கடலூர் அருகே 7 வயது சிறுவன் மூக்கிற்குள் 3 பேட்டரிகள் - 2 ஆண்டு வலி, வேதனைக்கு அரசு மருத்துவமனையில் தீர்வு

ஒன்றுகூடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு இடையே ஒரு குழந்தை மட்டும் தனிமைப்படுத்துவது, அந்தக் குழந்தைக்கு மனரீதியாக பலமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அப்படி தனிமைப்படுத்தப்பட்ட குழந்தையாக வளர்ந்த சிறுவன்தான் ராஜேஷ். ராஜேஷ், அப்படி நடத்தப்பட்டதற்குக் காரணம் அவரது மூக்கினுள் சிக்கியிருந்த பேட்டரிகள்.
அந்த பேட்டரிகளை இப்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவர்கள் அகற்றியதன் மூலம், தன் வயதை ஒத்த மற்ற சிறுவர்களோடு ஒன்றாக விளையாடும் வாய்ப்பு ராஜேஷுக்கு மீண்டும் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் கச்சிமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், சூர்யா தம்பதிக்கு ராஜேஷ் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார்.
கூலி வேலைக்குச் சென்று தினசரி வாழ்க்கையை நடத்தி வருவதாகக் கூறும் ராஜேஷின் தாய் சூர்யா, தனது மகன் மூன்று ஆண்டுகளாகப் பட்ட அவஸ்தைக்கு ஒரு முடிவு கிடைத்துவிட்டதாக நெகிழ்ந்து கூறுகிறார்.
மூச்சு விடமுடியாமல் இரண்டு ஆண்டுகள் சிரமப்பட்ட சிறுவன்

“என் மகன் எப்போதும் சிறுவர் பட்டாளமாக விளையாடிக் கொண்டிருந்தவன். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி மூக்கு வலிப்பதாக எங்களிடம் கூறினான். அருகிலுள்ள மருத்துவர்களிடம் அவனை அழைத்துச் சென்றபோது சொட்டு மருந்து, மாத்திரை போன்றவற்றைக் கொடுத்து அனுப்பினார்கள்.”
ஆனால், மூக்கு வலி தொடர்கதையாகவே நீடித்துள்ளது. குறிப்பாக மழைக்காலத்தில் வலி அதிகரித்து, மூச்சு விடவே தங்கள் மகன் சிரமப்பட்டதாக சூர்யா கூறுகிறார்.
“வசதி இல்லாத காரணத்தால் பெரிய மருத்துவமனைக்கு எங்களால் செல்ல முடியுவில்லை. ஆகவே நாங்களும் சிறிது காலம் போகட்டும், அதுவே சரியாகிவிடும் என்று நினைத்து விட்டுவிட்டோம். ஆனால், எங்கள் மகன் மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டே இருந்ததைக் கண்களால் பார்க்க முடியாமல் தவித்தோம்,” என்கிறார் சூர்யா.
முதல் வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்புக்குச் சென்ற ராஜேஷுடன் படிக்கும் சிறுவர்கள் அவனுடன் விளையாடவே மறுத்துள்ளனர். பள்ளியில் அவனுக்கு அருகில் அமர்வதைக்கூட சக மாணவர்கள் தவிர்த்துள்ளனர்.
“இதனால் வேதனைப்பட்ட என் மகன் தினமும் இதுபற்றிக் கூறி எங்களிடம் அழுவான்,” என்று கூறிய சூர்யா, இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் ஒருநாள் எங்களை அழைத்துப் பேசியதாகவும் தெரிவித்தார்.

அப்போது, ராஜேஷ் மீது நாற்றமடிப்பதாகவும் குறிப்பாக மூக்கிலிருந்து அடிக்கடி சீழ் வடிவதாகவும் மாணவர்கள் கூறுவதாக ஆசிரியர்கள் தெரிவித்ததாகக் கூறுகிறார் சூர்யா.
மேலும் இதை உடனடியாகச் சரி செய்யுமாறு வலியுறுத்திய ஆசிரியர்கள், இப்படியே விட்டால் மகனின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, “உடனடியாக நாங்கள் எங்கள் ஊருக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றோம். ஆனால் அங்கும் சொட்டு மருந்தையும் மாத்திரைகளையும் மட்டுமே கொடுத்தார்கள்.
நாங்கள் செய்வதறியாது தவித்த நேரத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்த எங்கள் உறவினர் ஒருவர், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தார்கள்.”
ஆனால், ராஜேஷின் தாயாருக்கு அதில் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. சந்தேகத்துடனேயே தனது மகனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர் கணேஷ் ராஜாவிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது ராஜேஷின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மருத்துவர் கணேஷ் ராஜா விரிவாகக் கேட்டறிந்ததாக சூர்யா தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூக்கில் குத்திய குச்சி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தனது மகனின் மூக்கில் குச்சியைக் கொண்டு குத்திக் கொண்டதாகக் கூறியதாகவும் சொட்டு மருந்து பயன்படுத்தினாலே சரியாகிவிடும் என்று தாங்கள் அலட்சியமாக இருந்துவிட்டதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து அவ்வப்போது மகனுக்கு ஏற்படும் மூக்கு வலி குறித்தும் அவர் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். இப்போது மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் ஒரு மூக்கின் வழியாக மட்டுமே அவனால் மூச்சுவிட முடிவதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.
ராஜேஷை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
“நாங்கள் மருத்துவரின் அறிவுரையை ஏற்று மகனை அங்கு அனுமதித்தோம்.”

மூக்கில் சிக்கியிருந்த மர்ம பொருளை காட்டிய சிடி ஸ்கேன்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் மருத்துவர் வாசவி, தானும் மருத்துவக் குழுவும் ராஜேஷின் மூக்குப் பகுதியை ஆய்வு செய்தபோது, எண்டோஸ்கோப்பி வழியாக மூக்கின் உள் பகுதியில் ஏதோ மர்ம பொருள் கருப்பாக இருந்தது தெரிய வந்தது என்று ராஜேஷ் குறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது கூறினார்.
“ஆனால், சிறுவனாக இருந்ததால் எண்டோஸ்கோப் கருவியை முழுவதுமாகப் பயன்படுத்த முடியவில்லை. உடனடியாக சிடி ஸ்கேன் மூலமாக ஆய்வு செதோம். அப்போது மூக்கினுள் ஏதோ மர்ம பொருள் இருப்பது உறுதியானது,” என்று கூறினார்.
சிறுவனின் பிரச்னைக்கான காரணம் தெரிந்ததும், உடனடியாக மயக்க மருத்துவர்கள் குழு, காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள், அறுவை சிகிச்சைக் குழுவினர் இணைந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள செய்ய முடிவு செய்யப்பட்டது,” என்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் உஷா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“முதலில் சிறுவனின் மூக்கிலிருந்து வரும் துர்நாற்றம் எவ்வாறு வருகிறது என்றும் சளித் தொல்லையிலிருந்து அவனை முழுமையாகக் குணப்படுத்துவதிலும் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டது,” என்றும் முதல்வர் உஷா தெரிவித்தார்.
சிறுவன் மூக்கில் சிக்கியிருந்த மூன்று பேட்டரிகள்

இவற்றைச் சரிசெய்த பிறகு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மூலம் மூக்கில் சிக்கியிருந்த மர்மப் பொருளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
“உடனடியாக நாங்கள் முழுமையாக அந்தப் பொருளை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் அந்த மர்ம கருப்புப் பொருளை அகற்றிப் பார்த்தபோது அது பொம்மைகளில் பயன்படுத்தப்படும் சிறு பேட்டரி எனத் தெரிய வந்தது,” என்கிறார் உதவிப் பேராசிரியர் வாசவி.
“அறுவை சிகிச்சை செய்யப்படும் வரைக்கும் மூக்கினுள் மர்ம பொருள் ஏதோ இருந்தது என்பது மட்டுமே எங்களுக்குத் தெரிந்திருந்தது.
அதை அகற்றி வெளியே எடுக்கும்போதுதான் அவை விளையாட்டுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மிகச் சிறிய அளவிலான மூன்று பேட்டரிகள் எனத் தெரிய வந்தது,” என்று விவரித்தார் மருத்துவர் உஷா.
சிறுவன் குச்சியால் தனது மூக்கில் குத்திக்கொண்டதாக மட்டுமே பெற்றோரிடம் கூறியிருந்த காரணத்தால் பொம்மைகளில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் சிறுவனின் மூக்கினுள் இருந்தது பெற்றோருக்குத் தெரியாமலே போய்விட்டது.
இந்த அறுவை சிகிச்சையின் மூலம் பேட்டரிகளை அகற்றிய பிறகு, சிறுவன் ராஜேஷுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கி ஜூலை 3ஆம் தேதியன்று டிஸ்சார்ஜ் செய்ததாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் உஷா தெரிவித்தார்.
“நான் ஒருமுறை விளையாடிக் கொண்டிருந்தபோது பொம்மையில் இருந்த பேட்டரியை வெளியே எடுத்து விளையாடினேன். அப்போது அதை எப்படி மூக்கில் போட்டேன் என்று நினைவில்லை. ஆனால், அதை மூக்கில் இருந்து வெளியே எடுக்க குச்சியை வைத்துக் குத்தியது நினைவில் உள்ளது,” என்று சிறுவன் ராஜேஷ் நடந்த சம்பவம் குறித்து தனக்கு நினைவில் இருந்த வரை கூறியுள்ளார்.
குழந்தைகளை கண்காணிப்பில் வைப்பது அவசியம்
பெற்றோர் கவனமாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க முடியும் என்று சிறுவன் ராஜேஷ் சம்பவத்தை மேற்கோள் காட்டிக் கூறுகிறார் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் மருத்துவர் வாசவி.
ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகள் மத்தியில் சிறிய பொருட்களை விழுங்கும் நிகழ்வு அதிகமாக நடக்கும் என்கிறார் சிறுவன் ராஜேஷுக்கு அறுவை சிகிச்சை செய்த குழுவில் ஒருவரான குழந்தைகள் நல மருத்துவர் செந்தில் ராஜா.

குறிப்பாக, “சட்டைகளில் இருக்கும் பொத்தான்கள், ஊசி, பொம்மைகளில் இருக்கும் சிறிய பேட்டரிகள், கழுத்தில் அணிந்துள்ள மணித்துண்டுகள், கற்கள் போன்றவற்றை குழந்தைகள் அதிகமாக விழுங்கிவிடுவார்கள்.
குழந்தைகளிடையே வாயில் போட்டுக் கொள்வது, காதில் போட்டுக்கொள்வது, மூக்கில் திணிப்பது போன்ற பழக்கங்கள் உண்டு. ஆகவே பெற்றோர்கள் மிகக் கவனமாக குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டியது அவசியம்,” என்றும் அவர் எச்சரித்தார்.
அதுமட்டுமின்றி தற்போதைய காலகட்டத்தில், “ஐந்து வயது வரையிலுமே குழந்தைகளைக் கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியமாகிறது. ஏனெனில் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாடுவதில் காட்டும் ஆர்வத்தைவிட, அவற்றைப் உடைத்து அல்லது பிரித்து ஆராய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
எனவே எலக்ட்ரானிக் வகை பொம்மைகளை இந்த வயது குழந்தைகளிடம் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது,” என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

“காதிலோ மூக்கிலோ குழந்தைகள் சிறு பொருட்களைப் போட்டுவிட்டால், அடிக்கடி வலி ஏற்பட்டு அழுவார்கள். அப்போது அவர்களின் வலியை அலட்சியப்படுத்தாமல் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
மூக்கில் போட்டுக்கொண்டால், சளித்தொல்லை, மூச்சுத் திணறல் ஏற்படும். அதன்மூலம் அதை அறியலாம். வாயில் எதையாவது போட்டுவிட்டால் பெரிய மூச்சுக் குழாய் அல்லது சிறிய மூச்சுக் குழாய் பகுதியில் சென்றுவிடும். இதனால் நிமோனியா காய்ச்சல் ஏற்படும், அடிக்கடி இருமல், சளி ஏற்பட்டு காய்ச்சலால் அவதிப்படுவார்கள்.”
இத்தகைய அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை உடனே குழந்தைகள் நல மருத்துவரிடம் கொண்டு சென்று சிடி ஸ்கேன் போன்றவற்றின் மூலம் ஆய்வு செய்து சிகிச்சையை மேற்கொள்ளலாம் எனவும் கூறுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் செந்தில் ராஜா.
குழந்தைகளின் வலியை பெற்றோர் கவனமாக கையாள வேண்டும்

ஆரோக்கியமாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு திடீரென வலியால் அழுதல், காய்ச்சல் வருதல் போன்றவை நிகழ்ந்தால், பெற்றோர்கள் அவர்களைக் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் மருத்துவர் செந்தில் ராஜா வலியுறுத்துகிறார்.
ஏனெனில், “விளையாடும்போது தேவையற்ற பொருட்களை விழுங்கினாலும் இத்தகைய தொல்லைகள் ஏற்படும். அதேபோல், குழந்தைகளால் விழுங்க முடியாத மரத்தில் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளே குழந்தைகள் விளையாட நல்லது,” என்றும் அவர் கூறுகிறார்.
இதற்கிடையே மருத்துவர் செந்தில் ராஜா கூறிய அறிவுரைகளைக் கேட்டுக்கொண்டிருந்த தனது பெற்றோரிடம் விரைவாகக் கிளம்பலாம் எனக் கூறி அடம்பிடித்துக் கொண்டிருந்தான் முற்றிலும் குணமடைந்து விளையாடத் தயாராக இருந்த சிறுவன் ராஜேஷ்.
இரண்டு ஆண்டுகளாக மற்ற சிறுவர்களுடன் ஒன்றுகூடி விளையாட முடியாமல், மூக்கு வலியால் துடித்துக் கொண்டிருந்த ராஜேஷின் கண்களில் இனி விளையாடித் தீர்க்க வேண்டும் என்ற ஆவல் நிரம்பி வழிந்தது அவனது முகத்தில் தெரிந்த உற்சாகத்தின் வழியே புரிந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












