அரசியலில் ஆண்களே தொடர்ந்து கோலோச்சுவது ஏன்? பெண்கள் பின்தங்குவது எங்கே?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
பெண் தலைவரை அவமதித்ததற்காக, தமிழ்நாட்டில் தென்காசி தெற்கு திமுக மாவட்டச் செயலாளர் பொ.சிவபத்மநாதனை ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை நீக்கியுள்ளது.
திமுகவின் தலைமை அவரை ஏன் நீக்கியது?
கடந்த 24ஆம் தேதி தென்காசியில் திமுக மகளிர் அணி சார்பாக மணிப்பூர் வன்முறையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மகளிர் அணியின் பொறுப்பாளரும் தென்காசி ஊராட்சித் தலைவருமான தமிழ்செல்வி மற்றும் மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதனுக்கு இடையில் பொதுவெளியில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கட்சிக்குள் பெண்களுக்கு மரியாதை வழங்கப்படாத நிலையில், மணிப்பூர் பெண்களுக்காக ஏன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார் என பொதுக்கூட்ட மேடையிலேயே தமிழ்செல்வி கேள்வி எழுப்பியது சர்ச்சையாகியுள்ளது.
ஏற்கெனவே, கட்சி நிர்வாகி ஒருவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசிய ஆடியோவை ஊராட்சித் தலைவர் மாவட்டச் செயலாளரிடம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து விசாரித்த கட்சியின் தலைமை, தென்காசியின் தெற்கு மாவட்டச் செயலாளரை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டது.
பெண்களுக்கு வீடுகளுக்கு உள்ளேயும் பொதுவெளியிலும் சம வாய்ப்புகளும் உரிமைகளும் பல்வேறு வகையில் மறுக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்டவர் மீது ஆளுங்கட்சியான திமுக நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், ஆணாதிக்க சமூகத்தின் ஓர் அம்சமாகவே மேற்குறிப்பிட்ட சம்பவத்தைப் பார்க்க முடியும்.
பெண் பிரதமரும், பெண் குடியரசுத் தலைவரும் போதுமா?
இந்தியாவில் ஒரு பெண் பிரதமராக இருந்திருக்கிறார், தற்போது குடியரசுத் தலைவர் பெண்ணாக உள்ளார்.
உத்தர பிரதேசத்தில் மாயாவதி, ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே, பிகாரில் ராப்ரி தேவி, டெல்லியில் ஷீலா தீட்சித், சுஷ்மா ஸ்வராஜ், தமிழ்நாட்டில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மாநில முதல்வர்களாக இருந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
தற்போது மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி முதல்வராக உள்ளார். இப்படி அரசாங்கத்தின் தலையாய பொறுப்புகளில் பெண்கள் இருந்திருந்தாலும்கூட, இப்படி எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடும்படி இருப்போர் வெகு சிலர் மட்டுமே.
இத்தனை ஆண்டுகளில் இந்திய அரசியலில் பெண் பிரதிநிதிகள் இருப்பது தற்போது ஆச்சர்யம் இல்லை. ஆனால் பெண்களின் முழுமையான பங்கேற்பு என்பது இன்னமும் எட்டப்பட வேண்டிய இலக்கு.
அந்த இலக்கை அடைவதற்கு முன் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை பல்வேறு வகையான சவால்கள் பெண்களை எதிர்த்து நிற்கின்றன.
உட்கட்சியில் பெண்களுக்கு பொறுப்பு வழங்குவதில் பாகுபாடுகள், பெண்களின் கருத்துகளைப் புறந்தள்ளுவது, முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக பெண்கள் இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படாமல் ஓரங்கட்டப்படுவது, கட்சி மேடைகளில் பேசுவதற்கு இடம் தராதது, பொதுக் கூட்டங்களில், பிரசாரங்களில் கூட்ட நெரிசலில் உடலியல் துன்புறுத்தல்கள், பாலியல் சீண்டல்கள், மிரட்டல்கள் எனப் பல்வேறு சவால்களையும் தாண்டியே பெண்கள் அரசியலில் தங்கள் இருப்பை நிலை நிறுத்தி வருகின்றனர்.
பெண் தலைவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா?

பட மூலாதாரம், Getty Images
திமுகவில் நடந்திருப்பதை இங்கே குறிப்பிட்டிருந்தாலும் கட்சி பேதமின்றி அனைத்து இடங்களிலும் இதுபோன்ற சிக்கல்கள் பெண்களுக்கு இருக்கத்தான் செய்கின்றன.
கட்சித் தலைமை தன்னை ஓரங்கட்டுவதற்கு எதிராகப் போராடி வரும் கேரளாவின் மூத்த பாஜக தலைவர் ஷோபா சுரேந்திரன், “கட்சி எனக்கும் உரியது தான்” எனத் தெரிவித்திருந்தார்.
மதிப்புமிக்க மகசேசே விருது, கொரோனா காலத்தை திறம்பட கையாண்ட கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சருக்கு வழங்கப்பட்டபோது, கட்சி அறிவுறுத்தல்கள் படி அவர் அந்த விருதை நிராகரிக்க வேண்டியிருந்தது.
கூட்டு முயற்சிக்கு தனிநபர் விருது பெறுவது சரியல்ல என்பதும், பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ராமன் மகசேசே கம்யூனிசத்துக்கு எதிரான கருத்துகள் கொண்டிருந்தவர் என்பவை காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், பலரது மத்தியில் இந்த முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியது. அவருக்கு அமைச்சரவையிலும் இடம் மறுக்கப்பட்டது.
அதேபோல, தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சகோதரி கனிமொழியிடம் சுமூகமான உறவுடன் இருப்பது, அவர் மீதான தன் அன்பை பல தருணங்களில் வெளிப்படுத்தி வருவது போன்றவை இருந்தாலும், கடந்த ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருந்த கனிமொழி, தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
கட்சியில் அடுத்த தலைவராக உதயநிதி ஸ்டாலின் உயர்த்தப்படும்போது, அவரைவிட மூத்த தலைவரான கனிமொழி, தூத்துக்குடி தொகுதிக்கும் டெல்லிக்கும் என தன்னை சுருக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல், மற்றொரு சான்று குஷ்பு. திமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகளில் பணியாற்றியிருக்கும் அவர் சிறந்த பேச்சாளரும் பிரசாரகரும் ஆவார். அவர் கட்சியின் முகமாக, செய்தித் தொடர்பாளர் பொறுப்புகளில் இருந்தபோதும், நாடாளுமன்ற அரசியலில் தனது பங்கை செலுத்தும் வாய்ப்பை பலமுறை இழந்திருக்கிறார்.
சட்டமன்றங்களில் சரி பாதி பெண்கள் இருந்தால் என்ன தவறு?

ஒரு பெண் அரசியலுக்கு வருவதற்கும் ஓர் ஆண் அரசியலுக்கு வருவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன என கேரள பாஜக மூத்த தலைவரும் பாஜகவின் முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஷோபா சுரேந்திரன், பிபிசி தமிழிடம் விளக்கி பேசினார்.
“ஒரு பெண் முதலில் வீட்டைத் தாண்ட வேண்டும், பிறகு சமூகத்தை எதிர்கொள்ள வேண்டும், இவற்றைத் தாண்டி கட்சிக்குள் வரும்போது, அந்தப் பெண்ணை சரியாக நடத்த வேண்டும்.
ஒரு ஆண் அலுவலகத்துக்கு வரும்போது அவனுக்கு வீட்டில் எல்லா வேலைகளையும் செய்துகொடுக்க மனைவி, மகள்கள் இருப்பார்கள். ஆனால் பெண் வரும்போது அவள் இரண்டு வேலைகள் பார்க்கிறாள் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்,” என்கிறார்.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பெண்களுக்கு தருவதில்லையா?
உள்ளாட்சித் தேர்தல்களில் 50% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் போது, சட்டமன்றத்தில் சரி பாதி பெண்கள் அமர்ந்தால் என்ன தவறு என ஷோபா சுரேந்திரன் கேள்வி எழுப்புகிறார்.
“பிருந்தா காரத், ஆனி ராஜா, சுஷ்மா ஸ்வராஜ், ஸ்மிருதி இரானி போன்ற பெயர்கள் போதாது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், நாடாளுமன்றத்தில் 33% பெண்கள் இருப்பதைக் காண விரும்புகிறேன்.
பாஜகவுக்குள் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் பெரிய பெண் தலைவர்கள் நின்று வெற்றி பெறுவதைக் காண விரும்புகிறேன். அரசியல் கட்சிகள் பெண்களுக்கு தேர்தலில் வெற்றி பெறும் தொகுதிகளைத் தருவதில்லை.
பெண்களை கட்சிகள் எப்படி நடத்துகின்றன என பெண்களும் சமூகத்தினரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு சம உரிமை வழங்கினால் மட்டுமே கட்சிகள் வெற்றி பெற முடியும், இந்தியாவில் மாற்றம் ஏற்படும்,” என்கிறார் அவர்.
பாஜகவுக்குள் பூத் கமிட்டிகள் முதல் மேல் நிலை வரை, அனைத்து நிலைகளிலும் 33% இடங்களை பெண்களுக்கு வழங்கும் நடைமுறை இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பெண் தானே, இவளுக்கு என்ன தெரியும்?

வட்ட மேசை கூட்டத்தில் பொம்மைகள் போல உட்கார வைப்பதற்காக பெண்களைப் பயன்படுத்தப்படக் கூடாது என்கிறார் ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்புத் தலைவர் அமிர்தா தவான் கூறுகிறார்.
அவர் பிபிசி தமிழிடம் பேசும்போது, “பெண்தானே, இவளுக்கு என்ன தெரியும்?” என்ற எண்ணம் ஆண்களுக்கு உண்டு. "அது மாறவேண்டும். பெண்களின் கருத்துகளுக்கு மரியாதை வழங்க வேண்டும்," என்று கூறுகிறார்.
மேலும், "என் பெற்றோர்கள் என்னை வளர்க்கும்போது நான் என் சகோதரனைவிட வலிமையானவள் எனக் கூறி வளர்க்கவில்லை. ஆனால் அவர்களுடைய நடவடிக்கைகள் மூலம் நானும் சகோதரரும் சமம் என்பதை உணர்த்தினார்கள்,” என்கிறார்.
ஆணாதிக்க சமூகத்திலிருந்து வருபவர்களே அரசியலில் இருப்பதால் வெகு சிலரே பரந்த கண்ணோட்டம் கொண்டவர்களாக உள்ளனர் என்றும் அவர் கூறுகிறார்.
“உயர் பொறுப்புகளில் இருப்பதால் பெண்களுக்கு துன்புறுத்தல்கள் , பாகுபாடுகள் இருக்காது எனக் கூறவே முடியாது. உயர் பொறுப்புகளில் இருக்கும் பெண்கள் அவர்கள் வழியில் அதைக் கையாண்டு வருகிறார்கள்.
சிலர் வெளியே சொல்வார்கள், சிலர் வெளியே சொல்ல மாட்டார்கள். வெளியே சொல்பவர்களை கவனம் ஈர்ப்பதற்காகச் சொல்வதாக விமர்சிக்கக் கூடாது, சொல்லாதவர்களை தைரியம் இல்லாதவர்கள் என்றும் விமர்சிக்கக் கூடாது,” என்கிறார் அவர்.
அரசியல் கட்சிகளிலும் பெண்களுக்கான உள்புகார் கமிட்டி அவசியமா?

பட மூலாதாரம், Getty Images
கட்சியினுள் பெண்களுக்கு துன்புறுத்தல்களோ வேறு பாதிப்புகளோ ஏற்பட்டால் அவர்கள் புகார் அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வழி வகை செய்யப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான பிருந்தா காரத் பிபிசி தமிழிடம் கூறினார்.
“பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தை நாங்கள் எங்கள் கட்சிக்குப் பொருத்தியுள்ளோம். சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் நிறுவனம், ஊழியர் என்ற உறவு கட்சிக்குள் இல்லை.
எனினும் கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்புகார் கமிட்டியை கட்சியின் அனைத்து நிலைகளிலும் அமைத்துள்ளோம். இதை அனைத்துக் கட்சிகளும் பின்பற்றி சட்டத்தின் அம்சங்களை தங்கள் அமைப்புகளுக்கு ஏற்றவாறு பொருத்திக் கொள்ள வேண்டும். இது கட்டாயமாக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
பெண் பொறுப்புக்கு வந்தால் சமரசம் செய்திருப்பாள் என ஏன் பேசவேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
அரசியலில் தங்களுக்கான இடத்தை பெண்கள் சண்டைப் போட்டுத் தான் பெறவேண்டும் என்கிறார், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு.
“பாலியல் தொல்லைகள் பெரும்பாலும் கட்சிக்குள் இருக்காது என்றாலும் பேருந்தில் எப்படி பெண்களுக்கு உரிய இடத்தை ஆண்கள் அவர்களுக்குத் தரமாட்டார்களோ அதேபோன்ற பிரச்னைகள் உள்ளன.
ஏனென்றால் ஆண்கள் பொதுவாகவே அச்ச உணர்வுடன் இருப்பவர்கள். பெண்கள் அவர்களுக்கான இடத்தை சண்டை போட்டுத்தான் வாங்க வேண்டும். இது உங்கள் உரிமை. முதலில் உங்களுக்காக சண்டை போடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பிரசாரத்தின்போது ஒருமுறை என்னை ஒருவர் சீண்டியபோது, கூட்டத்திலேயே அடித்துவிட்டேன். ஆனால் எந்த சண்டையைப் போட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிந்துகொள்வதுதான் சாமர்த்தியம்,” என்கிறார்.
பெண்கள் பொறுப்புக்கு வரும்போது அதுகுறித்து ஏன் அவதூறாகப் பேசுகிறார்கள் என்றும் குஷ்பு கேள்வி எழுப்புகிறார்.
“எந்த அரசியல் கட்சியும் பெண்களை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பெண்கள் அரசியலுக்கு வரும்போது, அவர்கள் பொது சொத்தாக வரவில்லை, பொது சேவை செய்வதற்காகவே வருகிறார்கள்.
ஒரு பெண் ஒரு பொறுப்புக்கு வந்தால் அவள் ஏதாவது சமரசம் செய்திருப்பாள் என ஏன் பேசுகிறார்கள்? ஒரு ஆண் மற்றொரு ஆணைப் பார்த்து ஏன் இப்படிப் பேசுவதில்லை” என்றும் அவர் கேள்வியெழுப்புகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












