த கட்டிடம் போல காட்சியளிக்கின்றது. இதனால் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிறுத்த முடியாமல் சாலையில் நிறுத்தி வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் அவதி
இருசக்கர வாகனங்கள், ஆட்டோ போன்ற இலகு ரக வாகனங்கள் சர்வீஸ் சாலையை பயன்படுத்தி பட்டாபிராம் ரயில்வே கேட்டை சிரமத்துடன் கடந்து சென்றாலும், கனரக வாகனங்கள் சுற்றிச் செல்லும் நிலையே உள்ளது. இது பற்றி நம்மிடம் பேசிய லாரி ஓட்டுநர் பக்கிரிசாமி, "நான் தினந்தோரும் திருவள்ளூரில் இருந்து ஆவடிக்கு அரசி மூட்டைகளை ஏற்றிச்செல்வகிறேன். திருநின்றவூரில் இருந்து பட்டாபிராம் செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் 5 கிலோமீட்டர் வரை சுற்றிச் செல்லும் நிலை இருக்கிறது" என்று தெரிவித்தார்.

வணிகர்கள் வேதனை
மேம்பாலம் பணிகள் தாமதம் குறித்து அப்பகுதியில் வளர்ப்பு மீன்கள் விற்பனை செய்யும் கடை வைத்து இருக்கும் சுரேஷ் என்பவர் நம்மிடம் பேசினார்.
"இந்தப் பாலப்பணிக்கு பின்னர் துவங்கப்பட்ட சேக்காடு ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் முடிவு பெறும் நிலையில் உள்ளன. அதேபோல் இந்த மேம்பாலம் அருகாமையில் கட்டப்பட்டு வரும் டைட்டில் பார்க் கட்டுமான வேலைகளும் முடிவு பெறும் நிலையில் உள்ளன.மத்திய மாநில அரசுகள் மேம்பால பணிகளை துரிதப்படுத்தி விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்" என்பது அவரின் கோரிக்கை.

செப்டம்பருக்குள் ஒரு வழி பாலம் திறக்க ஆட்சியர் உறுதி
பாலம் பணிகள் முடிய தாமதமாகும் நிலையில், தற்போது இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ போன்ற வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையும் மிகவும் மோசமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆட்டோ, காரில் செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து நம்மிடம் திருநின்றவூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் உமாபதி, நம்மிடம் பேசினார்.
கடந்த மாதம் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தன்னார்வ நுகர்வோர் காலாண்டு கூட்டத்தில் சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பணிகளில் ஒரு வழிப்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.

வேப்பம்பட்டு, செவ்வாய்பேட்டை மேம்பால பணிகள் எப்போது முடியும்?
சென்னை – அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பம்பட்டு மற்றும் செவ்வாப்பேட்டை ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த மார்க்கத்தில் தினமும் 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. வேப்பம்பட்டில் 2008 ஆம் ஆண்டும், செவ்வாய்பேட்டையில் 2011 ஆம் ஆண்டும் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் பணிகள் முடியவில்லை.
இது குறித்து செவ்வாய்பேட்டையை சேர்ந்த அருண் என்பவர் நம்மிடம் பேசினார். வேப்பம்பட்டு மேம்பால பணியில், ரயில்வே கடவுப் பாதை அகற்றப்பட்டு, 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் ரயில்வே நிர்வாகம் மேற் கொண்டு முடித்துள்ளதாகவும், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு மேம்பால பணிகள் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார்.
சென்னை–திருப்பதி நெடுஞ்சாலை பகுதியில் 5 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு வந்த நிலையில், ரயில்வே மேம்பால பணிக்கு எதிராக வேப்பம்பட்டை சேர்ந்த இருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்ததன் அடிப்படையில், கடந்த 2013-ம் ஆண்டு வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணிகள், அரைகுறையாக நிறுத்தப்பட்டதாக கூறினார்.

செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தின் குறுக்கே கடந்த 2011ம் ஆண்டு, ரயில்வே மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதே ஆண்டு பணிகள் துவக்கப்பட்டதால் ரயில்வே கேட் மூடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனால், செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாய் வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், ஆட்டோவில் செல்பவர்கள் கடந்து சென்று வருவதாக தெரிவித்தார். ஆனால் மழைகாலங்களில் இந்த கால்வாயில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளதாக கூறினார்.
மேம்பால பணிகள் எப்போது முடியும்? எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி பதில்

வேம்பம்பட்டு, செவ்வாய்பேட்டை மேம்பால பணிகள் எப்போது முடியும் என்பது குறித்து பிபிசி சார்பாக பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டபோது, தான் திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்த மேம்பால பணிகளுக்கு திட்டமிட்டதாக தெரிவித்தார். வேப்பம்பட்டு மேம்பாலத்தை பொருத்தவரை நிலம் கையகப்படுத்தும் பணியால் மேம்பால கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது வழக்கு வெற்றி பெற்ற நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு பணிகளை முடிக்க முடியாத நிலை உள்ளதால், மீண்டும் டெண்டர் விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பணிகளை விரைந்து முடிக்க கோரி நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களிடம் இரு முறை மனு அளித்துள்ளதாகவும், வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டுள் மேம்பாலங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












