எம்பிஏ படிப்பு, வங்கிப்பணியுடன் கூடவே ஸ்கூபா டைவிங் - சாகசங்களை விரும்பும் மாற்றுத்திறனாளி

பட மூலாதாரம், SATHISH
- எழுதியவர், ஹேமா ராகேஷ்
- பதவி, பிபிசி தமிழ்
"மாற்றுத்திறனாளிகள் என்றாலே எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள். அதை மாற்ற வேண்டும் என்பதற்காகவும், என்னைப் பார்த்து மற்றவர்களும் ஊக்கமடைய வேண்டும் என்பதற்காகவும் நான் ஜீப் செய்லிங், ஸ்கூபா டைவிங் போன்றவற்றை மேற்கொண்டேன்.
இதன் மூலம் எனக்கு உத்வேகமும், மற்றவர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது," என்று சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சதீஷ் குமார். இவர் செரிபிரல் பால்சி குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவர்.
செரிபிரல் பால்சி என்பது நம் உடலில் தசைகளை முடக்கும் ஒரு நோய். ஒரு குழந்தை பிறக்கும்போது மூளைக்கு குறைவாக ஆக்சிஜன் செல்லும் நிலை ஏற்பட்டால் தசைகள் பாதிப்பு ஏற்படும். இதன் மூலம் அந்தக் குழந்தையின் இயக்கம் மற்றும் செயல்பாடுகளில் அதிக பாதிப்பு தெரியும்.
எந்த தருணத்திலும் படிப்பை மட்டும் கைவிடவே இல்லை

பட மூலாதாரம், HEMA
“நான் பிறந்த ஓராண்டுக்குள் எனக்கு செரிபிரல் பால்சி தாக்கம் காரணமாக தசைகளில் இயக்க குறைபாடு ஏற்பட்டது. அதன் மூலம் என் கைகள் மற்றும் கால்களை என்னால் இயக்க முடியாமல் போய்விட்டது. அதனால் சிறு வயதில் இருந்தே நான் சக்கர நாற்காலியைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில்தான் படித்தேன். எனக்கு சிறுவயதில் இருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான பல முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருந்தேன்.
ஆனால் எந்தத் தருணத்திலும் எனக்கான படிப்பை மட்டும் நான் கைவிடவே இல்லை. தொடர்ந்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தேன். அதனால் எம்பிஏ வரை தொடர்ந்து படித்தேன்.
அதன்பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையில் ஒரு பொறுப்பில் அமர்ந்தேன். அன்று என்னுடைய கனவு நிஜமான தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது," என நெகிழ்கிறார் சதீஷ்குமார்.
வங்கிப் பணியாளரான சதீஷ்குமார்

பட மூலாதாரம், SATHISH
முதன்முதலில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததும், அங்கு பல அனுபவங்களை பெற்றுக் கொண்டார் சதீஷ்குமார்.
ஆனாலும் மாற்றுத்திறனாளிகள் என்றாலே ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்யவேண்டுமா என்று நினைத்து புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறார். அதன்பிறகு வங்கித் தேர்வு எழுத வேண்டும் என்று நினைத்து, அதற்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
தொடர் முயற்சிகளின் காரணமாக வங்கித் தேர்வுகளில் வெற்றி பெற்று இன்று வங்கிப் பணியாளராக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார் சதீஷ் குமார்.
“வங்கிப் பணியில் வந்து சேர்ந்த பிறகு பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். ஜலந்தரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான Boccia விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெள்ளி பதக்கமும், 2020இல் தனி போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளேன்.
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படும் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் செயலாளராகவும் இருக்கிறேன். ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் வேலை என்பதையும் தாண்டி பல்வேறு சமூகநலப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வது எனக்கு தொடர் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
என் பணிகளை பார்க்கும் மற்ற மாற்றுத்திறனாளி நண்பர்கள் தங்களுக்கு என்ன திறமைகள் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து தேடத் தொடங்கியுள்ளார்கள்," என்று உற்சாகமாகக் கூறுகிறார் சதீஷ்குமார்.
மாற்றுத்திறனாளி என்பதால் பரிதாபம் இருக்கும்

பட மூலாதாரம், SATHISH
தற்போது மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடலைக் கண்டு ரசிப்பதற்காக ஒரு நடைபாதை அமைக்கப்பட்டிருக்கிறது.
அதற்கான முன்னெடுப்புப் பணிகளில் முதன்மைக் காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக ஒரு பிரசாரத்தை நிகழ்த்தியிருக்கிறார் சதீஷ்.
மாற்றுத்திறனாளிகள் கடலுக்குச் செல்ல ஆசைப்படுவதையும் அதற்கான ஏற்பாடுகள் எவ்வாறாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நடத்திய கூட்டங்களில் கலந்து கொண்டு தன் கருத்துகளையும் பதிவு செய்து வந்திருக்கிறார்.
அதேபோல் மாற்றுத்திறனாளிகள் என்றாலே சக்கர நாற்காலியில் மட்டும்தான் உட்காருவார்கள் என்பதை மாற்றி பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டியுள்ளார் இவர்.
“நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் எப்போதும் என் மீது பலருக்கும் பரிதாபம் இருக்கும். சில பணிகளை நான் ஆர்வமாகச் செய்தாலும் என்னால் அதைச் செய்ய முடியுமா என்ற கண்ணோட்டம் சிலருக்கு இருக்கும்.
அந்த எண்ணத்தை மாற்ற என்னை நானே உற்சாகப்படுத்தி சாகச பயிற்சிக்குத் தயார்படுத்திக் கொண்டேன். 2018இல் மெரீனா கடற்கரையில் நடத்தப்பட்ட ஒரு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் 50 அடி உயரத்தில் உள்ள கிரேனில் பறந்துகொண்டே விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியை நடத்திக் காட்டினேன்," என்றும் கூறி ஆச்சர்யமூட்டுகிறார்.
நான் உற்சாகமாக இருப்பதற்கு என் குடும்பத்தினர் முக்கிய காரணம்

பட மூலாதாரம், SATHISH
"கடந்த 2020ஆம் ஆண்டு பெசன்ட் நகரில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக பாராசெயிலிங் ஜீப்பில் சென்று வந்தேன். தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சி நடைபெற்றது. அந்தப் பயிற்சியில் கலந்துகொண்டேன். அதுதான் என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது," என்று சிலாகிக்கிறார் சதீஷ்குமார்.
மாற்றுத்திறனாளிகளுக்காக 2021இல் நடைபெற்ற ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஃபேஷன் ராம்ப் நிகழ்வில் கலந்துகொண்டு ஃபேஷன் வாக் செய்த சதீஷ்குமார், அதன் பிறகு தனக்கென ஒரு யூட்யூப் சேனலை தொடங்கினார்.
அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலன்கள் குறித்தும் அவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தும் பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வீடியோக்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இவருடைய அலுவலகத்திலும் இவருக்கு ஊழியர்கள் பக்கபலமாக இருக்கிறார்கள். இவருடைய அனைத்துப் பணிகளிலும் இவருக்குத் துணையாக நிற்கிறார்கள். இவரின் எதிர்கால கனவுகளுக்கு வடிவம் கொடுப்பதிலும், அதற்கான செயல்களில் ஈடுபட உற்சாகம் அளிப்பதிலும் இவரது குடும்பத்தினரின் பங்கு அதிகம்.

பட மூலாதாரம், SATHISH
“நான் இந்த நிலையிலும் உற்சாகமாக இருப்பதற்கு என் குடும்பத்தினரும் ஒரு முக்கிய காரணம். நான் என்ன செய்தாலும், எனக்கு அனைத்து விதத்திலும் ஆதரவாக இருப்பார்கள்.
நான் கம்யூட்டரில் என்னால் முடிந்த அளவிற்கு டைப் செய்யப் பழகிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய செல்போனை நானே பயன்படுத்திக் கொள்ளவும் பயிற்சி எடுத்துள்ளேன். ஆனாலும் பல விஷயங்களுக்கு என் குடும்பத்தினர் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
நான் பேசும் அனைத்து வீடியோக்களையும் நானேதான் எடிட் செய்து வெளியிடுகிறேன். காலை வங்கிப் பணியை முடித்து விட்டு மாலை வீட்டிற்கு வந்ததும் வீடியோ எடிட்டிங் பணியைத் தொடங்கிவிடுவேன்.
சிலநேரங்களில் நள்ளிரவு வரைகூட வேலை செய்வேன். என்னுடைய நோக்கம் எல்லாம் மாற்றுத்திறனாளிகள் ஒரே இடத்தில் முடங்கிப் போய்விடக்கூடாது என்பதுதான்," என்று கூறுகிறார் சதீஷ்குமார்.

பட மூலாதாரம், HEMA
இந்த உலகில் உள்ள அனைவருக்கும் வாழ்வின் மீது ஏதோவொரு சங்கடம் இருக்கத்தான் செய்கிறது.
ஆனாலும் கொடுக்கப்பட்ட வாழ்வில் நமக்கு என்ன பிடித்திருக்கிறதோ அதை முழுமையாக அனுபவித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது சதீஷ்குமாரின் வாழ்க்கை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












