மனித உடல்கள், உடையும் பனிப்பாறைகள் - எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ் பெண்ணின் திகில் அனுபவம்

பட மூலாதாரம், N.Muthamilselvi
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
“பயணத்தின் நடுவே பல மரணங்களைப் பார்த்தேன், பல இடங்களில் வேதனை தாளாமல் அழுது தீர்த்தேன். பல இடங்களில் வலியால் துடித்தேன். ஆனால், என்னால் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முடியுமா என்ற சந்தேகம் ஒருபோதும் வரவில்லை.”
இது எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுத் திரும்பியுள்ள முதல் தமிழ்நாட்டுப் பெண் முத்தமிழ்செல்வியின் வார்த்தைகள்.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைவது மலையேற்ற வீரர்களில் பலருக்கும் ஒரு கனவு. அந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுத் திரும்பிய முதல் தமிழ்நாட்டுப் பெண்ணாக கடந்த மாதம் சாதனை படைத்தார் முத்தமிழ்செல்வி.
எவரெஸ்ட்டை ஏறுவதற்கு முன்பாக, கடல் மட்டத்திலிருந்து 6,119 மீட்டர் உயரத்தில் இருக்கும் லொபுச்சே என்ற சிகரத்தை அடைய வேண்டும்.
அதை அடைந்துவிட்டுத் திரும்பி வந்த முத்தமிழ்செல்வி, பேஸ் கேம்பில் இருந்து கும்பு ஐஸ்ஃபால் என்ற பகுதியை அடைய வேண்டும். அங்கு கிராவர்ஸ் எனப்படும் மிக ஆபத்தான நிலவியல் அமைப்பு உள்ளது.
செங்குத்தாக, எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழக்கூடிய பனிப்பாறைகள் நிரம்பிய பகுதியான கிராவர்ஸில் பயணிப்பது மிகவும் சவாலானது. அதில் எப்போது வேண்டுமானாலும் தவறி விழவேண்டிய நிலை ஏற்படலாம். ஆகவே அதில் பயணிக்கும்போது துரிதமாகச் செயல்பட வேண்டும்.
இத்தகைய நில அமைப்பில் பயணிப்பதற்கு பாதைகளை வகுக்கும் பணியை நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா இன மக்கள் மேற்கொள்வார்கள். எவரெஸ்ட் சிகரத்திற்கான மலையேற்றத்தில் ஈடுபடும் அனைவருக்கும் பேருதவியாக இருப்பவர்கள் ஷெர்பா வழிகாட்டிகள்தான்.
அப்படி பாதை வகுக்கச் சென்ற ஷெர்பா இனத்தைச் சேர்ந்த மூன்று நபர்களே கும்பு ஐஸ்ஃபால் பகுதியில் தவறி விழுந்து இறந்துவிட்டதாகக் கூறுகிறார் தமிழ்செல்வி.
அவ்வளவு அபாயகரமான பகுதியில் பயணித்த அனுபவத்தைக் கூறியபோது, “எப்போது வேண்டுமானாலும் நாம் நடந்து செல்லும் தரைப் பகுதி உடைந்து விழுந்துவிடலாம் என்ற அச்சத்துடனேயே பயணித்தேன்.
அந்தப் பகுதியில் பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமுமே மிகவும் முக்கியமானது. அதிவிரைவாகச் செயல்பட வேண்டிய அதேநேரத்தில், சுதாரிப்புடனும் இருந்தாக வேண்டும்,” என்று கூறினார்.
அதைக் கடந்து எவரெஸ்ட் பயணத்தின் நடுவே இருக்கும் இரண்டாவது முகாமை அடைந்தது முத்தமிழ்செல்வியின் குழு.

பட மூலாதாரம், N.Muthamilselvi
எவரெஸ்ட் சிகரத்தை தொடுவது விளையாட்டான காரியமல்ல
“எவரெஸ்ட் சிகரத்தை ஏறும்போது, அங்கிருக்கும் கடுமையான வெப்பநிலையைத் தாக்குப்பிடிக்க நமது உடலையும் தயார் செய்துகொண்டேயிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
எங்கள் முகாமில் மொத்தம் மூன்று குழுக்கள் இருந்தன. இந்தியர்கள் குழுவில் நான் இருந்தேன். அதுபோக, சீன குழு ஒன்றும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழு ஒன்றும் இருந்தது.
அதில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழுவில் இருந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேசன் என்ற நபர், எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பி வரும்போது, தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துவிட்டார்.
அந்தக் குழுவில் இருந்த மற்றொரு நபருக்கு ஒரு கை முழுவதும் ரத்த ஓட்டமே நின்று போகும் அளவுக்கு உறைந்துவிட்டதால், கையையே எடுக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டார்,” என்று தனது கண்முன்னால் பார்த்த சம்பவங்களை விவரித்தார்.
இவர்கள் அனைவருமே எவரெஸ்ட் சிகரத்தை ஏறிவிட்டுத் திரும்பி வரும்போது இந்தப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதிலும் ஒருவர் தன் உயிரையே இழந்துவிட்டார். “இதையெல்லாம் பார்த்து எங்களுடன் வந்த ஒரு நபர் மயக்கமடைந்து விழுந்துவிட்டதாக” கூறுகிறார் தமிழ்செல்வி.

பட மூலாதாரம், N.Muthamilselvi
இப்படி அடுத்தடுத்து இழப்புகளைக் கண்களில் பார்த்து பலரும் அதிர்ச்சியில் இருந்த நேரத்தில், ஜேசன் இறந்துவிட்டார் என்ற தகவலை முகாமில் இருந்தவர்களிடம் தெரிவித்த வழிகாட்டி ஒருவர் அழுதுகொண்டே, “இது ஒன்றும் விளையாட்டு இல்லை. இது எவரெஸ்ட் சிகரம். இதை ஏறுவது விளையாட்டான காரியமல்ல. ஆகவே அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு முன், நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்டது,” என்று கூறியுள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தே தீர வேண்டுமென்ற மன உறுதி
இந்தத் தருணத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் குழுமியிருந்த அந்த முகாமில் பலரது கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாகப் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.
அவர்கள் “அனைவருமே அவரவர் நாடுகளில் ஏதோவொரு வகையில் பிரபலமாக அறியப்பட்டவர்கள். ஆனால், அவை எதற்குமே அந்த இடத்தில் ஒரு பொருளும் இருக்கவில்லை. அது அங்கிருந்த மற்றவர்களையும் மனமுடைய வைத்தது.”
அந்த நாளின் இரவைப் பல கலவையான சிந்தனைகளுடனேயே அனைவரும் கழித்தனர். அடுத்த நாள் காலையில், “இந்தியர்கள் குழுவில் இருந்த 8 பேரில், ஒருவர் தான் வரவில்லை என்றும் பின்வாங்கிச் செல்வதாகவும் அறிவித்தார்.”

பட மூலாதாரம், N.Muthamilselvi
உடனே குழுவில் இருந்த மற்றவர்களின் பார்வை, முத்தமிழ்செல்வியின் மீது விழுந்தது. “எனக்கு இதுவே முதல் முயற்சி என்பதால், அனைவரும் என் முடிவை எதிர்பார்த்தார்கள். ஆனால், நான் பின்வாங்கப் போவதில்லை என்றேன்.
உடனே அங்கிருந்தவர்கள் என்னை ஒன்றுக்கு இரண்டு முறை ஆழமாக யோசிக்குமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால், நான் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தே தீரவேண்டுமென உறுதியாக இருந்தேன்.”
அங்கிருந்து கிளம்பி மலையேறத் தொடங்கியவர்கள், மூன்றாவது முகாமில் ஓய்வுக்காகத் தங்கினார்கள். ஆனால், மூன்றாவது முகாமில் “ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் இருக்க முடியாது. உறங்கும்போதுகூட அதை போட்டுக்கொண்டே தான் உறங்க வேண்டியிருந்தது,” என்று விவரிக்கிறார் தமிழ்செல்வி.
பிறகு, அங்கிருந்து நான்காவது முகாமை சென்றடைய 10 மணிநேரம் ஆனது. ஆனால், அங்கு சென்ற நேரத்திலேயே தாமதமாகிவிட்டதால், அங்கு வெறும் இரண்டு மணிநேரம் மட்டுமே ஓய்வெடுக்கக்கூடிய நிலை இருந்துள்ளது.

பட மூலாதாரம், N.Muthamilselvi
பிறகு அங்கிருந்து கிளம்பி எவரெஸ்டை நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். ஆனால், பாதி வழியில் தமிழ்செல்வியின் குழுவில் வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவரின் கை முழுவதும் உறைந்துவிட்டது. “அவர் எவ்வளவோ முயன்றும் அவரால் மலையேற்றத்தைத் தொடர முடியவில்லை. அதனால் அவர் திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று.”
அப்போதும்கூட அவருடன் வந்த ஷெர்பா தமிழ்செல்வியை எச்சரித்துள்ளார். ஆனால், அவர் மனம் தளராமல் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
மலையேற்றப் பாதையில் கனவுகளோடு புதைந்து கிடந்த உடல்கள்
“நானும் என்னுடன் வந்த ஷெர்பாவும்தான் அந்தக் கூட்டத்திலேயே கடைசி நபராக மலையேறிக் கொண்டிருந்தோம். அப்போதுகூட ஷெர்பா என்னிடம் ‘மிகவும் தாமதாகிவிட்டது. ஆக்சிஜன் சிலிண்டரும் குறைவாக உள்ளது. திரும்பிப் போய்விடலாமா?’ என்று கேட்டார்.
ஆனால், என்ன ஆனாலும் சரி தமிழ்நாட்டில் இருந்து பலருடைய நம்பிக்கையை சுமந்துகொண்டு மலையேறிக் கொண்டிருந்த எனக்கு, அவ்வளவு தூரம் சென்ற பிறகு முயற்சியைக் கைவிட்டுத் திரும்ப மனம் வரவில்லை. எவ்வளவு கடினமான சூழ்நிலை ஏற்பட்டாலும் சரி, சிகரத்தை அடைந்தே ஆகவேண்டும் என்று நினைத்தேன்”
“நாங்கள் நடந்து செல்லும் பாதையின் வலதுபுறம் பல உடல்கள் கிடந்தன. அவை அனைத்துமே, எவரெஸ்ட் சிகரத்தைத் தொட வேண்டுமென்ற கனவோடு மலையேறத் தொடங்கியவர்களின் உடல்கள்.
அந்த உடல்களோடு அவர்களது கனவுகளும் அங்கே புதைந்து கிடந்தன. சுடுகாடுகளில்கூட உடல்கள் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால், என் கண் முன்னால் அங்கே அந்த உடல்கள் வெளிப்புறத்திலேயே சிதறிக் கிடந்தன.

பட மூலாதாரம், N.Muthamilselvi
அதுவும் இரவு நேரத்தில் அந்த இடத்தைக் கடந்து செல்கிறோம். அந்தச் சூழலில் எவ்வளவு உறுதி மிக்க மனிதராக இருந்தாலும் சரி ஒரு நடுக்கம் வரவே செய்யும். அதிலும் எனக்குப் பின்னால் வேறு யாருமே இல்லை. நான் தான் அந்தப் பகுதியைக் கடைசியாகக் கடக்கிறேன்.”
அந்த அனுபவம் ஏற்படுத்திய அச்சம் குரலில் ஒலிக்க விவரித்தார் தமிழ்செல்விக்கு, அந்த உடல்களைக் கடந்து சென்ற ஒவ்வொரு நொடியும் இதயத் துடிப்பு எகிறிக் கொண்டே இருந்ததாகக் கூறுகிறார்.
அதிலும் பல ஆயிரம் மீட்டர் உயரத்தில், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு நடுவே பயணித்துக்கொண்டிருந்த நேரத்தில் அப்படியொரு நடுக்கம் ஏற்படுவது அபாயகரமானது.
ஆனால், “அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. கண் முன்னால் கண்ட மரணங்கள், அருகில் கிடந்த சடலங்கள் அனைத்தும் அப்போது கண்களுக்குள் நிழலாடிக் கொண்டே இருந்தன. நான் கால் வைக்கும் இடத்திலிருந்து பத்து அடி தூரத்திலேயே உடல்கள் கிடக்கின்றன.”
பல ஆயிரம் மீட்டர் உயரத்தில், உயிர்வளி பற்றாக்குறை நிலவும் சூழலில் ஏற்படும் இந்தப் பதற்றம் உயிருக்கே ஆபத்தாகக் கூடும். அத்தகைய அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்ட தமிழ்செல்வி, அந்த நேரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் நினைத்துக்கொண்டதாகக் கூறுகிறார்.

பட மூலாதாரம், N.Muthamilselvi
கிரீஸ் நாட்டு மலையேற்ற வீரருக்கு செய்த சத்தியம்
மலையேற்றத்தின்போது, கடும்பனிப்பொழிவால் கால் பாதங்கள் ரத்த ஓட்டம் நின்று விடும் அளவுக்குப் பாதிக்கப்பட்ட கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை சந்தித்துள்ளார் தமிழ்செல்வி.
“தமிழ்! நீங்க சிகரத்தை அடையும் மன உறுதியோடு இருந்தால், நிச்சயம் ஏறிவிட்டுத் திரும்பி உயிருடன் வருவேன் என எனக்கு சத்தியம் செய்யுங்கள்,” என்று அவர் தன்னிடம் கேட்டதாகக் கூறுகிறார் தமிழ்செல்வி.
மேலும், “ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் உங்கள் குழந்தைகளை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். “தனது குழந்தைகளுக்காக உயிருடன் பாதுகாப்பாகத் திரும்பி வருமாறு மாரியோஸிடம் தான் செய்துகொடுத்த சத்தியம்தான், சடலங்களைக் கடந்து செல்லும்போது ஏற்பட்ட கடுமையான பதற்றத்தைத் தணித்துக்கொள்ளவும் தைரியமாக சிகரத்தைத் தொடவும் உதவியதாக,” கூறுகிறார் முத்தமிழ்செல்வி.
“என் குழந்தைகளிடம் கண்டிப்பாகத் திரும்பி வருவேன் என்று கூறிவிட்டு வந்தேன். தமிழ்நாட்டு மக்கள் பலரும் எனக்கு ஆதரவு தெரிவித்தனர். நான் பாதுகாப்பாக வந்துவிட வேண்டும் என்று அக்கறையுடன் கூறியிருந்தனர்.”

பட மூலாதாரம், N.Muthamilselvi
சிகரத்தைத் தொடுவதற்கான பயணத்தின் ஒவ்வொரு நொடியின்போதும் இவையனைத்தும் தன் முன்னால் வந்துகொண்டே இருந்தன என்று அவர் கூறுகிறார்.
"மரண வலியை எதிர்கொண்ட ஒவ்வொரு தருணத்திலும் என் குழந்தைகளை நினைத்துக்கொண்டே முன்னேறினேன்."
அந்த நினைவுகளோடு, “வெளிச்சத்தைத் தேடிச் சென்றுகொண்டே இருந்தேன். நான் சிகரத்தைத் தொட்ட நாளின் அதிகாலை வேளையில் 4 மணிக்கே சூரியன் தென்படத் தொடங்கிவிட்டது.
நான் தேடிக்கொண்டிருந்த வெளிச்சம் கிடைத்துவிட்டதைப் போல் உணர்ந்தேன். அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறினேன்.
கடுமையாக வீசிக்கொண்டிருந்த காற்று முகத்தில் வேகமாக அடித்து அடித்து முகத்தின் இடது பக்கம் காயமடைந்தது. ஆனால், நான் கைவிடவில்லை. எனக்குக் கடைசியாகக் கிடைத்த வெளிச்சத்தை இறுகப் பற்றிக்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தேன்.”
இமயத்தின் உச்சியைத் தொட்ட தமிழ் பெண்

பட மூலாதாரம், N.Muthamilselvi
அதற்குப் பிறகு கீழே இறங்கத் தொடங்கிய தமிழ்செல்வி, பனிப்பொழிவு கடுமையாக இருந்ததால், கீழே இறங்க முடியாமல் முகாமில் காத்திருந்தார்கள். ஆனால், அவரது ஆக்சிஜன் சிலிண்டர் காலியாகிவிட்டது.
அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது, “தான் இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அழுதுகொண்டிருந்தார்."
ஆனால், எனக்கு முன்பாக நான் என்னிடம் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரை கொடுத்து காப்பாற்றிய ஒருவர் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் படுத்திருந்தார்.
அப்போது ஒருவரால் எப்படி இவ்வளவு அழுதும் உணர்ச்சியே இல்லாமல் இருக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு அடுத்த நாள்தான் அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் என்பது தெரிய வந்தது,” என்கிறார் தமிழ்செல்வி.

பட மூலாதாரம், N.Muthamilselvi
பிறகு, அவருடன் வந்த ஷெர்பா இனத்தைச் சேர்ந்த வழிகாட்டி கொண்டு வந்த கூடுதல் சிலிண்டரை பெற்றுக்கொண்டு அவர் கீழே இறங்கத் தொடங்கினார். அந்த நேரத்தில் கோமாவில் இருந்த அந்த நபர் உட்பட, பல விதமான மனிதர்களின் வாழ்வைக் கண்முன் கண்ட அவருடைய நினைவுகளில் பலவிதமான உணர்ச்சிகளும் பலவிதமான அனுபவங்களும் ததும்பிக் கொண்டிருந்தன.
இமயத்தின் மிக உயர்ந்த அந்தச் சிகரத்தின்மீது பட்டுத் தெறித்துக் கொண்டிருந்த சூரியனின் ஒளிக்கதிர்கள், அவரது முகத்திற்கு ஒரு புதிய ஒளியைக் கொடுத்து வழியனுப்பி வைத்தது.
இயற்கையின் அரவணைப்பு, அதன் ஆக்ரோஷம், மகிழ்ச்சி, கண்ணீர், மரணங்கள், சடலங்கள், காயங்கள், வலி, வேதனை, அபாயங்கள் அனைத்தையும் கடந்து மே 23ஆம் தேதியன்று தமிழ்செல்வி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.
“அந்த நாளில் கடைசியாக சிகரத்தைத் தொட்ட நபர் நான் தான். ஆனால் தொட்டுவிட்டேன். தமிழ்நாட்டில் இருந்து வந்த தமிழ் பெண் முத்தமிழ்செல்வி, இமயத்தின், இந்த பூமியின் மிக உயர்ந்த சிகரத்தைத் தொட்டுவிட்டேன்.”
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












