கஞ்சா சாகுபடி செய்ய இந்த 'ஒரு மாநிலத்தில்' மட்டும் அனுமதி ஏன்? அதனால் மற்ற மாநிலங்களில் என்ன பிரச்னை?

பட மூலாதாரம், NBRI
- எழுதியவர், ஸ்ரீகாந்த் பங்காலே
- பதவி, பிபிசி மராத்தி
“சார், இந்த பயிர்கள் எல்லாம் சாகுபடி செஞ்சு நாங்க நொந்து போயிட்டோம். இப்போ கஞ்சா வளர்க்க எங்களுக்கு அனுமதி குடுங்க.”
மகாராஷ்டிராவின் விவசாய அமைச்சராக இருந்த அப்துல் சத்தார், மழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய ஒருமுறை நாசிக் சென்றிருந்தபோது, ஒரு விவசாயி அவரிடம் நேரடியாக கஞ்சா பயிரிட அனுமதி கேட்டார்.
அவரிடம் அப்துல் சத்தார், “இது என் கையில் இல்லை,” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த விவசாயி, "விவசாயம் செய்வது கட்டுப்படியாகாத தொழிலாகிவிட்டது. பணவீக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. உர விலை, ஆட்களுக்கான கூலி அதிகரித்துவிட்டன.
விவசாயிகளுக்கு இதிலிருந்து லாபமே இல்லாமல் போய்விட்டது. மழை பெய்தால் 10%-20% கஞ்சா உயிர் வாழும். எங்களுக்கு எதாவது வருமானம் கிடைக்கும்," என்றார்.
மகாராஷ்டிரா விவசாயிகள் கஞ்சா வளர்க்கவும், அதைக் கொண்டு செல்லவும் அனுமதி கோருவது இது முதல்முறை அல்ல.
கஞ்சா சாகுபடி செய்ய அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால் விவசாயிகள் ஏன் கஞ்சா சாகுபடி செய்ய அனுமதி கோருகிறார்கள்? கஞ்சா சாகுபடி செய்தால் விவசாயிகளின் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படும்? கஞ்சா சாகுபடி பற்றிச் சட்டம் என்ன சொல்கிறது?
வழக்கமான பயிர்களைவிட கஞ்சா பயிர்களுக்கு மதிப்பு அதிகமா?
பீட் மாவட்டத்தில் உள்ள வாகோரா கிராமத்தைச் சேர்ந்த சுபம் மானே ஒரு 'வேளாண் பொறியாளர்'.
தற்போது பெற்றோருக்கு விவசாயத்தில் உதவி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாட்சி நிர்வாகத்திடம் அறிக்கை ஒன்றைக் கொடுத்தார்.
“கஞ்சா சாகுபடிக்காக ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தேன். ஏனெனில் கரும்பு, பருத்தி, சோயா பீன்ஸ் போன்றவற்றைப் பயிரிட்டால், அவற்றுக்குரிய விலை சரியான விலை கிடைப்பதில்லை,” என்கிறார்.
“கரும்பு பயிரிட்டால், அது முன்கூட்டியே அறுவடை செய்யப்பட்டது என்று கூறி ஆலையில் எடுத்துக்கொள்வதில்லை. கரும்பு முதிரும்போது, கோடையில் அதன் விளைச்சல் சராசரியாகக் குறைகிறது. இதனால் விவசாயிகளின் லாபமும் குறைகிறது,” என்கிறார் சுபம் மானே.

பட மூலாதாரம், GANESH WASALWAR
சுபம் மானேவின் குடும்பத்திற்கு 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் கரும்பு மற்றும் சோயா பீன்ஸ் பயிரிடுகிறார்கள். ஆனால் இதைவிட கஞ்சா சாகுபடி லாபகரமாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார்.
“கஞ்சா பிடிபட்டது போன்ற செய்திகளை நான் அடிக்கடி பார்க்கிறேன். அதில், பறிமுதல் செய்யப்பட்ட பொருளின் மதிப்பு பற்றி போலீசார் கூறுகின்றனர். நாமும் கஞ்சா பயிரிட வேண்டும் என்ற யோசனையை அதிலிருந்துதான் பெற்றேன்,” என்கிறார்.
சட்டவிரோத கஞ்சா சாகுபடி

பட மூலாதாரம், YOGESH UBALE
கஞ்சா சாகுபடி செய்ய விவசாயிகள் கோரிக்கை மட்டும் வைக்கவில்லை. சில இடங்களில் விவசாயிகள் மறைவாகவும் கஞ்சா சாகுபடி செய்கின்றனர்.
கடந்த ஜூன் 7ஆம் தேதி, சின்ச்பூர் கிராமத்தில் இதற்காக ஒரு விவசாயி மீது பீட் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அப்பகுதியின் உதவி காவல் ஆய்வாளர் யோகேஷ் உபாலே, “சிஞ்ச்பூர் கிராமத்தில் ஒரு விவசாயி, மிளகாய் வயலில் 8 கஞ்சா செடிகள் நட்டு வைத்திருந்தார். அதன் எடை 24 கிலோ எடை இருந்தது,” என்றார்.
"இதன் சந்தை மதிப்பு 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய். அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்தப் பொருள் கைப்பற்றப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்," என்றார்.
சட்டம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
NDPS சட்டம் என்பது போதைப் பொருள் தடுப்புச் சட்டம். இந்தச் சட்டத்தின் மூலம், ஹெராயின், மார்பின், மரிஹுவானா (கஞ்சா), ஹாஷிஷ், ஹாஷிஷ் எண்ணெய், கோகெய்ன், மெபெட்ரான், எல்.எஸ்.டி, கெட்டமைன், ஆம்பெடமைன் போன்ற போதைப் பொருட்களைத் தயாரித்தல், விநியோகம் செய்தல், வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுகிறது.
இந்தச் சட்டத்தின் 20வது பிரிவின்படி, சட்டவிரோதமாக கஞ்சாவை பயிரிட்டால் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்தச் சட்டத்தின்படி, இந்தியாவில் கஞ்சா பயிரிட முடியாது என்றாலும், மாநில அரசுகள் இதுதொடர்பாக சட்டங்களை உருவாக்க அனுமதிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே உத்தராகண்ட் மாநில அரசு மட்டுமே கஞ்சா சாகுபடிக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதற்கு முறைப்படி அனுமதி பெறவேண்டும். உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆராய்ச்சிக்காக மட்டும் கஞ்சா பயிரிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள சுபம் மானே போன்ற விவசாயிகள் இப்போது சணப்பையை (Hemp) மாற்றுப் பயிராக வளர்க்கின்றனர்.
“என் தாத்தா காலத்திலிருந்தே விவசாயம் செய்து வருகிறோம். அவருக்குப் பிறகு என் அப்பா. இப்போது நானும் விவசாயத்தில் கவனம் செலுத்த முயன்றேன். ஆனால் பண்ணையில் லாபம் இல்லை. நான் ஒரு விவசாயப் பொறியாளர்,” என்கிறார்.
“வயலில் இயந்திரங்களைப் பயன்படுத்தி, பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கலாம். ஆனால் உற்பத்தி அதிகரித்தாலும் சந்தையில் நல்ல விலை இல்லை. மறுபுறம், கஞ்சாவுக்கு நியாயமான விலை உள்ளது. எனவே கஞ்சாவுக்கு மாற்றுப் பயிராக இதைக் கோரினேன்,” என்கிறார் அவர்.
விவசாயிகளின் பிரச்னைகளுக்கு கஞ்சா தான் ஒரே தீர்வா?

பட மூலாதாரம், SHRIKANT BANGALE/BBC
ஆனால் கஞ்சா சாகுபடி மட்டுமே விவசாயிகளின் நிதிப் பிரச்னையைத் தீர்த்துவிடுமா? இது ஒன்றுதான் தீர்வா?
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறைத் தலைவராக இருக்கும் பேராசிரியர் அசோக் சவான், பொருளாதாரக் கண்ணோட்டத்தில் சிந்தித்துப் பார்த்தால், எந்தப் பயிரையும் அறிவியல் முறையில், நவீன முறையில் பயிரிட்டால், விவசாயிகளின் பொருளாதார நிலை நிச்சயம் மேம்படும் என்கிறார்.
அவர், “அதற்காக கஞ்சா பயிரிட வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
“எங்களிடம் பல மாற்று வருமான ஆதாரங்கள், புதிய முயற்சிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக தொழில்நுட்ப வழிகளில் மரங்களை நட்டால், நவீன விவசாயம் மூலம் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும்," என்று அவர் கூறுகிறார்.
மருந்தாகவும் பயன்படுத்தப்படும் கஞ்சா

பட மூலாதாரம், Getty Images
கரும்பு, மக்காச்சோளம் போன்ற உயரமாக வளரும் பயிர்களுக்கு இடையே கஞ்சா சட்டவிரோதமாகப் பயிரிடப்படுவது வழக்கம்.
வலிப்பு நோய், உளவியல் சிக்கல்கள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு கஞ்சா செடியின் போதை இல்லாதப் பகுதிகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்க முடியும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சுபம் மானே போன்ற விவசாயிகளுக்கு இது தெரியும். “கஞ்சா மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. மருந்துகள் தயாரிப்பதற்காக கஞ்சா பயிரிட அரசு அனுமதி வழங்கவேண்டும்,” என்றார் அவர்.
கஞ்சா செடியில் இரண்டு முக்கிய ரசாயனங்கள் காணப்படுகின்றன. ஒன்று tetrahydrocannabinol (THC) மற்றொன்று cannabidol (CBD). இவற்றில் THC தான் கஞ்சாவில் போதையை உண்டாக்குகிறது.
கஞ்சா செடியில் அதிக THC இருப்பதால் அது போதைப் பயிர் என்று அழைக்கப்படுகிறது. கன்னாபிடோலுக்கு ஒருவரை போதைக்கு அடிமையாக்கும் பண்புகள் இல்லை.
எனவே கஞ்சாவில் காணப்படும் இந்த ரசாயனத்தின் மீது மருத்துவத் துறை ஆர்வமாக உள்ளது. ஏனெனில் இது மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதள தரவுகளின்படி, உலகம் முழுவதும் கஞ்சா செடியில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
சட்ட அனுமதியுடன் கஞ்சா பயிரிடும் இந்திய மாநிலம்

பட மூலாதாரம், Getty Images
உத்தரகாண்ட் மாநிலத்தில் கஞ்சா சாகுபடிக்கு அனுமதி உண்டு. ஆனால் அதற்கு நீங்கள் முறைப்படி உரிமம் பெறவேண்டும்.
அங்குள்ள ஓர் இளம் விவசாயி, பெயர் வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையோடு பிபிசி மராத்தியிடம் பேசினார்.
“கடந்த ஆண்டு நாங்கள் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக ஒரு சிறிய பகுதியில் கஞ்சாவை பயிரிட்டோம். ஆனால், இதற்கான விதைகளை வெளிநாட்டில் இருந்து கொண்டு வர வேண்டியதாயிற்று,” என்றார் அவர்.
“எவ்வாறாயினும், இந்த ஆண்டு, உத்தராகண்ட் அரசாங்கம் கஞ்சா சாகுபடி குறித்த தனது கொள்கையை மாற்ற வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு இந்திய பாரம்பரிய ரகங்களைப் பயிரிட அரசு அனுமதிக்கலாம்,” என்கிறார்.
இந்தியாவில் சட்டப்பூர்வமாக பயிரிடக் கூடிய பல்வேறு வகையான கஞ்சா வகைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை.
கஞ்சா விவசாயம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்று அவரிடம் கேட்டபோது, “கஞ்சா பயிர் 3 மாதங்கள் நீடிக்கும். 3 மாதங்களுக்குப் பிறகு அதை யார் வாங்குவார்கள்? அதற்குத் தொழில் துறை முன்வருமா? இவைதான் முக்கியமான கேள்விகள்,” என்கிறார்.
கஞ்சா சாகுபடிக்கு நல்ல தண்ணீர் தேவை. ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யலாம் என உத்தராகண்ட் விவசாயிகள் கூறுகின்றனர்.
இருப்பினும், இப்போதைக்கு, சில விவசாயிகள் கஞ்சாவை வளர்ப்பது தங்கள் நிதியை மேம்படுத்தும் என்று நம்புகிறார்கள்.
மறுபுறம், கஞ்சாவை எதிர்ப்பவர்கள் கஞ்சா மக்களை போதைக்கு அடிமையாக்கும், கஞ்சா மக்களின் மன ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்று வாதிடுகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












