அமேசான் காடுகளில் கொடிய விலங்குகளுக்கு நடுவே 4 குழந்தைகள் 40 நாட்கள் தப்பிப் பிழைத்தது எப்படி?

40 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட குழந்தைகள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அமேசான் காடுகளின் பழங்குடி மக்களும் ராணுவ வீரர்களும் அந்தக் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் புகைப்படமொன்றை அதிபர் பெட்ரோ பகிர்ந்திருந்தார்
    • எழுதியவர், மாட் மர்ஃபி
    • பதவி, பிபிசி செய்திகள்

"அதிசயம்... அதிசயம்... அதிசயம்..."

கொலம்பியா நாட்டுக்குள் பரவிக்கிடக்கும் அமேசான் காட்டின் மையப் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அந்நாட்டு ராணுவத்தின் 'வயர்லெஸ்' கருவிகளில் ஒலித்த ஒரே சொல் இதுதான்.

தென்னமெரிக்காவில் உள்ள பிரேசில், கொலம்பியா, பொலிவியா போன்ற 9 நாடுகளில் பரவிக் கிடக்கும் உலகின் மிகப் பெரிய, அடர்ந்த காடுதான் அமேசான்.

கொலம்பியாவின் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதையோ எதிர்பார்த்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, அந்தக் காட்டுக்குள் 'வயர்லெஸ்' கருவிகளில் ஏற்பட்ட இரைச்சலைத் தாண்டி அந்த ஒரு சொல் மட்டும் தெளிவாக திரும்பத் திரும்பக் கேட்டது.

"அதிசயம்... அதிசயம்... அதிசயம்... "

40 நாட்களுக்கு முன் ஆபத்து நிறைந்த அந்த அடர்ந்த காட்டுக்குள் காணாமல் போயிருந்த நான்கு குழந்தைகள் உயிருடன் இருந்ததைக் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் அந்தக் குரல்.

அவர்களைத் தேடிக் கொண்டிருந்த அந்நாட்டு ராணுவத்தினரின் மட்டற்ற மகிழ்ச்சியைத்தான் அந்தச் சொல் வெளிப்படுத்தியது.

தாயும் நான்கு குழந்தைகளும் எதிர்கொண்ட விமான விபத்து

கடந்த மாதம் 1ஆம் தேதி அதிகாலையில் அவர்கள் பயணித்த இலகுரக விமானம் அமேசான் காட்டுக்குள் விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அந்த விமானத்தில் பயணித்த ஹுய்டோட்டோ பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.

அந்த இலகுரக விமானத்தில் ஒரு தாயும், அவரது நான்கு குழந்தைகளும் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் தாய் உயிரிழந்துவிட்டார். இருப்பினும், 13, 9, 4, மற்றும் 1 வயது குழந்தைகள் காட்டுக்குள் தனியாகத் தவித்து வந்துள்ளனர்.

பாம்பு, ஜாகுவார் எனப்படும் சிறுத்தையைப் போன்ற வேட்டையாடி உயிரினம், பல வகை கொடிய கொசுக்கள் எனப் பல ஆபத்தான உயிரினங்கள் சர்வசாதாரனமாகக் காணப்படும் பகுதி அது.

அத்தகைய ஆபத்தான அடர்காட்டுக்குள் தொலைந்துபோன நான்கு குழந்தைகளின் நிலையை நினைத்து நாடே வருந்தியது.

அவர்களைத் தேடும் பணிகளை கொலம்பிய அரசு முடுக்கிவிட்டது. இதற்காக அந்நாட்டு ராணுவத்தினர் ஒரு மீட்புக் குழுவையும் அமைத்தனர்.

விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்னவாக இருக்குமோ என மீட்புக் குழுவினர் தொடக்கத்தில் அஞ்சினர். ஆனால் காட்டுப்பகுதியில் தென்பட்ட கால்தடங்கள், பகுதி பகுதியாக உண்ணப்பட்ட காட்டுப் பழங்கள் கிடந்ததை மையமாக வைத்து அவர்களைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம், விமானத்தில் பயணித்தவர்கள் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை மீட்புக் குழுவினருக்கு ஏற்பட்டது.

அடுத்த ஆறு வாரங்களில், கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, "காட்டுக்குள் 40 நாட்களுக்குப் பின் நான்கு குழந்தைகள் மீட்கப்பட்ட நிகழ்வு ஓர் அதிசயம். அது வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்," என்று அறிவித்தார்.

அடர்வனத்தின் குழந்தைகள்தான் அவர்கள்

40 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட குழந்தைகள்

பட மூலாதாரம், ALVARO DEL CAMPO

படக்குறிப்பு, அமேசான் காடுகள்

அந்தக் குழந்தைகள் முக்குடுய் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.வாழ்வில் இத்தகைய அபாயகரமான சூழலில் சிக்கும் நிலை ஏற்பட்டால், அதில் பிழைத்திருக்கும் வகையில் அவர்கள் தங்கள் குழந்தைகளைத் தயார்படுத்தியுள்ளார்கள்.

சிறுவயதிலிருந்தே ஹுய்டோட்டோ மக்கள் வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் காட்டுக்குள் ஒன்று சேர்ந்து வாழ்க்கையை வாழ்வது உள்ளிட்ட பல பழக்கங்களைக் கற்றுக்கொள்கின்றனர்.

தற்போது அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ள குழந்தைகளின் தாத்தா ஃபிடென்சியோ வேலென்சியா செய்தியாளர்களிடம் பேசிய போது, "மூத்த குழந்தைகளான லெஸ்லி மற்றும் சோலினி ஆகியோர் அடர்ந்த காட்டுப்பகுதி குறித்து நன்கு அறிந்தவர்கள்," என்றார்.

கொலம்பிய ஊடகத்திடம் பேசிய குழந்தைகளின் உறவினரான டாமரிஸ் முக்குடுய், எங்கள் குடும்பங்களில், குழந்தைகள் வளரும்போது சிறுவயதிலேயே அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் "உயிர் பிழைக்க எதிர்கொள்ள வேண்டிய சவால்களை" சந்திப்பதற்குப் பழகிவிடுகின்றனர் என்றார்.

"சிறு வயதில் நாங்கள் காட்டுக்குள் இதுபோல் உயிர் வாழும் விளையாட்டை விளையாடியபோது, சிறிய முகாம்களைப் போல டென்ட்களை அமைத்து விளையாடுவோம்," என்று அவர் தனது இளமைக் காலத்தை நினைவு கூர்ந்தார்.

பதின்மூன்று வயதான லெஸ்லி, "காட்டில் பல நச்சுப் பழங்கள் இருப்பதால், என்னென்ன பழங்களைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தாள். ஒரு பச்சிளம் குழந்தையை எப்படிப் பராமரிப்பது என்றுகூட அவளுக்குத் தெரியும்," என்று தெரிவித்தார்.

 40 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட குழந்தைகள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அடர்ந்த வனப்பகுதியில் எப்படி வாழ வேண்டும் என்பதை குழந்தைகள் ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தார்கள் என ஃபிடென்சியோ வேலன்சியா தெரிவித்தார்

அந்த விபத்திற்குப் பிறகு, லெஸ்லி தனது தலைமுடியை நேர்த்தியாக வைத்திருக்கப் பயன்படுத்திய ரப்பர்களின் உதவியுடன், மரக்கிளைகளை இணைத்து சிறிய தற்காலிக கூடாரங்களைக் கட்டினார்.

அவர்கள் பயணித்த செஸ்னா 206 விமானத்தின் இடிபாடுகளில் இருந்து ஃபரினா என்ற மாவுப் பொருளையும் அவர் பத்திரமாக மீட்டு வைத்துக்கொண்டார்.

அந்த மாவுப் பொருளைச் சாப்பிட்டே குழந்தைகள் நால்வரும் தங்கள் பசியை ஆற்றிவந்தனர். மாவுப் பொருள் தீர்ந்த பின்னர், சில மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள் மற்றும் பழங்களை உணவாக உட்கொண்டு காட்டில் தொடர்ந்து வாழ்ந்திருக்கின்றனர் எனத் தேடுதல் முயற்சியில் பங்கேற்ற பழங்குடி தலைவர்களில் ஒருவரான எட்வின் பாக்கி செய்தியாளர்களிடம் கூறினார்.

"அவிச்சூர் என்று அழைக்கப்படும், பேசன் பழத்தைப் போன்ற ஒரு பழம் அந்த காட்டுப் பகுதியில் உள்ளது," என்றும், "அந்தப் பழத்தைத் தேடி அவர்கள் விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவுக்கு அலைந்து அந்தப் பழத்தைக் கண்டுபிடித்தனர்," என்றும் அவர் தெரிவித்தார்.

கொலம்பியா அரசின் சமூக நலத் துறையின் தலைவரான ஆஸ்ட்ரிட் காசெரெஸ், அந்தக் குழந்தைகளுக்கு இதுபோன்ற சோதனை ஏற்பட்ட நேரம் "காட்டு மரங்களில் இருந்த பழங்கள் அனைத்தும் நன்றாகப் பழுத்திருக்கும் காலம்" என்பதால் அவர்களுக்கு எளிதாக உணவு கிடைத்துள்ளது என்று கூறினார்.

ஆனால் அவர்கள் இதுபோன்ற சூழலில், உயிர் வாழ்வதற்கு மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் நிலைதான் இருந்துள்ளது.

பூர்வகுடிகள் பற்றி ஆராய்ந்து வரும் நிபுணர் அலெக்ஸ் ருஃபினோ, சனிக்கிழமையன்று பிபிசி முண்டோவிடம் பேசியபோது, குழந்தைகள் "மிகவும் இருண்ட, மிகவும் அடர்த்தியான காட்டில், மிக உயரமான மரங்கள் வளர்ந்திருந்த பகுதியில் இத்தனை நாட்கள் வாழ்ந்து வந்துள்ளனர்," என்றார்.

மேலும், சில இலைகள் மூலம் அந்தக் குழந்தைகள் தண்ணீரைச் சுத்திகரிக்க முடியும் என்றாலும், அங்கே நச்சுச் செடிகளும், கொடிகளும் இருந்தன என்றும் அவர் கூறினார்.

40 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட குழந்தைகள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்

"இந்தக் காட்டுப் பகுதிக்கு இன்னும் யாரும் சென்று இதுவரை ஆராய்ச்சி செய்ததில்லை. அந்த இருண்ட பகுதியில் இருந்து கொஞ்சம் தொலைவுக்குப் பயணித்தால் அங்கே ஓடும் ஆற்றைத் தாண்டினால் தான் சிறு சிறு குடியிருப்புப் பகுதிகள் உள்ளன," என்று அவர் மேலும் பேசியபோது கூறினார்.

இதுமட்டுமல்லாமல், அந்தக் காட்டுப் பகுதிக்குள் உலவும் ஆயுத கும்பல்கள் மற்றும் பல்வேறு வேட்டையாடி உயிரினங்களிடம் இருந்து தற்காத்துக் கொண்டதுடன், கடுமையான மழை மற்றும் குளிரையும் அந்தக் குழந்தைகள் எதிர்கொண்டிருக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தைகள் காட்டு நாயிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது என்று அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கூறினார்.

ஆனால், ஒரு பழங்குடி சமூகத்தில் வளர்க்கப்பட்ட 13 வயது சிறுமி, காட்டுப்பகுதியில் அச்சம் சூழ்ந்த அத்தகைய நிலையை எதிர்கொண்டு வாழத் தேவையான பல திறன்களை ஏற்கேனவே பெற்றிருந்திருப்பார் என்று ருஃபினோ குறிப்பிட்டார்.

கொலம்பியாவில் அந்தக் குழந்தைகள் வளர்ந்து வந்த பகுதியில் வசிக்கும் குவானனோ இனத்தின் தலைவரான ஜான் மொரேனே, அந்தக் குழந்தைகளை சமூகத்தில் மதிப்புடன் வாழ்ந்த அவர்களுடைய பாட்டிதான் வளர்த்துள்ளார் என்று கூறினார். நாட்டின் தென்கிழக்கில் உள்ள இப்பகுதியில்தான் அந்தக் குழந்தைகள் வளர்க்கப்பட்டனர்.

"அந்த அடர்ந்த காட்டுக்குள் வாழ, அந்தக் குழந்தைகள், அவர்களுடைய சமூகத்தில் கற்றுக்கொண்ட விஷங்களையும் மூதாதையர்களிடம் இருந்து பெற்ற அறிவையும் பயன்படுத்தியுள்ளனர்," என்று அவர் கூறினார்.

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு மீட்பு நடவடிக்கை

தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தபோது, அது மிகவும் தாமதமாக நடந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால், ​​​​போகோட்டாவில் உள்ள அதிகாரிகள் மீது ஒருவகை அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இது மட்டுமின்றி, ஏற்கெனவே ஒருமுறை அந்தக் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிபரின் அலுவலகம் தவறாக ஒரு தகவலை வெளியிட்டதால் கொலம்பிய அதிபர் பெட்ரோக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

காட்டுக்குள் குழந்தைகளைத் தேடிய மீட்புக் குழுவினர், ஸ்பானிஷ் மற்றும் பூர்வகுடிகளின் மொழிகளில் அச்சிடப்பட்ட பத்தாயிரம் துண்டுப் பிரசுரங்களை அப்பகுதியில் காட்டுக்குள் போட்டனர்.

அந்தத் துண்டுப் பிரசுரங்களில், அடர்ந்த காட்டுக்குள் உயிர்வாழத் தேவையான வழிகாட்டும் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. மேலும், அந்தக் குழந்தைகளுடைய பாட்டியின் குரல் பதிவை அதிக ஒலியுடன்ஒலிக்கவிட்டவாறே மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர்களில் பறந்தனர். இதன்மூலம் அந்தக் குழந்தைகளுக்கு ஓர் உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் ஊடகங்களுக்குத் தெரியாமல், அந்த குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க ராணுவம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. பல நேரங்களில் மீட்புக்குழுவினர் அந்தக் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து "20 முதல் 50 மீட்டர் தொலைவுக்கு நெருக்கமாக இருந்த பகுதிகளில்கூட தேடியதாக" மீட்புக் குழுவினரின் தலைவரான ராணுவ ஜெனரல் பெட்ரோ சான்செஸ் தெரிவித்தார்.

குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், சுமார் 150 ராணுவ வீரர்கள், உள்ளூர் பழங்குடி குழுக்களைச் சேர்ந்த 200 தன்னார்வலர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த மீட்பு நடவடிக்கை சுமார் 300 சதுர கிலோ மீட்டர் (124 சதுர மைல்கள்) பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது.

"மீட்புப் பணிகள் வைக்கோல் போரில் ஒரு ஊசியைத் தேடுவதைவிட கடினமாக இருந்தது. அதாவது ஒரு பெரிய பரந்த கம்பளியில் ஒரு சிறிய பூச்சியைத் தேடுவது போல் இருந்தது. அந்தக் குழந்தைகள் தினமும் வேறு வேறு இடங்களுக்குச் சென்றுகொண்டே இருந்தனர்," என்று ராணுவ ஜெனரல் சான்செஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆனால் வெள்ளிக்கிழமை, சுமார் ஒரு மாத தேடலுக்குப் பிறகு, மீட்புக் குழுவில் இடம்பெற்றிருந்த, சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் அந்தக் குழந்தைகளைக் கண்டுபிடித்தன.

ஒரு வயது குழந்தையைக் கையில் பிடித்திருந்த மூத்த மகள் லெஸ்லியை மீட்புக் குழுவினர் நெருங்கியபோது,"எனக்கு பசியாக இருக்கிறது," என்பதுதான் அவரது வாயிலிருந்து வந்த முதல் சொற்கள் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், அங்கே படுத்திருந்த ஒரு சிறுவன் எழுந்து, “என் அம்மா இறந்துவிட்டார்,” என்று சொன்னதாகவும் அவர் கூறினார்.

40 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட குழந்தைகள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, காணாமல் போன குழந்தைகளை ராணுவத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் தேடி வந்தனர்

குழந்தைகளை தப்பிச் செல்ல அறிவுறுத்திய தாய்

விமானம் விபத்துக்குள்ளான பிறகு அந்தக் குழந்தைகளின் தாய் நான்கு நாட்கள் காட்டில் உயிருடன்தான் இருந்திருக்கிறார். உயிரிழக்கும் தருவாயில் இருந்த அவர்களது தாய், "நீங்கள் இங்கிருந்து எப்படியாவது தப்பிச் சென்றுவிடுங்கள்," என்று கூறியுள்ளார் என்று குழந்தைகளின் தந்தை மானுவல் ரனோக் தெரிவித்துள்ளார்.

தனது உயிரைப் பற்றியோ, வாழ்க்கையைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாத அந்தத் தாய், தனது குழந்தைகள் தப்பிச் சென்று உயிர் பிழைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தனது கடைசி நாட்களைக் கழித்தது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

கொலம்பியா நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வீடியோவில், உயரமான மரங்களுக்குக் கீழே இருள் சூழ்ந்த பகுதியில் இருந்து அந்தக் குழந்தைகளை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக ஹெலிகாப்டரில் ஏற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

குழந்தைகள் மீட்கப்பட்ட உடன், அவர்கள் நால்வரும் நாட்டின் தலைநகர் பொகோட்டாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்பட்ட நிலையிலும்கூட நம்பிக்கையுடன் தேடுதல் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினருக்கு குழந்தைகளின் குடும்பத்தினரும், பொதுமக்களும் நன்றியைத் தெரிவித்தனர். மேலும், விரைவில் குழந்தைகளை அவர்களது வீட்டில் சேர்க்கவும் குடும்பத்தினரும், உறவினர்களும் கொலம்பிய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

"நான் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை, ராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கையை நான் முழுமையாக ஆதரித்தேன். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன், பல சிரமங்களைக் கடந்து குழந்தைகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட அதிபர் பெட்ரோ, எனது நாட்டு ராணுவம் மற்றும் மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்," என்று அவர்களின் பாட்டி அரசு ஊடகங்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

இராணுவத்தினரும், தன்னார்வலர்களும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளை அதிபர் பெட்ரோ வெகுவாகப் பாராட்டினார், "ராணுவம் மற்றும் பூர்வக்குடிமக்களின் திறமைகள் இணைந்து இந்த அரிய மீட்பு நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளன. இந்த இரண்டும் இணைவதுதான் உண்மையான அமைதிப் பாதை," என்று தனது பாராட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அந்தக் குழந்தைகள் இயற்கையின் குழந்தைகள்...

அவர்கள் கொலம்பியாவின் குழந்தைகள்..." என, மிகக் கடினமான சூழலை எதிர்கொண்டு காட்டுக்குள் வாழ்ந்த குழந்தைகளையும் அதிபர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ஆழமான கத்தோலிக்க மத நம்பிக்கை கொண்ட கொலம்பிய மக்கள், இந்தக் குழந்தைகள் மீட்கப்பட்டது ஓர் அதிசயம் என்று தெரிவித்தாலும், பழங்குடி மக்கள் குறித்து ஆய்வு செய்யும் ருஃபினோ, இயற்கையுடனான ஆன்மீகத் தொடர்புதான் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

"அடர்ந்த வனம் பசுமையானது மட்டுமல்ல. பழங்காலத்திலிருந்தே உருவாகியுள்ள இயற்கையான ஆற்றல்களும் அங்கு உள்ளன. அந்த ஆற்றல்கள் மூலமே, மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதுடன், பலவற்றைக் கற்றுக்கொண்டு பிறருக்கு உதவுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

"இதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம் என்று எனக்குத் தெரியும். ஆனால் அப்பகுதியில் இருக்கும் ஆற்றல் குறித்து மனிதர்கள் அறிய இது ஒரு நல்ல வாய்ப்பு," என்றார் அவர்.

“விபத்தில் உயிரிழந்த பின் ஆவியாக மாறிய அதே தாய்தான் அவர்களைப் பாதுகாத்தார்,” என்று கூறிய அவர், "இனிமேல்தான் அந்தத் தாய் ஓய்வெடுக்கத் தொடங்குவார்," என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: