கிழிந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவது எப்படி? முழு பணமும் கிடைக்குமா?

பட மூலாதாரம், RBI
- எழுதியவர், ஹரிகிருஷ்ணா புளுகு
- பதவி, பிபிசி செய்தியாளர்
அடிக்கடி ஷேர் ஆட்டோக்களில் பயணிப்பவர் சைதன்யா. ஆட்டோ சவாரியின்போது எப்போதெல்லாம் பெரிய நோட்டுகளை அவர் கொடுக்கிறரோ அப்போதெல்லாம் சிறிய நோட்டுகள் அவர் கைக்கு வரும்.
பல நேரங்களில் தேய்ந்த, கிழிந்த மற்றும் சேதமடைந்த நோட்டுகளே அவர் கைக்கு வரும். அவற்றை யாரிடமும் திருப்பித் தர முடியாது. கொடுத்தாலும் யாரும் வாங்குவதில்லை. சைதன்யாவின் வீட்டில் இதுபோன்ற நோட்டுகள் ஏராளமாக குவிந்துள்ளன.
சைதன்யாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவற்றை யாரிடம் எப்படி மாற்றுவது என்றும் புரியவில்லை.
இந்தப் பிரச்னை சைதன்யாவுக்கு மட்டுமில்லை. நாட்டில் பலர் இந்தப் பிரச்னனயை எதிர்கொள்கின்றனர்.
பழைய மற்றும் கிழிந்த, சேதமடைந்த நோட்டுகள், சேதமடைந்த நாணங்கள் மக்களின் கைக்கு வரும்போது அவற்றை மாற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இதுபோன்ற சேதமடைந்த மற்றும் பழைய நோட்டுகள் ஏடிஎம்களில் இருந்தும் வருகின்றன.
நம் நாட்டில் பத்து, இருபது மற்றும் ஐம்பது ரூபாய் பதிப்புள்ள புதிய கரன்சி நோட்கள் மிகவும் அரிதானவை. இந்த வகை கரன்சி நோட்டகள் இன்னும் கசங்கி, பழையதாகவும் மிகவும் சேதமடைந்தும் கிடக்கும். இவற்றை எப்படி மாற்றுவது என தெரியாததால், பலர் நஷ்டமடைந்து வருகின்றனர்.
சிறிய நகரங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை, இத்தகைய நோட்டுகளை மாற்றுவதற்காக சில கடைகள் பிரத்யேகமாக செயல்படுகின்றன. தனியார்கள் நடத்தும் இந்தக் கடைகளில் பழைய மற்றும் சேதமடைந்த நோட்டுகளை எடுத்துக்கொண்டு புதியவற்றைக் கொடுக்கின்றனர்.
இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக கொடுக்கப்படுகிறது. நோட்டுகளின் சேதத்தைப் பொறுத்தும், இடத்தை பொறுத்தும் இந்த கமிஷன் தொகை மாறுபடுகிறது.
இருந்தாலும், அத்தகைய நோட்டுகளை மாற்றுவதற்கு எளிமையான வழிகள் உள்ளன. வங்கிகள் அல்லது ரிசர்வ் பங்கியின் பிராந்திய கிளை அலுவலகங்களில் இவற்றை எளிமையாக மாற்றலாம்.
சாயம்போன நோட்டுகளாக எவற்றை கருத வேண்டும் ?, கிழிந்த நோட்டுகள் என்றால் என்ன ? இவை எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன ? எந்த நோட்டுக்கு என்ன மாற்று மதிப்பிலான நோட்டுகள் தரப்படுகிறது ? விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்வோம்.

பட மூலாதாரம், RBI
மாற்றத்தக்க நோட்டுகள் எவை ?
மங்கிப்போன நோட்டுகள்
அழுக்கான நோட்டுகளை ஆங்கிலத்தில் soiled notes என்பார்கள். மோசமாக தேய்ந்து, அழுக்காகி, அங்கொன்றும் இங்கொன்றுமாக கிழிந்த நோட்டுகள் அழுக்கு நோட்டுகளாக கருதப்படுகின்றன. ரூ. 10க்கு மேல் மதிப்பு உள்ள ரூபாய் நோட்டுகள் இரண்டு துண்டுகளாக கிழிந்தாலும் அழுக்கடைந்த நோட்டுகளாகவே கருதப்படும்.
இருப்பினும், அந்த ரூபாய் நோட்டுகளின் மீது உள்ள எண்கள் மீது கிழிந்திருக்கக் கூடாது. அத்தகைய நோட்டுகளை மாற்றக்கொள்ளலாம்.
கிழிந்த நோட்டுகள்
கிழிந்த நோட்டுகள் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துண்டுகளாக கிழிக்கப்பட்டவை அல்லது கிழிந்த நோட்டுகளின் முக்கியமான பகுதிகள் இல்லாமல் இருப்பது. ரூபாய் நோட்டுகளின் முக்கியமான பகுதிகளான கையொப்பம், அசோக தூண், காந்தி உருவம் போன்ற முக்கிய பகுதிகள் காணாமல் போனலும், அவற்றையும் ரிசர்வ் வங்கி கிழிந்த நோட்டுகளாகக் கருதுகிறது. இவற்றையும் மாற்றலாம்.
நொறுங்கிய, எரிந்த நோட்டுகள்
மோசமாக கிழிந்து கையில் பிடித்தால் துண்டு துண்டாக விழும் நோட்டுகள், எரிந்தவை, சாதாரண நிலையில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நோட்டுகள் இந்த வகைக்குள் வரும். இவற்றையும் மாற்றலாம்.

பட மூலாதாரம், AFP
நோட்டுகளை மாற்றும் முறை
மேலே குறிப்பிட்டுள்ள பல்வேறு நோட்டுகளை ஒரு நாளைக்கு 20 நோட்டுகள் வீதம் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம், நோட்டுகளின் மதிப்பு ரூ.5000க்கு மிகாமல் இருக்க வேண்டும். வங்கிகள் எந்தக் கட்டணமும் வசூலிக்காமல் வங்கியின் கவுண்டர்களில் இவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.
5,000,000 ரூபாய்க்கு மேல் உள்ள ஒருவர் கிழிந்த நோட்டுகளை மாற்றக் கோரினால், வங்கி ரசீது வழங்கி, பின்னர் பணம் மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யலாம்.
இருப்பினும், ஜூலை 2015 இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, இதுபோன்ற நேரங்களில் வங்கிகளும் சேவைக் கட்டணத்தை வசூலிக்கலாம். மாற்றப்படும் நோட்டுகளின் மதிப்பு ரூ.50,000க்கு மேல் இருந்தால் வங்கிகள் விதிகளின்படி கட்டணம் வசூலிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
எங்கே எடுக்கப்படுகிறது?
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம்-1934 இன் பிரிவு 58(2)ன்படி, திருடப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட நோட்டுகளின் சமமான மதிப்பை அரசு அல்லது ரிசர்வ் வங்கியிடம் இருந்து மீட்க எந்த நபருக்கும் உரிமை இல்லை என்று பிரிவு 28 கூறுகிறது.
காணாமல் போன நோட்டுகள், முழுமையடையாத நோட்டுகள் மற்றும் திருட்டுபோன நோட்டுகளை வங்கிகளில் புகார் மூலம் சேகரிக்க முடியாது.
ஆனால், சில சந்தர்ப்பங்களில், இது தொடர்பாக மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை நீக்கும் வகையில், மத்திய அரசின் அனுமதியுடன் சேதமடைந்த நோட்டுகளை திரும்ப அளிக்க ரிசர்வ் வங்கி தாராளமாக நடவடிக்கை எடுத்துள்ளது.
வங்கிகள் மற்றும் கரன்சி பெட்டகங்களில் (ஆர்பிஐ அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களுக்கு வழங்கப்படும் இடம்) சேதமடைந்த நோட்டுகளை மாற்ற உதவுகிறது.
பழைய, கிழிந்த நோட்டுகள் மற்றும் சேதமடைந்த நாணயங்கள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சில வழிமுறைகளை வெளியிட்டதுள்ளது.
அவற்றின்படி, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளும் சாமானிய மக்களுக்கு பின்வரும் சேவைகளை வழங்க வேண்டும். இதனால் அவர்கள் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் குறைகிறது.
அதன்படி, புதிய/நல்ல தரமான நோட்டுகள் மற்றும் அனைத்து மதிப்புகளின் நாணயங்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். சிதைந்த/சேதமடைந்த/குறைபாடுள்ள நோட்டுகளை மாற்றித்தர வேண்டும்.பரிவர்த்தனைகள் மற்றும் பரிமாற்றங்களுக்கு நோட்டுகள் மற்றும் நாணயங்களை அனுமதிக்க வேண்டும்.
வங்கிகள் தங்கள் வேலை நாட்களில் இந்த சிதைந்த/சேதமடைந்த/குறைபாடுள்ள நோட்டுகளை மாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் யாரிடமும் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற நோட்டுகளை மாற்றும் வசதி உள்ளதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விளம்பரங்கள் மற்றும் பலகைகள் வைக்க வேண்டும்.
எந்த வங்கியும் நோட்டுகளை ஏற்க மறுக்க முடியாது.
நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. மேலும் படிவங்களை நிரப்ப வேண்டிய அவசியமில்லை.
ஒரு நபர் வங்கியில் 5 நோட்டுகள் வரை கொடுத்தால், நோட்டுகளைத் திரும்பப்பெறும் விதிகள், 2009 இன் பகுதி 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின்படி, வங்கியின் கிளைகள் நோட்டுகளை ஆய்வு செய்து, அவற்றின் மாற்று மதிப்பை வழங்க வேண்டும்.
வங்கிக் கிளைகள் இந்த தேய்ந்த நோட்டுகளை அடையாளம் காண முடியாவிட்டால், அவற்றின் மதிப்புக்கான ரசீதைக் கொடுத்து, இணைக்கப்பட்ட தலைமை கிளைக்கு அனுப்ப வேண்டும்.
நோட்டுகளை வழங்குபவருக்கு பணம் செலுத்தப்படும் தேதியை தெரிவிக்க வேண்டும். அந்த நேரம் 30 நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது.
மின்னணு முறையில் கணக்கில் மாற்று மதிப்பை டெபாசிட் செய்ய, நோட்டு கொடுத்தவர்களின் வங்கி கணக்கு விவரங்களை பெற வேண்டும்.

பட மூலாதாரம், AFP
அதிக மதிப்பு இல்லை என்றால்...
ஒரு தனிநபரால் சமர்ப்பிக்கப்பட்ட நோட்டுகளின் எண்ணிக்கை 5 க்கும் அதிகமாக இருந்தாலும், அவற்றின் மதிப்பு ரூ. 5,000-க்கு மிகாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் தனது வங்கிக் கணக்கு விவரங்களைக் குறிப்பிட்டு காப்பீட்டு அஞ்சல் மூலமோ அல்லது அருகிலுள்ள தலைமை கிளைக்கோ அந்த நோட்டுகளை அனுப்பலாம், அல்லது நீங்களே நேரில் சென்று மாற்றிக் கொள்ளலாம்.
கரன்சி செஸ்ட் கிளைகள் 30 நாட்களுக்குள் தபால் மூலம் நோட்டுகளை அனுப்பிய நபரின் கணக்கில் மின்னணு முறையில் பணத்தை பரிமாற்றுவார்கள்.
அந்த நோட்டுகளின் மதிப்பு ரூ. 5,000க்கு மேல் இருந்தால், பரிவர்த்தனை கோருபவர் அருகில் உள்ள தலைமைக் கிளையை நேரில் அணுக வேண்டும்.

பட மூலாதாரம், AFP
என்ன வகையான நோட்டுகள் மாற்றப்படுகின்றன?
மங்கிப்போன நோட்டுகள் ஒற்றை இலக்க கரன்சி நோட்டுகளாக இருந்தால், அதாவது 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளாக இருந்தால், அவை இரண்டு துண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது.
இரண்டு துண்டுகளும் ஒரே நோட்டினுடையதாக இருக்க வேண்டும். மேலும் அதில் உள்ள முக்கியமான அம்சங்கள் சேதமடையாமலும், காணாமல் போகாமலும் இருக்க வேண்டும்.
இரண்டு துண்டுகளாக கிழிந்த நோட்டுகளில் குறைந்தபட்சம் அந்த நோட்டின் எண் இருக்க வேண்டும். இவற்றை வங்கியில் டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றுவதற்கு வங்கியிடம் கோரலாம்.
இரட்டை இலக்க கரன்சி நோட்டு என்றால் ரூ.10, ரூ. 20, ரூ.50, ரூ. 100 போன்ற நோட்டுகளை மாற்றுவதற்கு இரண்டு பகுதிகளுக்கு மேல் கிழிந்திருக்கக் கூடாது.
இரண்டு துண்டுகளும் ஒரே நோட்டினுடையாதாக இருக்க வேண்டும். மேலும், அந்த நோட்டு மதிப்பின் எண் இரண்டு கிழிந்த பகுதிகளிலும் தெளிவாகத் தெரிய வேண்டும்.
எந்த நோட்டுக்கு எவ்வளவு கொடுக்கப்படுகிறது?
நீக்கப்பட்ட நோட்டுகள்
புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நோட்டுகள் பரிவர்த்தனை மதிப்பில் முழுமையாக/பாதியாக பெறுவதற்கு சில விதிகள் உள்ளன.
1. நோட்டில் அச்சிடப்பட்ட எழுத்துக்கள் முற்றிலும் காணாமல் போகும் நிலை ஏற்படக்கூடாது.
2. பரிந்துரைக்கப்பட்ட அதிகாரி நோட்டில் அச்சிடப்பட்ட எண்ணை ஆய்வு செய்து அது சரியான நோட்டு என்று திருப்தி அடைந்தால் மட்டுமே மாற்று மதிப்பிலான நோட்டு வழங்கப்படும்.
கிழிந்த நோட்டுகள்
1. கிழிந்த நோட்டு ஒரு பெரிய துண்டாக இருந்தால், நோட்டின் மொத்த பரப்பளவில் 50% க்கும் அதிகமாக இருந்தால், அதற்கு மாற்றாக முழு மதிப்பு வழங்கப்படும்.
2. பெரிய துண்டின் பரப்பளவு நோட்டின் மொத்த பரப்பளவில் 50%க்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் பரிமாற்றம் ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே உள்ள அனைத்து விதிகளும் ரூ.20 முதல் ரூ.200 வரையிலான மதிப்புகளுக்குப் பொருந்தும் (மகாத்மா காந்தி படத்துடன் வெளியாகியுள்ள புதிய ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகளுக்கும் இது பொருந்தும்).
ரூ. 50 மற்றும் அதற்குப் மேல் பரிமாற்ற மதிப்பு பின்வருமாறு வழங்கப்படும்/நிராகரிக்கப்படும்
1. கிழிந்த நோட்டின் ஒரு பெரிய துண்டு, அது நோட்டின் மொத்த பரப்பளவில் 80% க்கும் அதிகமாக இருந்தால் (மதிப்பீடு), பரிமாற்றமாக முழு மதிப்பு கொடுக்கப்படுகிறது.
2. கிழிந்த நோட்டின் ஒரு பெரிய துண்டு நோட்டின் மொத்த பரப்பளவில் 40% க்கும் அதிகமாகவும் 80% க்கும் குறைவாகவும் இருந்தால், அதன் மதிப்பில் பாதி மாற்று மதிப்பாக வழங்கப்படும்.
3. கிழிந்த நோட்டின் ஒரு பெரிய துண்டு, நோட்டின் மொத்த பரப்பளவில் 40% க்கும் குறைவாக இருந்தாமல், பரிமாற்றத்திற்கு நிராகரிக்கப்படும்.
4. ரூ.50க்கு மேல் இரண்டு மதிப்புள்ள ஒரு நோட்டு, ஒவ்வொரு துண்டும் தனித்தனியாக நோட்டின் மொத்த பரப்பளவில் 40%க்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், நோட்டின் முழு மதிப்பும் செலுத்தப்படும்.

பட மூலாதாரம், Getty Images
வேண்டுமென்றே கிழிந்த/சேதமடைந்த நோட்டுகளை என்ன செய்வது?
கரன்சி நோட்டுகள் வேண்டுமென்றே வெட்டப்பட்டாலோ, கிழிக்கப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டதாகக் கண்டறியப்பட்டாலோ, நோட்டுத் திரும்பப்பெறுதல் விதி 2009 இன் 6(3) (ii) இன் படி பரிவர்த்தனை மதிப்பை வழங்குவதற்கு அத்தகைய நோட்டுகள் நிராகரிக்கப்படும்.
இருப்பினும், அத்தகைய நோட்டுகள் வேண்டுமென்றே கிழிக்கப்பட்டவை அல்லது சேதப்படுத்தப்பட்டவை என்பதை உறுதி செய்வது எளிதானது அல்ல.
எனவே, இதுபோன்ற சூழ்நிலைகளில், அதிகாரிகள் அவர்களை உன்னிப்பாகக் கவனித்து, அவை தற்செயலாக சேதமடைந்ததா அல்லது யாராவது வேண்டுமென்றே செய்ததா என்பதை தீர்மானிக்க முயற்சிப்பார்கள்.
இத்தகைய நோட்டுகள் அதிக எண்ணிக்கையில் பெறப்படும்போது, அவை ஒரே மாதிரியான கிழிந்த/சேதமடைந்த தோற்றம், அனைத்து நோட்டுகளின் பகுதிகள் காணாமல் போவது மற்றும் ஒரே மாதிரியாக சிதைந்திருப்பது போன்றவற்றால் அடையாளம் காணப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், அத்தகைய நோட்டுகளை கொண்டு வந்தவரின் பெயர், எந்தெந்த நோட்டுகள், எவ்வளவு நோட்டுகள் கொண்டு வரப்பட்டன என்ற விவரம், ரிசர்வ் வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். அதிக எண்ணிக்கையில் இதுபோன்ற நோட்டுகள் வரும்போது வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
வங்கிகளில் சிக்கல் இருந்தால் என்ன செய்வது?
நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக வங்கியில் இருந்து ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் வங்கியில் புகார் செய்யலாம். புகாருக்கு 30 நாட்களுக்குள் வங்கி திருப்திகரமான பதிலைத் தரவில்லை என்றால், வாடிக்கையாளர்கள், 'ரிசர்வ் வங்கி - ஒருங்கிணைந்த ஒம்புட்ஸ்மேன் திட்டம், 2021' இன் கீழ் ரிசர்வ் வங்கியின் ஒம்புட்ஸ்மேனை (Ombudsman)அணுகலாம்.
புகார்களை ஆன்லைனில் https://cms.rbi.org.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது ஆர்பிஐ.க்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் அனுப்பலாம்.
மாற்றாக நீங்கள் பின்வரும் முகவரிக்கும் புகாரை அனுப்பலாம்.
'மையப்படுத்தப்பட்ட ரசீது மற்றும் செயலாக்க மையம்'
இந்திய ரிசர்வ் வங்கி,
4வது தளம், செக்டர் 17, சண்டிகர் - 160017
புகார் கடிதத்துடன் அவர்கள் தங்கள் புகார் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் ரசீதுகளையும் அனுப்பலாம்.
எந்த வகையான நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை?
கிழிந்த அல்லது சேதமடைந்த நோட்டுகள் கிளைக்கு வந்தவுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்து, அந்த நோட்டில் 'PAY' / 'PAID' & 'REJECT' என்ற மூன்று வகையான முத்திரைகளில் ஒன்றை வைப்பார்கள்.
முத்திரை வைக்கப்பட்டுள்ள வங்கிக் கிளையின் பெயர் மற்றும் முகவரி விவரங்கள் முத்திரையில் இருக்கும்.
ஆர்பிஐ கிளை அல்லது வங்கிக் கிளை இந்த 'PAY' /'PAID' & 'REJECT' முத்திரையிடப்பட்ட நோட்டை வேறொரு கிளையில் கொடுத்தவுடன் அதை நிராகரித்துவிடும். மேலும், இதுபோன்ற முத்திரைகள் கொண்ட நோட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு தவறுதலாக அனுப்பாமல் கவனமாக இருக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதுபோன்ற நோட்டுகளை எந்த வங்கியிலும் அல்லது யார் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
எந்த நோட்டுகளை புழக்கத்தில் விடக்கூடாது?
ரிசர்வ் வங்கியின் கிளீன் நோட் கொள்கையின்படி (Clean Note Policy), ஸ்லோகங்கள், அரசியல், மதச் செய்திகள், நோட்டில் பல்வேறு கோடுகள் மற்றும் வண்ணங்கள் ஆகியவை நோட்டுத் திரும்பப்பெறுதல் விதி 2009 இன் 6(3) (iii) இன் படி விநியோகிக்கப்படக்கூடாது.
இதுபோன்ற நோட்டுகளை மக்கள் கண்டால், ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












