விஜய் பிறந்தநாள்: 'நடிக்கத் தெரியாது' என்று விமர்சிக்கப்பட்டவர் 'பாக்ஸ் ஆபிஸ் கிங்' ஆக மாறிய கதை

விஜய்

பட மூலாதாரம், @ACTORVIJAY

    • எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

“இவர் ஹீரோ மெட்டீரியலே இல்லை, வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட் கேட்டகிரி” என விமர்சிக்கப்பட்ட ஒருவரின் திரைப்படங்கள் இன்று வெளியாகும்போது, வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக திரையரங்குகளுக்குச் சென்று, திரையரங்குகளைத் திருவிழா கூடமாக மாற்றிவிடுகிறார்கள்.

நடிக்கவே தெரியவில்லை என்ற ஆரம்ப கால விமர்சனங்களை புறந்தள்ளி இன்று நடனம், நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்‌ஷன் என அனைத்திலும் கில்லியாக இருக்கும் நடிகர் விஜயின் 49வது பிறந்த நாள் இன்று.

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகருக்கும், பாடகி ஷோபாவுக்கும் சென்னையில் ஜூன் 22-ஆம் தேதி 1974- ஆம் ஆண்டு, மகனாக பிறந்தவர் தான் ஜோசஃப் விஜய்.

ஜோசஃப் விஜய் இளைய தளபதி விஜய்யான கதை

விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் மிகவும் வெற்றிகரமான பரபரப்பான கமர்ஷியல் டைரக்டராக இருந்த காலகட்டம் அது. அப்போது, எஸ். ஏ. சந்திரசேகர் வெற்றி, நான் சிவப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில், விஜய்யை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.

இன்று கோலிவுட்டின் உச்சநட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தனது சினிமா கனவை ஆரம்பித்தது இப்படித் தான்.

நடிகர் விஜய்யின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. 1992ஆம் ஆண்டு “ நாளைய தீர்ப்பு” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜய்யை முதன்முதலாக நாயகனாக அறிமுகப்படுத்தினார் எஸ்.ஏ. சந்திர சேகர் . அந்த படத்தில் விஜய்க்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

எனவே, அவரது தந்தை எஸ்.ஏ.சி எடுத்த புத்திசாலித்தனமான முடிவு தான் விஜயகாந்துடன் விஜய்யை இணைத்து இயக்கிய ”செந்தூரப்பாண்டி” திரைப்படம். எதிர்பார்த்தபடி விஜய் பட்டிதொட்டியெங்கும் சென்று சேர்ந்தார். ஒவ்வொரு கிராமங்களுக்குள்ளும் விஜய் பாய்ச்சலாக ஊடுருவினார். விஜய் என்கிற நடிகனை தமிழ் ரசிகர்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றது அந்தப் படம்தான்.

இதனைத் தொடர்ந்து, எஸ்.ஏ.சி-யின் இயக்கத்திலேயே “ரசிகன்”, “தேவா”, “விஷ்ணு” என அடுத்தடுத்த படங்களில் விஜய் நடித்தார். இக்காலகட்டத்தில் தான் நடனம், நடிப்பு, ஆக்ஷன் என்று கமர்ஷியல் ஹீரோவுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் படிப்படியாகக் கற்றுக்கொண்டார்.

விஜய்க்கு மைல் கல்லாக அமைந்த “பூவே உனக்காக” திரைப்படம்

குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து திரைப்படங்கள் எடுக்கும் விக்ரமன் 1996-ஆம் ஆண்டு விஜய்யை வைத்து “பூவே உனக்காக” திரைப்படத்தை இயக்கினார். நடிகர் விஜய்யின் முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் இது தான்.

அதுவரை தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் காட்சிகள், கமெர்ஷியல் ஃபார்முலா என சுற்றிக் கொண்டிருந்த நடிகர் விஜய்யை “பூவே உனக்காக” திரைப்படத்தின் மாபெரும் வெற்றி மாற்றிப்போட்டது. அவர் திரைக்கதைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

1998-இல் சங்கிலி முருகன் தயாரிப்பில், ஃபாசில் இயக்கத்தில் “காதலுக்கு மரியாதை” திரைப்படம் வெளிவந்தது. இதில், நடிகர் விஜய் மற்றும் ஷாலினியின் ஜோடி மக்களை பெரிதும் ஈர்த்தது. “காதலுக்கு மரியாதை” திரைப்படத்தைத் தொடர்ந்து “லவ் டுடே” திரைப்படமும் ஹிட் அடித்ததால் விஜய் ஸ்டார் நடிகர்கள் பட்டியலுக்குள் வந்தார்.

விஜய்

பட மூலாதாரம், AGS

விஜய் வெற்றியைத் தக்க வைத்த வகுத்த வியூகம்

வெற்றி கொடுத்தால் மட்டும் போதுமா? அதனைத் தக்கவைக்க வேண்டாமா? தெளிவாக வியூகம் அமைத்து, `நம்ம வீட்டுப் பையன்` என்ற இமேஜை திட்டமிட்டு, “ நினைத்தேன் வந்தாய்”, “துள்ளாத மனமும் துள்ளும்” உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம், தமிழ் நாட்டில் அனைவரும் கொண்டாடும் ஜனரஞ்சக நாயகனாகவே மாறிப் போனார் விஜய். மேலும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் “மினிமம் கேரண்டி ஹீரோ” என்ற பட்டத்தையும் தட்டிச் சென்றார்.

இதுதவிர எஸ். ஜே. சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த “குஷி” திரைப்படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்து, கல்லூரி மாணவர்களை திரையரங்கு நோக்கி படையெடுக்க வைத்தார்.

“குஷி” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிறமொழித் திரைப்படங்களான “ஃப்ரெண்ட்ஸ்”, “பத்ரி”,“யூத்” உள்ளிட்ட படங்களை அடுத்தடுத்து ரீமேக் செய்து, வெற்றியை தன் வசம் இறுக பற்றிக் கொண்ட விஜய், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும் மாறிப் போனார்.

சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு திட்டமிட்ட விஜய்

மென்மையான காதல் கதைகளில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர முடியாது என எண்ணி மெல்ல ஆக்‌ஷன் திரைப்படங்களில் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்தார். அப்படி ஆக்‌ஷன் ட்ராக்கிற்கு மாறி முதன் முதலில் நடித்த திரைப்படம் தான் “தமிழன்”. இதனைத் தொடர்ந்து, நல்ல பாடல்கள், சண்டைக் காட்சிகள் என வரையறுத்துக் கொண்டு, திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட மசாலா படங்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

இதில், கில்லி திரைப்படத்தின் வசூல் படையப்பா திரைப்படத்தின் வசூலை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாட்டின் மாஸ் ஹீரோவான விஜய் இப்படியாக போக்கிரி, நண்பன், புலி, தெறி, மெர்சல், மாஸ்டர் தற்போது ரிலீசுக்காக காத்திருக்கும் லியோ என சுமார் 68 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமல்ல, பாடலிலும் அசத்தும் இளைய தளபதி

நடிப்பதோடு மட்டுமல்லாமல், தனது திரைப்படங்களிலும், நண்பர்களின் திரைப்படங்களிலும் இதுவரை 29 திரைப்பாடல்களைப் பாடி தனது ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் விஜய்.

விஜய்

பட மூலாதாரம், XB CREATIONS

இளம் இயக்குநர்களோடு கைக்கோர்த்த விஜய்

இளைய தளபதி விஜய்யின் வெற்றி வியூகங்களில் நாம் நுட்பமாகக் கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது. வெற்றி கொடுத்த இயக்குநர், அனுபவசாலி இயக்குநர் என்ற பழைய டெம்ப்ளேட்டுகளையெல்லாம் உடைத்தெறிந்து, ஒரு காலகட்டத்திற்கு பிறகு பல புதிய இளம் இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்க துவங்கினார் விஜய். அட்லி, லோகேஷ் கனகராஜ் என எத்தனையோ இளம் இயக்குநர்களின் அவர் இயக்கத்தில் நடித்தார்.

தன் திரைக்கதையே தானே எழுதியவர்

ஆரம்ப கால கட்டத்தில், நடிகர் விஜய்க்கு ஹீரோவுக்கான முக வெட்டோ, ஆளுமையோ இல்லை, இவரையெல்லாம் எந்த விதத்திலும் ரசிக்க முடியவில்லை என அத்தனை பத்திரிக்கைகளும் விமர்சனங்கள் எழுதித் தீர்த்தாலும், அத்தனை பலவீனங்களையும் தனது பலமாக மாற்றி இன்று தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமையாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காவும், இன்ஸ்டாகிராமில் புகைப் படத்தை அப்லோட் செய்தவுடன் வெறும் 24 நிமிடங்களில் 4 மில்லியன் லைக்குகளைப் பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகவும் தன் திரைக் கதையை தானே மாற்றி எழுதியுள்ளார்.

அரசியலுக்கும் ஆசைப்படுகிறாரா விஜய்

பல விமர்சனங்களைக் கடந்து, கொஞ்சம், கொஞ்சமாக தன்னைத் தானே செதுக்கி, இன்று தமிழ் சினிமாவின் மிகப் பெரிய திரை ஆளுமையாக வளர்ந்து நிற்கும் விஜய் தனது அரசியல் ஆசையையும் அவ்வப்போது காட்டிக் கொண்டு தான் இருந்தார். மேலும் இப்போது கடைசியாக ஜூன் 17-ஆம் தேதியன்று பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றவர்களை கவுரவித்தது, தேர்தல், வாக்கு அரசியல் பற்றி பேசியதெல்லாம் 2026-ஆம் ஆண்டிற்கான தேர்தலுக்கு தயாராவதை சூசகமாக சொல்கிறாரோ என தமிழ் நாட்டு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய்

“ஈகோ இல்லாதவர்”- நடிகர் ரமேஷ் கண்ணா

இளைய தளபதி விஜய்யுடன் ஃப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய ரமேஷ் கண்ணா பிபிசி தமிழுடன் பேசும்போது, “நடிகர் விஜய் அவர்களின் பெருந்தன்மையால் மட்டுமே ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம் சாத்தியமானது. இயல்பாகவே உச்ச நட்சத்திரங்கள் மூன்று ஹீரோ கதைகளில்லாம் நடிக்க மாட்டார்கள். அப்போது நானும், நடிகர் சூர்யாவும் பெரிய நடிகர்களெல்லாம் இல்லை, அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்தோம். எந்த ஈகோவும் இல்லாமல் எங்களோடு இணைந்து நடித்தார்.

ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம் தவிர வேறெந்த திரைப்படமும் நான் அவருடன் இணைந்து நடிக்கவில்லை. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தில் என் மகன் உதவி இயக்குநராக பணி புரிந்தார். என் மகனின் திருமண விழாவிற்கு நான் தயங்கி, தயங்கி அழைத்தேன். ஆனால், அவர் என் மகனின் திருமணத்திற்கு வந்து எங்களை திக்குமுக்கு ஆட செய்தார். அவரது எளிமையான குணமும், நேர்மையும் தான் அவரை இன்று தமிழ் நாட்டு மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராக உணர வைத்துள்ளது,” என்றார்.

“படைப்பாளிகளின் சுதந்திரத்திற்குள் தலையிட மாட்டார்”- பாடலாசிரியர் கபிலன்

நடிகர் விஜய்க்காக பல பாடல்களை எழுதியுள்ள பாடல் ஆசிரியர் கபிலனை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசினோம். அவர், “இளைய தளபதிக்கு பாடல்கள் எழுதும்போது அது பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகும், மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடையும் என்ற காரணத்தாலேயே நிறைய சமூகக் கருத்துக்களை கலந்து எழுதுவேன். அப்படி எழுதியது தான் போக்கிரி திரைப்படத்தில் வரும் “ஆடுங்கடா என்ன சுத்தி” பாடலில் வரும்,

சேரி இல்லா ஊருக்குள்ள…

பொறக்க வேணும் பேரப் புள்ள…

பட்டதெல்லாம் எடுத்து சொல்ல…

பட்டப் படிப்பு தேவ இல்ல…

என்ற வரிகள். இது போன்று வரும் பாடல் வரிகளுக்கு விஜய் என்றும் மறுப்புத் தெரிவிக்க மாட்டார். அதனாலேயே என்னால் அவருக்கு நிறைய சிறந்த பாடல்கள் கொடுக்க முடிந்தது. படைப்பாளிகளின் கற்பனைக்குள் அவர் என்றும் தலையிட மாட்டார். அவரது இந்த பண்பே அவரது தொழிலின் உயரத்திற்கு காரணம்,” என்றார்.

விஜய்

பட மூலாதாரம், TWITTER @KAYALDEVARAJ

“அவரது அர்ப்பணிப்பு உணர்வே, அவரது உயரத்திற்கு காரணம்”- சஞ்சீவி

நடிகர் விஜயின் கல்லூரி நண்பரும் அவருடன் இணைந்து பத்ரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவருமான நடிகர் சஞ்சீவி விஜய் குறித்து பேசும்போது, “கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது, எல்லா இளைஞர்களையும் போலவே அவருக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அவர் நடிக்க ஆரம்பித்த கால கட்டத்தில், பிரபல பத்திரிகை ஒன்று “நாளைய தீர்ப்பு” திரைப்படம் பற்றியும், விஜய் பற்றியும் மிகவும் மோசமாக விமர்சனம் எழுதித் தள்ளியது. ஆனால், “காதலுக்கு மரியாதை” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே பத்திரிகை விஜய்யின் புகைப்படத்தை அட்டைப்படமாக வைத்தது.

இன்று தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகராக அவர் உயர்ந்ததற்கு காரணம் முழுக்க முழுக்க அவரது அர்ப்பணிப்பு உணர்வே. காலையில் எத்தனை மணிக்கு படப்பிடிப்பு இருந்தாலும் நேரம் தவறாமல் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விடுவார். அதேபோல், எத்தனை மணிக்கு ஷூட்டிங் இருந்தாலும் அவரது உடற்பயிற்சியையும் தவறாமல் செய்து விடுவார். கல்லூரி சமயத்தில் எங்களது நட்பு எப்படி இருந்ததோ, அப்படியே இன்றும் இருக்கிறது. பொதுவாகவே அவர் மிகவும் அமைதியான நல்ல மனிதர்,” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: