பெண்களின் வேலையை பறித்து வீட்டில் முடக்கும் திருமண வாழ்க்கை - யார் காரணம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆதரஷ் ரதோர்
- பதவி, பிபிசி இந்திக்காக
அவர் நல்ல சம்பளம் வாங்கினார். வேலையும் அவருக்குப் பிடித்திருந்தது. ஆனால் திருமணமான ஒரு வருடத்தில் வேலையை விட்டுவிட்டார்.
“என் கணவர் குர்கானில் உள்ள ஒரு வாகன தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அவருக்கு வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதற்காக அவர் ஜெய்ப்பூர் செல்ல வேண்டியிருந்தது.
அதை நினைத்து அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வேலையை விட்டுவிட்டு அவருடன் ஜெய்ப்பூர் செல்வதாக முடிவு செய்தேன்,” என்கிறார் அவர்.
ஸ்மிருதி ஓர் உயர் கல்வி நிறுவனத்தில் பொறியியல் படித்து, கடின உழைப்புக்குப் பிறகு தனது பணி வாழ்வில் நல்ல நிலையை அடைந்திருந்தார். ஆனால், கணவரின் தொழில், மகிழ்ச்சி என்று வரும்போது, தன் தொழிலையும், மகிழ்ச்சியையும் தியாகம் செய்தார்.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஆண்களைவிட பெண்களே கல்வியில் முன்னோடியாக இருந்தாலும், வேலை மற்றும் வேலைவாய்ப்பில் அவர்கள் பெரும்பாலும் பின்தங்கியே இருக்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகு ஒருவரின் வேலை அல்லது தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது, பெண்கள் பெரும்பாலும் தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.
உலகளாவிய ஆலோசனை நிறுவனமான டெலாய்ட்டின் 'Women at Work 2023' அறிக்கைக்காக ஆராய்ச்சியாளர்கள் 10 நாடுகளில் 5000 பெண்களிடம் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 98% பெண்கள் ஆண் துணையுடன் வாழ்பவர்கள்.
இவர்களில் 40% பெண்கள் தங்கள் கணவர் அல்லது ஆண் துணையின் தொழிலையே முக்கியமாகக் கருதுவதாக அந்தக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
ஆண்கள், பெண்களுக்கு இடையே வருமான இடைவெளி

பட மூலாதாரம், Getty Images
இதற்குப் பெண்கள் பல காரணங்களை கூறினர்.
சில காரணங்கள் பொருளாதாரம் சார்ந்தவை, மற்றவை சமூகம் சார்ந்தவை.
வீட்டுப் பொறுப்புகளைக் கவனிப்பது, குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக் கொள்வது ஆகியவை இதில் அடங்கும். ஆனால் இந்த ஆய்வில் மற்றொரு மிகப் பெரிய காரணம் வெளிப்பட்டது - அவர்களின் ஆண் துணை அவர்களைவிட அதிகம் சம்பாதிக்கிறார்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை, ஏனென்றால் ஆண்கள் சம்பாதிக்கும் 1 ரூபாயுடன் ஒப்பிடும்போது உலகெங்கிலும் உள்ள பெண்கள் 77 பைசா மட்டுமே சம்பாதிக்கிறார்கள் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
டெலாய்ட் நிறுவனத்தில் உலகளாவிய பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய துறைகளின் தலைவராக இருக்கும் எம்மா காட் இவ்வாறு கூறுகிறார், "வருமானத்தில் வேறுபாடு இருக்கும்போது, கடினமான சுழ்நிலைகளில் குறைவாகச் சம்பாதிப்பவர் பின்தங்கிவிடுவது இயற்கையானதுதான்.”
நியூயார்க் நகரத்தில் உள்ள ஹண்டர் கல்லூரியின் சமூக அறிவியல் பேராசிரியை பமீலா ஸ்டோன் இப்படிக் கூறுகிறார், “பெண்கள் தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்களோ அல்லது அவர்கள் பிற்போக்கானவர்களோ இல்லை. ஆனால் கணவன்-மனைவிக்கு இடையில் யாருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று பார்க்கிறார்கள்.
நல்ல வாய்ப்புகளைப் பார்த்து, பெண்ணுக்குப் பதிலாக ஆணின் தொழிலில் நம்பிக்கை வைக்கிறார்கள். இது பாலின அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடு அன்றி வேறில்லை.”
ஆனாலும், கணவனின் வருமானத்துடன் ஒப்பிடும்போது பெண்களின் வருமானம் அதிகரிக்கத் தொடங்கினாலும், கணவனின் தொழிலை விட அவர்களின் தொழில் முன்னுரிமை பெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
டெலாய்ட் அறிக்கை, பெண்கள் ஆண்களை விட அதிகமாகச் சம்பாதித்தாலும், தங்கள் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிகழ்வுகள் பலவற்றைக் குறிப்பிடுகிறது. 10 பெண்களில் ஒருவர் தங்கள் ஆண் துணையை விட அதிகமாகச் சம்பாதித்தார். ஆனால் அவர்களில் 20% பேர் தங்கள் ஆண் துணையின் தொழிலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர்.
“இந்தப் புள்ளிவிவரங்கள் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தன. அதன் பின்னணியில் கலாச்சார காரணங்கள் இருக்கலாம்,” என்கிறார் எம்மா கோட்.

பட மூலாதாரம், Getty Images
தில்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் சரோஜினி நாயுடு மகளிர் ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியரான டாக்டர் பிர்தௌஸ் அஸ்மத் சித்திக்கி, வெளித்தோற்றம் மாறியிருந்தாலும் பாலினச் சமத்துவத்தில் பெண்கள் இன்னும் பின்தங்கியே உள்ளனர் என்று கூறுகிறார்.
“இப்போது இந்தியாவில் உள்ள பெற்றோர்கள், தங்கள் மகள்களின் உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்கான ஒரு காரணம் அவர்களது திருமணத்திற்குச் சிறந்த வாய்ப்பினை உருவாக்குவது. முன்பெல்லாம் பெண்கள் அழகாகவும் இருக்கவெண்டும், வீட்டு வேலைகளைத் திறமையாகச் செய்யவேண்டும் என்ற நிபந்தனைகள் இருந்தன. ஆனால் இப்போது கல்வியும் கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்நிலையில், மகளுக்கு நல்ல வரன் தேவை என்றால், அதற்கு ஏற்றாற்போல் மகளை படிக்க வைக்க வேண்டும் என்ற அழுத்தம் பெற்றோர்களிடம் உள்ளது,” என்கிறார் சித்திக்கி.
மேலும் விளக்கிய அவர், ஆரம்பத்திலிருந்தே பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் கணவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் சமூகத்தால் உருவாக்கப்பட்ட ‘குடும்ப விழுமியங்களைப்’ பின்பற்றுகிறார்கள் என்கிறார் டாக்டர் சித்திக்கி. “வீடு, குடும்பம் மற்றும் குழந்தைகளின் கவனிப்புக்கு பெண்கள் முன்னுரிமை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்டச் சூழ்நிலையில், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் தொழிலில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும்.
'பாரம்பரிய பாலினப் பாகுபாட்டுச் சிந்தனைகள் இன்னும் தொடர்கின்றன'

பட மூலாதாரம், Getty Images
பேராசிரியர் பமீலா ஸ்டோனும் அவருடன் பணிபுரிபவர்களும் ஹார்வர்ட் தொழில் பள்ளியில் படிக்கும் வெவ்வேறு வயதினரைச் சேர்ந்த 25,000க்கும் மேற்பட்டவர்களிடம் ஒரு ஆய்வு நடத்தினர்.
அவர்கள் பேசிய பெரும்பாலான பெண்கள் ஆண்-பெண் சமத்துவம் இருக்கும் திருமணத்தையே எதிர்பார்க்கிறார்கள் என்று அவர்கள் கண்டறிந்தனர். இத்தகைய திருமணங்களில் கணவன் மனைவி இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். பாதிக்கும் மேற்பட்ட ஆண்கள் தங்கள் மனைவியின் தொழில் வாழ்வைவிடத் தங்கள் தொழில் வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
ஆண்கள் வருமான ஆதாரமாக இருக்கும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். அதற்குப் பொருள் அவர்கள் பணம் சம்பாதிப்பவர்கள் என்பது மட்டுமல்ல. அவர்களது பெண் துணையை விட அவர்கள் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற அழுத்தமும் அவர்கள்மேல் உள்ளது.
பிரிட்டனின் பாத் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, ஆண்களின் மனநலம் அவர்கள் தங்கள் பெண் துணையை விட அதிக வருமானம் ஈட்டுவதைச் சார்ந்தும் இருக்கிறது என்கிறது.
2023-ம் ஆண்டில் பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) நடத்திய ஆய்வில், ஒரு ஜோடியில் ஆணும் பெண்ணும் அதே அளவு வருமானம் ஈட்டினாலும், அவர்கள் பாரம்பரியமான பாலினப் பாகுபாடு சார்ந்த சிந்தனா வழிகளையே பின்பற்றுகிறார்கள் என்பது தெரியவந்தது. ஆண்கள் பணம் சம்பாதிப்பதிலும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள், பெண்கள் வீட்டு வேலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றில் மூழ்கியுள்ளனர்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் இணைப் பேராசிரியர் டாக்டர் சித்திக்கியின் கருத்துப்படி, திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் தன் வேலைக்கு முன்னுரிமை கொடுத்தால், அவளுக்கு வேறு வகையான சமூக நெருக்கடி உருவாகத் தொடங்குகிறது.
“பெண்களைக் குறிவைத்து, மேற்கத்தியமயமாக்கல் நடைபெறுவதாகவும், குடும்பங்கள் உடைந்து வருவதாகவும், விவாகரத்துகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் ஆண்கள் சமூக மாற்றத்திற்குத் தயாராக இல்லாததாலேயே இவையெல்லாம் நடக்கின்றன. வேலை முடிந்து திரும்பும் போது மனைவி தேநீருடன் தயாராக இருக்க வேண்டும் என்று ஆண்கள் விரும்புகின்றனர்,” என்கிறார் அவர்.
பெண்களை அழுத்தும் இரட்டை பணிச்சுமை

பட மூலாதாரம், Getty Images
பெண்களும் சில சமயங்களில் தங்கள் தொழிலுக்கு குறைவான முக்கியத்துவம் கொடுப்பார்கள். சில நேரங்களில், உறவில் கருத்து வேறுபாடு ஏற்படாமலிருக்க அவர்கள் தெரிந்தே இதைச் செய்கிறார்கள்.
தங்கள் தொழிலை எப்போது குறைத்து மதிப்பிட ஆரம்பிக்கிறார்கள் என்பதை அவர்கள் உணராததால், பல சமயங்களில் இது தெரியாமல் நடக்கிறது.
டெலாய்ட் நிர்வாகி எம்மா கோட் கூறுகையில், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சமூகத்தின் தரநிலைகளில் மக்கள் சிக்கிக் கொள்கிறார்கள், இது தெரியாமல் நடக்கும் ஒன்று, என்கிறார்.
டெலாய்ட் அறிக்கையின்படி, அவர்களது ஆய்வில் பங்கேற்ற 88 பெண்கள் முழுநேர வேலை செய்தாலும், அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வீட்டு வேலைகளையும், குழந்தைகளையோ முதியவர்களையோ பராமரித்தல் போன்ற பொறுப்புகளையும் சுமக்க வேண்டியிருக்கிறது. 10% பேர் மட்டுமே இந்த பொறுப்புகளை தங்கள் ஆண் கூட்டாளிகள் கையாள்வதாக கூறியுள்ளனர்.
எம்மா காடின் கூற்றுப்படி: “தொழில்முறையில் முன்னேறிச் செல்வது என்பது அலுவலகத்திற்கு வந்து உங்கள் வேலையைச் செய்வது மட்டும் அல்ல. இதற்கு நீங்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் பெண்கள் அலுவலக வேலைகளை முடிந்துவிட்டு வீட்டிலும் வேலை செய்ய வேண்டியுள்ளது. வார இறுதி நாட்களில் கூட. இதனால் சோர்வு மற்றும் சோர்வு, அழுத்தம் ஆகியவை உண்டாகின்றன. தொழில்முறையில் முன்னேறுவதற்கான ஆற்றல் அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது."
பேராசிரியர் சித்திக்கி, தானும் தனது கணவரும் வேலை செய்வதாகக் கூறுகிறார். அவர்கள் வீட்டு வேலைகளை ஒன்றாகச் செய்கிறார்கள் என்று கூறுகிறார். ஆனால் இது எல்லா வீடுகளிலும் நடப்பதில்லை.
அவர் கூறுகிறார், “தனிக்குடும்பங்களில், கணவனும் மனைவியும் ஒன்றாகத் திட்டமிடுவதால், அவர்கள் பெண்ணின் தொழில் வாழ்க்கையையும் கவனத்தில் கொள்கிறார்கள். ஆனால் மற்ற உறவினர்களின் கருத்து முடிவுகளை பாதிக்கும்போது, பெண்கள் தங்கள் விருப்பங்களையும் ஆசைகளையும் அடக்க வேண்டியுள்ளது."
பெண்களின் தொழில் வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படாதது வருத்தமளிக்கிறது என்று சித்திக்கி கூறுகிறார். "வருந்தத்தக்க வகையில், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்தக்கூடிய பெண்களின் திறனை நாம் வீணடித்துவிட்டோம்."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












