சோஃபியா துலீப் சிங்: பெண்களின் வாக்குரிமைக்காக பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடிய இந்திய இளவரசி

சோபியா துலீப் சிங்

பட மூலாதாரம், Sophia Dalip Singh

    • எழுதியவர், மெரில் செபாஸ்டியன்
    • பதவி, பிபிசி செய்திகள், கொச்சி

பிரிட்டனில் பெண்களுக்கு தேர்தலில் வாக்குரிமை வேண்டும் எனக் கோரி போராடிய இந்தியாவைச் சேர்ந்த இளவரசி ஒருவரை பற்றி நம்மில் பலர் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சோஃபியா துலீப் சிங் என்பவர் தான் அந்த இளவரசி.

1910இல், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நாடாளுமன்றத்தை நோக்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் பேரணி நடைபெற்றது. பெண்களுக்கு வாக்குரிமை வேண்டி நடைபெற்ற அந்த பேரணியில் பங்கேற்ற 300 பேரில் இளவரசி சோஃபியாவும் ஒருவர்.

பேரணியில் பங்கேற்றவர்கள் அப்போதைய பிரிட்டன் பிரதமர் ஹெச்.ஹெச். அஸ்கித்தை நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கையை முன்வைக்க முயன்றனர்.

ஆனால் அவர்களை சந்திக்க பிரதமர் மறுப்பு தெரிவிக்கவே, போராட்டம் வன்முறையாக மாறியது.

கருப்பு நாள்

நாடாளுமன்றத்துக்கு முன் கூடியிருந்த பெண்கள் மீது பிரிட்டிஷ் போலீசாரும், ஆண்களும் தாக்குதல் நடத்தினர். இதில் போராட்டத்தில் பங்கேற்ற பெண்களில் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் விளைவாக அந்த நாள் பிரிட்டன் அரசியல் வரலாற்றில் “கருப்பு நாள்“ என்று அழைக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 119 பெண்களில் சோஃபியாவும் ஒருவர். பஞ்சாபின் கடைசி சீக்கிய பேரரசரான சர் துலீப் சிங்கின் மகளான சோஃபியா, விக்டோரியா மகாராணியின் ஆசி பெற்றவராகவும் ( god daughter) திகழ்ந்தார்.

இதை, 1910 நவம்பரில் ஓர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் சோபிஃயா துலீப் சிங் பங்கேற்றபோது, அவர் ஒரு பிரபலத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய அனிதா ஆனந்த் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இந்திய இளவரசி சோஃபியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் இணைக்கப்படுவதற்கு முன், பஞ்சாபின் கடைசி சீக்கியப் பேரரசராக திகழ்ந்த துலீப் சிங்

சோஃபியாவின் வாழ்க்கை வரலாற்று நூல்

சோஃபியா குறித்து தற்போது அறியப்படும் தகவல்களில் பெரும்பாலானவை, அனிதா ஆனந்த் எழுதி, 2015 இல் வெளியான, ‘Sophia: Princess, Suffragette, Revolutionary’ என்ற அவரின் வாழ்க்கை சரிதத்தை விவரிக்கும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

ஆவண காப்பகங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்கள், காவல் துறை மற்றும் உளவுத் துறையின் பதிவுகள், சோஃபியா குறித்து நன்கு அறிந்தவர்கள் அளித்த தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அவரது வாழ்க்கை வரலாற்றை அனிதா ஆனந்த் புத்தகமாக எழுதியிருந்தார்.

துலீப் சிங் மற்றும் அவரின் முதல் மனைவியான பம்பா முல்லருக்கு மொத்தம் இருந்த ஆறு குழந்தைகளில், ஐந்தாவது குழந்தையாக 1876 இல் சோஃபியா பிறந்தார்.

முன்னதாக, 1849 இல் சோஃபியாவின் தந்தை துலீப் சிங் சிறுவராக இருந்தபோது இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டார். அத்துடன் அவரது தலைமையிலான சீக்கிய ராஜ்ஜியம், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்கப்பட்டது. மேலும் தண்டனை ஒப்பந்தத்தின்படி, விலைமதிப்பற்ற கோஹினூர் வைரமும் அப்போது பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரிட்டனின் சஃபோல்க் பகுதியில் தமது குடும்பத்தினருக்கு இருந்த வீட்டில் சோஃபியா வளர்ந்தார். ஆனால் அவரது குழந்தைப் பருவம் இனிமையாக அமையவில்லை.

‘தமது அரியணையை திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் சோஃபியாவின் தந்தை துலீப் சிங், 1886 இல் பிரான்ஸுக்கு நாடு கடத்தப்பட்டார். அத்துடன் கடன் சுமையின் காரணமாக அவர் தமது குடும்பத்தையும் கைவிட்டார்’ என்று அனிதா ஆனந்த் தமது நூலில் குறிப்பிடுகிறார்.

ஆனால், துலீப் சிங் குடும்பத்தினருக்கு விக்டோரியா மகாராணியுடன் இருந்த நெருங்கிய தொடர்பு, அவர்கள் பிரிட்டனில் வாழ்வதற்கு வீடு மற்றும் நிதியுதவியை பெற வழி வகுத்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒரு துறையாக இருந்து வந்த India Office மூலம் சோஃபியா குடும்பத்தினருக்கு இந்த உதவிகள் கிடைக்கப்பெற்றன.

சோஃபியா வளர்ந்து பெரியவர் ஆன பின்னர், விக்டோரியா மகாராணியின் கருணை மற்றும் ஆதரவின் பேரில், ஹாம்ப்டன் கோர்ட் அரண்மனை வளாகத்தில் அவருக்கு வீடு வழங்கப்பட்டது. அந்த வீட்டின் வெளியில் இருந்து தான் சில ஆண்டுகளுக்கு பிறகு, பெண்களுக்கு வாக்குரிமை கோரும் போராட்டத்தை சோஃபியா துவங்கினார்.

“ உயர் வர்த்தகத்தை சேர்ந்தவராக பிரிட்டனில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த எளிய அங்கீகாரத்துக்கும், இந்திய பெண்ணாக பிரிட்டனில் வாழ்வதில் தமக்கு இருக்கும் தெளிவற்ற நிலைக்குமான வேறுபாட்டை சோஃபியா தமது சிறுவயதில் இருந்தே உணர்ந்திருந்தார்” என்கிறார் வரலாற்று ஆசிரியரான எலிசபெத் பேக்கர்.’The British Women's Suffrage Campaign’ என்ற தமது புத்தகத்தில் இதுகுறித்து அவர் ஓர் அத்தியாயத்தை எழுதி உள்ளார்.

இளவரசியின் இந்திய விஜயம்

தமது வாழ்நாளில், சோஃபியா சுமார் நான்கு முறை இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். துலீப் சிங் குடும்பத்தினரின் இருப்பு, கருத்து வேறுபாடுகளை தூண்டலாம் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அச்சம் கொண்டிருந்ததால் அவரது ஒவ்வொரு இந்தியப் பயணத்தையும் பிரிட்டிஷ் அரசு உன்னிப்பாக கவனித்தது.

1906-07 ஆம் ஆண்டுவாக்கில், தமது இந்திய பயணத்தின் போது கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜ்பதி ராய் ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்களை சோஃபியா லாகூரில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) சந்தித்துப் பேசினார். அப்போது அரசியல் மீதான அவர்களின் நம்பிக்கை மற்றும் சுதந்திர வேட்கையை தூண்டும் அவர்களின் பேச்சுக்களால் சோஃபியா பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

பிரதமரின் காரை மறிந்த இளவரசி

“1907 ஆம் ஆண்டில் அவர் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இந்தியாவில் தங்கியிருந்தார். அப்போது அங்கு எழுந்த அரசியல் கிளர்ச்சிகளை அவர் நேரில் கண்டார். சுயநிர்ணயத்துக்காக இந்தியாவில் நடைபெற துவங்கிய போராட்டங்கள் அவரை பெரிதும் ஈர்த்தது” என்று தமது நூலில் குறிப்பிடுகிறார் அனிதா ஆனந்த்.

1908 இல் பிரிட்டனுக்கு திரும்பிய சில மாதங்களுக்கு பிறகு சோஃபியா, ‘பெண்கள் சமூக மற்றும் அரசியல் சங்கத்தில்’ இணைந்தார். இது பிரிட்டிஷ் அரசியல் ஆர்வலரான எம்மெலின் பன்குர்ஸ்ட் தலைமையிலான, பெண்களுக்கு வாக்குரிமை கோரி போராடி வந்த அமைப்பாகும்.

அதன் பிறகு அவர், ‘வாக்கு இல்லை என்றால் வரி இல்லை’ என்ற கோஷத்தை முன்வைத்து இயங்கி வந்த ‘பெண்கள் வரி எதிர்ப்பு சங்கத்திலும்’ இணைந்தார். இந்த இயக்கங்களில் சேர்ந்து மிகவும் வீரியத்துடன் செயலாற்றி வந்தார் சோஃபியா.

தனது போராட்டங்களின் உச்சமாக, 1911 இல் பெண்களுக்கு வாக்குரிமை கொடுங்கள் என்ற பொருள்படும்படியாக, "Give women the vote!" என்ற வார்த்தைகள் பொருந்திய பதாகையை ஏந்தியபடி, பிரிட்டனின் பெயர் பெற்ற டவுனிங் வீதியில் இருந்து அந்நாட்டு பிரதமரின் கார் புறப்பட்டபோது, அதனை வழிமறித்து கோஷம் எழுப்பினார்.

அத்துடன் அந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்யாததுடன், வரி செலுத்தவும் மறுத்துவிட்டார் இளவரசி சோஃபியா.

1913 இல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில், தான் வசித்து வந்த ஹாம்டன் கோர்ட் அரண்மனையின் வளாகத்துக்கு வெளியே, ‘புரட்சி’ என்று எழுதப்பட்டிருந்த பலகைக்கு அருகே நின்றப்படி, Suffragette நாளிதழின் பிரதிகளை சோஃபியா விற்பனை செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது.

“அந்த புகைப்படம் சோஃபியாவை 'Suffragette Week' என்ற முன்னெடுப்பின் முகமாக மாற்றியது. இது, ‘பெண்கள் சமூக மற்றும் அரசியல் சங்கத்தில்’ அதிக உறுப்பினர்களை சேர்ப்பதற்கும், பெண்களுக்கு வாக்குரிமை என்ற கோரிக்கையை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி” என்று வரலாற்று ஆசிரியரான பேக்கர் எழுதுகிறார்.

இந்திய இளவரசி சோஃபியா

பட மூலாதாரம், BRITISH LIBRARY

படக்குறிப்பு, இளவரசி சோஃபியா, The Suffragette நாளிதழின் பிரதிகளை விற்பனை செய்வதை விளக்கும் 1913 இவ் எடுக்கப்பட்ட புகைப்படம்

நகைகள் பறிமுதல்

பிரிட்டன் அரசு விதித்திருந்த சில வரிகளை செலுத்த தவறியதால் அதிகாரிகள் சோஃபியாவின் நகைகளை பறிமுதல் செய்தது மற்றும் அவற்றை ஏலம் விட்டது பற்றியும் பிரிட்டன் நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டன.

அத்துடன் பெண்களுக்கு வாக்குரிமை கோரி போராடியதற்காக சோஃபியா பலமுறை கைது செய்யப்பட்டார். ஆனால் பிற போராட்டக்காரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை போல் அல்லாமல், அவர் மீதான குற்றச்சாட்டுகளை போலீசார் எப்போதும் கைவிடும்படி ஆனது.

‘South Asian Resistances in Britain, 1858 - 1947’ என்ற தமது புத்தகத்தில் வரலாற்று ஆசிரியர் சுஷ்மிதா முகர்ஜி, பெண்களுக்கான வாக்குரிமை இயக்கத்தில் இருந்த முரண்பாடுகளை முன்னிலைப்படுத்த, அந்த இயக்கத்தில் சோஃபியாவுக்கு இருந்த ஈடுபாட்டை சுட்டிக்காட்டினார். இதையடுத்து அவரின் செயல்பாடுகள் மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

“சோஃபியாவின் தனிப்பட்ட மற்றும் நிதி தொடர்பான விஷயங்கள் குறித்து பத்திரிகைகளில் வெளியாகி இருந்த தகவல்களை பிரிட்டன் அரசு அதிகாரிகள் ராஜாங்க ரீதியான ஆவணங்களாக மாற்றினர். பிரிட்டனில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரின் அரசியல் பிரதிநிதியாக, சோஃபியாவின் தந்தையான துலீப் சிங்கின் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரிட்டன் அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது” என்கிறார் வரலாற்று ஆசிரியரான பேக்கர்.

“ தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை கோரி போராடிய இந்திய சமூக ஆர்வலர்களுக்கும், வெள்ளைநிற பிரிட்டிஷ் ஆர்வலர்களுக்கும் இடையே சோஃபியா ஓர் பாலமாக திகழ்ந்தார்” என்று வர்ணிக்கிறார் அவர்.

பிரிட்டனில் பெண்களுக்கு வாக்குரிமை

வாக்குரிமை கோரி நடைபெற்ற தொடர் போராட்டங்களின் பயனாக, முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள், தங்களது சொத்துக்கள் தொடர்பாக சில தகுதிகளை பெற்றிருந்தால் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டு என்று 1918 இல் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சட்ட சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் 10 ஆண்டுகளுக்கு பிறகு வாக்களிப்பதில் பெண்களுக்கு சம உரிமை கிடைக்க பெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், 1919 இல் சரோஜினி நாயுடு, அன்னி பெசன்ட் ஆகிய அரசியல் ஆர்வலர்களுடன் சேர்ந்து, லண்டனில் உள்ள இந்திய அலுவலக துறை அதிகாரிகளை சோஃபியா சந்தித்தார்.

சரோஜினி நாயுடு மற்றும் அன்னி பெசன்ட் தலைமையிலான இந்திய பெண்களின் பிரதிநிதிகள் குழு, பெண்களின் வாக்குரிமை குறித்த தங்களின் வாதங்களை துறை செயலாளரிடம் முன்வைத்தனர். அவர் அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தாரே தவிர, அதை நிறைவேற்றுவது தொடர்பாக எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை. ஆனால், நாடு சுதந்திரம் அடைந்ததும், இந்திய பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது.

ஜார்ஜ் மன்னரின் கோபம்

சோஃபியா மீதான கவனம், ‘வாக்குரிமைக்கு எதிரானவர்’ என்று கருதப்பட்ட ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை மிகவும் எரிச்சலடையச் செய்தது என்று எழுதியுள்ளார் அனிதா ஆனந்த். ஆனால் சோஃபியாவின் நிதி தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருந்ததால், மன்னரால் அவரை எதுவும் செய்ய இயலவில்லை என்றம் அனிதா குறிப்பிடுகிறார்.

பெண்களின் வாக்குரிமைக்காக போராடியதை தவிர, தன் வாழ்நாளில் இன்னும் பல நற்செயல்களை மேற்கொண்டார் இளவரசி சோஃபியா. அவற்றில் குறிப்பாக முதல் உலகப் போர் நடைபெற்றபோது, பிரிட்டனில் காயமடைந்த இந்திய வீரர்களுக்கு உதவியதுடன், அவர்களின் நலனுக்காக நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டார்.

இந்திய இளவரசி சோஃபியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதல் உலகப் போரின் போது காயமடைந்த இந்திய வீரர்களுக்கு நிதி திரட்டும் பணியில் சோஃபியா ஈடுபட்டார் (முன் வரிசையில் இடமிருந்து இரண்டாவதாக இருப்பவர்)

ஜாலியன் வாலாபாக்கிற்கு விஜயம் செய்த இளவரசி

அனிதா ஆனந்த் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பஞ்சாப் மாகாணம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நோக்கத்திடன் 1924 இல் இளவரசி சோஃபியா மீண்டும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

அப்போது அவர், தமது சகோதரி பம்பாவுடன் பழைய சீக்கிய சம்ராஜ்ஜியம் பரவிய இருந்த பகுதிகளுக்கு பயணித்தார். வழிநெடுங்கிலும் சோஃபியா மற்றும் பம்பாவை கண்டு வியந்த மக்கள், “எங்களின் இளவரசிகள் இங்கே தான் இருக்கிறார்கள்” என்று ஆனந்த கண்ணீர் மல்க கூறினர்.

1919 இல், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பிரிட்டிஷாரால் படுகொலை செய்யப்பட்ட ஜாலியன் வாலாபாக் உள்ளிட்ட இடங்களுக்கு அப்போது சோஃபியா பயணித்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது, அவர் தனது சகோதரி கேத்தரின் மற்றும் லண்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட மூன்று பேருடன் அங்கிருந்து பக்கிங்ஹாம்ஷயருக்கு சென்றார்.

இளவரசியின் மரணம்

சோஃபியாவின் கடைசி காலகட்டம் அவரது வாழ்க்கை துணை, வீட்டுப் பணிப்பெண்ணான ஜெனட் ஜவி பவுடனுடன் கழிந்தன. ஜெனட்டின் பெண் பிள்ளையான ட்ரோவ்னா சோஃபியாவின் ஆசிப் பெற்றவராக திகழ்ந்தார்.

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து சோஃபியா தம்மிடம் அடிக்கடி பேசுவார் என்று ட்ரோவ்னா, அனிதா ஆனந்திடம் கூறினார்.

“எவ்வளவு போராட்டங்களுக்கு பிறகு, பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தால், அந்த உரிமை உங்களுக்கு அளிக்கப்படும் போது அதை பயன்படுத்த தவறமாட்டீர்கள் என்றும் சோஃபியா தம்மிடம் கூறுவார்” என்று ட்ரோவ்னா தெரிவித்திருந்தார்.

1948 ஆகஸ்ட் 22 ஆம் தேதி, தமது 71 வது வயதில் சோஃபியா உறக்கத்திலேயே இறந்தார்.

அவரின் விருப்பப்படியே, சோஃபியாவின் அஸ்தியை அவரது சகோதரி பம்பாவால் லாகூருக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், அது எங்கு கரைக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் அவர் இன்றும் பலரால் அன்புடன் நினைவு கூரப்படுகிறார். குறிப்பாக பிரிட்டனில் இளவரசி சோஃபியாவை கௌரவிக்கும் வகையில் அங்கு அவர் முன்பு வாழ்ந்த வீட்டின் சுவரில் அவரின் பெயர் பொறித்த நினைவுச் சின்னம் இந்த ஆண்டு திறக்கப்பட்டது. மேலும் அவரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: