நடிகர் விஜய்யின் இலக்கு 2026 தேர்தலா? அவர் செல்வது எம்.ஜி.ஆர் பாதையா, ரஜினிகாந்த் பாதையா?

விஜய்

பட மூலாதாரம், VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE

    • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
    • பதவி, பிபிசி தமிழ்

` நடிகர் விஜய் தனது படத்தில் ஒரு ஓட்டைப் பற்றி எவ்வளவு ஆழமாக சொல்ல முடியும் அப்படி சொல்லியிருப்பார். என் மனதில் அது ஆழமாக பதிந்துள்ளது. அடுத்த ஆண்டு நான் போடப்போகும் ஓட்டுக்கு மதிப்பு உள்ளது என்பதை புரிந்துகொண்டேன். அதற்கு அண்ணா (அரசியலுக்கு) வரவேண்டும்.

அந்த ஏரியா, இந்த ஏரியா , எந்த ஏரியாவாக இருந்தாலும் நீங்கள் கில்லியாக இருக்க வேண்டும்` என்று நேற்றைய தினம் நடிகர் விஜய் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவியர்களை சந்தித்த நிகழ்ச்சியில் ஒரு மாணவி மேடையிலேயே பேசினார். இதற்கு வழக்கம்போல் தனது புன்முறுவலை மட்டுமே விஜய் பதிலாக வெளிப்படுத்தினார்.

நடிகர் விஜயின் சமீபத்திய செயல்பாடுகள் அவர் தீவிர அரசியலை நோக்கி முன்னேறுவதற்கான சமிக்ஞைகளாக பார்க்கப்படுகிறது.

அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நேற்று நடைபெற்ற மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், `சமூக ஊடகங்களில் இருப்பதில் எதை எடுக்க வேண்டும், எதை எடுக்கக் கூடாது என்பதை நீங்கள்தான் ஆராய வேண்டும். உங்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி படிக்க வேண்டும், அம்பேத்கர் பற்றி படிக்க வேண்டும், பெரியார் பற்றி படிக்க வேண்டும், காமராஜர் குறித்து படிக்க வேண்டும். படித்ததில் தேவையானதை எடுத்துகொள்ள வேண்டும்.

நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள். பணம் வாங்கிவிட்டு வாக்களிப்பது என்பது, நமது கண்களை நாமே குத்திக் கொள்வது போன்றுதான். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தங்களது பெற்றோரிடத்தில், இனி பணம் வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்காதீர்கள் என கூறிப் பாருங்கள். நீங்கள் சொன்னால் அது நிச்சயமாக நடைபெறும்.' என்று பேசியிருந்தார்.

விஜய்

பட மூலாதாரம், PIB ARCHIVE

நடிகர் விஜயை பற்றிய அரசியல் பிம்பம் எப்போது தொடங்கியது?

2006ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வைத்து பொங்கல் சிறப்பு தபால்தலையை வெளியிட்டார். முதல் தபால்தலையை பெற்றுக்கொண்டவர் நடிகர் விஜய். தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் போன்றோர் உடன் இருந்தனர். அரசு சார்ந்த நிகழ்ச்சியாக இது இருந்தாலும் அப்போதே விஜய் மீது அரசியல் வெளிச்சம் பாயத் தொடங்கியது.

2009ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தின் பெயரை விஜய் மக்கள் இயக்கமாக விஜய் மாற்றினார். இயக்கத்திற்கென தனி கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ரத்த தானம், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகளையும் ரசிகர்கள் மூலம் தொடங்கினார். அப்போது மன்றம் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கையில் இருந்தது.

நடிகர் விஜயை அரசியல் பிம்பம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்து வந்தது என்று கூறுகிறார் மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், `விஜயின் அரசியல் என்பது அவரது அப்பாவிடம் இருந்தே தொடங்கிவிட்டது. திராவிட சித்தாந்தம் சார்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்துடன் சேர்ந்து எஸ்.ஏ.சி.யும் ஒன்றாக 90களிலேயே அரசியலுக்கு வந்திருக்க வேண்டியவர்கள். ஏனோ, எஸ்.ஏ.சி.யாக அரசியல் அடிகளை எடுத்துவைக்க முடியவில்லை` என்றார்

விஜய்

பட மூலாதாரம், AGS

விஜயின் திரைப்படங்களும் அரசியல் சர்ச்சைகளும்

2011ல் விஜயின் காவலன் திரைப்படம் வெளியாவதில் அரசியல் தலையீடு காரணமாக சிக்கல் ஏற்பட்டது. தீவிர முயற்சிக்கு பின்னர் காவலன் வெளியானாலும் , வெளியீட்டில் ஏற்பட்ட `காயம்` விஜயை வெகுவாக பாதித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்ற நிலையில் 'இந்த வெற்றியில் ஒரு அணிலைப் போல் உதவினோம்' என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து தலைவா திரைப்படமும் அரசியல் தலையீட்டை சந்தித்து. பிற மாநிலங்களில் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியாகவில்லை. திரையரங்கங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டன. விஜய் கோடநாடு சென்று, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றார். ஆனால், சந்திக்க நேரம் ஒதுக்கப்படாமல் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த நேரத்தில் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ` முதலமைச்சர் அம்மா(ஜெயலலிதா)வை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம். அம்மா தலைவா பிரச்சனையில் தலையிட்டு ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்` என்று கூறியிருந்தார்.

பின்னர், தலைவா படத்தின் தலைப்பில் இடம்பெற்றிருந்த டைம் டூ லீட் என்ற வாசகம் நீக்கப்பட்டு படம் தமிழ்நாட்டில் வெளியானது.

விஜய்

பட மூலாதாரம், VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE

கத்தி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்ததை முன்னிறுத்தி பிரச்சனைகள் கிளம்பின. இந்த படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று சில அமைப்புகள் போர்க்கொடி எழுப்பின. இதையெல்லாம் தாண்டி கத்தி படம் வெளியானபோது, படத்தில் இடம்பெற்ற `காற்றை வைத்து ஊழல் செய்கின்ற நாடு இது ` என்ற வசனம் அரசியல் ரீதியான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் விஜயின் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறைக்கு எதிரான வசனம் இடம்பெற்றிருந்ததற்கு பாஜகவினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சர்க்கர் படத்தில் அரசு தரும் இலவசங்கள் குறித்து அவர் விமர்சித்திருந்தது பேசுபொருள் ஆனது. இது ஒருபுறம் இருக்க தனது திரைப்படங்களின் நிகழ்ச்சியில் விஜய் அரசியல் பேச தொடங்கினார். சர்க்கார் ஆடியோ விழாவில் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி விஜயிடம் எழுப்பப்பட்டபோது, ` முதலமைச்சர் ஆனால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன், உண்மையாக இருப்பேன்` என்று பதிலளித்தார்.

அரசியல் தொடர்பான விஜயின் ஒவ்வொரு கருத்தும் அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரத் தொடங்கின. தமிழ்நாட்டை தலைமை தாங்க விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சார்பில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன, தற்போதும் ஒட்டப்பட்டு வருகின்றன.

விஜய்

பட மூலாதாரம், VIJAY MAKKAL IYAKKAM

தந்தையுடன் ஏற்பட்ட முரண்பாடு

2020ல் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை தொடங்குவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்தார். இது குறித்த அறிவிப்பு வந்த போதே அதற்கு எதிர்வினையாற்றிய நடிகர் விஜய், தனக்கும் தன் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனது பெயரையும் புகைப்படத்தையும் அரசியல் அமைப்புக்கு பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவித்தார்.

அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடவும், பொதுக்கூட்டங்களை நடத்தவும் தனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இயக்குநர் எஸ்.ஏ.சி, தாய் ஷோபா மற்றும் அவருடன் இருந்த மற்ற நிர்வாகிகள் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

பிற கட்சிகளில் இருந்து விலக அறிவுறுத்தல்

விஜய் மக்கள் இயக்கத்தினர் பிற கட்சிகளில் பொறுப்புகளில் இருந்தால் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பேச்சாளர் ரமேஷ் கூறும்போது, விஜய் பெயரை பயன்படுத்தித் தான் பல்வேறு நலத்திட்டங்களை நாங்கள் செய்து வருகிறோம். அப்படியிருக்கும்போது, இயக்கத்தில் இருப்பவர்கள் வேறு கட்சியில் இருக்கும்போது, அது ஒரு சார்பை கொடுக்கும். விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தாலும் இவர் இந்த கட்சியைத் தான் ஆதரிப்பார் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகதான் அப்படி அறிவுறுத்தப்பட்டது` என்றார்.

விஜய்

பட மூலாதாரம், YOUTUBE/SONY MUSIC INDIA

தேர்தலை குறிவைத்து மாணவர்கள் சந்திப்பு நடந்ததா?

நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள் என்று மாணவர்கள் சந்திப்பில் விஜய் பேசியிருப்பது, எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வரக்கூடும் என்றும் 2026ஆம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்தே விஜய் இவ்வாறு பேசியுள்ளார் என்ற யூகங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து மூத்த செய்தியாளர் ப்ரியன் நம்மிடம் பேசும்போது, ` ஒவ்வொரு படம் ரிலீஸின்போதும் விஜய் அரசியல் பேசுகிறார். தற்போது லியோ படம் வருவதால் இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம். அதே நேரத்தில் மாணவர்களுக்காக அவர் நடத்திய இந்த நிகழ்வை பாராட்டித்தான் ஆக வேண்டும்` என்றார்.

விஜய் மக்கள் இயக்க பேச்சாளர் ரமேஷ் இது குறித்து பேசும்போது, ` 234 தொகுதிகளிலும் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தளபதி கையால் பரிசு கொடுக்க வேண்டும் என்றே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மேலும், முன்பே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. சில ஆண்டுகள் நடத்தப்படாமல் தற்போது நடைபெற்றதால் புதிதாக நடத்தப்படுவதுபோன்றும் அரசியலுக்காக செய்வதுபோன்றும் வெளியே தோன்றியிருக்கிறது` என்றார்.

எம்ஜிஆர் பாதையா ரஜினிகாந்த் பாதையா

விஜய் ஒன்றும் எம்ஜிஆர் இல்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும் என்று கூறும் ஷ்யாம், `உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானபோது கருணாநிதி அழுத்தம் ஏற்படுத்தினார். அதை தாண்டி எம்ஜிஆர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் பலமாக இருந்தபோதே, திமுகவில் இணைந்து தீவிரமாக செயல்பட்டவர். அந்த நேரத்தில் நேருவை எதிர்த்து அரசியல் செய்வது என்பது சாதாரண விஷயமா?

அதேபோல், திமுகவை எதிர்த்தும் தீவிரமாக செயல்பட்டவர். எம்ஜிஆர் தனது ரசிகர்களை செலவு செய்யவிட்டதே இல்லை. டிக்கெட் கொடுத்து படம் பார்ப்பது மட்டுமே அவர்களின் வேலையாக இருந்தது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு அரசியல் புரிதலையும் ஏற்படுத்திக்கொண்டே வந்தார்.

விஜயை பொறுத்தவரை இரட்டை குதிரை சவாரி செய்யலாம் என்று நினைத்தால் அது மிகவும் கடினமானது. ரஜினிகாந்தை போன்று தனது படங்களுக்காக விஜய் அரசியலை பயன்படுத்துகிறாரா என்று நினைக்க தோன்றுகிறது` என்றார்.

ப்ரியனும் இதே கருத்தை முன்வைக்கிறார். `எம்ஜிஆர் திரைப்படத்தில் கட்சி குறியீடுகளை காட்டினார். அதன் மூலம் அவரும் வளர்ந்தால் கட்சியும் வளர்ந்தது. அவர் திமுகவில் இருந்து வெளியே வரும்போது அவர் பின்னால், ஒரு கூட்டமே சென்றது. இதையெல்லாம் விஜய் உடன் ஒப்பிட முடியாது. விஜய் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கலாம். அதற்காகவெல்லாம் எம்ஜிஆரை ஏற்றுகொண்டதை போல் அவரையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறிவிட முடியாது` என்றார்.

விஜய்

பட மூலாதாரம், VIJAY MAKKAL IYAKKAM

2026 தேர்தலை குறிவைக்கிறரா?

மூத்த செய்தியாளர் குபேந்திரன் பேசும்போது, ` அவரது தொண்டர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று இருக்கிறார்கள். அரசியல் ஆசை விஜய்க்கு இருக்கிறது. மோடியை சந்தித்தார், பின்னர் அண்ணா ஹசாரே உடன் சென்று புகைப்படம் எடுத்துகொண்டார். இதேபோல் ராகுல் காந்தியையும் போய் சந்தித்தார். ரஜினி தன்னுடைய படங்கள் ஓட வேண்டும் என்பதற்காகதான் அரசியல் பேசினார் என்று கூறப்பட்டது. அப்படிப்பட்ட நிலைமை விஜய்க்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. ஏனென்றால், தமிழ்நாட்டில் ஆளுநரால் ஏற்படும் சர்ச்சைகள் குறித்து விஜய் இதுவரை எதாவது கருத்து சொல்லியிருக்கிறாரா?

அரசியல் அடையாளத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார். அம்பேத்கர் பற்றி பேசினால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதரிப்பார்கள், பெரியார் பற்றி பேசினால் ஜாதிக்கு அப்பாற்பட்டவர்கள் ஆதரிப்பார்கள், காமராஜர் பற்றி பேசினால் தூய்மையான அரசியலை விரும்புகிறவர்கள் ஆதரிப்பார்கள், இதெல்லாம் காலம் காலமாக உள்ளதுதான். மாணவர்களுடனான விஜயின் சந்திப்பை நான் பாராட்டுகிறேன். ஆனால், இதை அரசியல் நகர்வாக பார்க்க முடியாது` என்றார்.

`அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் அரசியல் தொடர்பாக கருத்து சொல்ல வேண்டும் அல்லவா? விஜய் எதாவது கருத்து தெரிவிப்பாரா? இன்னும் சில நாட்களுக்கு இந்த பேச்சு இருக்கும். அதன் பின்னர் எதுவும் இருக்காது, தனக்கு அரசியல் வெளிச்சம் தேவைப்படுகிறது என்று விஜய் நினைக்கிறார் என்பதே என் கருத்து. விஜய் என்ற பெயரை மட்டும் வைத்து ஒரு ரசிகர் தேர்தலில் வெற்றி பெற முடியாது` என்கிறார் தராசு ஷ்யாம் .

விஜய்க்கு அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதே நேரத்தில் தயக்கமும் உள்ளது என்கிறார் ப்ரியன். ` அவருக்கு இன்னும் மார்க்கெட் இருக்கிறது. தற்போது ஆண்டுக்கு 1 படம் தான் நடிக்கிறார். அப்படி பார்க்கும்போது 2028வரை அவர் உச்ச நட்சத்திரமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசியலுக்கு வருவதை அவர் விரும்புவாரா என்பது தெரியவில்லை .

அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றியும் பெற்றனர். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சியில் 25 ஆயிரம் பதவிகள் இருக்கிறது. சில நூறு தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றதை செல்வாக்காக பார்க்க முடியாது. எடுத்தவுடனேயே தேர்தலில் போட்டியிட்டு 30 சதவீத வாக்குகளை விஜயால் பெற முடியாது. ஒருவேளை அரசியலுக்கு வந்தாலும் அம்பேத்கார், பெரியார் ஆகியோர் குறித்து பேசுவதால் வலதுசாரி அரசியலை விஜய் எடுக்க மாட்டார் என்பது மட்டும் தெரிகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்னுமே இல்லாமல் போனால் வேண்டுமானால் அரசியலுக்கு வரலாமா என்பது குறித்து அவர் யோசிக்கக் கூடும்` என்றார்.

விஜய் மக்கள் இயக்கத்தை கட்டமைப்பு ரீதியாக வலுப்படுத்தி வருவதாக கூறுகிறார் ரமேஷ், `தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகள் உள்ளனர். அதுபோக, மாணவர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, மீனவர் அணி என பல அணிகள் உள்ளன. வார்டு அளவில் நிர்வாகிகள் உள்ளனர். விலையில்லா விருந்தகம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவேளை அரசியலுக்கு வருவதாக விஜய் அறிவித்தால், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. வரவில்லை என்றாலும் அவர் பெயரில் செய்யப்படும் சேவைகள் தொடரும்` என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: