மது, சிகரெட் மட்டும்தான் போதையா? ஆண்களை விட பெண்கள் விரைவில் அடிமையாவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரவி பிரகாஷ்
- பதவி, பிபிசி இந்தி
பாட்னாவில் வசிக்கும் சஞ்சனாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 22 வயதுதான் ஆகிறது. சஞ்சனா தொழில்ரீதியாக பொறியியலாளர்.
“நான் படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு காதல் உறவில் இருந்தேன். அவருடன் எனக்கு பிரேக் அப் ஆகிவிட்டது. அதன்பிறகு சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட நான் அழுவேன். எனக்கு அதிக கோபம் வரும். படிப்பதில் ஈடுபாடு இல்லாமல் போனது,” என்று அவர் கூறினார்.
"எல்லாவற்றிலும் குழப்பம் இருந்தது. அது என் வாழ்க்கையின் மிகவும் சிக்கலான காலகட்டம். மனதளவில் உடைந்து போயிருந்தேன். நான் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா மற்றும் மது சாப்பிட ஆரம்பித்தேன். எப்படி, எப்போது அதற்கு அடிமையானேன் என்றே எனக்குத் தெரியவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
“நான் அதற்கு முன் எப்போதுமே மது அருந்தியதில்லை. கஞ்சாவும் எடுத்துக்கொண்டதில்லை. ஆனால் எல்லாமே மிக விரைவாக நடந்தது. பதற்றம் ஏற்படும் போதெல்லாம் நான் கஞ்சா அல்லது மது எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன்,” என்று சஞ்சனா தெரிவித்தார்.
“குடும்பத்தினரின் கண்களில் படாமல் வீட்டிற்கு வந்து தூங்கிவிடுவேன். பல மாதங்களுக்கு இது தொடர்ந்தது. சாப்பிடுவதை மறந்தே போய்விடுவேன். சாப்பிடவேண்டும் என்றே தோன்றாது.”
“எனது நண்பர்கள் மூலம் என் பெற்றோருக்கு இதுபற்றித் தெரிய வந்ததும் அவர்கள் எனக்குப் புரிய வைக்க முயன்றனர். அவர்கள் என் பிரச்னையைப் புரிந்துகொண்டனர். எனக்கு சிகிச்சை அளித்தனர். எனக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பழக்கத்தை கைவிடச் செய்வதற்கான சிகிச்சை தொடங்கியது ,” என்கிறார் சஞ்சனா.
“பல மாத சிகிச்சைக்குப் பிறகு என்னால் போதைப் பழக்கத்தில் இருந்து வெளியே வர முடிந்தது. இப்போது வேலை விஷயமாக புனே செல்கிறேன். இது என் வாழ்க்கையின் புதிய தொடக்கம்,'' என்கிறார் சஞ்சனா.
போதைப் பழக்கத்திற்கு அடிமையான சஞ்சனா போன்ற நூற்றுக்கணக்கான பெண்கள் சமூகத்தில் உள்ளனர். சில நேரங்களில் உணர்ச்சிப்புயலில் சிக்கி அல்லது சில நேரங்களில் நண்பர்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக ஏதாவது ஒரு போதைப்பொருளை அவர்கள் உட்கொள்ளத் தொடங்குகிறார்கள்.

பட மூலாதாரம், RAVI PRAKASH
போதைப் பழக்கம் உங்களை அறியாமலே ஏற்பட்டுவிடுகிறதா?
”பெரும்பாலான சந்தர்ப்பங்களில் போதைப் பழக்கம் உங்களை அறியாமலேயே ஏற்பட்டுவிடுகிறது. நீங்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகிக்கொண்டிருப்பதை பல நேரங்களில் நீங்கள் உணரவே மாட்டீர்கள்,” என்று பாட்னாவில் உள்ள முன்னணி போதை ஒழிப்பு மையத்தின் டாக்டர் பிரதீபா தெரிவித்தார்.
“எல்லாமே தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக பல நேரங்களில் மக்கள் நினைக்கிறார்கள். தாங்கள் எந்தப் பழக்கத்திற்கும் அடிமையாக மாட்டோம் என்று கருதுகிறார்கள். ஆனால் அவர்கள் விரைவில் அதன் பிடியில் சிக்கிவிடுகிறார்கள். ஒருமுறை மது அல்லது கஞ்சா எடுத்துக் கொள்ளலாம், பின்னர் விட்டுவிடலாம் என்று நினைப்பார்கள்,” என்று டாக்டர் பிரதீபா பிபிசியிடம் தெரிவித்தார்.
"அதை மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வரும். பிறகு மெல்ல மெல்ல அவர்கள் அதற்கு அடிமையாகிவிடுவார்கள். ஆனால் அதிலிருந்து வெளியே வருவது அவ்வளவு கடினம் அல்ல. குடும்பத்தின் ஆதரவு இருந்தால், சில மாத மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை மூலம் இந்தப் பழக்கத்தில் இருந்து வெளியே வந்துவிட முடியும்."
ஆண்களைவிட பெண்களே போதையின் பிடியில் சீக்கிரமாக சிக்கிக் கொள்கின்றனர் என்று லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் ஷெல்லி மார்லோ கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மதுவுக்கு அடிமையான 15 கோடி பேர்
தன்னையே சான்றாகக் கூறிய அவர், தன் 25 வயதில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாகவும் பிறகு அதிலிருந்து வெளியே வர சிகிச்சை எடுக்க வேண்டியதாயிற்று எனவும் அவர் கூறுகிறார்.
சூதாட்டம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு உதவும் பணியில் ஷெல்லி மார்லோ ஈடுபட்டுள்ளார்.
"பெண்கள் போதைக்கு அடிமையானால் அவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் கிடைப்பதில்லை. அவர்கள் சமூக களங்கத்தைச் சுமக்க வேண்டியுள்ளது," என்று அவர் விளக்குகிறார்.
கடந்த 2018ஆம் ஆண்டில், 18 முதல் 75 வயதுக்குட்பட்ட 15 கோடிக்கும் அதிகமானோர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என்று இந்திய அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
இது தவிர மக்கள் வேறு பல போதைப் பழக்கங்களுக்கும் அடிமையாகியுள்ளனர். அரசின் இந்தப் புள்ளி விவரத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்தப் புள்ளி விவரங்கள் கவலையளிக்கின்றன.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்திய அரசு 'நஷா முக்த் பாரத் அபியான்' (போதை பழக்கமற்ற இந்தியா இயக்கம்) நடத்தி வருகிறது.

பட மூலாதாரம், RAVI PRAKASH
பெண்களின் தயக்கம் உடைந்துவிட்டதா?
இன்றும்கூட பெண்களிடையே போதைப் பழக்கம் குறித்து அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை என்று பாட்னாவை சேர்ந்த பிரபல உளவியல் நிபுணரான டாக்டர் விருந்தா சிங் கூறுகிறார்.
"அவர்களது தயக்கம் இன்னும் உடையவில்லை. போதை என்பது மது, சிகரெட் அல்லது கஞ்சாவால் மட்டுமே ஏற்படுவதில்லை. சமூக ஊடகங்களின் பயன்பாட்டு தொடர்பாக அதிகரித்து வரும் அடிமைத்தனம், அதீத தூய்மைக்கு அடிமையாதல் ஆகியவையும் பெண்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன,” என்றார் அவர்.
வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிமைத்தனத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, தான் இப்போது ஆலோசனை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
"வீட்டிற்கு விருந்தினர் வந்தால் அவர்கள் சென்றவுடன் அந்தப் பெண் சுத்தம் செய்யத் தொடங்கிவிடுவார். இதனால் பிரச்னைக்கு உள்ளான அவரது கணவர் அவரை என்னிடம் அழைத்து வந்தார்,” என்று விருந்தா சிங் கூறினார்.
“பாட்னா, ராஞ்சி, ராய்ப்பூர், வாராணசி போன்ற ஓரளவுக்குப் பெரிய நகரங்களில், போதைப் பழக்கம் தொடர்பான புகார்களுடன் மருத்துவரிடம் வரும் ஆண்கள், பெண்களின் எண்ணிக்கையில் பெரும் இடைவெளி உள்ளது. சராசரியாக 10 நோயாளிகளை எடுத்துக்கொண்டால் அதில் ஒருவர் மட்டுமே பெண்,” என்று டாக்டர் விருந்தா சிங் பிபிசியிடம் கூறினார்.
"டெல்லி, மும்பை, லக்னெள, புனே போன்ற நகரங்களில் சராசரி நன்றாக இருக்கிறது. எந்தப் பழக்கத்தின் மீது நமக்கு கட்டுப்பாடு இல்லையோ அது அடிமைத்தனம் என்று கருதப்படுகிறது.
இதற்கு மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். எவ்வளவு சீக்கிரம் மருத்துவரை அணுகுகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் குணமாகும். இதைப் புரிந்துகொள்வது அவசியம்," என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
பெருநகரங்களில் நிலைமை என்ன?
”சிறிய நகரங்களில் உள்ள பெண்களைவிட பெருநகரங்களில் உள்ள பெண்கள் அதிக விழிப்புணர்வுடன் உள்ளனர். அவர்கள் தங்கள் பிரச்னைகளைச் சொல்கிறார்கள், இதனால் அவர்கள் விரைவாகக் குணமடைகிறார்கள்,” என்கிறார் மும்பையில் உள்ள பெண்களுக்கான போதை ஒழிப்பு மையத்தின் டாக்டர் ஆஷா லிமாயி.
சிறு நகரங்களில்கூட போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று ராஞ்சியில் உள்ள சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைக்கியாட்ரியின் போதைப்பொருள் ஒழிப்பு மையத்தைச் சேர்ந்த டாக்டர் ரோஷன் வி கண்டே குறிப்பிட்டார்.
அவர்களில் 18-28 வயதுக்குட்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்கள் மது, கஞ்சா, டென்ட்ரைட், ஒயிட்னர், போதை மாத்திரைகள் போன்றவற்றுக்கு அடிமையாகிறார்கள்.
எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்கூட பெண்களும் சிகிச்சை பெறுவதற்காக போதை ஒழிப்பு மையத்திற்கு வருவது நல்ல விஷயம் என்கிறார் அவர்.
இருப்பினும் இப்போதும் சிகிச்சைக்காக அங்கு வரும் 15 நோயாளிகளில் ஒருவர் மட்டுமே பெண். அவர்கள் வராமல் இருப்பதற்கு சமூகக் கட்டுப்பாடுகளே முக்கியக் காரணம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












