என்.எல்.சி. சுரங்க விரிவாக்கம்: நிலம் கொடுக்க மக்கள் மறுப்பது ஏன்? கள நிலவரம் என்ன?

கடலூர், என்எல்சி, நெய்வேலி, நிலக்கரி
படக்குறிப்பு, என்எல்சி தற்போது 6,000 மெகாவாட் தயாரிக்கும் நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

நெய்வேலியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடட் (என்எல்சி), அனல்மின் உற்பத்தி செய்யத் தேவையான நிலக்கரியை எடுப்பதற்காகக் கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் நிலம் கையக்கப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இது நடந்தால், கிராமங்களின் சுற்றுச்சூழலும் விவசாயமும் பாதிக்கப்படும் என்று அம்மக்கள் போராடி வருகின்றனர்.

நிர்வாகத் தரப்போ, தமிழகத்தின் மின்தேவைகளுக்காக இவ்விரிவாக்கம் அவசியம் என்று கூறுகிறது.

என்ன நடக்கிறது என்பதை அறிய, களத்திற்குச் சென்றது பிபிசி.

நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டம்

கடலூர், என்எல்சி, நெய்வேலி, நிலக்கரி

கடலூர் மாவட்டம் கரிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயா செல்வம் (48). விஜயாவின் சொந்த கிராமம் இன்னும் சில நாட்களில் மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு உட்பட்ட சுரங்கத்தின் ஒரு பகுதியாக மாறவுள்ளது.

கரிவெட்டி கிராமத்தின் நிலப்பகுதியில் பழுப்பு நிலக்கரி அதிகம் கிடைப்பதால், நெய்வேலி பகுதியில் 1960களில் இருந்து பல கிராமங்கள் இதுவரை காலிசெய்யப்பட்டு, திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கமாக மாறியுள்ளன. முதலில் ஆர்வத்துடன் நிலங்களைக் கொடுத்த மக்கள், தற்போது கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சமீபத்தில் நில கையகப்படுத்துவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், விஜயாவும் அவரது அண்டைவீட்டாரும் தீக்குளிக்க முயற்சித்தனர்.

தற்கொலை செய்ய முயற்சித்தது தொடர்பாக பதிவான புகாரின் பெயரில் விஜயா செல்வம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நோட்டீஸ் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

"எங்கள் கிராமத்திற்கு அருகில் வசித்தவர்கள் பலர் நிலங்களைக் கொடுத்த பின்னர், பரம ஏழையாகி, நிர்கதியாக நிற்பதைப் பார்த்த பின்னர், எங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை தகர்ந்து போய்விட்டது. வீட்டுமனைக்கு எவ்வளவு ருபாய் இழப்பீடு தரப்படும் என்றுகூடச் சொல்லாமல், எங்கள் நிலங்களை அளக்க வந்தார்கள்," என்கிறார்.

கடலூர், என்எல்சி, விவசாயம், நெய்வேலி, நிலம்
படக்குறிப்பு, கடலூர் மாவட்டம் கரிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயா செல்வம்

என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவது ஏன்?

நெய்வேலியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடட் (என்எல்சி) நிறுவனம் இயங்கி வருகிறது. 1956ல் தொடங்கப்பட்ட என்எல்சி நிறுவனம் நெய்வேலி பகுதியில் 64,000 ஏக்கர் பகுதியில் மூன்று திறந்த வெளிச் சுரங்கங்களை அமைத்துள்ளது என தமிழ்நாடு அரசின் கொள்கை குறிப்பு கூறுகிறது.

இந்த நிலக்கரி, என்எல்சியின் நான்கு அனல்மின் நிலையங்களில் மின்சாரத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் வெறும் 600 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்த என்எல்சி தற்போது 6,000 மெகாவாட் தயாரிக்கும் நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் தான் இதுநாள்வரை இல்லாத அளவில், அதிபட்ச மின் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

1950களில் தொடங்கி 2023 வரை 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் என்எல்சியின் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காகக் காலிசெய்யப்பட்டுள்ளன. அதில் சுரங்கம் 1, சுரங்கம் 1A மற்றும் சுரங்கம் 2 ஆகியவை செயல்படுகின்றன. தற்போது மீண்டும் 197 ஏக்கர் நிலம் தேவை என்றும் இந்த நிலங்களில் சுரங்கம் அமைக்கப்படவில்லை எனில் தமிழ்நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்றும் என்எல்சி நிர்வாகம் கூறுகிறது. உண்மையில், நெய்வேலி கிராம மக்கள் நிலம் கொடுக்க மறுக்கிறார்களா? புதிதாக நிலம் கையகப்படுத்தவில்லை எனில், மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுமா? உள்ளிட்ட கேள்விகளுக்குக் கள ஆய்வில் விடை தேடினோம்.

'நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தரவில்லை'

கடலூர், என்எல்சி, விவசாயம், நெய்வேலி, நிலம்
படக்குறிப்பு, நிலம் கொடுத்தவர்கள் பிழைப்புக்கு வழியில்லாமல் நிற்பதாகக் கூறுகிறார் விஜயா செல்வம்

தற்போது சுரங்க விரிவாக்கப் பணிக்காக நெய்வேலியில் உள்ள கிராமங்களில் நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே கையகப்படுத்தபட்ட நிலங்களில் வசித்தவர்களுக்கு உரிய இழப்பீடு தரப்படவில்லை என்றும் ஒப்பந்தப்படி வேலை தரவில்லை என்றும் குற்றம் சாட்டும் கிராமவாசிகள், நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிகமாக நிலம் கையகப்படுத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது, சாலை மறியல், ஆர்ப்பாட்டம் எனப் பல வகைகளில் போராட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள கிராமங்களில் நடைபெற்றுவருகின்றது. கள ஆய்வின் பகுதியாக, நெய்வேலி நகரத்தின் பல கிராமங்களுக்குச் சென்றது பிபிசி தமிழ்.

கரிவெட்டி கிராமத்தில் உள்ள தனது மூன்று சென்ட் நிலத்தில் அமைந்துள்ள ஓட்டு வீட்டின் நுழைவு வாயிலில் அமர்ந்தபடி நம்மிடம் பேசினார் விஜயா செல்வம். விவசாயக் கூலி வேலைக்குச் செல்லும் அவர், அருகில் இருந்த முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, மாற்றுக் குடியிருப்பில் வாழ்ந்துவரும் அவரது உறவினரைப் பார்க்கச் சென்றதை நினைவுபடுத்தி தனது நிலத்தை எல்எல்சி நிறுவனத்திற்குத் தர மறுப்பது ஏன் என்று விளக்குகிறார்.

"நாங்கள் சென்று பார்த்தபோது, அங்கு நிலத்திற்குப் பட்டா கொடுக்கப்படவில்லை. வீட்டில் குடிநீர் குழாய் வசதி கூட இல்லை. கிராமத்தில் இருந்தபோது, விவசாயக்கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள், பிழைப்பிற்கு வழியில்லாமல் வறுமையில் தவிக்கிறார்கள். இழப்பீட்டின் முழுத் தொகையும் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அதனால் கடும்மன உளச்சலுக்கு ஆளான பலரைப் பார்த்தபிறகு, எங்களுக்கு அச்சம் அதிகரித்துவிட்டது," என்கிறார் விஜயா.

என்எல்சி நிறுவனம் தொடர்ந்து வளர்கிறது என்பதை அடிக்கடி செய்திகளில் பார்ப்பதைச் சொல்லும் அவர், "நிலத்தைக் கொடுப்பவர்களுக்கு முழுதொகையும் கொடுக்காமல் வஞ்சிப்பது ஏன்? முத்துகிருஷ்ணாபுரம் மக்களுக்கு ஏற்பட்ட நிலை எங்களுக்கும் ஏற்படகூடாது என்பதால் தான் நாங்கள் நிலத்தைக் கொடுக்க மறுக்கிறோம்," என்கிறார் கண்ணீருடன்.

அறுவடை காலத்தில் ஒரு நாள் கூலி வேலைசெய்தால் ரூ.500 வரை கிடைக்கும் என்றும் என்எல்சி நிறுவனத்திற்கு அந்த நிலத்தைக் கொடுத்துவிட்டால், மாற்று இடத்திற்குச் சென்றால் அங்கு அந்த வருமானத்தைக் கூடப் பெறமுடியாது என்பதுதான் அவரை போராட்டத்தை நோக்கி இட்டுச்சென்றது.

கடலூர், என்எல்சி, நிலக்கரி, நெய்வேலி, நிலம்
படக்குறிப்பு, என்எல்சி சுரங்கங்கள் அமைந்திருக்கும் இடங்கள்

என்எல்சி சுரங்கம் திறந்தவெளி நிலக்கரி சுரங்கமாக இருப்பதால், நாம் சாலையில் செல்லும்போது, அந்த சுரங்கங்களை பார்க்கமுடிந்தது. சுரங்கம்1, சுரங்கம் 1A மற்றும் சுரங்கம் 2 ஆகிய பகுதிகளை வெளியில் இருந்து பார்த்தோம். கங்கைகொண்டான் என்ற கிராமம் இருந்த இடத்தில் தற்போது சுரங்கம் 1 பல நூறு அடி ஆழத்தில் நிலக்கரி எடுக்கப்பட்ட எச்சமாக மாறியுள்ளது. கிராமம் இருந்ததற்கான சுவடுகள் இல்லை.

அடுத்ததாக எல்எல்சி சுரங்கப் பணிகளுக்காக நிலம் கொடுத்தவர்களைச் சந்திதித்தோம்.

"நிலமும் இல்லை, வேலையும் இல்லை"

கடலூர், என்எல்சி, விவசாயம், நெய்வேலி, நிலம்
படக்குறிப்பு, பரம்பரை நிலத்தைக் கொடுத்துவிட்டுப் பணமும் இன்றி வேலையும் இன்றி நிற்பதாகச் சொல்லும் மணவாளன்

காத்தளை கிராமத்திற்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்தோம். பச்சை துண்டு அணிந்தவர்கள் ஒரு கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. தங்களது அடுத்தகட்ட போராட்டம் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.

2010ல் காத்தளை கிராமத்தில் எட்டு ஏக்கர் நிலத்தை என்எல்சி நிறுவனத்திடம் விவசாயி மணவாளனின் குடும்பம் வழங்கியது. அவரது நிலத்தை என்எல்சி கையகப்படுத்திக்கொண்டாலும், இதுவரை அந்த நிலத்தில் எந்த வேலையும் தொடங்கவில்லை என்பதை நம்மால் பார்க்கமுடிந்தது.

"என் தாத்தா என் அப்பாவுக்காக கொடுத்த நிலம், அந்த நிலத்தை என் முன்னோர்கள் பல காலமாக வைத்திருந்தார்கள். குடும்பத்தில் பல சிரமங்கள் வந்தபோதும், நிலத்தை நாங்கள் விற்கவில்லை. ஆனால் இந்தியாவின் வளர்ச்சிக்காகக் கொடுக்கவேண்டும் என்று அரசாங்கம் சொன்னதால், என் தந்தை கொடுத்துவிட்டார். ஆனால் எங்களுக்கு வெறும் ரூ.1.75லட்சம் மட்டும் தான் கொடுத்திருக்கிறார்கள். மேலும் தரவேண்டிய பணத்தை 13 ஆண்டுகள் ஆகியும் தரவில்லை. எனக்கு வேலையும் கொடுக்கவில்லை," என மணவாளன் பிபிசி தமிழிடம் மனம்திறந்து பேசினார்.

52 வயதை நெருங்கியுள்ள மணவாளன், தனக்கு என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலை கிடைக்கும் என்ற கனவைப் பல ஆண்டுகள் நம்பியதாகவும், தற்போது கழிந்துபோன 13 ஆண்டுகளை எண்ணி விரக்தியில் இருப்பதாகவும் சொல்கிறார்.

மணவாளனைப் போல நிலம் கொடுத்தவர்கள் பலரும் எழுப்பும் கேள்வி இதுதான். ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களைப் பயன்படுத்தாமல், புதிதாக என்எல்சி நிலம் கேட்பது ஏன்? இது தொடர்பாக என்எல்சியின் கருத்தைக் கேட்கப் பலமுறை முயற்சித்தபோதும் பதில் கிடைக்கவில்லை.

ஒரு சிலர் நிலம் கொடுக்க மறுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நெடுங்காலமாக போராடிவருகின்றனர். நிலத்தை கொடுக்க மறுத்த சிலருக்கு அதிகபட்ச இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.25 லட்சம் தரப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே நிலம் கொடுத்தவர்களுக்கும், தற்போது புது இழப்பீடு திட்டத்தில் நிலம் கொடுப்பவர்கள் மத்தியில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நம்மால் அறியமுடிந்தது.

மோசமான நிலையில் மாற்றுகுடியிருப்புகள்

கடலூர், என்எல்சி, நிலக்கரி, நெய்வேலி, நிலம்
படக்குறிப்பு, எனெல்சி நிர்வாகம் அளித்த மாற்றுக் குடியிருப்பு வீடுகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்கின்றனர் அங்கு வசிக்கும் மக்கள்

அடுத்ததாக, என்எல்சி நிர்வாகம் 1990களில் கையகப்படுத்திய நிலங்களில் இருந்தவர்களுக்கு மாற்றுக்குடியிருப்பு அளித்திருந்த பகுதிக்குச் சென்றோம்.

ஏ பிளாக், பி பிளாக் என்று சொல்லப்படும் இடங்களில் வசிக்கும் மக்கள் பலரும் மோசமான வாழ்க்கையை வாழ்வதாகச் சொல்கிறார்கள். நாம் செய்தி சேகரிக்கச் சென்றபோது, பல பெண்கள் கைகளில் ஒரு கட்டு புகார் மனுக்களோடு வந்திருந்தார்கள். பலரும் இதுவரை என்எல்சியில் வேலை கிடைக்கவில்லை என்றும் தங்களது வீடுகளில் குடிநீர் இணைப்பு வசதிகூட இல்லை என்றும் தெரிவித்தனர். உண்மையில், நாம் சென்று பார்த்த வீடுகளில் குடிநீர் இணைப்புக் குழாய்கள் இல்லை. ஆங்காங்கே பொதுச் சாலையில் உள்ள குழாயைத்தான் அவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்க்கமுடிந்தது.

மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், 2024ல் இந்தியாவின் எல்லா கிராமபகுதிகளிலும் ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் இணைப்பு வசதி ஏற்படுத்தப்படவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழாவது தங்களுக்குக் குடிநீர் இணைப்பு கிடைக்குமா என்று நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

"மாற்று இடம் தரப்பட்டபோது, இங்கு எங்கள் பெயரில் நிலம் பதிவு செய்யப்படவில்லை. நான் 30 ஏக்கர் நிலம் அளித்துள்ளேன். அதோடு 20 சென்ட் நிலத்தில் இருந்த வீட்டு மனையை அளித்தேன். எனக்கு மாற்று இடம் வழங்கினார்கள். ஆனால் இதுவரை மாற்று இடத்திற்கான பட்டாவை எனக்குத் தரவில்லை. ஒரு டோக்கன் தந்தார்கள். அந்த டோக்கனில் அரசாங்க முத்திரையோ, என்எல்சியின் முத்திரையோ எதுவுமே இல்லை. பட்டா இல்லை என்பதால், அந்த வீட்டை வைத்துக் கடன் கூடப் பெறமுடியவில்லை. வறுமையின் பிடியில் நிற்கிறோம்," என்கிறார் என்.சிவகுமார்.

கடலூர், என்எல்சி, விவசாயம், நெய்வேலி, நிலம்
படக்குறிப்பு, கிடைத்த நிலத்திற்குப் பட்டா இல்லாமல் நிற்பதாகக் கூறும் சிவகுமார்

நிலக் கையகப்படுத்தலுக்காகப் பலவிதிகள் விதிக்கப்பட்டதாகக் கூறும் ஜோசப், தனது குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டு மனை அடமானத்தில் இருந்தபோதும் கூட, அந்த இடத்தை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்திக்கொண்டது என்கிறார். இதயநோய்க்கான சிகிச்சையில் இருக்கும் ஜோசப், குறைந்தபட்சம் தனது வருங்காலச் சந்ததிகளுக்காவது இழப்பீடு கிடைக்கவேண்டும் எனப் போராடிவருகிறார்.

''எனக்கு கங்கைகொண்டான் கிராமத்தில் இரண்டு வீட்டு மனைகள் இருந்தன. ஆனால் நிலம் கையகப்படுத்தும் வேளையில், அந்த இரண்டு வீடுகளும் அடமானத்தில் இருந்தது. எனது இரண்டு வீட்டு மனைகளை எடுத்துக்கொண்டு, ஒரு வீட்டு மனை கொடுத்திருக்கிறார்கள். ஒரு வீட்டிற்கான இழப்பீடு மட்டும் கொடுத்திருக்கிறார்கள். அதனைச் சுற்றியிருந்த நிலத்திற்கு இதுவரை இழப்பீடு கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்ககூடாது என எங்கள் முன்னோர்கள் மதரீதியான ஒரு விதியைப் பின்பற்றுபவர்கள் என்பதால், நான் நீதிமன்றம் செல்லவில்லை. பலமுறை என்எல்சி நிறுவனத்திடம் புகார் அளித்திருக்கிறேன், இதுவரை எனக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை," என்கிறார் ஜோசப்.

'நிலக்கரி பயன்பாடு பற்றி முரண்பாடுகள் உள்ளன'

கடலூர், என்எல்சி, சுற்றுச்சூழல், நெய்வேலி, நிலம்
படக்குறிப்பு, நிலக்கரி பயன்பாடு பற்றி முரண்பாடுகள் உள்ளன என்கிறார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அருள்செல்வம்

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தொடர்பாக என்எல்சி மீது பல விமர்சனங்கள் குவிகின்றன. தற்போது, என்எல்சியின் விரிவாக்கம் குறித்தும், எதிர்காலத் திட்டம் குறித்தும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் பல கேள்விகளை முன்வைக்கிறார்கள்.

என்எல்சி நிறுவனத்தின் அனல்மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் நாம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அருள்செல்வதைச் சந்தித்தோம்.

முதலில், நிலக்கரி பயன்பாடு தொடர்பாக இந்திய அரசின் நிலைப்பாடும், மத்திய அரசின் கீழ் இயங்கும் என்எல்சியின் நிலைப்பாடும் வேறு வேறாக உள்ளது என்ற கோணத்தில் உரையாடலைத் தொடங்கினார் அருள்செல்வம்.

''2021ல் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச அரங்கில் பேசிய பிரதமர் மோதி, காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு படிப்படியாக நிலக்கரிப் பயன்பாட்டைக் குறைக்கவுள்ளதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்குப் பதிலாக புதுப்பிக்கதக்க எரிசக்தி தயாரிப்புக்கு அதிக கவனம் தரப்படும் என் மத்திய அரசுஅறிவித்தது. ஆனால், என்எல்சி நிர்வாகம் மேலும் நிலக்கரி எடுக்க நிலங்கள் தேவை என்றும் சுரங்கங்களை விரிவாக்கம் செய்யவேண்டும் என்றும் கூறுகிறது. இந்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனம் இந்திய அரசின் கொள்கையைப் பின்பற்றப் போவதில்லை என்று இதனைப் புரிந்துகொள்வதா? தற்போது 6,061மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதாகவும், 2030ல் அந்த உற்பத்தி 17,000 மெகாவாட்டைத் தாண்டும் என்றும் என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் நிலக்கரிப் பயன்பாட்டை எப்படிக் குறைக்கப்போகிறோம் என்று தெரியவில்லை,''என்கிறார் அருள்செல்வம்.

அபாய அளவை எட்டிய கடலூரின் நிலத்தடி நீர் அளவு

கடலூர், என்எல்சி, சுற்றுச்சூழல், நெய்வேலி, நிலம்

மேலும் பேசிய அடுட்செல்வம், ஆர்டீசன் ஊற்று (Artesian well)என்ற தன்னூற்று இருந்த இடமாக இருந்த கடலூர் மாவட்டத்தில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் அபாய அளவை எட்டியுள்ளதாக கூறுகிறார்.

''நிலக்கரி எடுக்க, பல நூறு அடிகள் தோண்டும்போது, அங்கிருக்கும் நிலத்தடி நீரை வெளியேற்றுகிறார்கள். அதில் பல லட்சம் லிட்டர் நிலத்தடி நீர் கடந்த 60 ஆண்டுகளாக வெளியேற்றப்பட்டுள்ளது. என்எல்சி நிறுவனம் மற்றும் கடலூரில் இயங்கும் பல ரசாயன ஆலைகள்,சிப்காட் தொழிற்சாலைகள் என ஆலைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் நிலத்தடி நீரின் தேவை அதிகரிப்பதோடு, நீர் மாசுபடுவதும் அதிகரித்துள்ளது. அதனால், கடலூர் மாவட்டத்தில் பல வட்டாரங்களில் நிலத்தடி நீர் அபாய அளவை எட்டியுள்ளது. மத்திய நிலத்தடி நீர்வள ஆதார அமைப்பின் அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் ஆழமான நீர்நிலைகள் பெரிய அளவில் சுரண்டப்பட்டு வருகின்றன என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, நிலத்தடி நீரில் கனஉலோகங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. கேட்மியம், க்ரோமியம் உள்ளிட்ட கனஉலோகங்கள் இருப்பது பல ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,''என்கிறார் அருள்செல்வம்.

தொடர்ந்து நிலத்தடி நீரை வெளியேற்றுவது, நிலக்கரி மின்சாரம் தயாரிப்பில் ஈடுபடுவதால் காற்று மற்றும் நீர்நிலைகள் மாசுபடுவது போன்ற பிரச்னைகளைக் கடந்த 60ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் சந்தித்து வருவதால், அந்த மாவட்டத்தின் தாங்குதிறன் குறித்து ஆய்வு செய்யப்படவேண்டும் என்கிறார் அவர்.

சமூக தாக்க மதிப்பீடு செய்து, என்எல்சி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து கடலூர் மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்எல்சியின் பங்கு என்ன என்ற விரிவான ஆய்வை நடத்திய பின்னர் தான் சுரங்க விரிவாக்கம் குறித்துப் பேசவேண்டும் என்கிறார் அவர்.

என்எல்சி தமிழ்நாட்டிற்குத் தேவையா?

கடலூர், தமிழ்நாடு, என்எல்சி, விவசாயம், நெய்வேலி, நிலம்

என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற விவாதங்களில் பல கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பின்னர், தமிழ்நாடு அரசு என்எல்சி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் விளைவாக, தற்போது நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என என்எல்சி அறிவித்துள்ளது.

இருந்தபோதும், உடனடியாக 197 ஏக்கர் நிலத்தைத் தமிழ்நாடு அரசு வழங்கவில்லை எனில், என்எல்சி மின்சாரம் தயாரிப்பது குறையும் என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் சுரங்க விரிவாக்கத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், பொதுவுடைமை கட்சிகள் எனப் பலரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்எல்சியின் பங்கு என்ன என்பதைத் தமிழ்நாடு அரசு ஆராய்ந்த பின்னர்தான் விரிவாக்கம் செய்ய நிலம் தருவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து என்எல்சியின் நிலக் கையகப்படுத்தலுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகிறார். என்எல்சி நிறுவனம் மின்சாரம் தயாரிப்பதை விடுத்து, தற்போது நிலக்கரியை எடுத்துத் தனியாருக்கு விற்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறது என்றும் என்எல்சி மூலமாகத் தான் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் தரமுடியும் என நிலை மாறிவிட்டது என்றும் கூறுகிறார் அவர்.

அன்புமணி, கடலூர், என்எல்சி, விவசாயம், நெய்வேலி, நிலம்
படக்குறிப்பு, பாமகவின் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து என்எல்சியின் நிலக் கையகப்படுத்தலுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகிறார்

தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உள்ளது என்று மின்துறை அமைச்சகத்தின் அறிக்கைகள் சொல்கின்றன எனத் தொடங்கிய அவர், தமிழ்நாட்டிற்குத் தேவை 15,000மெகாவாட். அதிகபட்சமாக 18,000மெகாவாட்தான்... ஆனால் தமிழ்நாடு அரசு 36,000மெகாவாட்டை உற்பத்தி செய்கிறது. இதில் என்எல்சியின் பங்கு வெறும் 800 மெகாவாட்தான் என விளக்குகிறார்.

என்எல்சி நிறுவனத்திற்குப் பூட்டு போடும் போராட்டம் குறித்த விவரங்களைப் பேசிய அவர், “ஒரு காலத்தில் என்எல்சி தமிழ்நாட்டில் உள்ள மின்பற்றாக்குறைக்குத் தேவையாக இருந்தது. தற்போது தேவை இல்லை. மின்சாரத்தை நிலக்கரி மூலமாகத் தயாரிப்பதைத் தாண்டி, தண்ணீரில் தயாரிக்கலாம், சூரிய ஒளி, காற்றாலை, கடல்நீர் எனப் பலவகையாக உற்பத்தி செய்யமுடியும். உணவு தயாரிக்க இருப்பது மண் மட்டும் தான். அதனால் புதிதாக நிலம் கையகப்படுத்துவதை அரசாங்கம் தடுக்கவேண்டும். என்எல்சி நிறுவனத்தை மூடிவிட்டு, நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கவேண்டும்,” என்கிறார் அன்புமணி ராமதாஸ்.

ஆளும் தி.மு.க.வின் பதில் என்ன?

என்எல்சி தொடர்பாகக் குவியும் விமர்சனங்கள் குறித்தும், அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்தும், நெய்வேலி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் மற்றும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுகவைச் சேர்ந்த சபா ராஜேந்திரனிடம் தொலைபேசியில் கேட்டபோது, தமிழ்நாடு அரசின் முயற்சியால் தான் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, நிலம் கொடுத்தவர்களுக்கு முதல்முறையாகப் பட்டா கிடைத்துள்ளது என்றார். என்எல்சி விவகாரம் தொடர்பாகச் சிறப்பு கவனம் கொடுக்க அரசாங்கம் ஒரு சிறப்பு அதிகாரியை நியமிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறது என்றார்.

திமுகவைச் சேர்ந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினரான டிஆர்விஎஸ் ரமேஷ், என்எல்சி விவகாரம் குறித்துக் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை.

கடலூர், என்எல்சி, நெய்வேலி, லாபம்

என்எல்சியின் வளர்ச்சியைப் பார்க்கையில், தொடக்க காலங்களில் நஷ்டத்தைச் சந்தித்திருந்தாலும், 1970களில் இருந்து லாபத்தில்தான் இயங்கிவருகிறது என அந்த அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கைகள் கூறுகின்றன.

ஆனால், மக்களுக்கு இழப்பீடு தருவதிலும், நிரந்தர வேலை அளிப்பதிலும் அந்நிறுவனம் முனைப்பு காட்டாதது ஏன் என் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதார இழப்பு குறித்த ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் என்எல்சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டம் அடைந்த வளர்ச்சி குறித்து சமூக தாக்க மதிப்பீடு செய்யப்படவேண்டும் என்றும் கோருகின்றனர்.

விமர்சனங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் தராத என்எல்சி நிர்வாகம்

கடலூர், என்எல்சி, நிலக்கரி, நெய்வேலி, நிலம்

விமர்சனங்கள் குறித்து என்எல்சி தரப்பின் விளக்கத்தை அறிய பிபிசி தமிழ், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டது. ஆனால் ஒரு வார காலமாகியும் என்எல்சி தரப்பிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை. என்எல்சி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், நிலம் கொடுத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறியுள்ளது. ஆனால், வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுவதில் வெளிப்படைத் தன்மை தேவை என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நெய்வேலியில் நாம் சந்தித்த மக்கள் பலரும், கடந்த 60 ஆண்டுகளில் நிலம் கொடுத்த பின்னர் தங்களது வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டதாகக் கண்ணீர் விட்டார்கள். இனி புதிதாக நிலம் கொடுக்கப் போவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அதேநேரம், என்எல்சி நிறுவனம், மக்கள் நிலங்களைக் கொடுக்க வேண்டும் என்று கோருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: