தேசிய பொது கலந்தாய்வு: மத்திய அரசின் திட்டம் என்ன? இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வருமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இரா.சிவா
- பதவி, பிபிசி தமிழ்
நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான இடங்களை தேசிய பொதுகலந்தாய்வு மூலம் மத்திய அரசே நிரப்புவதற்கான முன்மொழிவை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் தயாராகிவருவதாக தெரிகிறது. என்ன பிரச்னை?
தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பு
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ படிப்பிற்கான இடங்களையும் நீட் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பொதுக்கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்துள்ளதாக கடந்த 2ஆம் தேதி தேசிய மருத்துவ ஆணையம் அரசிதழில் செய்தி வெளியிட்டது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறைகள் ஜி.எம்.இ.ஆர்.- 23 (Graduate Medical Education Regulations) என அழைக்கப்படுகின்றன.
தற்போதைய எந்த விதிகளிலும் விலக்கு இல்லாமல் NEET-UGஇன் தகுதிப் பட்டியல் அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கலந்தாய்வு இருக்கும் என்று அரசிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளுக்கு முரணாக எந்த மருத்துவ நிறுவனமும் மருத்துவப் படிப்பிற்கு எந்த ஒரு விண்ணப்பதாரரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
"மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல்"
மத்திய அரசின் இந்த முடிவு மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும் மத்திய அரசே நேரடியாக கலந்தாய்வு நடத்த முடிவு செய்திருக்கிறது. மாணவர்களின் நலன் என்ற பெயரில் திணிக்கப்படும் இந்த புதிய கலந்தாய்வு முறை மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயல்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், TWITTER
சரி, தமிழ்நாட்டில் எப்படி கலந்தாய்வு நடத்தப்பட்டுவருகிறது என்று பார்ப்போம்.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்ககம் (Directorate of Medical Education) நடத்திவருகிறது.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்கள் தவிர மீதமுள்ள 85 சதவீத இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் இந்தக் கலந்தாய்வின் மூலமாகவே நிரப்பப்படுகின்றன.
அதேபோல, முதுநிலை மருத்துவப் படிப்பிலும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத இடங்கள் தவிர மீதமுள்ள இடங்களை கலந்தாய்வு மூலம் தமிழக அரசே நேரடியாக நிரப்பிவருகிறது.
தமிழக அரசின் கீழ் வராத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.
ஆனால், இந்தப் புதிய விதிகளின்படி இனி அனைத்து இடங்களுக்குமான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்படும் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் நடத்த முடியும்.
மாநில அரசுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடத்துவது கால தாமதத்தையும், மாணவர்களுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாகக் கூறி இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
"முறைகேடான மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசே காரணம்"
மத்திய அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கப் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்.

‘’நீட் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்திய போது, தேர்வை நடத்தி தரவரிசைப்பட்டியலை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கும். அந்தப் பட்டியல் அடிப்படையில் அந்தந்த மாநில இடஒதுக்கீட்டிற்கு ஏற்ப மாநில அரசுகளே கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். தற்போது கலந்தாய்வையும் நாங்களே நடத்துவோம் என்று கூறியிருப்பது மருத்துவக் கல்வி மீது மாநில அரசுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளையும் ஒழிக்கும் செயல்’’ என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.
தனித்தனியே கலந்தாய்வு நடக்கும் போது முறைகேடாக மாணவர் சேர்க்கை நடப்பதாக மத்திய அரசு வைக்கும் வாதம் குறித்து பேசிய ரவீந்திரநாத், முறைகேடாக மாணவர் சேர்க்கை நடப்பதற்கு மத்திய அரசே காரணம் எனக் குற்றம்சாட்டுகிறார்.
‘’தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கடைசி நேரங்களில் இடங்கள் முழுமையாக நிரம்பாததைக் காரணம் காட்டி ஸ்ட்ரே கவுன்சிலிங் (stray counselling ), மாப் அப் கவுன்சிலிங் (Mop up counselling) முறையை அனுமதிக்கின்றனர். இது போன்ற கடைசி நேர கலந்தாய்வில் அதிக பணம் கொடுப்பவர்களுக்கு தனியார் கல்லூரிகள் இடம் வழங்குகின்றன. அதற்காக கடைசி நேரத்தில் மத்திய அரசு கட்-ஆப் மதிப்பெண்ணை குறைக்கிறது.
கட்-ஆப் மதிப்பெண்ணை குறைப்பதும் தனியார் கல்லூரிகளை கடைசி நேரத்தில் கலந்தாய்வு நடத்த அனுமதிப்பதும்தான் முறைகேடுகள் நடக்க காரணம். இதற்குப் பதிலாக கடைசி சீட் வரை மாநில அரசின் கீழ் உள்ள இடங்களுக்கு மாநில அரசும், மத்திய அரசின் கீழ் உள்ள இடங்களுக்கு மத்திய அரசும் கலந்தாய்வு நடத்தினாலே இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கலாம். இது முறைகேடுகளை காரணம் காட்டி மறைமுகமாக மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயல்’’ என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.
இட ஒதுக்கீட்டில் குளறுபடியை ஏற்படுத்துமா?
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
உதாரணமாக, பல மாநிலங்களில் பின்பற்றப்படும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவதில்லை. அதேபோல அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது. மேலும், முஸ்லீம்கள் மற்றும் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடும் பின்பற்றப்படுகிறது.
எனவே, நாடு முழுவதும் பொதுக்கலந்தாய்வு என்பது இட ஒதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனப் பலரும் தெரிவிக்கின்றனர்.
ஆனால், பொதுக்கலந்தாய்வின் போதும் மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறையே பின்பற்றப்படும் என்றும் இதற்கான மாநில அரசு ஒரு தகவல் தொடர்பு அதிகாரியை (nodal officer) நியமிக்க வேண்டும் என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அந்தந்த மாநில இட ஒதுக்கீட்டு முறையை கடைபிடித்து மத்திய அரசே கலந்தாய்வை நடத்துவது சாத்தியமற்றது என்றும் அதனால் ஏராளமான குழப்பங்களும், முறைகேடுகளும் நடக்க வாய்ப்புள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மாநில இட ஒதுக்கீட்டு முறையே பின்பற்றப்படும் என மத்திய அரசு கூறினாலும் அதை நம்ப முடியாது என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.
‘’நீட் தேர்வை மட்டும்தான் நாங்கள் நடத்துவோம், தரவரிசைப் பட்டியலை வைத்தே மாநிலங்களே கலந்தாய்வை நடத்திக் கொள்ளாலாம் என்று கூறியதும் இவர்கள்தானே. தற்போது கலந்தாய்வில் தலையிடுவதைப் போல இடஒதுக்கீட்டு விஷயத்திலும் எதிர்காலத்தில் தலையிடலாம்’’ என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.
தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்திக் கொள்ளும் வகையில் பொது கலந்தாய்வு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

பட மூலாதாரம், MA SUBRAMANIAN FACEBOOK PAGE
ஆனால், இது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்தவித பொது அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ’’இந்தக் கல்வியாண்டில் பொதுக்கலந்தாய்வு இல்லை என்று மத்திய அரசு வாய்மொழியாக எங்களிடம் தெரிவித்துள்ளது. எனினும், துறையின் மத்திய அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். மாநில அரசின் உரிமையைப் பறிக்கும்படியான பொதுக்கலந்தாய்வை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்காது’’ என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












